Published:Updated:

அளவுக்கு மிஞ்சினால் ஆக்சிஜனும் நஞ்சுதான்!

அளவுக்கு மிஞ்சினால் ஆக்சிஜனும் நஞ்சுதான்!
பிரீமியம் ஸ்டோரி
News
அளவுக்கு மிஞ்சினால் ஆக்சிஜனும் நஞ்சுதான்!

அசோகன் மனநல மருத்துவர்ஹெல்த்

ம் உயிர்க்காற்றான ஆக்ஸிஜனே நமக்குத் தீங்கு விளைவிக்குமா? நடக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். இணையத்தில் அந்தத் தகவலைப் படித்தவுடன் சற்றுக் குழப்பம் ஏற்பட்டது. ‘ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்’ என்ற பெயரில் பல விளக்கங்கள் மருத்துவ அறிவியல் புத்தகங்களில் காணப்பட்டன. ஆக்ஸிஜனேற்ற நிலை வேண்டுமானால் தீங்கு விளைவிக்கும், அது என்ன ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்? 

அளவுக்கு மிஞ்சினால் ஆக்சிஜனும் நஞ்சுதான்!

ஒவ்வொரு நொடியும் ஆக்ஸிஜன் நம் உடலுக்குள் செல்கிறது. கார்பன் டை ஆக்ஸைடு வெளியே வருகிறது. உள்ளே சென்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகளைக் கொண்டு நம் செல்கள் ஆற்றலைப் பெறுகின்றன. இதை நாம் ஆக்ஸிடேஷன் (Oxidation) என்று அழைக்கிறோம். இப்படி நடக்கும்போது சில ஆக்ஸிஜன் மூலக்கூறுகளில் (Free Radicals) ஒரு  சில எலெக்ட்ரான்கள் மட்டும் மீதம் ஆகிவிடுகின்றன. இந்த எஞ்சியவை  அனைத்தும் சும்மாவா இருக்கும்? அருகிலிருக்கும் நம் உடலின் பிற செல்களில் உள்ள மூலக்கூறுகளுடன் வினைபுரியத் தொடங்கும்.  இது அவற்றின் இழைத்தணுக்கு (Mitochondria) முதல் மரபணுக்கள் (DNA) வரை பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்புதான் பெரும்பாலும் மன அழுத்தமாகவோ அல்லது வேறு பல நோய்களுக்கு இரண்டாம்தரக் காரணிகளாகவோ வெளிப்படுகின்றன.

சரி, இந்த எலெக்ட்ரான்கள் எஞ்சிய மூலக்கூறுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் போலத்  தீங்குகளுக்கு மட்டுமே வழிவகுக்குமா என்றால், நிச்சயமாக இல்லை. இதற்கு முன் ஏற்பட்ட பாதிப்புகளைச்  சரி செய்ய, இவை நம் உடல் இயக்ககத்தைத் தூண்டி விடுகின்றன. இந்தப் பணி நடந்து முடிந்த பின்பும்  மீதமிருக்கும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் (Free Radicals) தான் இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்குகின்றன.

ஆக்ஸிடேஷன் ஆபத்தானதா?

முன்னர் கூறியதுபோல, ஆக்ஸிடேஷன் என்பது ஓர்  அன்றாட நிகழ்வு. அது தேவைக்கு அதிகமாக அதிகரிக்கும்போதுதான் பிரச்னையே! அதிகரிக்கும் நிலை ஏற்படும் போதும், நம்மைக் காப்பாற்ற நம் உடலில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் (Anti-Oxidants) இருக்கும். அவற்றாலும் சமாளிக்க முடியாத அளவிற்கு ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் (Free Radicals) உருவாகும்போதுதான் பிரச்னைகள் தலைதூக்கும். இதுவே ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இதனால் நம் செல்கள், புரதங்கள் மற்றும் மரபணுக்கள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அளவுக்கு மிஞ்சினால் ஆக்சிஜனும் நஞ்சுதான்!

எப்படித் தடுக்கலாம்?

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் தடுக்கும் வழிகள் பற்றிப் பேசுகிறார் மனநல மருத்துவர் அசோகன்.

“ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் என்பது பொதுவாக நோய்களை உருவாக்கும் ஒரு தளமாகவே செயல்படுகின்றது. உடலில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் (Anti-Oxidants) குறைவாக இருப்பவர்களுக்கு இந்தப் பாதிப்பு சுலபமாக வந்துவிடும்.  கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பர் திறனில்லாதவராக இருந்தால், யார் வேண்டுமானாலும் கோல் அடிப்பார்கள். அதுபோல் நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால், ஒரு சில வாழ்வியல் மாற்றங்கள் செய்தாலே போதும். இதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.  

அளவுக்கு மிஞ்சினால் ஆக்சிஜனும் நஞ்சுதான்!

உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். நிலத்தின் அடியில் வளரும் காய்கறிகளை முடிந்தவரைத் தவிர்க்கவும். துரித உணவுகள் மற்றும் மசாலா சேர்த்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டாம். குளுகோஸ் அதிகமுள்ள பொருள்கள் வேண்டாம். பூண்டு, முட்டைகோஸ் மற்றும் வெங்காயம்  ஆகியவை அவசியம். கொய்யாப்பழம் மிகவும் நல்லது. அதிலிருக்கும் வைட்டமின் சி இந்தப் பிரச்னைக்கு ஏற்ற மருந்து. க்ரீன் டீ நிறைய குடியுங்கள். பால் தவிருங்கள்.

உழைப்புக்கு ஏற்ற உணவை உட்கொள்ளுங்கள். உடல் உழைப்பில்லாத வேலை செய்கிறீர்கள் என்றால், தினமும் காலையில் நடக்க வேண்டும். முடிந்தால் ஜாகிங் போகலாம். மன அழுத்தம் வேண்டாம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். பொதுக் கழிப்பறை பயன்படுத்தும்போது கூடியவரைக் கதவின் கைப்பிடிகள், குழாய்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரும நோய்கள் ஏற்படும்போது கூடுதல் கவனம் தேவை. அதனால் உங்கள் உடலில் ஆக்ஸிடேஷன் அதிகரிக்கும். மருத்துவரை அவ்வப்போது சந்தித்து அறிவுரைகள் பெற்றுக் கொள்ளுங்கள். நலமுடன் வாழலாம்!”.  

அளவுக்கு மிஞ்சினால் ஆக்சிஜனும் நஞ்சுதான்!

மருத்துவ அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாகப் படிக்கும்போது அடிக்கடி தட்டுப்படும் இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் என்ற வார்த்தையை நிச்சயம் உற்று நோக்காமல் கடந்திருப்போம். நிலைமை மோசமானால், இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் கேன்சர் உள்படப் பல தீங்குகளுக்குக்கூட வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். உங்கள் உடலை நீங்கள் பார்த்துக்கொள்ளாமல் வேறு யார் பார்ப்பார்கள்? உங்கள் அன்பானவர்களுக்கும் இதே அறிவுரையைக் கூறுங்கள். முதலில் உடலைப் பேணுங்கள். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து நிச்சயம் விடுதலை கிடைக்கும்.

- ர.சீனிவாசன்

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் - எப்படிக் கண்டுபிடிப்பது?

அதீத களைப்பு

நினைவிழப்பு அல்லது மறதி

தசை மற்றும் மூட்டுவலி

சுருக்கங்கள் மற்றும் சரும நோய்

இளநரை

கண் பார்வைக் குறைவு

தலைவலி; சத்தங்களைக் கேட்டால் எரிச்சல்

அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று