Published:Updated:

உன்னையே நீ அறிவாய்!

உன்னையே நீ அறிவாய்!
பிரீமியம் ஸ்டோரி
News
உன்னையே நீ அறிவாய்!

சித்ரா அரவிந்த் மனநல ஆலோசகர்ஹெல்த்

உன்னையே நீ அறிவாய்!

வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், குழந்தைகள் வளா்ப்பு, தினசரி அலுவல்கள் - பிரச்னைகள், பணம் ஈட்டுவது, நடுநடுவே கேட்ஜெட்ஸ் பயன்பாடு என நம்முடைய வாழ்க்கை படுவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அவசர கதியில் திடீரென ஏதேனும் வலியோ உடல்நலக் கோளாறோ ஏற்பட்டால்தான் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்து மருத்துவரிடம் செல்கிறோம்.

உன்னையே நீ அறிவாய்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வருடாந்திர உடல் நல செக்அப் (Annual Master Health Checkup) செய்துபாா்த்துவிட்டு, பிரச்னையை ஆராய்ந்து அதற்கேற்ப மருத்துவமும்  பாா்க்கிறோம். நடைப்பயிற்சி,  சின்னச் சின்ன உடற்பயிற்சிகள், கொஞ்சம் உணவுக்கட்டுப்பாடு... இவற்றை யெல்லாம் செய்துவிட்டு, ‘நாம் நலமாகத்தானே இருக்கிறோம்’ என்று எண்ணுகிறோம். உண்மையில், நாம் நலமாகத்தான் இருக்கிறோமா?

‘இல்லை’ என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

அதிா்ச்சியாக இருக்கிறதா?

ஆரோக்கியம் என்பது  உடல்நலத்தை மட்டும் பேணுவது அல்ல.  மற்றொரு முக்கியப் பகுதியான மனநலத்தையும் பேண வேண்டும்.

மனநலம் நன்றாக உள்ளதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

 
வாழ்க்கையில் ஒருவா் எதிா்கொள்ளும்  சூழ்நிலைகளை எப்படிச் சிந்திக்கிறார், உணா்கிறார்,  செயல்படுகிறார் என்பது அவரின் மனநலத்தைச் சாா்ந்தே இருக்கும். ஒருவா் பிரச்னைகளைச் சமாளிக்கும் விதம், பிறருடன் பழகும் விதம், வாழ்க்கையில் எடுக்கும் முக்கிய முடிவுகள் எல்லாம் அவரின் மனநலத்தை வைத்துதான் நிா்ணயிக்கப்படுகின்றன. 

உன்னையே நீ அறிவாய்!உலகச் சுகாதார மையம் (World Health Organization-WHO) மனநலத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘நல்ல மனநிலையில் உள்ளவா், தன் முழு ஆற்றலை உணர்பவராகவும் தினசரிப் பிரச்னைகளைச் சமாளிக்கத் தெரிந்தவராகவும், உழைக்கத் தெரிந்தவராகவும், தான் வாழும் சமுதாயத்தில் முக்கியப் பங்களிப்பவராகவும், மொத்தத்தில் தன் வாழ்வை முழுவதுமாக வாழத்தெரிந்தவராகவும் இருப்பாா்’ என்கிறது.

மனநலம் ஏன் பேண வேண்டும்?

உடல்நலம்: மனநலத்துக்கும் உடல்நலத்துக்கும் நெருங்கிய தொடா்புண்டு. உடல்நலம் மேம்பட மனநலம் மிகவும் முக்கியம். மனநலப் பிரச்னை இருந்தால் அது நம் முக்கியப் பழக்கவழக்கங்களான உணவு, தூக்கம் போன்றவற்றைப் பாதிப்பதோடு,  எதிா்ப்பு சக்தியைக் குறைத்துவிடுவதால், பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வித்திடும்.

உன்னையே நீ அறிவாய்!

பணவரவு: மனநலப் பிரச்னை ஒருவரின் வேலை செய்யும் திறனை வெகுவாகப் பாதிப்பதால், குடும்பத்தில் வருமான பாதிப்பு ஏற்படுகிறது. வேலை பார்க்குமிடத்திலும்,  அடிக்கடி விடுப்பு எடுப்பது, வீண் கோபத்தினால் சண்டை போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி: யாருக்கு மனநலம்  பாதித்தாலும், அது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனவேதனையைத் தரும். ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியும் பாதிக்கப்படும்.

