Published:Updated:

தம்மும் ரம்மும் இருந்தால்தான் கிரியேட்டிவிட்டி வருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தம்மும் ரம்மும் இருந்தால்தான் கிரியேட்டிவிட்டி வருமா?
தம்மும் ரம்மும் இருந்தால்தான் கிரியேட்டிவிட்டி வருமா?

மீண்டவர் சொல்லும் நிஜக்கதை!தன்னம்பிக்கை

பிரீமியம் ஸ்டோரி

“வருமானத்துக்குக் குறைவில்லை... யாரைப் பத்தியும் கவலைப்படுறதும் இல்லை. ஆபீஸ்ல இருந்து வெளியில வந்து காரை ஸ்டார்ட் பண்றேனோ இல்லையோ, பாட்டிலைத் திறந்துருவேன். குடிச்சுக்கிட்டே டிரைவ் பண்ணுவேன். வீட்டுக்கு வர்றதுக்குள்ள ‘ஃபுல்’லாயிடும். பலநாள், பாதை மாறியெல்லாம் போயிருக்கேன். அதேமாதிரி ‘தம்’மும். எண்ணிக்கையே இருக்காது. ஆனா, எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கும்தானே..? 45 வயசுல 80 வயசுக்காரன் மாதிரி ஆகிட்டேன். உடம்பெல்லாம் தளர்ந்து போச்சு. ஒரே நைட்ல முடிவெடுத்தேன், `இனி தண்ணியும் வேணாம்... தம்மும் வேணாம்’னு..! அந்த முடிவுதான் இப்போ என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு...” - இடைவெளி விடாமல் பேசுகிறார்  ஸ்ரீராம்.

‘க்ராவ் மாகா’ ஸ்ரீராம் என்றால் பலருக்கு இவரது முகம் மலரும். 57 வயதுக்கான முதுமை, உடலில் இல்லை. வைரம் பாய்ந்த கட்டை மாதிரி இருக்கிறது உடம்பு. குடியாலும் புகையாலும் கரைந்த உடம்பை முற்றிலுமாக மீட்டு, இன்று போலீஸ் கமாண்டோக்களுக்கே பயிற்சியளிக்கும் தற்காப்புக் கலைப் பயிற்சியாளராக உயர்ந்திருக்கிறார் ஸ்ரீராம்.   

தம்மும் ரம்மும் இருந்தால்தான் கிரியேட்டிவிட்டி வருமா?

சென்னை, பெசன்ட் நகரில் வசிக்கும் ஸ்ரீராம், இந்தியாவில் மூத்த ‘க்ராவ் மாகா’ பயிற்சியாளர். தமிழகத்துக்கு  இந்தக்  கலையை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ‘க்ராவ் மாகா’ என்பது, இஸ்ரேல் நாட்டுத் தற்காப்புக்கலை. கிட்டத்தட்ட நம் ஊர் தெருச்சண்டை மாதிரிதான். கையில் கிடைக்கும் பொருளை வைத்து அந்தச் சூழலில் இருந்து தப்பிப்பதுதான் இந்தக் கலையின் உள்ளடக்கம். மனப்பயிற்சி, சமயோசித அறிவு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய கலை.

“பத்து வருஷத்துக்கு முந்தி, நான் இப்படியோர் அறிமுகத்தோட உங்க முன்னாடி நிப்பேன்னு நினைச்சுக்கூடப் பாத்ததில்லை. நம்ம கதை முடிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சு போச்சு. ஏதாவது ஒரு நோய் வந்து படுக்கப்போடுறவரைக்கும் நமக்கு உடலோட அருமை புரியாது. அதைக் குப்பைத் தொட்டி மாதிரி யூஸ் பண்ணுவோம். நானும் அப்படித்தான்.

எனக்குப் பூர்வீகம் நன்னிலம். தாத்தாவுக்குச் சிலம்பம் தெரியும். அப்பாவும் நல்லா கம்பு சுத்துவார். எனக்கும் சின்ன வயசுலயே தற்காப்புக்கலைகள்ல ஆர்வம் அதிகம். கல்லூரிக் காலத்துலேயே கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிட்டேன்.  

