Published:Updated:

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்துள்ள ஓர் உணவு முட்டை. அனைவரின் உணவுப் பட்டியலிலும் தவறாது இடம்பெற வேண்டிய முக்கிய உணவு. வளரும் குழந்தைகளுக்குத் தினசரி ஒரு முட்டை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முட்டை பற்றி  ஏராளமான சர்ச்சைகள். முட்டை சைவமா,  அசைவமா என்பதில் தொடங்கி, பிளாஸ்டிக் முட்டை வரை. 

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சர்ச்சைகளைக் கடந்து முட்டையைப் பற்றி ஏகப்பட்ட சந்தேகங்கள். அவிக்காத முட்டையைச் சாப்பிடலாமா? இரவு நேரத்தில் முட்டை சாப்பிடலாமா? சமைத்தபிறகு எவ்வளவு நேரத்துக்குள் முட்டையைச் சாப்பிட வேண்டும்?       

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

இப்படியான எல்லாக் கேள்விகளுக்கும் விரிவாகப் பதில் அளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

நாம் சாப்பிடும் சாதாரண கோழி முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் `உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று’ என்கிற முக்கியமான இடத்தை முட்டைக்குக் கொடுத்துவைத்திருக்கிறார்கள்.

40 முதல் 50 கிராம் எடை கொண்ட ஒரு முட்டையில், 187 மில்லிகிராம் கொழுப்புச்சத்து உள்ளது. சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவு 300 மில்லிகிராம்தான். இரண்டு முட்டைகள் அந்தக் கொழுப்புச்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும். 78 கலோரிகள் கொண்ட ஒரு முட்டையில் 6.6 கிராம் புரதச்சத்து இருக்கிறது. குறிப்பாக, நாட்டுக்கோழி முட்டையில் ரிபோஃப்ளேவின், பயோடின் வைட்டமின்கள் பி2, பி6, பி12, ஏ, டி ஆகியவையும் செலினியம், துத்தநாகம் , இரும்பு, காப்பர், அயோடின் போன்ற கனிமச்சத்துகளும் இருக்கின்றன.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டையில் உள்ள லூட்டீன் (Lutein) மற்றும் சியாக்ஸாந்தின் (Zeaxanthin), கோலின் (Choline) போன்ற சத்துகள் நமக்குப் பலவழிகளில் உதவுபவை. இவை கண்புரை, விழித்திரையில் ஏற்படும் மாகுலர் டீஜெனரேஷன் (Macular degeneration) பாதிப்பு மற்றும் மூளை வளர்ச்சிப் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுபவை. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற சத்துகள் முட்டையில் நிறைவாக இருக்கின்றன. இவை உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க உதவும். முட்டையில் உள்ள லியூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், தசைகளுக்கிடையே உள்ள புரதச்சத்தை (Muscle Protein Synthesis) மேம்படுத்தி, அவை வலுப்பெற உதவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?

முட்டையிலிருக்கும்  கோலின் (Choline) சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது. கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தை, மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் பிறக்கும். முட்டையிலிருக்கும் ஃபோலிக் அமிலம், வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்புகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உதவும். பொதுவாகவே வளரும் குழந்தைகள், தினமும் ஒரு முட்டையைப் பாலுடன் சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது.

அதிக எடையோடு இருப்பவர்கள், உடலில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை முட்டை சாப்பிட்டால் போதுமானது. ஆனால், அவர்களும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. அதிலும் பிராய்லர் கோழி முட்டைகளைவிட நாட்டுக்கோழி முட்டைகளே சிறந்தவை.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

எப்படி உட்கொள்வது?

முட்டையைச் சப்பாத்தி ரோலாகவோ பொரியலாகச் செய்து சாதத்துடன் கலந்தோ சாப்பிடலாம். முட்டை கிரேவியாக அல்லது காய்கறிகளுடன் கலந்தும் சாப்பிடலாம். ஆம்லெட்டாகச் செய்து உட்கொள்ளலாம். ஆனால், முட்டையைப் பச்சையாகவோ, அரை வேக்காடாகவோ, வேகாத மஞ்சள் கருவாகவோ உட்கொள்ளக் கூடாது. 

சிலருக்கு மாலை வேளையில் முட்டை பப்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த முட்டை பப்ஸ் விஷயத்தில் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். சில கடைகளில் காலையில் செய்த பப்ஸையே மாலை வரை வைத்திருந்து விற்பார்கள். அந்த பப்ஸில் இருக்கும் முட்டை மாலைக்குள் நிச்சயம் கெட்டுப்போய், சாப்பிடத் தகாததாக ஆகியிருக்கும். எனவே, ஆரோக்கியம் காக்க விரும்புகிறவர்கள் கடைகளில் விற்கப்படும் முட்டை பப்ஸைத் தவிர்ப்பது நல்லது.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

அதேபோலக் கடைகளில் விற்கப்படும் பிரியாணியுடன் அவித்த முட்டைகள் பரிமாறப்படும். அந்த முட்டைகள் எப்போது சமைக்கப்பட்டவை என்பதைத் தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும். காலையில் சமைக்கப்பட்டு, மதியம் / இரவு என நேரம் கடந்து பரிமாறப்படும் முட்டைகள் நம் உடலுக்குக் கெடுதலைத்தான் கொண்டுவந்து சேர்க்கும்.

சிலர், கிரேவியாகவோ குழம்பாகவோ முட்டையைச் சாப்பிடுவார்கள். முட்டை சமைக்கப்பட்ட நேரத்துக்கும் சாப்பிடப்போகும் நேரத்துக்கும் நடுவே அதிக இடைவெளி இருக்கக் கூடாது. இதை மஞ்சள் கருவோடு சேர்த்துச் சாப்பிடுபவர்கள் வாரத்துக்கு இரண்டு முறைக்கு மேல் சாப்பிட வேண்டாம்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

கருவுற்றிருக்கும் பெண்கள், முட்டை சூப், அவித்த முட்டை, முட்டைத் துருவல் என உட்கொள்ளலாம். ஆஃப் பாயிலுக்குக் கண்டிப்பாக `நோ’ சொல்லிவிட வேண்டும். ஆஃப் பாயில் சாப்பிடும் பெண்களின் குழந்தைகளுக்கு சால்மோனெல்லா (Salmonella) போன்ற பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு  உண்டு... கவனம்!

வயதானவர்கள் வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை தினமும் ஒருமுறை சாப்பிடலாம். மஞ்சள் கரு சாப்பிடும் முதியவர்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை சாப்பிட்டால் போதும். கிரேவி, ஆம்லெட், பொரியல் எனச் செய்து சாப்பிடும் முதியோர் அதில் எண்ணெயைக் குறைவாகச் சேர்க்க வேண்டும். அதிலும் இதயம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வேறு ஏதும் உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி முட்டையைச் சாப்பிடுவது நல்லது.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

எதனோடு, எப்போதெல்லாம் சாப்பிடக் கூடாது?

`முட்டையைத் தயிர் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது’ என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால் புரோட்டா, பீட்சா, பப்ஸ் போன்ற மைதாவில் செய்த உணவுகளைச் சாப்பிடும்போது முட்டை சாப்பிடக் கூடாது. கடினமான உடற்பயிற்சி செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் பச்சையாக முட்டையைச்  சாப்பிடக் கூடாது. தொடர்ந்து பச்சை முட்டை சாப்பிடுபவர்களுக்கு பயோட்டின் (வைட்டமின்-பி) குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகம். சிலர் வளரும் குழந்தைகளுக்குப் பாலுடன் பச்சை முட்டையைச் சேர்த்துக் கொடுப்பார்கள். அதுவும் தவறே.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

பெண்களில் சிலர் மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு கால்சியம் தேவைக்காகத் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவார்கள். அது சரியல்ல. இத்தகைய சூழலில் அவித்தோ, கிரேவியாகவோ, குழம்பாகவோ முட்டையைச் சாப்பிட்டாலும் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். அதாவது, இதன்மூலமாக உடலில் கொழுப்பு அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால், தினமும் சாப்பிடாமல் வாரத்துக்கு இரண்டுமுறை உட்கொள்ளலாம்.

முட்டை சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி, அதன் காரணமாக இதய பாதிப்புகள் ஏற்படலாம் என்று சொல்லப்படுவதுண்டு. ஏற்கெனவே இதயத்தில் பாதிப்புள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். `ஹெச்.டி.எல்’ எனப்படும் நல்ல கொழுப்பின் அளவைத்தான் முட்டை மேம்படுத்தும் என்பதால், பயப்படத் தேவையில்லை.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

சாப்பிடும் நேரம் மிகவும் முக்கியமானது. காலை நேரத்தில் முட்டை உட்கொள்வது சிறந்தது. மதியம் உட்கொள்பவர்கள், அது சமைக்கப்பட்ட நேரத்தை அறிந்துகொண்டு சாப்பிட வேண்டும். சமைத்து வெகு நேரமான முட்டையைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. இரவில் சாப்பிட்ட பிறகு நம் உடல் உழைப்பு மிகவும் குறைவாக இருக்கும். எனவே, இரவில் முட்டை சாப்பிடுவதை முடிந்தளவு தவிர்த்துவிடலாம்.

முட்டையை 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைப்பது தவறு. அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் முட்டையில் பிரவுன் மற்றும்  சாம்பல் நிறத்தில் ஒரு படிவம் படிந்துவிடும். அந்த முட்டைகளை உட்கொள்ளக் கூடாது. முட்டையை 7 நிமிடங்கள் வரை வேகவைத்தாலே போதுமானது.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

தினம் ஒரு முட்டை ஓகேவா?

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலில் அதிகளவில் கொழுப்புச்சத்து சேர்ந்துவிடும் என்கிற பயம் பலருக்கும் இருக்கிறது. அப்படிச் சாப்பிட விரும்புகிறவர்கள், முதலில் உடலில் இருக்கும் கொழுப்புச்சத்து அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஒருவருக்குக் கொழுப்புச்சத்து, 200 மி.கி/டி.எல் (mg/dl - milligrams per deciliter) வரைதான் இருக்க வேண்டும். 200-230 மி.கி/டி.எல் இருப்பது ஆபத்து. 250 மி.கி/டி.எல்-க்குமேல் இருக்கிறது என்றால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத்துள்ள ஆகாரம்கூட ஆபத்தை விளைவித்துவிடும். உடலின் கொழுப்புச்சத்தில், 85 சதவிகிதத்தைக் கல்லீரல்தான் உற்பத்திசெய்கிறது.  உணவுகளிலிருந்து கிடைக்கும் கொழுப்புச்சத்து அளவு, 15 சதவிகிதம் மட்டுமே. இது அதிகமாகும்போது, உடலின் மொத்தக் கொழுப்புச்சத்தும் அதிகமாகிவிடும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

சுவையான ஆரோக்கியமான முட்டை ரெசிப்பிகள்!

டிரஸ்டு எக்ஸ்

தேவையானவை: முட்டை - 15, எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மஸ்டர்ட் சாஸ் - ஒரு டீஸ்பூன், சூரியகாந்தி எண்ணெய் – தேவையான அளவு    

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

செய்முறை: இரண்டு முட்டைகளைத் தனியாக எடுத்துவைக்கவும். மீதமுள்ள முட்டைகளை வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகு, முட்டைகளின் ஓட்டை நீக்கிவிட்டு இரண்டாக வெட்டவும். ஒரு முட்டையின் மஞ்சள் பகுதியைத் தனியாக எடுத்துவைக்கவும். ஒரு மஞ்சள் கருவுடன் தனியாக எடுத்துவைத்த முட்டைகளை உடைத்து ஊற்றவும். இதனுடன் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டுக் கலவை இருமடங்காகும் வரை நன்கு அடிக்கவும். (எண்ணெய் அதிகமாகிக் கலவை நீர்த்துப்போனால், சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்). பிறகு, இந்தக் கலவையுடன் மஸ்டர்ட் சாஸ் சேர்த்துக் கலக்கவும். இதுவே மயோனைஸ். வேகவைத்த முட்டையில் மஞ்சள் கரு இருந்த இடத்தில், மயோனைஸ் கலவை வைத்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

ஈஸ்டர் எக்ஸ்

தேவையானவை: முட்டை - 3, டீத்தூள் – 6 டீஸ்பூன், சோயா சாஸ் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – 2 சிட்டிகை (விரும்பினால்), உப்பு – ஒரு டீஸ்பூன். 