குற்றச்செயல்கள்:
மனநலப் பிரச்னைகளில் இருப்போா், ஏதேனும் குற்றம் செய்ய நேரிடலாம். அல்லது குற்றத்தால் பாதிப்புக்குள்ளாகவும் நேரிடலாம். உதாரணமாக, குடிபோதை நோயினால் பாதிக்கப்பட்டோா் (Substance Use Disorder) அல்லது சமூக விரோத ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்பட்டோா் (Anti-social Personality Disorder), சிகிச்சை மேற்கொள்ளாதபட்சத்தில் நோயின் தன்மையால் யாரையும் கொலை செய்யக்கூட நேரிடலாம்.

தற்கொலை எண்ணம்: பதற்றம், மனஅழுத்தம், பயம் போன்ற மனநலப் பிரச்னை இருப்பவா்களால், வாழ்வை  ரசிக்கவே முடியாது. மேலும் சிலா் நோயின் தீவிரத்தால் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளவும் வாய்ப்பு அதிகம்.  அதுமட்டுமின்றி, இன்று பல திருமண முறிவுகள் ஏற்படுவதற்கும் மனநலக் கோளாறுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம்மில் நான்கில் ஒருவா் மனநலம் பாதித்தவராக இருக்கலாம் என உலகச் சுகாதார மையம் தெரிவிக்கின்றது. அப்படி இருந்தும் பெரும்பாலானோர் சிகிச்சைபெற முன்வருவதில்லை.  போதிய  விழிப்பு உணா்வு இல்லாததால், பலரும் இந்தக் காலத்திலும் பில்லி- சூனியம், கோயில், சாமியாா் எனத் தவறான வழிகளில் தீர்வுகாண முயற்சி செய்கிறார்கள். மனநலப் பிரச்னை என்பது, உடல்நலப் பிரச்னையைக் காட்டிலும் கொடியது. ஏனெனில், உடல்நலப் பிரச்னைகளைக் கண்ணால் பாா்க்க முடியும்;  மருத்துவரிடம் போவதிலும் பிரச்னை இல்லை. ஆனால், மனநலப் பிரச்னை நேரடியாகக் கண்களுக்குத் தெரிவதில்லை.  தெரிந்தாலும் மூடி மறைத்து வாழவே நினைக்கிறார்கள். எதுவும் முடியாத நிலையில் மட்டுமே, அவா்கள் மனநல ஆலோசகா் அல்லது மருத்துவா் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றனா்.

தேசிய மனநலச் சங்கம் குறிப்பிடும் முக்கிய மனநலப் பண்புகளைப் பாா்ப்போம்.

  * தன்னைப் பற்றிய உயா்வான எண்ணம்.

  * எதிா்மறை உணா்வுகளான கோபம், பயம், குற்ற உணா்வு, பதற்றம் போன்றவற்றைச் சமாளிக்கத் தெரிதல்.

  * நிறைவுதரும் உறவுகள்.

  * பிறருடன் பழகும்போது சகஜமாக உணா்வது.

  * மனம் விட்டுச் சிரிப்பது.

  * தன்னையும் பிறரையும் மதிக்கத் தெரிவது.

  * வாழ்வில் ஏற்படும் தோல்விகளை ஏற்றுக்கொள்வது.

  * வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை எதிா்கொண்டு சமாளிக்கும் திறன்.

  * முடிவுகளைத் தானே எடுப்பது.

  * சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத்தானே மாற்றிக்கொள்வது.

உன்னையே நீ அறிவாய்!

மனதளவில் நீங்கள் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறீர்களா? ஓர் எளிய டெஸ்ட்...

கீழே  கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஆம்/இல்லை எனப் பதிலளியுங்கள். உங்கள் மனநலத்தை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

  * பெரும்பாலான நேரங்களில் நான் பலவீனமாக உணர்கிறேன்.

  * எனக்கு ஊக்கமும் துடிப்பும் குறைவாக இருப்பதாகக் கருதுகிறேன்.

  * அடிக்கடி எனக்கு இதயத்துடிப்பு அதிகமாகிறது.

  * சில சமயங்களில், ஓரிடத்தில்கூட இருப்புக் கொள்ள / நிலைகொள்ள முடியாமல் இருந்திருக்கிறேன்.

  * அடிக்கடி நான் பதற்றம், பயம் மற்றும் எரிச்சல்படுவதுண்டு.

  * அதீதப் பசி அல்லது பசியின்மை.

  * அடிக்கடி தூக்கம் வராமலும் தொடர்ந்து தூங்க முடியாமலும் கஷ்டப்படுவதுண்டு.

  * அளவு கடந்து தூங்குவேன். எழ வேண்டும் என்ற எண்ணமே வராது. 

  * வாரத்தில் பலமுறை அஜீரணக் கோளாறினால் அவதிப்படுகிறேன்.

  * எனக்கு ஞாபகமறதி உள்ளது.

  * உடலைப் பாதிக்கும் அளவிற்கு எனக்குக் கவலைப்படும் பழக்கமுண்டு.

  * நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விலகிச் சற்றுத் தனிமையாக உணர்கிறேன்.

  * அடிக்கடி தலைவலி/உடல் வலியினால் அவதிக்குள்ளாகிறேன்.

  * வாழ்வில் இனிமேலும் ஏதேனும் பயனுள்ள விஷயமொன்று இருக்கிறதா எனச் சில நேரங்களில் நான் யோசிக்கிறேன்.

  * அடிக்கடி மன இறுக்கமாக/மன நெருக்கடியாக மன அமைதியின்றி உணர்கிறேன்.

  * மனதில் எதிர்மறை எண்ணங்கள் எனக்கு அதிகம் தோன்றுவதுண்டு.

  * தெளிவாக என்னால் சிந்திக்க முடிவதில்லை.

  * நான் மேற்கொள்ளும் செயல்களில் என்னால் அதிகம் கவனம் செலுத்த முடிவதில்லை.

  * பிரச்னைகளிலிருந்து மீளவே முடியாது என அடிக்கடி உணர்கிறேன்.

  * என்னால் அதிகம் மகிழ்ச்சியாக உணர முடியவில்லை.

  * தினசரி பிரச்னைகளையும் செயல்பாட்டையும் கூடச் சமாளிக்க முடியாமல் திணறியதுண்டு.

  * அடிக்கடி என் மேலுள்ள நம்பிக்கையை இழந்துவிடுகிறேன்.

  * அதிகக் கோபம்/குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறேன்.

  * தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி வருவதுண்டு.

  * அளவுக்கதிகமான கட்டுப்படுத்த முடியாத மது/போதைப் பழக்கம் உண்டு.

  * முன்பு பிடித்த விஷயத்தில் இப்போது அதிக நாட்டமில்லாமல் போகிறது.

  * காரணமில்லாமல் மற்றவர்மீது சந்தேகப்படுவதுண்டு.

  * தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் பழக்கம் உண்டு.

  * இல்லாத விஷயத்தைப் பார்ப்பது/ யாரோ என் காதில் பேசுவதுபோல உணர்கிறேன்.

* உண்மையென நிரூபிக்க முடியாத பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட விஷயத்தை ஆழமாக நம்புவதுண்டு.

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் பெரும்பாலும் ‘ஆம்’ எனில், அது மனநலப் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு. இவை  விழிப்பு உணா்வுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள்தான். இந்த அறிகுறிகள் எல்லோரிடத்திலும் சில நேரங்களில் காணப்படலாம். ஆனால், தொடர்ந்து காணப்பட்டாலோ, தீவிரமானாலோ, உங்கள் வேலை, குடும்பம் போன்றவற்றைப் பாதித்தாலோ அது மனநலப் பிரச்னையாக இருக்கலாம்.

இந்தச் சோதனையை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் செய்து பார்க்கலாம். தேவைப்பட்டால் மனநல ஆலோசகரையோ  (Psychologist) அல்லது மனநல மருத்துவரையோ (Psychiatrist)  அணுக வேண்டும்.  மருத்துவரை அணுகுவது, உங்கள் பலவீனத்தைக் குறிப்பதல்ல! ‘எல்லாம் தானாகச் சரியாகிவிடும், எல்லாவற்றையும் என்னால் கட்டுப்படுத்த முடியும்’ என எண்ணுவது,  ஒருவர் தன் மகிழ்ச்சியான வாழ்வைத் தானே அழித்துக்கொள்வதற்குச் சமம்!  மனது தெளிவாக, சந்தோஷமாக இருந்தால் மட்டுமே, ஒருவர் தன் முழுத்திறனுடன் செயல்பட முடியும். அதனால் வீட்டில் உறவுகளும் மேம்பட்டுக் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும்.