தம்மும் ரம்மும் இருந்தால்தான் கிரியேட்டிவிட்டி வருமா?

எனக்கு ஓவியம் நல்லா வரும். படிப்பு முடிஞ்சதும் ஆர்ட் டைரக்டர் ஆகிட்டேன். கிரியேட்டிவிட்டி சார்ந்த தொழிலாச்சே... ‘தம்மும், ரம்மும் இருந்தாத்தான் கிரியேட்டிவிட்டி வரும்’ன்னு ஒரு மூடநம்பிக்கை இருக்கு. அது நம்மையும் தொத்திக்கிச்சு. எப்பவும் விரலிடுக்குல சிகரெட் இருக்கும். குடிநீர் மாதிரி ஆகிப்போச்சு மது. சரியான நேரத்துக்குச் சாப்பிடுறதில்லை. சாப்பிட்டா அளவில்லாம சாப்பிடுறது. 26 வயசுல திருமணம். வாழ்க்கையில எந்த மாற்றமும் இல்லே. ஃபுல் மப்புல எது மேலயாவது காரை மோதவிட்டு சண்டை போடுறது, தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வர்றதுனு ஆகிப்போச்சு. இதுல இருந்து விடுபடணும்னு தோணவேயில்லை.

 45 வயசுல, நிதானமா இருந்த ஒருநாளில், மாடிப்படி ஏறுறேன்... ஏற முடியலே. பயங்கரமா மூச்சு வாங்குது. கை, கால்லாம் ஆடுது... ‘ஆஹா... எல்லாமே முடியப்போகுது போலருக்கே’ன்னு அலர்ட் ஆகிட்டேன். இனிமே இப்படியே இருந்தா சீக்கிரமே செத்துப்போயிடுவோம்னு உறுதியாகிடுச்சு. முதல்ல, தம், தண்ணியை விடணும்னு முடிவெடுத்தேன். அது அவ்வளவு லேசான  விஷயம் இல்லே. ஆனா, மனக்கட்டுப்பாடு இருந்தா எல்லாமே முடியும்தானே..? உயிர்மேல ஆசை வந்திடுச்சு. மகளுக்குக் கல்யாணம் பண்ணிப் பேரன் பேத்தி பார்க்கணும்... அதுக்காகவாவது குடியை விடணும்.

ஆல்ஹகாலிக் அனானிமஸ்னு ஓர் அமைப்பு இருக்கு. குடியை விட்டவங்க, குடியைவிட நினைக்கிறவங்கள்லாம் கூடி அனுபவங்களைப் பகிர்ந்துக்குவாங்க. நிறைய ஆலோசனைகள் அங்கே கிடைச்சுது. வாழ்க்கையில சவாலான காலகட்டம் அது. உச்சக்கட்டப் போராட்டம். குடிக்கணும்னு தோணும்போது, ‘கொஞ்சம் லேட்டா குடிப்போம்’னு தள்ளிப்போடுவேன். அரைமணி நேரம் ஒரு மணி நேரமாச்சு... ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரமாச்சு. ஒருநாளாச்சு... ஒரு வாரமாச்சு... அப்படியே இப்போ 12 வருஷமா தொடாம தப்பிச்சுட்டேன். தம்மும் அப்படித்தான். இப்போ மத்தவங்க சிகரெட் பிடிச்சாக்கூட அந்தப் புகை அலர்ஜியாகுது.   

தம்மும் ரம்மும் இருந்தால்தான் கிரியேட்டிவிட்டி வருமா?

