Published:Updated:

யசோதா! - ஃபீனிக்ஸ் மனுஷியின் மீள்கதை

யசோதா! - ஃபீனிக்ஸ் மனுஷியின் மீள்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
யசோதா! - ஃபீனிக்ஸ் மனுஷியின் மீள்கதை

ஹெல்த்

நெருப்பில் சாம்பலாகி அதிலிருந்து மீண்டும் பிறந்துவரும் ஃபீனிக்ஸ் பறவையைப் பற்றிக் கதைகளாகக் கேட்டிருப்பீர்கள். நிஜவாழ்க்கையில் சந்தித்ததுண்டா? யசோதாவை ‘ஃபீனிக்ஸ் பறவையின் மனித வடிவம்’ எனலாம். அவரைப் பார்த்தால் முதலில் அவரை அணுகிப் பேசுவதற்கு உங்களுக்குத் தயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.   முக அமைப்பு பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும். ஒரு காது இல்லை, மூக்கு இருக்கும் இடத்தில் இரண்டு துளைகள், சிதைவிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகி வரும் உதட்டுப் பகுதி, அரைகுறைப் பார்வையுடைய இரண்டு கண்கள் எனத் துன்பத்தின் வடுக்களை முகத்தில் தாங்கி இருந்தாலும் அவர் புன்னகைக்கத் தவறுவதில்லை. அந்தப் புன்னகைக்குப் பின்னணியில் ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு மனதின் சோகக்கதை இருக்கிறது.    

யசோதா! - ஃபீனிக்ஸ் மனுஷியின் மீள்கதை

மங்கலான கண்பார்வையுடன் நம்மைப் பார்த்துச் சிரித்தபடியே தன் கதையைக் கூறத் தொடங்குகிறார் யசோதா. ‘‘எனக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம். எங்க கிராமத்திலேயே அதிகமாகப் படித்தவள் நான்தான். பன்னிரண்டாம் வகுப்பு வரைப் படித்திருக்கிறேன். அம்மா அப்பாவிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. இப்படித் துறுதுறுப்பாக இருந்த என்னை அருகில் இருந்த கிராமத்தில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அவருக்கு துபாயில் ஒரு நிறுவனத்தில் வேலை. திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் அவர் துபாய் சென்றுவிட்டார். நான் என்னுடைய மாமியார் வீட்டிலேயே தங்கி இருந்தேன். அன்றாடம் வீட்டு வேலைகளைச் செய்வதும் மாமியார் மாமனாருக்கு உதவுவதுமாக நாள்கள் நகர்ந்தன. என்னுடைய கணவர் எப்போதாவது விடுமுறை கிடைக்கும்போது ஊருக்கு வருவார். அந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவர் குடிகாரர் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

என் கணவர் குடிகாரராக இருந்தாலும் அவரை எனக்கு நிறையவே பிடித்திருந்தது. ஆனால், நாளுக்குநாள் அவருடைய குடிப்பழக்கம் அதிகமானது. நாம் நம்பி வந்தவர் இப்படிக் குடிகாரராக இருக்கிறாரே என்று எனக்குள்ளேயே அழத் தொடங்கினேன். என்னுடைய துன்பத்தை நான் வெளியே யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. துன்பத்தின் அழுத்தம் நாளுக்கு நாள் அதிகமடைந்து ஒருநாள் என்னை நானே எரித்துக்கொள்ள முடிவெடுத்தேன். வீட்டில் யாருமில்லாத சமயமாகப் பார்த்து எனக்கு நானே தீ வைத்துக்கொண்டேன். இனி நாம் மீண்டும் யாரையும் பார்க்கப் போவதில்லை என்கிற நினைப்புடன்....” என்று நிறுத்திக்கொள்கிறார் யசோதா.

அதன்பிறகு முழுவதுமாக எரிந்த யசோதாவின் உடலைத் தூக்கிக் கொண்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிகளுக்குச் சென்றுள்ளார்கள். மதுரையில் சிலகாலம் தங்கி மருத்துவம் பார்த்திருக் கிறார்கள். பிழைப்பது கடினம் என்னும் நிலையில் அம்மா அப்பா மற்றும் உறவினர்களால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துவரப் பட்டிருக்கிறார்.  

“மதுரை அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளித்தாலும் காயம் ஆறுவதற்கு சிலகாலம் எடுத்ததால் உடலில் ஆங்காங்கே படுக்கைப் புண் வந்து சீழ் வரத் துவங்கிவிட்டது. அப்படி வந்தாலே ஆபத்து. அதனால் என்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கே என்னைப் பார்க்க வந்த பி.சி.வி.சி என்னும் அமைப்புதான் நான் குணமடைந்து இந்த நிலைக்கு வருவதற்கு முழுவதும் உதவியாக இருந்தது. உடலில் காயங்கள் ஓரளவுக்கு ஆறியதும் காலில் இருந்து சதை எடுத்து வைத்து உதடுகளில் முகத்தில் மாற்று அறுவைசிகிச்சை செய்தார்கள். இருந்தாலும் கண்பார்வையை முற்றிலுமாக இழந்திருந்தேன். இப்போதுகூட எதிரே நீங்கள் அமர்ந்திருப்பது மங்கலான நிழலாகத்தான் தெரியும். இருந்தாலும் அதற்குப் பழகிவிட்டேன். இன்னும் சிறிது நாள்களில் கண்பார்வைக்கான அடுத்தகட்ட சிகிச்சையும் இருக்கிறது” என்று குரலில் மகிழ்ச்சி தெரியப் பேசுகிறார் யசோதா.