செய்முறை: முட்டைகளை வேகவைத்து மேல் ஓட்டை நீக்கிவிடவும். மூன்று கப் தண்ணீருடன் 4 டீஸ்பூன் டீத்தூள் சேர்த்து, சிறு தீயில் வைத்து, மூன்று நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். இது முதல் டிகாக்‌ஷன். மற்றொரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் டீத்தூளுடன் சோயா சாஸ், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். இது இரண்டாவது டிகாக்‌ஷன். முட்டைகளை முதல் டிகாக்‌ஷனில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். முட்டையின் நிறம் பழுப்பாக மாறிய பிறகு, எடுத்து உலரவிடவும். கூர்மையான கத்தியால் முட்டையின் மீது விரும்பிய வடிவத்தை வரையவும் (ஆழமாகக் கீறக் கூடாது). பிறகு, இந்த முட்டையை இரண்டாவது டிகாக்‌ஷனில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து உலரவிடவும். சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை மசாலா சப்பாத்தி

தேவையானவை:  முட்டை – 3, கோதுமை மாவு, மைதா மாவு –  தலா அரை கப், எண்ணெய் (அ) நெய் – 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

மசாலா செய்ய: நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறி மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சோம்புத்தூள் – 2 சிட்டிகை, மிளகாய்த்தூள் (அ) மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: கோதுமை மாவுடன் மைதா மாவு, உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும். வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஈரத் துணியால் மூடி, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, மாவை மூன்று சமபாகங்களாகப் பிரித்து மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேய்த்த சப்பாத்திகளைத் தோசைக் கல்லில் போட்டு, நெய் தடவி இருபுறமும் வேகவிடவும். பிறகு, அதன்மீது முட்டை மசாலா கலவையைப் பரப்பிச் சிறிதுநேரம் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

எக் க்யூப்ஸ்

தேவையானவை: முட்டை – 3, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் (விரும்பினால்), எண்ணெய் – 2 டீஸ்பூன், வெண்ணெய்– ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:  வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். உடைத்த முட்டையுடன் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகம், வதக்கிய வெங்காயம், உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். ஓர் ஆழமான கிண்ணத்தில் வெண்ணெய் தடவி, முட்டைக் கலவையை ஊற்றி, குக்கரில் வைத்து, 5 - 7 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். முட்டை வெந்துவிட்டதா என செக் செய்யவும். கத்தி உதவியுடன், வெந்த முட்டைக்கலவையைப் பாத்திரத்திலிருந்து கவனமாக எடுத்து, சதுரத் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

எக் க்யூப்ஸ் மின்ட்

தேவையானவை: எக் க்யூப்ஸ் - 10, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), 2 அங்குலம் நீளத் தேங்காய்த் துண்டுகள் - 3, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 5, புதினா இலைகள் – அரை கப், தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு, தோலுரித்த பூண்டு – 2 பல், ஏலக்காய் - 3, சீரகம் – முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, புதினா இலைகள் - அலங்கரிக்க.

செய்முறை:
தேங்காய்த் துண்டுகளுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் புதினா இலைகள் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, இரண்டு நிமிடங்கள்  கிளறவும். இதில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும். பிறகு, முட்டைத் துண்டுகளைச் சேர்த்து அவை உடையாதவாறு கவனமாகக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து, ஒரு நிமிடம் வேகவிட்டு இறக்கவும். மேலே சிறிதளவு புதினா இலைகள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை ரசம்

தேவையானவை: முட்டை - ஒன்று, புளி – எலுமிச்சை அளவு, பூண்டு -  4 – 7 பல் (தட்டவும்), கறி வடகம் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – முக்கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: புளியை அரை லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுப் பூண்டு, காய்ந்த மிளகாய், கறி வடகம், கறிவேப்பிலை, மிளகுத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொத்தமல்லித்தழை தூவவும். பிறகு, முட்டையை உடைத்து நேரடியாக ரசத்தில் ஊற்றி, நன்கு வெந்த பிறகு இறக்கவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

வறுத்த முட்டை

தேவையானவை: முட்டை - 2, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கடலை மாவு – அரை டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 5 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முட்டையை வேகவைத்து மேல் ஓட்டை உரித்து எடுக்கவும். மிளகாய்த்தூளுடன் கடலை மாவு, சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்போலக் கலக்கவும். முட்டையை இரண்டாக வெட்டவும். மஞ்சள் பகுதியின் மீது மசாலா விழுதைத் தடவவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் மசாலா தடவிய முட்டையைச் சேர்த்து (மசாலா தடவிய பக்கம் எண்ணெயில் படுமாறு வைக்கவும்) வேகவிடவும். பிறகு, கவனமாகத் திருப்பி மறுபுறத்தை வேகவைத்து எடுக்கவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை பொடிமாஸ் மசாலா

தேவையானவை: முட்டை - 2, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் – ஒரு கப் (200 மி.லி.), தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்),  பூண்டு – 2 பல், இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் (காரம் அதிகம் வேண்டாதவர்கள் குறைத்துக்கொள்ளலாம்), கரம் மசாலாத்தூள் – 2 சிட்டிகை, பட்டை – சிறிய துண்டு, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது) நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முட்டையை உடைத்து ஊற்றி 2 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும். அகலமான வாணலியில் எண்ணெய் அல்லது நெய்விட்டு, சீரகம், பட்டை, கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தக்காளி, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்கு வெந்ததும் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது ஒருபுறமாக ஒதுக்கிவிட்டு, மறுபுறத்தில் முட்டைக் கலவையை ஊற்றி வேகவிடவும். (முட்டைக் கலவையை மசாலாவுடன் கலக்காமல் வேகவிடவும்). முட்டை வெந்ததும் மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: இதனுடன் பனீர் துருவல் சேர்க்கலாம். முட்டைக் கலவையைத் தனியாக வேகவைத்தும் சேர்க்கலாம்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

ஸ்க்ராம்பிள்டு எக் ரைஸ்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், முட்டை - 2, நறுக்கிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய முட்டைகோஸ் – அரை கப், பனீர் (அ) சீஸ்  – 100 கிராம் (சதுரத் துண்டுகளாக்கவும்), நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: முட்டையை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு முட்டைக் கலவையை ஊற்றிக் கிளறி, வேகவைத்து எடுக்கவும். அதே வாணலியில் பனீர் அல்லது சீஸ் துண்டுகளைச் சேர்த்து லேசான பழுப்பு நிறத்தில் வரும்வரை வறுத்து எடுக்கவும். மற்றொரு வாணலியில், 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு பூண்டு சேர்த்து வறுக்கவும். அதனுடன் வெங்காயம், கோஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த முட்டைக் கலவை, பனீர் அல்லது சீஸ் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை `சிம்’மில் வைத்து, மூடிவைத்து ஒரு நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: பனீர், முட்டைகோஸ் சேர்க்காமலும் செய்யலாம்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

ஸ்னோ புடிங் வித் எக் வொயிட்

தேவையானவை: முட்டையின் வெள்ளைக் கரு - 4 முட்டையிலிருந்து எடுத்தது, சர்க்கரை – 150 கிராம், வெனிலா எசென்ஸ் - 1/8 டீஸ்பூன், ஜெலட்டின் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், செர்ரி – சிறிதளவு, கண்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு.

செய்முறை: 50 மி.லி. சுடுநீரில் ஜெலட்டின் சேர்த்துக் கரையவிடவும். முட்டையின் வெள்ளைக் கருவை இரண்டு மடங்காகும் வரை நன்கு அடிக்கவும். அதனுடன் வெனிலா எசென்ஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். பிறகு, ஜெலட்டின் கரைசல், சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கலவை மூன்று மடங்காகும் வரை நன்கு அடிக்கவும். இந்தக் கலவையை புட்டிங் பவுலில் ஊற்றி, மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, செட் செய்து எடுக்கவும். செட்டான புட்டிங் கலவையை, ஸ்கூப்பரால் எடுத்துக் கண்ணாடி டம்ளர் அல்லது பவுலில் சேர்க்கவும். அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் ஊற்றி, மேலே அலங்காரமாக செர்ரி வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: முட்டையின் வெள்ளைக் கருவைக் கவனமாக எடுக்கவும். மஞ்சள் கரு ஒரு துளிகூட வெள்ளைக் கருவுடன் சேரக் கூடாது.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை பிரியாணி

தேவையானவை: சீரகச் சம்பா அல்லது பாசுமதி அரிசி - அரை கிலோ, முட்டை - 6, பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (நடுவில் கீறவும்), மிளகாய்த்தூள் - தேவையான அளவு, கரம் மசாலாத்தூள் (அ) பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 4 டீஸ்பூன், தயிர் - 100 மி.லி., தேங்காய் எண்ணெய் -  ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 4, பிரியாணி இலை - சிறிதளவு, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, புதினா - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு  - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 100 கிராம், முந்திரி - 4

முட்டையுடன் கலக்க: மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து நைஸாக அரைக்கவும். முட்டையை உடைத்து, முட்டையுடன் கலக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு கப்பில் எண்ணெய் தடவி, இந்தக் கலவையை ஊற்றி, இட்லி பானையில் ஆவியில் வேகவைத்து எடுத்து, சதுரத் துண்டுகளாகப் போட்டுவைக்கவும்.