மது, போதையில இருந்து கவனத்தைத் திருப்பணும்னா வேற எதுலயாவது கவனத்தைக் கொண்டு போகணும். தொய்ந்துபோய்க் கிடக்கிற உடலை மேம்படுத்தணும். அதுக்கான உபயங்களைத் தேடிக்கிட்டிருந்தபோதுதான் ‘க்ராவ் மாகா’ பத்தின ஒரு செய்தியை பேப்பர்ல பார்த்தேன். ஏற்கெனவே நமக்கு கராத்தே தெரியும்ங்கிறதால இதுல கூடுதல் ஆர்வம் வந்துச்சு. அந்தப் பத்திரிகையில இருந்த டெல்லி முகவரிக்கு போனேன். விக்ரம் கபூர்னு முதன்மை மாஸ்டர் என் ஈடுபாட்டைப் பார்த்துட்டு ஒரு வாரம் பயிற்சி கொடுத்தார். அதுக்கப்புறம், ‘இதுமட்டும்தான் உலகம்’னு ஆகிடுச்சு. படிப்படியா பயிற்சிகளை நிறைவு செஞ்சேன். தொங்கிப்போன உடம்பு வலுவாச்சு. வாழ்க்கை மேல பெரிய நம்பிக்கையும் உருவாச்சு. சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளும், அந்தக் குறிக்கோளை அடைவோம் என்ற நம்பிக்கையும், அந்த நம்பிக்கை நமக்குள் உண்டாக்கும் எதிர்பார்ப்பும்தான் ஆரோக்கியத்தின் ரகசியம்...”- உற்சாகம் ததும்புகிறது, ஸ்ரீராம் பேச்சில்.

‘க்ராவ் மாகா’வுக்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. 1948-ம் ஆண்டில் யூதர்கள் பாலஸ்தீனத்துக்காகக் கெரில்லா யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது ஹிட்லரின் நாஜிப்படையின் பிடியில் இருந்து தப்பி, இந்தக் கெரில்லாப் படைக்கு வந்த இமி(Imi) என்கிற போராளிதான் இந்தக் கலையை வடிவமைத்தவர். இருக்கிற ஃபிட்னெஸை வைத்து, போர்க்கலை பழகுவது. இதற்கென்று தனியாக எந்த ஸ்டைலும் இல்லை. பாக்ஸிங்கில் இருந்து பஞ்சிங், கராத்தேயில் இருந்து கிக்கிங், ஜூடோவில் இருந்து ஆட்களைப் பந்தாடும் நுட்பம், மல்யுத்தத்தில் இருந்து உடல் சக்தியை ஒருங்கிணைத்துச் சண்டை போடுவது... எனப் பல்வேறு தற்காப்புக்கலைகளில் இருந்தும் கொஞ்சம் எடுத்து உருவாக்கப்பட்ட கலை. உதாரணத்துக்கு நம் ஊர் தெருச்சண்டை மாதிரி.

“ ‘க்ராவ் மாகா’ ஓர் உளவியல் கலை. தனிப் பாடத்திட்டமெல்லாம் இருக்கு. புத்திசாலித்தனம், தப்பிக்கிற யுத்தி, தவிர்க்க முடியாத சூழல்ல தாக்குறது... இதுதான் ‘க்ராவ் மாகா’. முழுசா கத்துக்கி்ட்டு, இஸ்ரேல் போய் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிட்டு வந்தேன். அதுக்கப்புறம் வேலையை விட்டுட்டு முழுசா இதுலயே இறங்கிட்டேன். காவல்துறையில சிறப்பு கமாண்டோ பிரிவு, ஸ்பெஷல் ஆக்‌ஷன் குரூப்புக்கெல்லாம் பயிற்சி கொடுக்கிறேன். இப்போ 100 ஸ்டூடன்ட்ஸ் இருக்காங்க. 40 வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்கு இந்தப் பயிற்சி அவசியம்னு சொல்லுவேன். குறிப்பா, பெண்கள் இதை அவசியம் கத்துக்கணும். உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாம மன ஆரோக்கியத்துக்கும் இது உகந்த கலை’’ என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் ஸ்ரீராம்.

வெ.நீலகண்டன்

படங்கள்: பிரியங்கா   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு