Published:Updated:

தன்னம்பிக்கை இருந்தால் பார்கின்சனையும் சமாளிக்கலாம்!

தன்னம்பிக்கை இருந்தால் பார்கின்சனையும் சமாளிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தன்னம்பிக்கை இருந்தால் பார்கின்சனையும் சமாளிக்கலாம்!

உயிர்ப்பின் அடையாளமாக வாழும் மனிதர்தன்னம்பிக்கை

“எனது பயமெல்லாம் நான் எங்கே செடி, கொடிகள்போல ஆகி விடுவேனோ என்பதுதான். என் மனமும் அறிவும் நோயால் சிறிதும் பாதிக்கப்படாமல் இருந்தன. அவற்றை அப்படியே வைத்துக்கொள்வது எனக்கு முக்கியமாகப்பட்டது. வெறிபிடித்தவன் போல எழுதித்தள்ளினேன். இரண்டு ஆங்கில நாவல்களை எழுதினேன். அதில் ஒன்றைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளேன். வாழ்ந்துதான் ஆக வேண்டும், வியாதிக்கு அடிபணிந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தீவிரமாக இருந்ததால்தான் இது சாத்தியமானது.” ரங்கராஜன் தன்னைப் பற்றிய சுயகுறிப்பில் எழுதியிருந்த வார்த்தைகள் இவை. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக பார்கின்சன் நோயோடு போராடிக்கொண்டிருந்தாலும், தன் வாழ்க்கையைத் தன் போக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். உயிர்ப்பின் அடையாளமாக வாழும் இந்த மனிதரைச் சந்திக்கத்தானே வேண்டும்? 

தன்னம்பிக்கை இருந்தால் பார்கின்சனையும் சமாளிக்கலாம்!

காலிங்பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது புன்னகையோடு வரவேற்று, தன் அறைக்கு அழைத்துச் சென்று ஆசையோடு கையில் சில காகிதங்களைக் கொடுத்தார். அதில் பார்கின்சன் நோய் தன்னைத் தாக்கியதிலிருந்து இன்றுவரையிலான நோய்மையின் தரவுகள், அதிலிருந்து தான் மீண்டது, பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதற்குப் பின்பான அவரது வாழ்வின் மற்றோர் அத்தியாயம் என அனைத்தையும் பதிவு செய்து வைத்திருந்தார். சார்ட்டட் அக்கவுண்டன்ட் தேர்வில் இந்திய அளவில் 14-வது இடத்தைப் பிடித்தவர் ரங்கராஜன். 90-களிலேயே மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்திருக்கிறார். அலுவலகத்திலும் நண்பர்கள் மத்தியிலும் கலகலப்பாக உரையாடக் கூடியவர். புத்தக வாசிப்பு, பல்வேறு மொழித் திரைப்படங்கள் பார்ப்பது என அத்தனை விஷயங்களிலும் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். மனைவி உஷா, மகன்கள் ராகவன், பரத் என மகிழ்ச்சியாகக் குடும்ப வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோதுதான் 1996-ம் ஆண்டு திடீரென ஒருநாள் கைகளில் சிறு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கம் தொடரவே மருத்துவரைச் சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு பார்கின்சன் நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. குணப்படுத்த முடியாத நோய், மருத்துவத்திலும் முறையான தீர்வு கிடையாது என்பதையெல்லாம் எண்ணி முடங்கிவிடவில்லை ரங்கராஜன். தானாக பார்கின்சன் நோய் பற்றிய முழுத் தகவல்களையும் தேடிப் படித்துத் தெரிந்து கொண்டார். தனக்கு அடுத்தடுத்து இத்தகைய பாதிப்புகள் வரும் என்பதை முன்பே அறிந்து வீட்டிலிருப்பவர்களையும் தயார்படுத்தி யிருக்கிறார். தன் தொழிலையும் சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது அவரது குடும்பம். ஆனால், அப்போதும் மனைவி உஷா மற்றும் உஷாவின் அப்பாவின் துணையோடு நோயை எதிர்கொண்டுள்ளார் ரங்கராஜன்.

  இப்படி அந்தக் குடும்பத்தை நிலைகுலையச் செய்த பார்கின்சன் நோய் என்ன என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தன்னம்பிக்கை இருந்தால் பார்கின்சனையும் சமாளிக்கலாம்!மனிதனுடைய எல்லாச் செயல்களுக்கும் மூளைதான் காரணம். நரம்பு மண்டலத்தை இயக்கும் செய்திகளை மூளைதான் பிறப்பிக்கிறது.  இந்தச் செய்திகள் மூளையின் ஒரு பகுதியிலிருக்கும் நியூரான்கள் மூலம் தயாரிக்கப்படும் ‘டோபமைன்’ என்ற வேதிக்கூறு மூலம் நரம்பு மண்டலத்திற்குக் கடத்தப்படுகின்றன. ‘டோபமைன்’ தயாரிக்கும்  இந்த நியூரான்கள் 80 சதவிகிதத்திற்கும் மேல் செயலிழந்து போனால்  டோபமைன் தட்டுப்பாடு ஏற்படும். மூளையும் தசையியக்கத்தைத் தூண்டும் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டை மெதுவாக இழக்கத் தொடங்கும். இவ்வகைக் கட்டுப்பாட்டை இழப்பதுதான் பார்கின்சன் நோய் எனப்படுகிறது. இந்நோய்க்கான அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதாகச் சொல்லப்பட்டாலும் பொதுவான அறிகுறிகளாக அறியப்படுபவை: விரல்கள் நடுங்குவது, உடலியக்கம் மந்தமாதல், உடல் சமநிலையை இழத்தல், நிற்க முடியாமல் கீழே விழுதல், படுக்கையில் திரும்பிப் படுக்க முடியாமை, தசைகள் இயங்க மறுத்தல் போன்றவை. இவையெல்லாம் ரங்கராஜனுக்கும் இருந்துள்ளன. அப்போது அவர் செயற்கை முறையில் ‘டோபமைனை’ உற்பத்தி செய்யும் மாத்திரைகளை உட்கொண்டிருக்கிறார். இவ்வாறு தயாரிக்கப்படும் டோபமைனை ‘எல்டோபா’ என்கிறார்கள். இவை ஏற்கெனவே நம் உடலில் உள்ள டோபமைனுடன் சேர்ந்து இயக்கத்திற்கு உதவுகின்றன.  இந்த மாத்திரைகளை உட்கொள்ளும்போது பழைய நிலையை அடைவதுபோலத் தோன்றினாலும், தற்காலிகமானதுதான் என்பது அவருக்குப் புரிய ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நாளும் பார்கின்சன் நோயின் வீரியம் அதிகரித்துக்கொண்டே சென்றிருக்கிறது. இந்த மாத்திரைகளின் வீரியம் இருக்கும் பொழுதை  ‘ஆன் டைம்’ என்கிறார்கள். இந்த ஆன் டைமில்  மாத்திரைகளின் செயல்பாட்டால் உடல், நோயாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், நோயின் உக்கிரத்தையும் பொருத்தே ‘ஆன் டைமின்’ கால அளவு நிர்ணயமாகிறது. ஆன் டைம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு இருந்ததாக ரங்கராஜன் கூறினார். மாத்திரைகளின் வீரியம் குறைந்த நேரம் ‘ஆஃப் டைம்’ எனப்படுகிறது. இந்த நேரத்தில் நோயாளிகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடுவார்கள். இப்படி ஒரு நாளைக்கு ஐந்து முறை மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார் ரங்கராஜன்.

நோயின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருந்தபோது 2011-ல் மூளையில் அறுவை சிகிச்சை செய்து ‘பேஸ்மேக்கர்’ மூலம் மின் சமிக்ஞைகளை உருவாக்கி உடலியக்கத்தைச் சீர்செய்யும் முறைபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார் ரங்கராஜன். அறுவை சிகிச்சை செய்துகொண்டால் உடல் சீராகும் என மருத்துவர்கள் பலர் கூறியுள்ளனர். சிலர் அது சரியான தீர்வாக இருக்காது எனக் கூறியுள்ளனர். ஆனால், 2011-ல் ஆபரேஷன் செய்துகொண்டார் ரங்கராஜன். அந்த அறுவை சிகிச்சையில் மண்டை ஓட்டில் மெல்லிய கம்பி போன்ற ஒரு கருவியைத் துளையிட்டுச் செலுத்தி விடுவார்கள். அந்தக் கம்பியானது மின் சமிக்ஞைகளை ஏற்கும் வண்ணம் சிறு துளைகளைக்கொண்டிருக்கும். அதற்கு மின் சமிக்ஞைகளை வழங்கும் பேஸ்மேக்கர் கருவி இடது தோள்பட்டைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஆபரேஷனுக்குப் பிறகு ரங்கராஜன் நோயின் வீரியமான பாதிப்பிலிருந்து விடுபட்டுத் தற்போது எழுந்து நடத்தல், கம்ப்யூட்டரை இயக்குதல் என்று சின்னச்சின்ன வேலைகளைச் செய்து வருகிறார். ஆனால், இந்த ஆபரேஷன் செய்ததற்குப் பிறகு ரங்கராஜனின் பேசும் சக்தி பாதிப்படைந்துள்ளது. அவரால் தற்போது தெளிவாகப் பேச முடிவதில்லை.  

தன்னம்பிக்கை இருந்தால் பார்கின்சனையும் சமாளிக்கலாம்!

ஆபரேஷனுக்குப் பிறகு புத்தகங்கள் மற்றும் கம்ப்யூட்டருடன் தனது அதிகப்படியான நேரத்தைச் செலவழித்து வரும் ரங்கராஜன் சமீபத்தில் ‘இரண்டாவது மரணம்’ என்ற தனது முதல் தமிழ் நாவலை வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகம் பரவலான வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது பார்கின்சன் நோய் குறித்துத் தமிழில் ஒரு புத்தகத்தை எழுதி வருகிறார். பார்கின்சன் நோய் தாக்கியதற்குப் பிறகு, அவர் அந்த நோய் குறித்து அறிந்துகொண்ட தகவல்களையும், நோய் தன்னளவில் ஏற்படுத்திய பிரச்னைகள், உளவியல்ரீதியாக அணுகியது உள்ளிட்டவை குறித்து அந்தப் புத்தகத்தில் குறிப்பிட உள்ளதாகக் கூறினார். அவரோடு உரையாடிக்கொண்டிருந்த நேரம் முழுமையும் அவ்வளவு கூர்மையாகக் கேள்விகளைக் கவனித்து அவற்றுக்குப் பதிலளித்து வந்தார். தன்போல பார்கின்சன் பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஆபரேஷன் செய்துகொள்வதால் ஆறுதல் கிடைக்கும் என்றார். அவ்வப்போது பேசும்போது உணர்ச்சி மிகுதியால் கண் கலங்கத் தன் கடந்த காலம் பற்றிப் பேசினார். இந்த உணர்ச்சி வசப்படுதலும் பார்கின்சன் காரணமாகத்தான் என்றார் அவரின் மகன்.

வீட்டைவிட்டுக் கிளம்பும்போது ரங்கராஜனின் மனைவி உஷாவிடம் “அவருக்கு நீங்கதான் பக்கபலமா இருந்திருக்கீங்க” என்றேன்.  ‘அவர்தாங்க எங்க எல்லாருக்கும் சப்போர்ட்டிவா இருந்தார்” என்றார் புன்னகையுடன். அந்த அன்பும் நம்பிக்கையும்தான் எல்லா நோய்களுக்குமான அருமருந்துகள்.

- சக்தி தமிழ்ச்செல்வன்

படங்கள்: ஜெ. வேங்கடராஜ்