பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

டூ வீலர் சார்ந்தது எனது தொழில்.  அவ்வப்போது முதுகுத்தண்டில் வலி ஏற்படும். சிறு ஓய்வுக்குப் பிறகு சரியாகிவிடும். தற்போது, அடிக்கடி கழுத்தில் சுளுக்கு பிடித்துக்கொள்கிறது. முதுகுத்தண்டில் ஏதேனும் பிரச்னை இருக்குமா? அல்லது எலும்பு வலுவிழந்து விட்டதா?

- எஸ்.மணிகண்டன், புதுக்கோட்டை  

கன்சல்ட்டிங் ரூம்

வாகனங்களை அதிகம் ஓட்டுபவர்கள், நேராக அமர்ந்து ஓட்ட வேண்டும். லேசாக முன்னோக்கி சாய்ந்தபடி ஓட்டுவதும் நல்லதுதான். வண்டியின் ஷாக் அப்சார்பர் (Shock Absorber) பகுதியைப் பராமரிப்பதன் மூலம், முதுகுத்தண்டு பிரச்னையில் இருந்து விடுபடலாம். மேலும், குறைந்த எடையுள்ள ஹெல்மெட்டை அணியவேண்டும். தலை, கழுத்துப்பகுதி தசைகளைப் பாதுகாக்க இது உதவும்.   தினமும் உடற்பயிற்சி செய்வதுடன் இடது, வலது என இருபுறமும் கழுத்தைச் சாய்ப்பது போன்ற பயிற்சிகள் செய்வது நல்ல பலனளிக்கும். இன்றைய சூழலில் முதுகுத்தண்டு பிரச்னைக்கான பரிசோதனைகளைச் செய்தால், பலருக்கும் பாசிட்டிவாகத்தான் இருக்கும். முதலில் எக்ஸ்ரே, சி.டி., எம்.ஆர்.ஐ  ஸ்கேன்கள் எடுக்கப்படும். பல நேரங்களில், பாதிப்பு இங்கேயே உறுதி செய்யப்பட்டுவிடும். இல்லாத பட்சத்தில், நோயாளி மைலோக்ராஃபி (Myelography) எனப்படும் கதிரியக்க முறைக்கு உட்படுத்தப்படுவார். இது முதுகுத்தண்டில் ஊடுருவி, பாதிப்பை உறுதி செய்யும். 

கன்சல்ட்டிங் ரூம்பல தருணங்களில் என்னுடைய கால்களில் எரிச்சலை  உணர்கிறேன். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த உணர்வு அதிகமாக உள்ளது. சமீபகாலமாக, சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் எடுத்துவருகிறேன். எனவே, இது மாத்திரைகளின் பக்கவிளைவாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. இதற்கான காரணம் என்ன? தீர்வு என்ன?

- ந.சுகுமார், ஆலங்குளம்   

கன்சல்ட்டிங் ரூம்

இது, ‘டயாபடிக் நியூரோபதி’ (Diabetic neuropathy) எனப்படும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கால் எரிச்சல், சர்க்கரை நோய்க்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளால் வரும் பக்கவிளைவல்ல. சர்க்கரை நோயால்தான் உங்களுக்குக் கால் எரிச்சல் வந்திருக்கிறது. ஏனென்றால், சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவை தம் சக்தியை இழந்துவிடும். இதனால் பாதம், உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளில் எரிச்சல் உண்டாகும்.

ஒவ்வொருவரின் சர்க்கரை நோயின் அளவைப் பொறுத்தும், அவரவர் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் இது மாறுபடும். சிலருக்குச் சர்க்கரையின் அளவு 400 ஆக இருக்கும். ஆனால், அவர்களுக்குக் கால் எரிச்சல் பெரிதாக இருக்காது. சிலருக்குச் சர்க்கரையின் அளவு 250 ஆக இருக்கும், ஆனால் கால் எரிச்சல் மிகவும் அதிகமாக இருக்கும்.

நரம்புகளைப் பலப்படுத்த வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கால் எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். ஆனால், நோயாளியின் எதிர்ப்பு சக்தி, சர்க்கரை அளவு, சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளைப் பொறுத்தே வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு அவர்கள் சர்க்கரை நோய்க்காகச் சிகிச்சைபெறும் மருத்துவரின் பரிந்துரை அவசியம். வைட்டமின் மாத்திரைகளைத் தாங்களாகவே எடுத்துக்கொள்வது ஏற்புடையதல்ல.

என் மகளுக்கு 5 வயதாகிறது. தினமும் காலையில் எழுந்ததும், சில நிமிடங்கள் தொடர்ந்து தும்மிக்கொண்டே இருக்கிறாள். அது மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னையாக இருக்குமோ என பயமாக உள்ளது. இதை எப்படிச் சரிசெய்வது?

- ப.நந்தினி, மேலூர்   

கன்சல்ட்டிங் ரூம்

அலர்ஜிதான் இதற்கான காரணம். இந்த வகைப் பிரச்னைகளை ‘அலர்ஜிக் ரைனிடிஸ்’ (Allergic Rhinitis) என்று சொல்வோம். தூசு, புகை, பூஞ்சைக் காளான்கள், மகரந்தம், உணவுப் பொருள்கள் போன்றவற்றின்மூலம் பரவும் நுண்ணுயிர்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இவற்றில் எதனால்  ஒவ்வாமை ஏற்படுகிறது எனக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டால் பிரச்னையைச் சரி செய்யலாம். தேவைப் பட்டால் மூக்குப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் மாற்றம் காரணமாகச் சமீபகாலமாக குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனால் பாதிக்கப் படுகிறார்கள்.  இப்பிரச்னையைக் கவனிக் காமல் விடும்பட்சத்தில் ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, பரிசோதனை செய்து தேவையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு