Published:Updated:

வைட்டமின் N இது இயற்கை அளிக்கும் சூப்பர் மருந்து!

வைட்டமின் N இது இயற்கை அளிக்கும் சூப்பர் மருந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
வைட்டமின் N இது இயற்கை அளிக்கும் சூப்பர் மருந்து!

ஹெல்த்

ற்பனை செய்து பாருங்கள்...  பச்சைப்பசேல் புல்வெளியில் ஹாயாகப் படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீலவானம் பிரகாசமாகச் சிரிக்கிறது. மேகங்கள் திரண்டு உற்சாகம் தருகின்றன. வனரோஜாக்களின் வாசனை உங்கள் மனதை மயக்குகிறது. பறவைகள் இசை சேர்க்கின்றன. இப்போது எப்படி உணர்கிறீர்கள்? அழுத்தம் குறைந்து லேசாக இருக்கிறதல்லவா? மனதில் புதிய மகிழ்ச்சி புறப்படுகிறதல்லவா? இது ஒரு பிக்னிக் அல்ல... எகோதெரபி என்கிற சிகிச்சைமுறையின் ஒரு பகுதிதான்! இயற்கையை நேசிப்பவரா நீங்கள்? இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அவ்வப்போது பயணம் செய்யும் ஆர்வம் உங்களுக்கு உண்டா? வாழ்த்துகள்! நீங்கள் உங்கள் உடலுக்கு மட்டுமல்ல... மனதுக்கும் வளம் சேர்க்கிறீர்கள்! 

வைட்டமின் N இது இயற்கை அளிக்கும் சூப்பர் மருந்து!

இயற்கை சார்ந்த தெரபிகள் அண்மைக்காலமாக  மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. குறிப்பாக... ABC என்கிற அட்வென்ச்சர் பேஸ்டு கவுன்சலிங், எகோதெரபி ஆகிய இரண்டும் இயற்கையோடு இயைந்து பல பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றன.  இந்த இரண்டு முறைகளிலும்  இணை மருத்துவர் இயற்கைதான். மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவன ஈர்ப்பை அதிகரிக்கவும், நல்ல மனநலத்தை அளிக்கவும் கூடிய வல்லமை இதுபோன்ற இயற்கைசூழ் சிகிச்சை முறைகளுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இவையொன்றும் புதிய சிகிச்சை முறைகள் அல்ல. வனச்சூழலைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துவது காலம்காலமாகவே நடைமுறையில் இருந்திருக்கிறது. கனடா உட்பட உலகின் பல பகுதிகளில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பசுமையான பகுதிகளும் பண்ணைகளும் இதற்காகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல... பண்ணை விலங்குகளும் இந்நிவாரணத்துக்குத் துணை புரிகின்றன. நடைப்பயணம், கயிறு கட்டி ஏறுதல் உட்பட சிலபல பயிற்சிகளும் உண்டு. தேவைக்கேற்ப குழுவாகவோ, தனித்தனியாகவோ இவை நிகழ்த்தப்படுகின்றன. தாவரங்களைப் பயிரிட, அவை நாளும் பொழுதுமாக வளர்வதைப் பார்க்க, அறுவடை செய்ய இங்கு வாய்ப்புகள் உண்டு. நெடுந்தூர நடை பயிலவும், ஓடியாடி மகிழவும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. விலங்குகளைப் பராமரித்தல், தேனீ வளர்ப்பு, அறுவடைப் பணி, முட்டை சேகரித்தல்,  உணவு தயாரித்தல், பாதை அமைத்தல் போன்ற செயல்பாடுகளும் இயற்கை சூழ் சிகிச்சைமுறையின் பகுதிகளாக இருக்கின்றன. வழக்கமான சிகிச்சைமுறைகளில் உள்ள அச்சுறுத்தல்கள் எவையும்  இந்தச் சிகிச்சை முறையில் கிடையாது. சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கேற்ற திட்டங்களுக்கே இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வைட்டமின் N இது இயற்கை அளிக்கும் சூப்பர் மருந்து!

அமைதி, ஆழ்ந்த திட்டமிடல், எண்ணங்களின் பிரதிபலிப்பு ஆகியவை மனவியல் சிகிச்சைகளில் முக்கியத்துவம் கொண்டவை. இவை இயற்கைச் சூழ் சிகிச்சையிலும் பின்பற்றப்படுகின்றன. நடத்தையியல் உளவியல் அறிதல், கதைச் செயல்பாடு எனப் பல மனவியல் அம்சங்கள் இவற்றில் உண்டு. பிரச்னைகளிலிருந்து மீண்டெழுதல், நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தருதல் எனப் பல நல்ல விஷயங்களை இயற்கை சூழல் இலவசமாகவே வழங்கும். இயற்கை சூழலில் ஒரு முகாமில் தங்கியிருக்கும்போது மனரீதியான வலு அதிகரிக்கிறது. வாழ்க்கை பற்றிய புரிதல் புலப்படத் தொடங்குகிறது. உள்ளதைக் கொண்டு வாழும் உள்ளம் வாய்க்கிறது. சவால்களைச் சந்திக்கும் தைரியம் பிறக்கிறது.

மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுவதைவிட, சில பிரச்னைகளுக்கு இயற்கைசூழ் சிகிச்சை நல்ல பலன் அளிப்பது கனடாவில் செய்யப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒண்டோரியோ மாகாணத்தின் இயற்கை சூழ் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஃபிடில்ஹெட் கேர் ஃபார்ம். இங்கு ஏடிஹெச்டி, ஆட்டிசம் மற்றும் மூளைக்காயங்களில் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகள், இளம் வயதினருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பண்ணை விலங்குகளும் தாவரங்களும்கூட இதில் பங்கேற்றன. விளைவு... வியக்கத்தக்க வகையிலான பலன்! 

‘‘விலங்குகளுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் கிடையாது. அவை எவரையும் மதிப்பீடு செய்வதுமில்லை. யாருக்கும் தீங்கு விளைவிக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவற்றுக்குக் கிடையாது. நிபந்தனையற்ற அன்பை அவை அள்ளி வழங்கும். மருத்துவர்களின் பாதிப் பணியை இவ்விலங்குகளும் தாவரங்களுமே பார்த்துக்கொள்கின்றன. சிகிச்சைக்கு வந்த சிலர் இதுவரை யாரிடமும் பகிராத உணர்வுகள், நிகழ்வுகள், கவலைகள், அழுத்தங்களையெல்லாம் இந்த உயிர்களிடம் மனம்விட்டுப் பேசியது எங்களை ஆச்சர்யப்படுத்தியது’’ என்கிறார் இப்பண்ணை சிகிச்சை முறையின் மருத்துவர் பிரேன் மேத்தர்ஸ். வழக்கமான மருத்துவமனை சிகிச்சைகளோடு ஒப்பிடுகையில் இயற்கை சூழ் சிகிச்சைகளுக்கு அதிகக் கட்டணம் இல்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதுபோன்ற சிகிச்சைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது.

வைட்டமின் N இது இயற்கை அளிக்கும் சூப்பர் மருந்து!`சும்மா இருப்பதும் சுகமே’ என்பதுபோல பரபரப்பு இல்லாத வாழ்க்கைமுறையே குறைந்தபட்ச நிவாரணத்தை அளித்துவிடுகிறது. மன அழுத்தம் குறைந்து, நரம்பு மண்டல இயக்கமும் சீராகிறது. `வைட்டமின் நேச்சர்’ - இதுதான் சூப்பர் மருந்து. பதினைந்தே நிமிடங்கள் இயற்கையோடு செலவிட்டாலே குறுகியகால நினைவாற்றல் திறன் அதிகரிக்கிறது: வீக்கங்கள் குறைகின்றன: கவன ஈர்ப்புத் திறன் கூர்மையடைகிறது; படைப்பாற்றல்  சிறக்கிறது; பாசிட்டிவ் எண்ணங்கள் உருவாகி மனநலம் சீராகிறது. சுயமதிப்புக் கூடுகிறது. கண்ணியம் அளிக்கிறது. பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

தற்கொலைக்கு முயன்றோர், தற்கொலை எண்ணம் கொண்டோர், கவலை, மனப்பிரச்னைகள் உடையவர்கள், மனச்சோர்வில் துன்பப்படுவோர், பைபோலார் டிஸார்டர், ஸ்கீசோபெர்னியா போன்ற சிக்கல்கள் கொண்டவர்கள் உட்பட பலருக்கு இயற்கை சூழ் சிகிச்சை முறை நிவாரணம் அளிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

``மனநல ஆலோசனை எனப் பேசிக்கொண்டே இருப்பதைவிடவும் இப்படியோர் அனுபவத்தை அளிப்பது மிகுந்த நன்மை அளிக்கிறது. இயற்கையே கோ-தெரபிஸ்ட் ஆகச் செயல்படுவது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்? இயற்கை நம் வாழ்வின் கண்ணாடியாகவே மாறும். நம் உள்மனதை அப்படியே பிரதிபலிக்கும்’’ என்கிறார் ஹியூமன்- நேச்சர் கவுன்சிலிங் முறையைப் பின்பற்றும் மனநல ஆலோசகர் கேட்டி ரோஸ்.

‘‘வைட்டமின் குறைபாடு காரணமாக நமக்குப் பல பிரச்னைகள் ஏற்படுவது பற்றி எல்லோருக்கும் தெரியும். இதைவிடவும் இப்போது அதிகரித்து வரும் பிரச்னை என்ன தெரியுமா? Nature deficit disorder என்கிற இயற்கைப் பற்றாக்குறை குறைபாடுதான். மருத்துவர்களே... ஏராளமான மருந்து மாத்திரைகளை எழுதித் தருகிற நீங்கள் இன்னும் ஒரு மாமருந்தையும் எழுதுங்களேன்... அது Vitamin N என்கிற வைட்டமின் நேச்சர். இயற்கையை இணைக்காமல் இனி எப்படி நல்ல சிகிச்சையை அளிக்க முடியும்?’’ என்று மருத்துவ உலகத்துக்கே அறிவுறுத்தல் செய்கிறார் Vitamin N  உள்பட பல இயற்கை சூழ் சிகிச்சை நூல்களை எழுதிருக்கிற ரிச்சர்ட் லோவ்.

உள்ளாய்ந்துப் பார்த்தால், இது நம் பாரம்பரிய கிராமிய வாழ்க்கைமுறைதானே? இயற்கையான வாழ்க்கைக்குள் சிகிச்சை முறைகளை ஒளித்து வைத்திருந்தார்கள் நம் முன்னோர். நாம் இப்போது சிகிச்சைக்காக இயற்கையைத் தேட வேண்டிய சூழலுக்கு வந்துள்ளோம்.

- வள்ளி

படங்கள்: செளமியா ரகுநாத்