அரிசியை 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு, குக்கரை அடுப்பில் ஏற்றி, தேங்காய் எண்ணெய் ஊற்றவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலையைச் சேர்த்துத் தாளிக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த தக்காளி கலவை, தயிர் சேர்க்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்துள் சேர்த்துக் கலவை நன்கு சுருளும் வரை (சுமார் 10 நிமிடம்) வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது அரிசி சேர்த்து மூடி வைக்கவும். ஆவியில் வேகவைத்த முட்டைத் துண்டுகளுடன் சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுக்கவும். சாதம் முக்கால் பதம் வெந்ததும், முட்டைத் துண்டுகளைச் சேர்த்து உடையாமல் புரட்டவும். ஒரு டேபிள்ஸ்பூன் நெய், எலுமிச்சைச் சாறு கலந்து, மூடிபோட்டு வெயிட் போடவும். 10 நிமிடங்கள் தீயைக் குறைத்து வைக்கவும். பிறகு, அடுப்பை அணைத்து ஐந்து நிமிடத்துக்குப் பிறகு குக்கரைத் திறந்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் போதுமானது. அரிசியை ஒருமுறை மட்டும் களையவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முருங்கைக்கீரை - முட்டை பொரியல்

தேவையானவை: முட்டை - 2, முருங்கைக்கீரை - ஒரு கப் (சுத்தம் செய்தது), சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு (நறுக்கியது), காய்ந்த மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், மிளகுத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முட்டையுடன் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கிவைக்கவும். பிறகு,  வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய்  தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். கீரை நன்கு வெந்ததும், வாணலியின் ஓரமாகக் கீரையை ஒதுக்கிவிட்டு, நடுவில் எண்ணெய் ஊற்றி முட்டைக் கலவையைச் சேர்க்கவும். சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வறுத்து, கீரையையும் சேர்த்து நன்கு புரட்டி, தீயைக் குறைத்து இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

பிரெட்-கொத்தமல்லி-முட்டை டோஸ்ட்

தேவையானவை: பிரெட் - 4 ஸ்லைஸ், முட்டை - ஒன்று, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, பால் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - கால் டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். முட்டையை உடைத்து பால், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். பிரெட்டின் மீது கொத்தமல்லித்தழை கலவையை இருபுறமும் தடவவும். பிறகு, முட்டைக் கலவையில் நனைத்து, தோசைக்கல்லில் நெய்விட்டு, பிரெட்டை ஒவ்வொன்றாகப்போட்டு, திருப்பிவிட்டு, மீண்டும் சிறிதளவு நெய்விட்டு இரு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைத்துத் தயார் செய்யவும்).

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

பனீர் - முட்டை புர்ஜி

தேவையானவை: முட்டை - 6, பனீர் - 100 கிராம், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவையான அளவு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் - சிறிதளவு, தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பனீரைத் துருவவும் (பெரிய துருவியில் நீளமாகத் துருவி வைக்கவும்). பிறகு, வாணலியை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்டுப் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். முட்டையை உடைத்து ஊற்றி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி, முட்டையை வறுத்து துருவிய பனீரை இறுதியாகச் சேர்த்து, உடையாமல் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை கிரேவி

தேவையானவை: முட்டை - 6, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, பட்டை, கிராம்பு - தாளிக்க (சிறிதளவு), ஏலக்காய் - ஒன்று, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: (நைசாக ஒன்றாக அரைக்கவும்) தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 10, சீரகம், சோம்பு - தலா அரை டீஸ்பூன், முந்திரி - 4, கசகசா - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்.