 “எனக்குக் கண்பார்வை வராத நாள்களில் என்னுடன் இருந்து என்னை முழுக்க முழுக்க பார்த்துக்கொண்டவர்கள் என்னுடைய அம்மா அப்பாதான். ‘என் புள்ளைக்கு பார்வை வரலைன்னாலும் பரவாயில்லை டாக்டர், அவ உயிரோடு இருந்தாலே போதும் நாங்க பாத்துக்கறோம்’ என்று அம்மா ஒருமுறை டாக்டரிடம் கூறியது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அப்போதுதான் உண்மையான அன்பு என்றால் என்ன என்பதை உணர்ந்தேன். அவர்களை இப்படிக் கஷ்டப் படுத்தியிருக்கக் கூடாது என்று யோசித்தேன்” என்கிறார்.

 சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் யசோதா கூடவே தன்னைப் போல் கணவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனநல கவுன்சிலிங்கும் கொடுத்துவருகிறார். ஆனால், கவுன்சிலிங் கொடுக்கும் அளவுக்கு மனப்பக்குவம் பெறுவது அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.   “என்னுடைய விசித்திரமான முக அமைப்பைப் பார்த்ததும் சிலர் மயக்கம் போட்டு விழுவார்கள். ஷேர் ஆட்டோக்களில் என்னை ஏற்றிக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றிக்கொண்டாலும் அதில் அமர்ந்திருப்பவர்கள் இறங்கிவிடுவார்கள். முதலில் அவர்களின் செய்கைகள் எனக்கு மனவருத்தத்தைத் தந்தது. ஆனால், நாளடைவில் பழகிக்கொண்டேன். இப்போது தானாக என்னிடம் வந்து பேசுபவர்கள் நிறைய பேர்” என்கிறார் யசோதா.

யசோதாவிடம் தற்போது மனநல கவுன்சிலிங்கிற்கு வரும் பெரும்பாலான பெண்களின் புகார், கணவர் குடித்துவிட்டு வருகிறார் என்பதுதான். அதனால் யசோதா போலத் தன்னைத் தீக்கிரையாக்க முயன்றவர்களும்  அதில் அடக்கம். அவர்களுக்கு யசோதா அறிவுறுத்துவதெல்லாம் ஒன்றுதான்.. “உங்கள் வாழ்க்கையை நீங்கள் சொந்தக்காலில் வாழப் பழகினாலே அதனை எதற்காகவும் முடித்துக் கொள்ளத் தோன்றாது. அது எதிர்நீச்சலடிக்கக் கற்றுக் கொடுக்கும். மேலும் உங்களைப் பாதிக்கும் விஷயத்தை மனதிலேயே பூட்டிவைத்துக் கொள்ளாதீர்கள். அது நான் செய்ததுபோல தவறான முடிவுகளை எடுக்கச் செய்யும். உங்கள் துன்பங்களைக் கேட்கவும் ஆறுதலாக இருக்கவும் இங்கே நிறைய மனிதர்கள் உண்டு. அவர்களிடம் பிரச்னையை மனம்விட்டுக் கூறுங்கள்” என்பதுதான். யசோதாவின் கவுன்சிலிங் தற்போது பலரின் வாழ்க்கைக்கு உத்திரவாதமாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி தற்கொலைக்கு முயல்பவர்களில் ஆண்கள் அதிகம் இருந்தாலும் தன்னை எரியூட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்களில் பெண்கள்தான் முன்னிலை வகிக்கிறார்கள் என்கிறது அதன் ஆய்வறிக்கை. குறிப்பாக இந்தியாவில் மட்டும் வருடாந்திரமாகப் பத்து லட்சம் பேர் தீயினால் மிதமாகவோ அல்லது மிகையாகவோ, சில சமயங்களில் மீட்டுக் கொண்டுவர முடியாத நிலை வரை பாதிக்கப்படுகின்றனர் என்கிறது அதே அறிக்கை.  உண்மையில் ஆசான் வள்ளுவன் சிந்தித்ததைப் போல தீயினாற் சுட்டபுண் உள்ளாறுவதில்லை.

யசோதாவின் தற்போதைய கனவெல்லாம் தன்னைக் கைவிடாமல் கூடவே இருந்து பார்த்துக் கொண்ட அம்மா அப்பாவிற்காகச் சிறு வீடு ஒன்றை வாங்கி அவர்களை அதில் குடியமர்த்துவதுதான்.

அன்புக்கனவு நிறைவேற வாழ்த்துகள் யசோதா!

- ஐஷ்வர்யா

படம்: வீ.நாகமணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz