Published:Updated:

ரத்தக்கசிவைத் தடுக்கும்‘தட்டணுக்கள்’என்கிற கில்லாடிகள்!

ரத்தக்கசிவைத் தடுக்கும்‘தட்டணுக்கள்’என்கிற கில்லாடிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரத்தக்கசிவைத் தடுக்கும்‘தட்டணுக்கள்’என்கிற கில்லாடிகள்!

முத்துச்செல்லக்குமார் நீரிழிவு சிறப்பு மருத்துவர்

றைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது நம் மக்கள் சிறுநீரகத்தைக் குறித்தும், டயாலிசிஸ் குறித்தும் நிறையத் தெரிந்துகொண்டார்கள். அதேபோல இன்று காய்ச்சல் குறித்து, குறிப்பாக, டெங்குக் காய்ச்சல் பற்றித் தமிழ்நாடு முழுக்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

ரத்தக்கசிவைத் தடுக்கும்‘தட்டணுக்கள்’என்கிற கில்லாடிகள்!

`காய்ச்சல்’ என்று பேச ஆரம்பித்தாலே... `டெங்குவா?’ என்பது முதல் கேள்வியாகவும், ‘தட்டணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு’ என்பது இரண்டாவது கேள்வியாகவும் இருக்கிறது. இப்படி நாம் தினமும் பேசும் தட்டணுக்கள் குறித்துக் கொஞ்சம் அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்வோமா?

ரத்தத் தட்டுகள் அல்லது தட்டணுக்கள் (Platelets)

முதன்முதலாகத் தட்டணுக்களைக் காண்பதற்கான வாய்ப்பு 1830–ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஏற்பட்டது. ஜார்ஜ் கலிவர் (George Gulliver) என்ற இங்கிலாந்து மருத்துவர்தான் இந்த அணுக்களைக் கூட்டு நுண்நோக்கி மூலம் கண்டறிந்தார். 1841-ம் ஆண்டில் அதை அப்படியே படமாக வரைந்தார். அதன்பிறகு பல்வேறு அறிஞர்களாலும் மருத்துவர்களாலும் ஆராயப்பட்டு, இறுதியாக ஜேம்ஸ் ரைட் (James Wright) என்ற அமெரிக்க மருத்துவரால் இவற்றுக்கு `ரத்தத் தட்டுகள்’ என்று பெயரிடப்பட்டன. இறுதியாக, தட்டணுக்கள் - ப்ளேட்லெட்ஸ் (Platelets) என்ற பெயரே 1910-ம் ஆண்டில் உறுதிசெய்யப்பட்டது. ஆக,ரத்தச் சிவப்பணுக்கள்,மற்றும் வெள்ளையணுக்களுக்குப் பிறகு, ரத்தத்திலுள்ள முக்கியமான அணுக்கள் இவைதான்.

எப்படி உருவாகின்றன?

எலும்பு மஜ்ஜையிலுள்ள, மெகாகேரியோசைட் (Megakaryocyte) எனப்படும் ஒருவகைப் பெரிய செல்லில் இருந்துதான் இவை உருவாகின்றன. ஒவ்வொரு மெகாகேரியோசைட் செல்லும்,1,000 முதல் 3,000 தட்டணுக்களை உருவாக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரத்தத்தில்,ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு 1,50,000 முதல் 4,50,000 வரை தட்டணுக்களின் எண்ணிக்கை இருக்கும்.

அளவும் அமைப்பும்

இந்த அணுக்கள், சிவப்பணுக்களைவிட அளவில் சிறியவை. இவை 2-3 மைக்ரான் விட்டம் கொண்டவையாக இருக்கும். நுண்ணியத் தட்டுகளாகக் காணப்படும் இவற்றுக்கு மையக்கருவும் இருக்காது. ஒரு குண்டூசியின் தலையில் ஐந்து லட்சம் தட்டணுக்களை வைக்கலாம் என்றால், அதன் அளவை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

ரத்தக்கசிவைத் தடுக்கும்‘தட்டணுக்கள்’என்கிற கில்லாடிகள்!

இந்த அணுக்கள் நான்கு பகுதிகளைக்கொண்டிருக்கும். அவை...

புறப்பகுதி (Peripheral zone): இப்பகுதி, கிளைகோ புரதங்களைக் கொண்டது. இவை தட்டணுக்கள் ஒட்டுதலுக்கும் திரட்டிச் செயல் புரிவதற்கும் உதவுகின்றன.

சோல்-ஜெல் பகுதி (Sol-gel zone): இப்பகுதி, அணுக்கள் வட்டு வடிவத்தில் இருக்க உதவுகின்றன.

ஆர்கானெல்லே பகுதி (Organelle zone): இப்பகுதி ஆல்ஃபா துகள்களைக்கொண்டிருக்கும். இதில், ரத்தம் உறைவதற்குப் பயன்படும் காரணி V, காரணி VIII, ஃபைப்ரினோஜென் (Fibrinogen), ஃபைப்ரோனெக்டின் (Fibronectin), பிளேட்லெட் எடுக்கப்பட்ட வளர்ச்சிக் காரணி ஆகியவை அடங்கியிருக்கும்.

சவ்வுப்பகுதி (Membranous zone): இப்பகுதி, ரத்தம் உறைதலுக்கு உதவக்கூடிய திரோம்பாக்ஸேன் A2-வை (Thromboxane A2) உற்பத்தி செய்வதற்கும், வெளியேற்றுவதற்கும் உதவுகிறது.

பணிகள்

காய்ச்சலின்போது ரத்தம் உறையவில்லை என்றால், ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளையலாம். ரத்த நாளம் பாதிக்கப்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படும்போது முதலில் செயல்படுபவை தட்டணுக்கள்தான். இதனால், திரோம்போபிளாஸ்டின் (Thromboplastin) வெளிப்படுகிறது. இவை, புரோத்ரோம்பின் (Prothrombin) மீது செயல்பட்டு, அதனை துரோம்பினாக மாற்றுகின்றன. துரோம்பின், ஃபைப்ரினோஜெனை, ஃபைபிரினாக மாற்றி இறுதியில் ரத்தத்தை உறையவைக்கிறது. ரத்த நாளம் பாதிக்கப்படும்போது, இந்த அணுக்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துகொள்ளும். இவை காயத்தை மூடவைக்கும், ரத்தநாளச் சுவர் சுருங்குவதையும் ரத்தக்கசிவையும் குறைக்க உதவும்.

ஆயுள் காலம்


பாலூட்டி இனங்களின் ரத்தத்தில் மட்டுமே காணப்படும் இந்த அணுக்களின் ஆயுள் காலம் 7-10 நாள்கள்தான். அதன் பிறகு, முதிர்ந்த தட்டணுக்கள், கல்லீரலிலும் மண்ணீரலிலும் சிதைக்கப்படுகின்றன.

தட்டணுக்கள் குறைவதற்கான காரணங்கள்

• டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள்

• ரத்தப் புற்றுநோய் (Leukemia)
    

• சில வகை ரத்தச்சோகை நோய்கள்

• புற்றுநோய்களுக்குத் தரப்படும் மருந்துகள்

• தொடர்ந்து மது அருந்துதல்

மேற்கூறிய காரணங்களால், தட்டணுக்களின் உற்பத்தி குறையும். இதனால் இவற்றின் எண்ணிக்கையும் குறையும்.

மண்ணீரல் பெரிதானாலும், இந்த அணுக்கள் அங்கே சிக்கிக்கொள்ளும். இதனாலும், இவற்றின் எண்ணிக்கை குறையலாம்.

சிலருக்கு உற்பத்தி சாதாரணமாக இருந்தபோதும், அதிக அளவு சிதைவடைவதால் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையலாம்.அந்த வகையில் கர்ப்பிணிகளுக்குச் சிறிது குறையலாம்.

பாக்டீரியா வகை தொற்றுக்கிருமிகள் ரத்தத்தில் அதிகமாவதால் ஏற்படலாம்.

சிலருக்கு உடல் எதிர்ப்பாற்றல் நோய்களின் காரணமாக, தட்டணுக்கள் சிதைந்து போகலாம். அப்போதும் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகளும் (இதய நோயாளிகளுக்குப் பயன்படும் மருந்துகள்) தட்டணுக்களைச் சிதைவடையச் செய்யும். குறிப்பாக, சல்ஃபா மருந்துகள், குனைன் (Quinine) மருந்து, வலிப்புக்குப் பயன்படும் மருந்துகள் தட்டணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும். எனவே, இவற்றை டெங்கு பாதிப்பின்போது தவிர்க்க வேண்டும். இவை குறைவதால், ரத்தக்கசிவு பாதிப்புகள் ஏற்படும்.

தட்டணுக்கள் அதிகமாவதற்கான காரணங்கள்

• மன அழுத்தம்

• தொற்றுநோய்களின் பாதிப்பு

• புற்றுநோய்கள்

• அறுவைசிகிச்சைக்குப் பிறகு

• மண்ணீரலை வெளியேற்றிய பிறகு

• ரத்த இழப்பு மற்றும் ரத்தச்சோகையின்போது

• அடிபடும்போது / காயங்கள் ஏற்படும்போது

•  சில வகை ஒவ்வாமையின்போது

இவை அதிகமாவதால் ரத்தம் உறைதல் குறையலாம், ரத்தநாள அடைப்பு பாதிப்புகள் ஏற்படலாம்.

உங்களுக்குத் தெரியுமா?

ரத்த தானம் செய்பவர்கள், முன்று மாதத்துக்கு ஒரு முறைதான் தானம் செய்ய முடியும். ஆனால், தட்டணுக்கள் தானம் செய்பவர்கள் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை தானம் செய்ய முடியும். ஆனால், ஆஸ்பிரின் உட்கொண்டிருந்தால் மூன்று நாள்கள் கழித்துத்தான் தட்டணுக்களை தானமாகத் தர இயலும். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே நாற்பது லட்சம் தட்டணுக்கள் உலகம் முழுக்க தானமாகத் தரப்படுகின்றன.

தட்டணுக்கள் சேமிப்பும் தானமும்

த்தத்தைச் சேமித்துவைக்க ரத்த வங்கிகள் இருக்கின்றன அல்லவா? அங்கு ரத்தம் மட்டும் சேமிக்கப்படுவதில்லை. தட்டணுக்களும் தனியாகச் சேமித்து வைக்கப்படுகின்றன. இவை தானம் செய்பவரிடமிருந்து நேரடியாகவே பிரிக்கப்படும், அல்லது தானம் பெற்ற ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனியாகப் பாதுகாக்கப்படும்.

சேமித்த தட்டணுக்களை ஐந்து நாள்கள் மட்டுமே வங்கியில் வைத்திருக்க முடியும். ஆனால், ரத்தம்போல் இதில் குரூப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.