Published:Updated:

வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பழங்களைச் சாப்பிடலாமா?

வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பழங்களைச் சாப்பிடலாமா?
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பழங்களைச் சாப்பிடலாமா?

`வெளிநாட்டுப் பழங்களை சாப்பிடக் கூடாதா என்ன?’ என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். தாராளமாகச் சாப்பிடலாம், தவறில்லை. நம்மிடமே இருக்கும் பாரம்பர்ய பொக்கிஷங்களை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, அந்நிய நாட்டுப் பழங்களை மட்டுமே விரும்பிச் சாப்பிடும் கலாசாரம்தான் தவறு.

ம்மைச் சுற்றி என்ன கிடைக்கிறதோ அதைச் சுவைத்து மகிழ்ந்து, அதன் மருத்துவப் பயன்களை அனுபவித்து வளர்ந்தவர்கள் நாம். காற்றின் அசைவில் உதிர்ந்த நெல்லி… ஏறிப் பறித்த கொய்யா… கைக்கெட்டும் தூரத்தில் தொங்கும் மாங்கனிகள்… தரையில் காய்த்துக்கிடக்கும் தர்பூசணி… கொடியில் குலுங்கும் கோவைப் பழம்… கல்லடித்து விழச் செய்த விளாம்பழம்… கொக்கிப் போட்டு இழுத்த கொடுக்காய்ப்புளி… என நம் வாழ்க்கையில் கலந்த மருத்துவக் குணமிக்க பழங்கள் ஏராளம். ஆனால், அவற்றை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை நாம். குளிரூட்டப்பட்ட மிகப்பெரிய பழ அங்காடிகளில் அடுக்கப்பட்டிருக்கும் அந்நியப் பழங்களை, அமெரிக்க மாப்பிள்ளை போல, தேடித் தேடிக் கண்டுபிடிக்கிறோம். 

பழக்கடைக்குள் செல்கிறோம்… எத்தனை வகையான பழங்கள்… வெவ்வேறு நிறங்களில், பல நாடுகளின் புனைபெயருடன் பளிச்செனக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வேறு நாட்டின் பெயருடன் பழரகங்கள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை நோக்கித்தான் கைகள் நீள்கின்றன. எதிலும் கிடைக்காத சத்துகள் வெளிநாட்டுப் பழங்களில் மட்டுமே கிடைப்பதைப் போன்று விளம்பரம் செய்யப்படுவதையும் அந்தக் கடைகளில் பார்க்க முடியும்.

அந்நியப் பழங்களைவிட, நமது சூழலுக்கேற்ப விளைந்த பழங்களில் நமக்குத் தேவையான நுண்ணூட்டங்கள் நிறைந்திருக்கின்றன. நிலத்தின் தன்மைக்கேற்பவும், விளையும் சூழலுக்கு ஏற்பவும் பழங்களில் சேமித்து வைக்கப்படும் நுண்சத்துக்கள் மாறுபடும். நம்மிடையே புழங்கும் ஒவ்வொரு பழமும் வெவ்வேறு வகையான மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, வாழையில் இருக்கும் ஒவ்வொரு ரகத்துக்கும் வெவ்வேறு நோய்களைப் போக்கும் சிறப்பு உண்டு. தென் தமிழகத்தில் வாழை ரகங்களை வைத்தே, பாலர் முதல் முதியவர் வரை ஏற்படும் நோய்களைப் போக்கும் வழக்கம் உள்ளது. 

அதுதவிர்த்து நாகபுரி ஆரஞ்சு, வழக்குளம் அன்னாசி, பங்கனம்பள்ளி மாம்பழம், நாசிக் திராட்சை, சேலத்து மாம்பழம் என மருத்துவக் குணமிக்க நம் நாட்டுப் பழரகங்களின் வரிசை நீண்டுகொண்டே செல்லும். நாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, நமக்கருகிலேயே கிடைக்கும் பழரகங்களுக்குத் தெரியும் நமக்கு என்ன ஊட்டம் தேவை என!

உற்பத்தியில் முன்னிலை:

அதே நேரத்தில் இங்கு விளையும் அனைத்துப் பழங்களுக்கும் பூர்வீகம் நமது நாடாக இருக்காது. பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவில் விளைவிக்கப்பட்டிருக்கும். நமது சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களை தகவமைத்துக்கொண்ட பழவகைகள் இங்கு ஏராளம் இருக்கின்றன. இங்கேயே விளையும் பாரம்பர்ய ரகங்களும் நிறைய உள்ளன. அனைவருக்கும் தெரிந்த பழங்களைத் தவிர்த்து, ஒவ்வொரு பகுதிக்கும் உரிய சில பழவகைகளும் உள்ளன. அப்பகுதியைச் சார்ந்த கிராம மக்கள் அல்லது மலைவாழ் மக்களுக்கு அவற்றின் அருமை தெரிந்திருக்கும். 

தெரியுமா...உலகளவில் அதிகப் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். இவ்வளவு பழ ரகங்களை வைத்துக்கொண்டு, உற்பத்தியில் முன்னிலையில் இருந்துகொண்டு, ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!

யாருடைய தவறு:

பீட்சா, பர்கர்களின் மீது ஆர்வம் கொண்டிருந்த இளம் தலைமுறையினர், இப்போது பழங்களின் மீது தங்கள் பார்வையைத் திருப்பியிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் நம் சூழலுக்குப் பரிட்சயம் இல்லாமல், வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்படும் கண்கவர் பழங்களின் மீதுதான் அவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. நம் மண்ணில் விளையும் பழங்களிலேயே பல்வேறு வகையான சத்துகளும் ஊட்டங்களும் இருப்பதை எப்போது உணரப்போகிறோம்..?

நம் நாட்டுப் பழங்களை சுவைக்காத பிள்ளைகளுக்கு, வாயில் பெயர் நுழையாத வெளிநாட்டுப் பழத்தின் சுவை பரிட்சயமாக இருக்கும். இதற்குப் பழங்களை கவர்ச்சியாகக் காட்சிப்படுத்தி, மக்களைச் சுண்டி இழுத்து வியாபாரம் செய்யும் பெரிய வணிகர்களின் தந்திரம் ஒரு காரணம். நாட்டு ரகங்களின் பெருமைகளைச் சொல்லிக்கொடுக்காமல், அந்நிய மோகத்தால் வெளிநாட்டு ரகங்களைப் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் பெற்றோர்கள் மற்றொரு காரணம்.

பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களின் ரகங்களும் எண்ணிக்கையும் வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பெருநகரங்களில் பழங்களின் விற்பனைக் கணக்கைப் பார்க்கும்போது, எழுபத்தைந்து சதவிகிதம் விற்பனையாவது இறக்குமதி செய்யப்படும் பழங்கள்தாம் என்பது தெரியவந்திருக்கிறது. பிளாக்பெர்ரி, ரெட் கரண்ட், ப்ளூபெர்ரி, டிராகன் ப்ரூட் என இருபதுக்கும் மேற்பட்ட பழரகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சூப்பர் மார்கெட்டுகளில் பெயர் தெரியாத பழங்களுக்கு, யார் என்று தெரியாத நிறுவனம் எவ்வளவு விலை நிர்ணயித்தாலும், வாய் பேசாமல் வாங்கிக்கொள்ளும் நாம்தாம், காய்கறிச் சந்தையில் மருத்துவக் குணம் மிக்க நமக்கு பரிட்சயமான பழங்களை விற்பனை செய்யும் நேரடி விவசாயிகளிடம் பேரம் பேசுகிறோம்!

`வெளிநாட்டுப் பழங்களை சாப்பிடக் கூடாதா என்ன?’ என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். தாராளமாகச் சாப்பிடலாம், தவறில்லை. நம்மிடமே இருக்கும் பாரம்பர்ய பொக்கிஷங்களை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, அந்நிய நாட்டுப் பழங்களை மட்டுமே விரும்பிச் சாப்பிடும் கலாசாரம்தான் தவறு. வெளிநாட்டுப் பழங்களில் சத்துகள் இல்லை என்று சொல்லவில்லை. அவற்றிலிருக்கும் சத்துகள் அனைத்தும் நமது பழங்களிலேயே இருக்கும் போது, எதற்காக அவற்றின் மீது ஆசை. எதற்காகக் கூடுதல் செலவு!

வைட்டமின்கள், தாதுச் சத்துகள் என உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டங்களோடு, சர்க்கரை, ரத்தக் குறைவு, வயிற்றுப் புண் என நோய்களைத் தடுக்கும் ஆற்றல் மிக்க பல்வேறு பழங்கள் நமக்கு வெகு அருகிலேயே இருக்கின்றன. உதாசினப்படுத்தாமல் அவற்றைப் போற்றுவோம்!

அடுத்த கட்டுரைக்கு