செய்முறை:  முட்டையை வேகவைத்து ஓடு நீக்கி இரண்டாக வெட்டிவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள் முதல் மஞ்சள்தூள்  வரை சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, உப்புப் போட்டு நன்கு சுருள வதக்கவும். பிறகு, நறுக்கிய முட்டைகளைச் சேர்த்து உடையாமல் புரட்டி, நெய் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தீயைக் குறைத்து, ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டைப் பணியாரம்

தேவையானவை: முட்டை - 4, கடலைமாவு - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2 (மிகவும் பொடியாக நறுக்கியது) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைமாவைச் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து, அதனுடன் மற்ற பொருள்களையும் (எண்ணெய் தவிர) சேர்த்து, கரண்டியால் நன்கு கலக்கிவைக்கவும். பிறகு, பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, மாவைப் பணியாரங்களாக ஊற்றி, எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில்வைத்துத் தயார் செய்யவும்).

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை - தக்காளி அடை

முட்டை, தக்காளி - தலா 2, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி - தலா 100 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. மாவுடன் கலக்கத் தேவையானவை: பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தலா ஒரு டீஸ்பூன் (நறுக்கியது), தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இறுதியாக, தக்காளி சேர்த்து அரைத்து எடுக்கவும். இந்த மாவுடன், கலக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்துவைக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து, அதை மாவுக் கலவையில் சேர்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, எண்ணெய்விட்டு மாவை அடையாக ஊற்றி, இருபுறமும் திருப்பிவிட்டு நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

எக் - வெஜிடபிள் நூடுல்ஸ்

தேவையானவை:
முட்டை - 3, பிளெய்ன் நூடுல்ஸ் - 200 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), நீளவாக்கில் நறுக்கிய கேரட் - ஒரு டேபிள்ஸ்பூன், முட்டைகோஸ், குடமிளகாய், தக்காளி - தலா ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, மிளகுத்தூள் - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், சோயா சாஸ், டொமேட்டோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு கப் நூடுல்ஸில் 2 கப் தண்ணீர்விட்டு வேகவைத்து, தண்ணீரை வடிக்கவும். குளிர்ந்த நீரில் மூன்று நிமிடங்கள் போட்டு, தண்ணீரை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிச் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் கலந்து, ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு, வறுத்துத் தனியே வைக்கவும். பிறகு, ஒரு வாணலியில் நெய், எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். கேரட், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு  சோயா சாஸ், டொமேட்டோ சாஸ் சேர்த்து, வறுத்த முட்டை மற்றும் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்துப் புரட்டவும். அடுப்பைச் சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள்  வேகவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி, இறக்கிப் பரிமாறவும் (நூடுல்ஸ் சேர்த்ததும் உடையாமல் மெதுவாகப் புரட்டவும்).

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை - வெஜிடபிள் சப்பாத்தி

தேவையானவை: முட்டை - 4, சப்பாத்தி - 6, பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 10 (ஒன்றிரண்டாகத் தட்டவும்), இஞ்சி - பூண்டு விழுது, மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகுத்தூள் - சிறிதளவு, சோம்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சப்பாத்திகளைச் சிறிய துண்டுகளாக்கி வைக்கவும். வாணலியை அடுப்பில் ஏற்றி, எண்ணெய்விட்டுச் சோம்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும். பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி, ஒன்றிரண்டாக அரைத்த சின்ன வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி மற்றும் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு சுருள வதங்கியதும், வாணலியின் ஓரமாக ஒதுக்கிவைக்கவும். பிறகு, வாணலியின் நடுவில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, வறுத்து,  ஓரமாக ஒதுக்கிவைத்த மசாலாவுடன் சேர்க்கவும். அதன்பின்னர், துண்டுகளாக்கிய சப்பாத்தியைச் சேர்த்து நன்கு புரட்டி, தீயைக் குறைத்து, அடுப்பை மூன்று நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும். கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி, இறக்கிப் பரிமாறவும்.

முட்டையுடன் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்தும் செய்யலாம்.

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

முட்டை ஸ்வீட் பணியாரம்

தேவையானவை: முட்டை - ஒன்று, மைதா, ரவை, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்துப்போட்டு, நெய் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்து, அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு, பணியாரக்கல்லை அடுப்பில் ஏற்றி, நெய்விட்டு, ஒவ்வொன்றாக எல்லாக் குழிகளிலும் மாவு விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பணியாரத்தைத் திருப்பிப்போட்டு, மீண்டும் சிறிது நெய் ஊற்றி, இருபக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

-ஜெ.நிவேதா, வெ.வித்யா காயத்ரி

படங்கள் : நா.ராஜ முருகன்

முட்டை ‘Eggs’ clusive தகவல்கள்

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.