Published:Updated:

ஆயுள் அறிவோமா? ஆறே வழிகளில் ஒரு டெஸ்ட்

ஆயுள்
News
ஆயுள் ( Elumalai PM )

குடும்பம்

மிக நீளமான தாடி. ஒல்லியான தேகம். சடை பின்னிய முடி. வயோதிகம் குறித்த ஆராய்ச்சியாளர் ஆப்ரே டே கிரே (Aubrey De Grey) முதுமை குறித்து இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்கிறார். அவரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.    

ஆயுள் அறிவோமா? ஆறே வழிகளில் ஒரு டெஸ்ட்

“இங்கு எல்லா உயிர்களுக்கும் குறிப்பிட்ட ஒரு வாழ்நாள் காலம் இருக்கிறது. அப்படி இருக்கையில் மனிதர்கள் ஆயிரம் ஆண்டுகள் எல்லாம் வாழ முடியும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? ஒருவேளை பரிணாம வளர்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை என்கிறீர்களா?”

அவர் அதிகம்  யோசிக்கவில்லை.

“வயோதிகம் நம் தேர்வு கிடையாது. இன்றைய பரிணாம வளர்ச்சி என்பது புறக்கணிப்பால் விளைந்த ஒன்று. நாம் ஏன் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியவில்லை என்றால், அதற்கான வாழ்க்கை முறையை நாம் மிகக் கடுமையானதாக நினைக்கிறோம். நம் மரபணுக்களின் வழிகளும் கொஞ்சம் மாற்றம் கண்டிருக்கின்றன. ஆனால், இதோ... இங்கு நான் சொல்கிறேன். ஆயிரம் ஆண்டுகள் வாழும் மனிதர்கள் பிறந்துவிட்டார்கள். அந்தத் தலைமுறை உருவாகிவிட்டது” என்கிறார்.

பைபிளிலும் குர் ஆனிலும் வரும் நோவா கதாபாத்திரம் 950 ஆண்டுகள் வாழ்ந்ததாகக்  குறிப்புகள் சொல்கின்றன. ஆப்ரேவின் இந்தக் கருத்துகளும், நடை முறையில் சாத்தியமில்லாதவையாகத் தோன்றலாம். ஆனால், அவர் முன்வைக்கும் கோட்பாட்டிற்கு உறுதியான ஓர் எதிர்க் கோட்பாடு இன்னும் சரியாக முன்வைக்கப் படவில்லை.

2012-ல் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் சிலர்,  ‘ஃபாக்ஸோ’ (Foxo) எனும் மரபணுவைக் கண்டறிந்தார்கள். இவை மனிதர்களிடத்திலும் சில மிருகங்களிடத்திலும் இருக்கின்றன. இந்த மரபணுவைக்கொண்டு புது செல்களை உற்பத்தி செய்யும் ‘ஸ்டெம் செல்’களின் திறனைக் கட்டுப்பாட்டில் வைத்து, வயதாகும் தசைகளை மறு சீரமைக்க முடியும் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை முன்வைத்தார்கள்.

2014-ல் ஸ்பெயினைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் அதிக நாள்கள் வாழ்ந்த, நிறைய நபர்களைக்கொண்ட மூன்று குடும்பங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்கள். இதில், அந்த மூன்று குடும்பத்தினரிடமுமே அபோலிபோ புரோட்டின் - B (ApolipoProtein B) அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர். இது உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அழிக்கும் வல்லமை கொண்டது. இதுபோன்ற மரபணுக்களை நம் தேவைகளுக்கு ஏற்ற மாதிரியாக மாற்றும் முறையைக் கண்டுபிடித்து விட்டால், மனிதர்களுக்கு நீண்ட ஆயுள்காலத்தைக் கொடுத்திட முடியும் என்று நம்பப்படுகிறது.

நோவா மாதிரி 950 வருடங்கள் எல்லாம் வாழ முடியுமா என்று தெரியவில்லை. இருந்தும் கண்டிப்பாக மனிதர்களின் ஆயுள்காலத்தை அதிகமாக நீட்டிப்பது எட்டிப்பிடிக்கும் தூரத்தில் தான் இருக்கிறது என்கின்றன இந்த ஆராய்ச்சிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரி... இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் ஒரு புறமிருக்கட்டும். நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழிருக்கும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து, மதிப்பெண் கொடுத்துத் தெரிந்துகொள்ளுங்கள்:   

ஆயுள் அறிவோமா? ஆறே வழிகளில் ஒரு டெஸ்ட்

வயோதிகம் பற்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச்  (Boston University) சேர்ந்த பேராசிரியர் டாக்டர். தாமஸ் பேர்ல்ஸ் வடிவமைத்த வாழ்நாள் காலத்தைக் கணக்கிடும் கால்குலேட்டரின் (Life Expectancy Calculator) அடிப்படையில் இந்தக் கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கேள்விகளுக்குப் போகும் முன் ஆண்கள் - 86, பெண்கள் - 89 என்று தங்கள் வயதைக் கணக்காகக் கொள்ளவும். பதில்களுக்கு ஏற்ற மாதிரி எண்ணிக்கையைக் கூட்டவும் குறைக்கவும் செய்துகொள்ளுங்கள். (இவற்றின் விடைகள் தோராயமானவையே. மிகத் துல்லியமானவை அல்ல.)

1. அதிகமான பிரச்னைகள் ஏற்படும்போதும் அதிகக் கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் உங்களால் இருக்க முடிகிறதா?

‘ஆம்’ என்றால் 5 வருடங்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் 5 வருடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

2. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது 95 வருடங்கள் வரை வாழ்ந்ததுண்டா?

‘ஆம்’ என்றால் 10 வருடங்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் எதையும் கூட்டவோ, குறைக்கவோ செய்யாதீர்கள்.

3. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்கிறீர்களா?

‘ஆம்’ என்றால் 5 வருடங்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் 5 வருடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

4. உங்கள் மூளை அதிகம் யோசிக்கும் வகையிலான பயிற்சிகளை மேற்கொள்கிறீர்களா? சுடோகு, குறுக்கெழுத்துப் பயிற்சி போன்ற விஷயங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து செய்கிறீர்களா?

‘ஆம்’ என்றால் 5 வருடங்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம்.

5. நீங்கள் உண்ணும் உணவு உங்களை உற்சாகமாகச் செயல்படவிடாமல்,  அதிக எடை, சோம்பல் போன்ற பிரச்னைகளைத் தருகிறதா?

‘ஆம்’ என்றால் 5 வருடங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் எதையும் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம்.

6. குடி அல்லது புகைப் பழக்கம் இருக்கிறதா?

‘ஆம்’ என்றால், யோசிக்காமல் குறைந்தது 15 வருடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் எதையும் குறைக்கத் தேவையில்லை.

என்ன இறுதிக் கணக்கை எடுத்துவிட்டீர்களா?

ஆண்கள் - 68

பெண்கள் - 73

இந்த விடை வந்தால் ஒரு மனிதனின் சராசரி ஆயுள்காலத்தை முழுவதுமாக நீங்கள் வாழ்ந்து விடுவீர்கள் என்று அர்த்தம். இந்தக்  கணக்கிலிருந்து 5 ஆண்டுகள் குறைந்தால்கூட, உங்கள் வாழ்க்கை முறையை இன்னும் ஆரோக்கியமான பாதைக்கு நீங்கள் திருப்ப வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உலகளவில் இந்தக் கணக்குகளை மேற்கொள்ளும் சிலர் தாமஸிடம் ஒரு கேள்வியை முன்வைப்பார்கள்.

‘உங்கள் கணக்குப்படி பார்த்தால் நான் இந்நேரம் இறந்துவிட்டேன்?!’

‘இருந்தும் இருக்கிறீர்கள் என்றால், அதற்குக்  காரணம் உங்களுக்கு  மிக மோசமான கெட்ட பழக்கங்கள் இருந்தும், உங்களின் உறுதியான மரபணுக்கள் உங்களைக் காத்திருக்கின்றன என்று அர்த்தம்’ என்று சொல்லிச் சிரிக்கிறார்.

ஆரோக்கியமான வாழ்வு நீண்ட ஆயுளைத் தருவது மட்டுமல்ல, வாழும் காலத்தை ஆரோக்கியமாகக் கழிக்கவும் வழி செய்கிறது!

புதுப்புது தொழில்நுட்பங்களும், ஆராய்ச்சிகளும் மருத்துவ உலகில் பல புரட்சி களைச் செய்துவருகின்றன. வயோதிகத்தைத் தவிர்த்து நீண்ட ஆயுள் பெற பல கண்டுபிடிப் புகளும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாவற்றையும் நம்புவதைவிட, நம் தினசரி வாழ்வில் சில நல்ல விஷயங்களைக் கடைப்பிடித்தாலே நீண்ட ஆயுளையும், இருக்கும் ஆயுளிலேயே நிம்மதியான, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வையும் வாழ்ந்திட முடியும்.

- இரா.கலைச்செல்வன் 

ஆயுள் அறிவோமா? ஆறே வழிகளில் ஒரு டெஸ்ட்