பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நியூஸ்!

ற்போது, உடல்நலம் சார்ந்து மக்களுக்குள்ள பெரிய கவலைகள், ஐயங்கள் என்னென்ன என்று ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது கூகுள். 2017-ம் ஆண்டில் உடல்நலம் சார்ந்து மக்கள் அதிகம் தேடிய விஷயங்கள் இவைதானாம்:  

டாக்டர் நியூஸ்!

கீட்டோ டயட் (கார்போஹைட்ரேட்டைக் குறைத்து உண்ணும் ஒருவகை டயட்)

CTE (Chronic traumatic encephalopathy) நோய் (விளையாட்டு வீரர்களை அதிகம் பாதிக்கக்கூடிய ஒரு நரம்பியல் நோய்)

தீய பழக்கங்களுக்கு அடிமையாவது ஒரு நோயாகக் கருதப்படுவது ஏன்?

காபி குடிப்பது நல்லதா? கெட்டதா?

கொம்புசா (ஒருவகைத் தேநீர்) நல்லதா? கெட்டதா?

What The Health (http://www.whatthehealthfilm.com/) என்ற ஆவணப்படத்தை நம்பலாமா?

* உடலுறவின்போது உச்சநிலையை எட்டுவது எப்படி?

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது. மனதுக்கு?

அதற்கும் உடற்பயிற்சி பயன்படும் என்கிறது அமெரிக்க நரம்பியல் அகாடமி. சமீபத்தில் இவர்கள் வெளியிட்டிருக்கும் நெறிமுறைகளின் படி, MCI எனப்படும் Mild Cognitive Impairment (சிறு அறிவாற்றல் குறைபாடு) பிரச்னை கொண்டோர் வாரத்துக்கு இரண்டுமுறை உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அவர்களுடைய நினைவுத்திறனும் சிந்தனைத் திறனும் மேம்படுமாம்.

டாக்டர் நியூஸ்!தற்சமயம் உலகெங்கும் லட்சக்கணக் கானோருக்கு, குறிப்பாக வயதானவர்கள் பலருக்கு MCI பிரச்னை இருக்கிறது. அவர்கள் இதைப் பெரிதாகிவிடாமல் காத்துக்கொண்டு இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்குத் தொடர்ச்சியான உடற்பயிற்சி உதவலாம். இந்தப் பிரச்னை இல்லாதவர்கள்,  இளைஞர்களும்கூட வாரம் சில நாள்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள். இதன்மூலம் உடல், மனம் சார்ந்த பல பிரச்னைகளைத் தாமதப்படுத்தலாம், தடுக்கலாம்.

டாக்டர் நியூஸ்!

ணையமும் மொபைல் சேவையும் இந்தியாவில் பரவப்பரவ, பல விஷயங்களை உட்கார்ந்த இடத்திலிருந்து வாங்கும் செளகர்யம் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் மருந்துகளும் சேர்ந்துவிட்டன.

முன்பெல்லாம் மருந்துகளை வாங்கக் கடைக்குச் செல்லவேண்டும்.  இப்போது மொபைல் அல்லது கணினியில் இருந்தபடி நமக்கு வேண்டிய மருந்துகளைத் தள்ளு படியில் வாங்கலாம்.

சில இணையதளங்கள் மற்றும் ஆப்கள் இதில் இன்னொரு படி முன்னேறிவிட்டன. மருத்துவர் தரும் ப்ரிஸ்க்ரிப்ஷனைப் புகைப்படமாக எடுத்து  இதில்  ஏற்றிவிட்டால் போதும், அவர்களே மருந்துகளைத் தேர்ந்தெடுத்து நம்முடைய ஆர்டரை உறுதிசெய்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட கடையில் கிடைக்கும் அதே அனுபவம்!

அடுத்து, மருந்துகளை டவுண்லோடு செய்யும் வசதியும் வந்துவிடுமோ!

ருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகிறவர்கள் தங்களைப்பற்றிய பல தனிப்பட்ட விவரங்களைத் தரவேண்டியிருக் கிறது. இவ்விவரங்கள் அவர்களுக்குப் பொருத்தமான, சிறந்த மருத்துவச் சிகிச்சையை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன.

அதேநேரம், இப்படிச் சேகரிக்கப்படும் விவரங்களைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது அந்த மருத்துவமனையின் பொறுப்பு. ஒருவேளை இந்த விவரங்கள் தவறான நபர்களிடம் சென்று விட்டால் பல குழப்பங்கள், இழப்புகள் நேரிடக்கூடும்.

அமெரிக்காவில் லாங்க்மான்ட் நகரிலிருக்கும் ‘பௌல்டர் கவுன்டி கிளினிக்’ மருத்துவமனையில் இப்படிச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த விவரங்களெல் லாம் சமீபத்தில் திருடுபோய் விட்டனவாம். இந்த மருத்துவமனையின் கணினியைக் குறிவைத்துத் தாக்கிய ஹேக்கர்கள் இவற்றைத் திருடியிருக்கக்கூடும். இதன்மூலம் நோயாளிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மருத்துவச் சிகிச்சை விவரங்களெல்லாம் அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம். இவற்றைப் பயன்படுத்தி சில நூதன ஏமாற்று வேலைகள் நிகழக்கூடும்!

நோயாளிகளின் விவரங்களைச் சேமித்து வைக்கும் மருத்துவமனைக் கணினி அமைப்புகள் மிகக் கவனமாகப் பாதுகாக்கப் படவேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே இந்தத் திருட்டுகள் நடக்கின்றன என்றால், இந்திய மருத்துவமனைகளின் நிலைமை எப்படியிருக்குமோ?

லகெங்கும் உடல் பருமன் பற்றிய விழிப்பு உணர்வு பரவலாகிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அமெரிக்க அதிபரின் உடல் எடையால் ஒரு சர்ச்சை தொடங்கியிருக்கிறது.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானபிறகு முதன்முறையாக உடல் பரிசோதனைக்குச் செல்லவிருக்கிறார். இதனை அறிவிக்கும் அமெரிக்க இதழ்கள் அவருடைய உடல் பரிசோதனைகளின் பழைய நிலையைக் குறிப்பிட்டு, ‘அவருடைய எடை மிக அதிகம்’ என்கின்றன. ‘ஆனால், அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை. உடலை மேலும் பருமனாக்கக் கூடிய ஹாம்பர்கர், சோடா போன்றவற்றை நிறைய சாப்பிடுகிறார்’ என்று விமர்சிக்கின்றன. ‘உடல்நலம் முக்கியம் அதிபரே’ என்று இடித்துரைக்கின்றன.

டாக்டர் நியூஸ்!

‘ஏதாவது பிரச்னைன்னு மருத்துவமனைக்குப் போனாலே போதும், இந்த டாக்டருங்க ஆயிரக்கணக்குல பணத்தைப் பிடுங்கிடுறாங்க’ என்று புலம்புகிறவர்கள் பலர். உண்மையில் பணத்தைப் பிடுங்குவது மருத்துவர்கள் அல்லர், மருந்துகளும் பிற பொருள்களும்தான் என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.

இந்தியாவின் பிரபல நாளிதழொன்று பல தனியார் மருத்துவமனைகளின் கட்டண விவரங்களை அலசி ஆராய்ந்திருக்கிறது. இதன்படி, நோயாளிகள் செலுத்துகிற பணத்தில் வெறும் 10 முதல் 20 சதவிகிதம்தான் மருத்துவர்களுக்குச் செல்கிறதாம். 30 முதல் 50 சதவிகிதம் மருந்துகள், பரிசோதனைகள், பிற பொருள்களுக்குச் செலவாகிவிடுகிறதாம். இந்தப் பொருள்களில் மருத்துவமனைக்குக் கிடைக்கும் லாபம் மிக அதிகம் என்பதால், இவர்கள் கொஞ்சம் மனம் வைத்தால் ஒட்டுமொத்த மருத்துவக் கட்டணத்தைக் கணிசமாகக் குறைத்துவிடலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது; நடக்குமா?

- நி.ராஜேஷ்வர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு