பிரீமியம் ஸ்டோரி
ஜீரோ ஹவர்!

``வாக்கிங் போகலாம், சைக்கிளிங் பண்ணலாம், நீச்சல் அடிக்கலாம். ஆனால், இதெற்கெல்லாம் நேரம் எங்கங்க இருக்கு!’’ உடற்பயிற்சி மறுப்பாளர்களின் ஒரே வசனம் இது.

நேரம் இல்லை

இதுதான் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கான முதன்மைக் காரணம். நமக்கு மட்டும் நேரம் இருந்தால் நிச்சயமாக அதிகாலையிலேயே எழுந்து வாக்கிங், ஜாகிங், ரன்னிங், யோகா, ஸ்விம்மிங் என எதுவேண்டுமானாலும் செய்துவிடக் கூடியவர்கள்தான். ஆனால், பாருங்கள் நம்மிடம் அந்த நேரம்தான் இருப்பதில்லை. ஒருநாளைக்கு 25 மணிநேரமாக இருந்தால் அந்த எக்ஸ்ட்ரா ஒருமணி நேரத்தையாவது எடுத்துப் பயன்படுத்தலாம். அதுவும் இல்லை. ஏன் அப்படி? நம்மிடம் நேரம் இருக்கிறதோ, இல்லையோ... உடற்பயிற்சி செய்ய `ஏன் நேரம் இல்லை’ என்பதற்கு மட்டும் ஏராளமான வியாக்கியானங்கள் வைத்திருக்கிறோம்.  

ஜீரோ ஹவர்!

* அலுவலகத்தில் வேலை ஜாஸ்திங்க. அதுவே உடலைச் சோர்வடைய வைத்துவிடுகிறது. ஓய்வுக்கே நேரமில்லை.

* வீட்டுவேலைகள் செய்யவே நேரமில்லைங்க, இதில், இதுக்கெல்லாம் எங்கே நேரம்!

* அதிகாலையில் எழுந்தால் பகலில் தூக்கம் தூக்கமாக வருகிறது. அதனால் நேரமாக எழமுடிவதில்லை.

* உடற்பயிற்சிக்குச் சென்றால் அதிகமாக நேரம் செலவாகிவிடுகிறது.

* உடற்பயிற்சியால் உண்டாகும் உடற்சோர்வால் மற்றவேலைகளைக் குறித்த நேரத்தில் செய்யமுடியாமல் போகிறது.

* குழந்தைகளோடு நேரம் செலவழிக்க நேரமில்லை, வீட்டில் இருப்பதேயில்லை, மீட்டிங் மீட்டிங்... எங்க சார் உடற்பயிற்சி செய்யறது?

ஜீரோ ஹவர்!இப்படியாக, இன்னும் 600 காரணங்களைக்கூடப் பட்டியலிடலாம்! ஆனால், நேரம் இல்லை என்பதற்கு இவ்வளவு காரணங்கள் கண்டுபிடிக்கிற நமக்கு நேரத்தை உருவாக்க இரண்டு காரணங்கள்கூட இருப்பதில்லையே, ஏன்? Priorities. நம் உடல்நலத்தின்மீது அக்கறை இருந்தால் முக்கியத்துவம் தானாக வரும். முக்கியத்துவம் இருந்தால், தானாக நேரம் ஒதுக்க ஆரம்பிப்போம். ஆனால், பணமும் அதற்கான வேலையும்தான் நம் ப்ரியமான ப்ரையாரிட்டி!

உடற்பயிற்சிக்கு நேரம் செலவழிக்கத் தயங்கினால் சிகிச்சைக்காக அதைவிடவும் அதிகநேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கும். உடல்நலம் குன்றிவிட்டால் விருப்பமிருக்கிறதோ இல்லையோ சிகிச்சைக்காக அதிகநேரத்தை ஒதுக்கித்தான் தீர வேண்டியிருக்கும். ஐ.சி.யூ-வில் ‘மினுக்... மினுக்...’ என ஒளிரும் கருவிகளுக்கு நடுவில் படுத்திருக்கும்போது `முன்னாடியே நேரம் ஒதுக்கி ஜிம்முக்குப் போயிருக்கலாமே’ என்கிற எண்ணமெல்லாம் வரும்! ஆனால், இதயம் அவசரமாகத் துடித்துக்கொண்டிருக்கும்போது நமக்கு அவகாசம் இருக்காது. தேவையற்ற குற்றவுணர்வுக்கு ஆளாகாமல் சட்டுபுட்டுனு பாஸிட்டி வாக எப்படி உடல்நலத்திற்கென நேரத்தை ஒதுக்குவது என்பதைத் திட்டமிடுவோம். முக்கியத்துவத்தை உண்டாக்குவது மனம்தான்; அந்த மனத்தைச் சீர்செய்துவிட்டால் தானாகவே உடற்பயிற்சிக்கு என நேரம் ஒதுக்கத் தொடங்கிவிடுவோம். அதற்குச் சில டிப்ஸ்...

திட்டமிடு

ஒருநாளில் எத்தனை மணிநேரம் எந்தெந்த வேலை களுக்காக ஒதுக்குகிறோம் என்பதை ஒருவாரத்திற்குத் தினமும் கவனித்து நோட் செய்யுங்கள். காலையில் எழுகிற நேரம் தொடங்கி, சாப்பிடுகிற நேரம், தூங்குகிற நேரம், வேலைக்குச் செல்லும் நேரம், வேலைபார்க்கிற நேரம், ஓபி அடிக்கிற நேரம் என எல்லாவற்றையும் குறிப்பெடுங்கள். அதிலிருந்து எந்த ஒருமணிநேரத்தை உங்கள் உடற்பயிற்சிக்கென ஒதுக்குவது எனத் திட்டமிடுங்கள். நிச்சயமாக, எப்படிக் கூட்டிக்கழித்தாலும் ஒருநாளில் மூன்று மணிநேரம் வெட்டியாகத்தான் நம் வாழ்க்கையில் கழியும். அந்த வெட்டி நேரத்தில் ஒருமணி நேரத்தை வடிகட்டி எடுப்பது அத்தனை கடினமான சவால் ஒன்றுமில்லை.

ஸ்க்ரீன் டைம் குறைத்திடு

நாளுக்குநாள் நம்முடைய நேரத்தை விழுங்குகிற புது எமனாகத் தொழில்நுட்ப வளர்ச்சி மாறியிருக்கிறது. குறிப்பாக ஸ்க்ரீன்களோடு செலவழிக்கும் நேரம். மொபைலில், டிவியில், கணினியில் என நிறையவே நேரம் செலவழிக்க ஆரம்பித்திருக்கிறோம். தூங்கி எழுந்ததும் வாட்ஸ் அப் பார்க்க ஆரம்பித்தாலே உட்கார்ந்த இடத்தில் ஒருமணி நேரத்தை மொத்தமாக இழக்க ஆரம்பிப்போம். அதிகாலையில் எழுந்தால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பார்க்க மாட்டேன் எனச் சபதம் எடுத்தாலே நிறைய நேரம் மிச்சமாகும் அல்லது ஸ்கிரீனிலேயேதான் தவமாய் கிடப்பேன் எனத் துடித்தால் அடுத்த பாயின்டை ஃபாலோ பண்ணவும்! 

ஜீரோ ஹவர்!

பொழுதுபோக்கை மாற்று

நம்முடைய பொழுதுபோக்குகளை உடற்பயிற்சிகள் சார்ந்த விஷயங்களாக மாற்றிக்கொண்டால், அதுகுறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். தானாகவே அதிகாலையில் எழுந்து யோகாமேட்டோடு கிளம்பிவிடுவோம். டிவியில் உடற்பயிற்சி சார்ந்த நிகழ்ச்சிகள் பார்ப்பது, உடற்பயிற்சி சார்ந்த வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்துகொள்வது, யூடியூபில் அது சார்ந்த வீடியோக்கள் பார்ப்பது என நம்முடைய மனதை முற்றிலுமாக உடற்பயிற்சியை நோக்கித் திருப்பிவிடலாம். இது, தானாகவே உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குவதற்குப் பழக்கும்.

இரண்டுவேளை இருக்கு

ஒருநாளில் ஒருவேளைதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று எந்த நீதிமன்றத்திலும் சட்டம் இயற்றப் படவில்லை என்பதால் ஒருநாளில் நமக்கு வசதியான இரண்டு வேளைகளில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யலாம். இந்தப் பழக்கம் அதிக பிஸியான காலத்திலும்கூட ஒருவேளையாவது உடற்பயிற்சிகளைத் தொடர்கிற வழிகளை உருவாக்கும்! காலையில் பிஸியாக இருந்தாலும் மாலையில் செய்வோம். மாலை என்றால் காலையில் என நேரம் தானாக ஒதுக்கப்படும்.

நண்பர்களோடு செல்லுங்கள்

உடற்பயிற்சிக்குச் செல்லும் இடத்தில் நண்பர்களை அழைத்துச்செல்லுங்கள் அல்லது குழுவாகச் செல்வது என முடிவெடுங்கள். சிவகார்த்திகேயன் சொல்வதுபோல ‘தினப்பொறணி’ என்கிற எலிப்பொறி உங்களை அன்றாட பழக்கத்திற்கு இட்டுச்செல்லும். தானாகவே இன்னைக்கு என்ன டாபிக் பேசலாம் என்பதற்காகவாவது நேரத்தை உருவாக்கும். அப்படி நண்பர்களை அழைத்துச்செல்ல முடியாவிட்டால் வெட்கமேபடாமல் ஏற்கெனவே இருக்கிற நண்பர்கள் குழுவில் இணைந்துகொள்ளுங்கள்!

நேரம் ஒதுக்குவோம்...


- வினோ 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு