Published:Updated:

பார்த்த ஞாபகம் இல்லையே..!

பார்த்த ஞாபகம் இல்லையே..!
பிரீமியம் ஸ்டோரி
News
பார்த்த ஞாபகம் இல்லையே..!

சுபா சார்லஸ் மனநல மருத்துவர்

விசித்திரமான பிரச்னையோடு வந்தார்கள் அப்பாவும் மகனும்.

``அப்பாவுக்குத் திடீர்னு என்னை யார்னே தெரியலை மேடம்’’ என்றார் மகன்.  அப்பாவுக்கு 55 வயதிருக்கும். இரண்டு பெண் குழந்தைகள். பல வருடங்களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு 18 வயது ஆகும்போது அந்த அப்பா தன் சொத்துகளை எல்லாம் இழந்திருந்தார். குடியிருந்த வீட்டைக்கூட காலி செய்துவிட்டு, வாடகை வீட்டுக்கு வந்துவிட்டார்கள். என்னைப் பார்க்க வந்தபோது மகன்தான் அப்பாவின் கைப்பிடித்து அழைத்து வந்தார். மகனிடம் `‘நீ யாரு.... உன்னைத் தெரியலையே’’ என்றே சொல்லிக்கொண்டிருந்தார். கதறும் மகனின் கண்ணீர், மருத்துவராகிய என்னையே உலுக்கியது.

பார்த்த ஞாபகம் இல்லையே..!

அந்தப் பெரியவரிடம் அல்சீமர் என்கிற மறதிப் பிரச்னைக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. எம்ஆர்ஐ உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனை களும் அதையே உறுதிசெய்தன. அப்பாவுக்கு மகள்களைத் தெரிகிறது. மற்ற எல்லோரையும் நினைவிருக்கிறது. மகனை மட்டும் அடையாளம் தெரியவில்லை. தொடர் ஆய்வுகளுக்குப் பிறகே அவர் Prosopagnosia என்கிற முகக்குருடு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதை Face blindness என்றும் சொல்லலாம்.

முகக்குருடு?

அரிதாகச் சிலரைப் பாதிக்கிற விசித்திரமான பிரச்னை இது.

வயதாவதன் அறிகுறியாக ஒருவருக்குத்  தெரிந்த, பழகிய முகங்களே மறந்து போவது இயற்கை. முகக்குருடு பிரச்னை அப்படிப்பட்டதில்லை. தோனியின் முகம் மறந்து போகலாம். விஜய் ரசிகருக்குத் தன் அபிமான நடிகனை அடையாளம் தெரியாமல் போகலாம். நெருங்கிய உறவினர்களை யார் என்றே தெரியாத நிலை ஏற்படலாம். சுருக்கமாகச் சொன்னால் தன்னையே தனக்கு அடையாளம் தெரியாமலும் போகலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பார்த்த ஞாபகம் இல்லையே..!நான் சந்தித்த பெரியவர் விஷயத்தில் தன் மகனுக்குச் சொத்து எதுவும் கொடுக்க முடியவில் லையே என்கிற குற்ற உணர்வு அதீதமானதன் காரணமாக, மனது வேதனைப்படக் கூடாது என அவரின் மனமே மேற்கொள்ளும் ஒருவிதத் தற்காப்பு நடவடிக்கைதான் அந்த மறதி. மகனின் முகத்தைத் தவிர மற்ற எல்லாம் அவருக்கு ஞாபகமிருக்கின்றன. செல்லமாக வளர்த்த மகன், அவன் நன்றாக வரும்போது தகப்பனாக மகனுக்குச் சொத்து கொடுக்க முடியாமல் போனதை நினைத்து அவருக்கு நினைவில் தடை ஏற்பட்டிருக்கிறது. அதாவது அதீத மனவலிக்குச் செல்கிற அவரை அதிலிருந்து மீட்கும் விதமாக ஏற்பட்டதே அப்படியொரு நினைவுப் பிசகு. மனதே மனதைக் காக்கும் நிலை. இதுவும் அல்சீமர் பிரச்னையும் வேறு வேறு. அல்சீமர் பிரச்னை வயதானவர்களுக்குத்தான் வரும். முகக்குருடு பிரச்னைக்கு வயது வித்தியாசம் கிடையாது.

இந்த அப்பா- மகன் விவகாரத்தில் பிரச்னையின் வீரியம் புரிந்ததால் அதை எப்படி அணுகுவது என்பதையும் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. நேரில் பார்க்கும்போதுதான் அப்பாவால் மகனை அடையாளம் காண முடியவில்லையே தவிர, போனில் பேசும்போது அவரின் அன்பும் பாசமும் மாறாமல் இருந்தன. அதனால் இருவரையும் போனில் பேசவைத்து மெள்ள மெள்ள நெருக்கத்தை ஏற்படுத்தினேன். பிறகு, சற்றுத் தள்ளிநின்று பார்க்கச் செய்தேன். பிறகு நெருக்கத்தில் சந்திக்கச் செய்தேன். கூடவே மன அழுத்தம் நீங்க மருந்துகளையும் கொடுத்து மன உறுதியை உண்டாக்கி, ஒருவழியாகப் பிரச்னையிலிருந்து மீட்டேன்.

முகங்களை அடையாளம் தெரிந்துகொள்கிற சக்தி, நம் மூளையின் Fusiform  எனச் சொல்லக்கூடிய  முக்கியமான பகுதியில் இருக்கிறது. இது மூளையின் பக்கவாட்டில் உள்ள டெம்பரல் லோப் எனச் சொல்லக்கூடிய ஞாபகசக்திக்கான இடத்தில் இருக்கிறது. இதில் பிரச்னை வந்தாலோ, மூளையின் வலது பக்கத்துக்குப் போகிற ரத்த ஓட்டம் பாதிக்கப் பட்டாலோ, ஆக்சிபிட்டல் லோப் எனச் சொல்லப் படுகிற பார்வை நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட மூளையின் பின்பகுதி பாதிக்கப்பட்டாலோகூட  முகக்குருடு பிரச்னை வரலாம். 

பார்த்த ஞாபகம் இல்லையே..!நாம் ஒருவரின் முகத்தையோ அல்லது  பொருள்களையோ பார்த்ததும் எப்படி அடையாளப்படுத்துகிறோம்?

ஐம்புலன்களின் உணர்ச்சித் தூண்டல்கள் மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளின் மூலமாகத் தான்! ஐம்புலன்களில் பார்த்தல், கேட்டல் என்ற இரண்டு செயல்பாடுகளை எடுத்துக்கொள்வோம். செல்போனைப் பார்த்த உடனேயே அது செல்போன் என்று புரிந்துகொள்கிறோம். செல்போன் என்ற புறத்தூண்டல் பொருளானது, கண்களின் வழியாக ஊடுருவி, இரண்டு கண் பந்துகளின் பின்புறம் ஒரு புள்ளியில் விழித்திரையில் குவிகிறது. அங்கிருந்து செல்போனின் வடிவம் பார்வைக்கான நரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மூளையில் பார்வைக்கென ஒரு மையம் இருக்கிறது. இந்தப் பார்வை மையத்தில்தான் செல்போனின் வடிவம் பதிவு செய்யப்பட்டு, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்படுகிறது. இந்தச் செயல்பாடுகளில் எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், பிரச்னைதான்.

முகக்குருடு இருப்பவர்களுக்குப் பார்வையில் எந்தக் குறைபாடும் இருக்காது.  பார்வை மையத்தில் முகங்களை அடையாளம் தெரிந்துகொள்வதற் கெனப் பிரத்யேகமான முக மையம் இருக்கிறது. முகக்குருடு பாதித்தோருக்கு  இந்த முக மையத்தில் மட்டும்தான் பிரச்னை இருக்கும்.

மூளை, நரம்பியல் பிரச்னை காரணமாகவும் முகக்குருடு பாதிப்பு வரலாம். திடீர் அதிர்ச்சி, விபத்து, மூளை வளர்ச்சிக் குறைபாடு போன்றவை இதற்குக் காரணங்கள். மூளை வளர்ச்சியில் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு வரும்போது நண்பர்கள் அமைய மாட்டார்கள். காரணம், அவர்களால் எல்லா முகங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. முகத்தில் பெரிய தழும்பு, மரு, மச்சம் என வித்தியாசமான அடையாளங்களுடன் இருப்பவர்களை மட்டும்தான் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும். 

பார்த்த ஞாபகம் இல்லையே..!

காரணங்கள்

விபத்து

மூளையில் அடிபடுவது

மூளையில் ஏற்படும் ரத்த அடைப்பு

வலிப்பு நோய்

மரபியல்

மூளை வளர்ச்சிக் குறைபாடு

மூளைக்காய்ச்சல்

எப்படிக் கண்டுபிடிப்பது?

பிரபலமானவர்களின் முகங்களை அடையாளம் காணச் செய்கிற சோதனை. ஒபாமா, ரஜினிகாந்த்  போன்ற பிரபல முகங்களை அடையாளம் காணச் செய்கிற சோதனை இது.

* The 20-item Prosopagnosia Index (PI20) என்கிற சுயநிலை அறிகிற சோதனை. இதில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பாதிக்கப்பட்ட நபரே பதில்களை நிரப்ப வேண்டும்.

சிகிச்சைகள் உண்டா?

முகக்குருடு பிரச்னைக்கு இதுவரை பரவலாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை என எதுவும் கிடையாது. உளவியல் ரீதியான காரணங்களால் ஏற்படும் பாதிப்புக்கு உளவியல் ரீதியான அணுகுமுறைகளின் மூலமே ஓரளவுக்குச் சரி செய்ய முடியும்.  எண்ணம் மற்றும் செயல் மாற்றுச் சிகிச்சை (Cognitive behavioural therapy) மூலம் குணப்படுத்த முயற்சி செய்யலாம். குரல்களை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கச் செய்தும் சில முகங்களை நினைவில் கொண்டுவரச் செய்ய முடியும்.

- ஆர்.வைதேகி, படம்: ப.சரவணக்குமார்