Published:Updated:

ஜீரோ ஹவர்!

ஜீரோ ஹவர்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீரோ ஹவர்!

ஹெல்த்

ஜீரோ ஹவர்!

னவரி மாதம் வந்துவிட்டால் நடைப்பயிற்சி செய்கிற பூங்காக்களில், ஜிம்களில், யோகா சென்டர்களில், ஓட்டப்பயிற்சிக் குழுக்களில் கூட்டம் அதிமாகிவிடும். ஜனவரி, சபதங்களின் மாதம். அந்த வருடம் முழுக்க என்னென்ன செய்யப்போகிறோம் என்கிற பட்டியல் உருவாவது ஜனவரியில்தான். ‘இனி புகைக்க மாட்டேன்’ என்பதில் தொடங்கி,  ‘காலையில் சீக்கிரம் எழுவேன்’, ‘புத்தகம் படிப்பேன்’, ‘தொப்பையைக் குறைப்பேன்’, ‘வாக்கிங் போவேன்’ எனச் சகல சபதங்களும் உருவாவது இந்த ஜனவரிகளில்தான். இந்த ஜனவரி சபதங்களில் முக்கிய இடம்பிடிப்பவை உடற்பயிற்சிகள்.  

ஜீரோ ஹவர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி ஜனவரியில் கிளம்புகிற சவால்மேன்களை (வுமன்களையும்தான்) டிசம்பரில் சந்தித்து ஜனவரி சபதங்களில் எவ்வளவு முடிந்திருக்கிறது என்று விசாரித்தால் 90 சதவிகிதம் பேரின் பதில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ‘‘எங்கங்க... மூணு மாசம் போனேன். அப்புறம் டச் விட்ருச்சு. நெக்ஸ்ட் இயர் மறுபடியும்...’’ என்பார்கள், எல்லோரிடமும் எடுத்த சபதம் முடிக்காமல் போனதற்கு முன்னூற்று சொச்சம் காரணங்கள் கட்டாயம் இருக்கும். அதில் முக்கியமான காரணம், ‘டைம் இல்ல!’

நம்மிடம் எல்லா விஷயங்களுக்கும் நேரம் இருக்கிறது. சாப்பிட, தூங்க, சினிமா பார்க்க, மொபைல் நோண்ட, செல்ஃபி எடுக்க, நோய்வாய்ப்பட்டால் அட்மிட் ஆக.... ஆனால், உடற்பயிற்சிக்கு நேரம் இருப்பதில்லை. ஏன்?

ஜீரோ ஹவர்!நடைப்பயிற்சி செய்கிற பூங்காங்களுக்கு சென்று அங்கே வருகிற நூறு பேரிடம் ஒரே கேள்வியைக் கேட்போம். ‘ஏன் தினமும் இப்படி லொங்கு லொங்கென்று நடக்கிறீர்கள்?’ 70 சதவிகிதம் பேருடைய காரணம் சர்க்கரை நோய் அல்லது மூட்டுவலி அல்லது இதய நோய்களாக இருக்கும், மீதி 20 சதவிகிதம் பேருடைய காரணம் தொப்பை, ஒபிசிட்டி மாதிரியான தொந்தரவுகள். கடைசி 10 சதவிகிதம் பேரில் பாதிப்பேர் கடந்த பத்துநாள்களாகத்தான் நடக்கவே ஆரம்பித்திருப்பார்கள். குழந்தைகளாக இருக்கும்போதிருந்தே நமக்கு உடல்மீது அக்கறை காட்ட வேண்டும் என்று சொல்லி யாருமே வளர்ப்பதில்லை. நம்முடைய லட்சியமெல்லாம் நன்றாக மார்க் எடுப்பது, நல்ல வேலையில் சேர்வது, நிறைய சம்பாதிப்பது என்பதாகத்தான் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். விளையாட்டு என்பது தனி டிபார்ட்மென்ட். அது வாழ்க்கையில் தோற்றுப்போகிறவர்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஓர் எரர் மெசேஜூம் போட்டுவைத்துவிடுகிறோம்.

ஆரோக்கியம் என்பது சிறுவயதில் இருந்தே நல்ல உணவுகள், உடற்பயிற்சி, ரிலாக்ஸான மனம் இவற்றைப் பேணுவதின் மூலம் கிடைப்பது என்பதை யாருமே நமக்குக் கற்றுத்தருவதில்லை. நாமும்கூட நம் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு வாழ்க்கை முறையைத்தான் அறிமுகப்படுத்துகிறோம். அப்பா வாக்கிங் போனால்தானே பிள்ளைக்கும் அந்த எண்ணம் வரும்!  

ஜீரோ ஹவர்!

