Published:Updated:

என்பும் உரியர் பிறர்க்கு!

என்பும் உரியர் பிறர்க்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
என்பும் உரியர் பிறர்க்கு!

தனேஷ் பிரசாத் எலும்பு, மூட்டு மருத்துவர்ஹெல்த்

றந்தும் ஒரு மனிதன் பல ஆண்டுகள் பலரின் நினைவில் வாழ்கிறான் என்றால் அது தானம் செய்வதால் மட்டுமே முடியும். மண்ணோடு மக்கி, புழு தின்கிற உடலுறுப்புகளை மனிதனுக்குக் கொடுக்கலாம். கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்புகள் தானம் என்பவையெல்லாம் நமக்குப் பரிச்சயமானவை. ஆனால், எலும்புகளையும் தற்போது தானம் செய்யலாம் என்பது பற்றித் தெரியுமா?  

என்பும் உரியர் பிறர்க்கு!

எலும்பு ஒட்டுதல் (Bone Graft)

ஓர் இடத்தில் இருக்கும் எலும்பைச் சிகிச்சையின்மூலம் வேறு இடத்திற்கு மாற்றி வைப்பதுதான் எலும்பு ஒட்டுதல். உதாரணத்திற்கு ஒருவருக்குக் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு நீண்ட நாள்களாகியும் கூடாமல் போய்விட்டால், உலோகத்தையோ ராடையோ (Rod) வைக்கிறோம். அதுவும் சரியான தீர்வைத் தரவில்லை எனில் அந்த இடைவெளியை நிரப்பச் செய்யப்படும் சிகிச்சைதான் எலும்பு ஒட்டுதல் (Bone Graft). இதில் செயற்கையானது, இயற்கையானது என இரண்டு வகைகள் உள்ளன.

செயற்கை முறை: இந்த முறையில் கால்சியம், எலும்பிலுள்ள கொலாஜென், கால்சியம் சல்பைட் முதலியவற்றைக்கொண்டு செயற்கையான முறையில் எலும்புகள் உருவாக்கப்படுகின்றன. சர்க்கரைக் கட்டி (Suger Cubes) வடிவிலும் பெரிய குழியை (Cavity) நிரப்பப் பசை வடிவிலும் மற்றும் தூள் வடிவிலும் என வெவ்வேறு விதமான வடிவங்களில் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. இந்தச் செயற்கையான போன் கிராஃப்டுக்கு ‘எலும்பு மாற்று’ (Bone Substitute) என்ற பெயரும் உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என்பும் உரியர் பிறர்க்கு!இயற்கையான முறை: இயற்கையான எலும்பு ஒட்டுதல் முறையில் இரண்டு பிரிவுகள் உண்டு.

1. ஆட்டோகிராஃப்ட் (Autograft): இது ஒரு மனிதனின் சொந்த உடலின் ஒரு பகுதியிலிருந்து எலும்பை வேறு பகுதிக்கு/இடத்திற்கு மாற்றி எடுத்து வைப்பது. உதாரணத்திற்கு இடுப்பிலிருக்கும் எலும்பை எடுத்துக் கால் மூட்டுப் பகுதியில் வைப்பது.

2. அல்லோகிராஃப்ட் (Allograft): ஒரே இனத்தின் எலும்புகளை (மனிதர்களுக்கிடையே) மாற்றி எடுத்து வைப்பதுதான் அல்லோகிராஃப்ட். உதாரணத்திற்குத் தாயிடமிருந்து பிள்ளைக்கு எலும்பை எடுத்து வைப்பது.

எலும்புகளையும் தானம் செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம். எலும்புகளைத் தானம் செய்ய விரும்புவோர் ஒப்புதல் படிவத்தை முழு விருப்பத்துடன் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இறந்த பின்பு எடுக்கப்படும் அவருடைய எலும்புகள் மூட்டுகளோடு சேர்த்து எடுக்கப்படும். உதாரணமாக, கால் மூட்டு என்றால் மேலே மற்றும் கீழே உள்ள எலும்பையும் சேர்த்து எடுப்பர்

யாருக்கெல்லாம் எலும்பு ஒட்டுதல் செய்யப்படுகிறது?

எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கும் பெரும்பாலும் எலும்புப் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் செய்யப்படுகிறது. எலும்புகளில் மட்டும் புற்றுநோய்கட்டி பரவி இருந்து உடலின் தசைகளிலோ வேறெந்த இடங்களிலோ புற்று செல்கள் பரவாமல் இருக்கும்போது இந்தமுறை சிறந்ததாகக் கருதப்படுகிறது.  இந்தச் சிகிச்சைகளுக்காக எலும்புகளைச் சேகரித்துப் பராமரிக்கும் வங்கிகள் உள்ளன.  அது பற்றிய தகவல்கள் தருகிறார் எலும்பு, மூட்டு மருத்துவர் தனேஷ் பிரசாத்.

என்பும் உரியர் பிறர்க்கு!“மிகக் குறைந்த அளவே தமிழகங்களில் எலும்புகளைப் பராமரிக்கும் வங்கிகள் உள்ளன. பராமரிக்க எடுக்கப்படும் எலும்புகளிலிருந்து முதலில் தசைகள், தசை நார்கள் எல்லாம் நீக்கப்படும். பிறகு எலும்புகளில் கொழுப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் எலும்புகள் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது. எனவே, கொழுப்புகளை நீக்கும் செயல்முறையைச் செய்தாக வேண்டும். பின்பு, எலும்புகள் மூன்றுமுறை கதிர்வீச்சு மூலம் சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமான நிலையிலேயே மற்றவர்களுக்கு உபயோகப்படுத்தப்படும். சில நேரங்களில் ஒருவருக்கு ஒரு முழு எலும்பின் தேவை இருக்காது. உதாரணத்திற்கு ஒருவருக்கு 6 செ.மீ எலும்பு மட்டுமே தேவையெனில், 18 செ.மீ நீளம் உடைய ஓர் எலும்பை மூன்று பகுதிகளாகப் பிரித்து மூவர் பயனடையும்படி செய்யலாம்.

எலும்புகளைத் தானம் செய்பவரிடம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்?

 மூன்று முக்கியப் பரிசோதனைகள் அவசியம். பரவக்கூடிய நோய்கள் என்று கருத்தில் கொண்டால் HIV, HEPATITIS -B, HCV. இந்த நோய்களால் பாதிக்கப்படாதவர் பாதுகாப்பான கொடையாளியாகக் (Safe Donar) கருதப்படுவார். செயற்கையாக ஓர் உலோகத்தையோ ராடையோ வைக்கும்போது அவற்றின் எடை காரணமாக அவை தளர்வடையும் அல்லது நோய் தொற்று வரும் வாய்ப்புகள் ஏற்படும். ஆனால், இந்த முறையில் இயற்கையான எலும்பைப் போலவே இது வளர்ச்சியடையும் தன்மை உடையது.

இறந்தபின் எலும்புகள் இல்லாமல் ஓர் உடல் எப்படி வடிவம் பெற்றிருக்கும் என்கிற கேள்வி எழலாம். எலும்புகளை எடுத்தபின் அந்த அடையாளம் தெரியாதபடி குச்சிகள் வைக்கப்படும். எனவே, இது குறித்துக் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆர்வமிருப்பவர்கள் தானாக முன்வந்து எலும்புகளைத் தானம் செய்யலாம்.

- இ. நிவேதா