நண்பர் ராஜேந்திரன் திடீர் என்று ஒருநாள் அதிகாலையில் வாக்கிங் வந்தார், `என்னாச்சு சார்’ என்று விசாரித்தால் சமீபத்தில்தான் அவருக்குச் சின்ன ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. “டாக்டர் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆகணும்னு சொல்லிட்டார்” என்றார். அவரைப்பற்றி நன்றாகத் தெரியும். தினமும் 12  மணி நேரம் அலுவலகத்திலேயே கிடப்பவர். எந்நேரமும் உழைப்பு உழைப்புதான். அப்படிப்பட்ட மனிதன் தன் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளவே இல்லை. அவரிடம் அதற்கான ஒருமணி நேரம் இல்லை. பணம் சம்பாதிக்கவும், தன்னுடைய முதலாளியைச் சந்தோஷப்படுத்தவும், நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்காகப் போராடவும் அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால், தன்னுடைய உடல்நிலை தன்னுடைய ஆரோக்கியத்தைக் கவனிக்க அவருக்கு நேரமில்லை. கடைசியில் ஒட்டுமொத்த இயக்கமும் முற்றுப்பெறும் போதுதான் ஞானம் வந்து வாக்கிங் வந்திருக்கிறார்!

சரி, எப்போதெல்லாம் நமக்கு உடல் பற்றிய அக்கறை வருகிறது? ஒரு லிஸ்ட் போடலாமா?

* உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும்போது

* உடல் எடை தாறுமாறாகக் கூடும்போது

* கன்னம் ‘பன்’மாதிரியும் வயிறு பலூன் மாதிரியும் வீங்கும்போது

* இதுமாதிரியான எழுச்சிக் கட்டுரைகள் வாசிக்கும்போது

* பக்கத்து வீட்டுக்காரர் ஆரோக்கியமாக வாழ்வதைப் பார்க்கும்போது

இருந்தும்  நாம் ஏன் உடலைப் பேணிக்காப்பதில்லை? இங்கே உடல் மீதான அன்போ அக்கறையோ இல்லாதவர்கள் யாருமுண்டா? நம்மிடம் ஏன் இல்லை ஒரு மணிநேரம்? எது நம்மைத் தடுக்கிறது?

இங்கே எல்லாருக்குமே ஊக்கம் இருக்கிறது. எல்லாருக்குமே டாக்டருக்குக் காசு கொடுப்பதில் கவலை இருக்கிறது. ஆனாலும், பலரால் தொடர்ச்சியாக தினப்பயிற்சிகளை மேற்கொள்ள முடிவதில்லை. ‘தினமும் ரன்னிங் போலாம்னு இருக்கேன்’ என்று கிளம்பிவருவார்கள். முதல் பத்துநாள்களில் புது ஷூ, ஷார்ட்ஸ், ஜெர்ஸி என எல்லாமே பளபளக்கும். பதினோறாவது நாளில் இருந்து ஆள் வர மாட்டார். “என்னாச்சு பாஸ்” என்று விசாரித்தால், “அய்யோ கால் வலிக்குது, கை வலிக்குது, முடியல” என்று புலம்புவார். இதற்கு என்ன காரணம்? வீட்டிலேயே பதினைந்தாயிரத்திற்கு ட்ரெட் மில் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால், அதில் கர்சீப், உள்ளாடைகள் காயப்போட்டிருப்போம். நீச்சல் பயிற்சிக்கு மூன்றுநாள் போய்விட்டு வந்து,  ‘தோளெல்லாம் வலி பின்னுது’ எனத் துடிப்பார்கள்.

நடைப்பயிற்சிக்குச் சென்ற மூன்றாவது நாளே தொப்பையை அளந்து பார்த்து ‘என்ன, இன்னும் குறையல’ என்று ஃபீல் ஆகவே கூடாது. காத்திருக்க வேண்டும். கூடவே நீங்கள் செய்கிற பயிற்சி எதுவாக இருந்தாலும் அதைப்பற்றிய எந்த விபரங்களும் தெரியாமல் களத்தில் இறங்கக் கூடாது. ‘நாம் செய்வது என்ன மாதிரியான உடற்பயிற்சி.., அதை எப்படி செய்ய வேண்டும்,  பயிற்சியாளர் அவசியமா, முழுமையாக ஈடுபட கால அவகாசம் என்ன, உபகரணங்கள் தேவைதானா’ என்பது மாதிரி விஷயங்களைக் கவனிக்க வேண்டும். தவறான காலணி போதும் உங்கள் நடைப்பயிற்சி பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க. கொஞ்சம் முடி உதிர்தல் போதும், நீச்சல் பயிற்சியை முடித்துவைக்க...

பயிற்சி எதுவாக இருந்தாலும் பழக்கம் எதுவாக இருந்தாலும்... அதை முழுமையாக அறிந்துகொள்வதிலும் புரிந்துகொள்வதிலும்தான் இருக்கிறது சூட்சுமம். புரிந்துகொள்ள நீங்கள் தயாராக இருந்தால், ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரம் சொர்க்கமாக மாறும்.

நேரம் ஒதுக்குவோம்...

- வினோ