Published:Updated:

ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?
ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?

திருப்பதி நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர்ஹெல்த்

பிரீமியம் ஸ்டோரி

ன்னலோரப் பயணங்கள் பிடித்தவர்கள்கூட, சென்னை போன்ற பெருநகரங்களில் அதைத் தவிர்க்கவே நினைக்கிறார்கள். பத்து நிமிடங்கள் முகத்தைக் காற்றுக்குக் கொடுத்துவிட்டுப் பேருந்திலிருந்து இறங்கினால், முகம் முழுக்கத் தூசு படிந்திருக்கும். பேருந்து, கார் பயணத்திலேயே இந்தநிலை என்றால், ஹெல்மெட் அல்லது முகமூடி அணியாமல் பைக் ஓட்டினால் அவ்வளவுதான்!  

ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?

அதீத புகையைத் தன் இஷ்டத்துக்கு உமிழ்ந்துவிட்டுப்போகும் பராமரிப்பில்லாத வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவையெல்லாம் தாண்டி கார்பனை வாரி வழங்கும் அரசுப் பேருந்துகள், வீட்டில் குப்பை சேர்ந்துவிட்டது என்பதற்காகப் பொறுப்பில்லாமல் தீவைத்துக் கொளுத்துபவர்கள், நச்சுத் தன்மையுடன் புகையைக் கக்கும் தொழிற்சாலைகள்... என்று நீளும் இந்தப் பட்டியல் முடிவில்லாமல் சென்றுகொண்டேயிருக்கிறது. விளைவு, குழந்தைகள் பிறக்கும்போதே பல குறைபாடுகள் புலப்படுகின்றன. வளரும்போது அவர்களின் ஐ.க்யூ (IQ) அளவு மற்றவர்களைவிடக் குறைவாகவே இருக்கிறது. சூழல் மாசுள்ள இடங்களில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் குறைந்துகொண்டே வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?எந்த மாசு, எதனால் ஏற்படுகிறது?

நம் வாழும் இடத்தை நாமே பேணிக் காப்பதில்லை என்பது நம்மைத் தலை குனியவைக்கும் பிரச்னை. நம் சுற்றுச்சூழலில் எதனால் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால், அந்தப் பார்வையைக்கூடத் தெளிவாகத் தெரியாவண்ணம் மறைப்பது காற்று மாசுதான்.

காற்று மாசு

கார்பன் மோனாக்சைடு, சல்ஃபர் டையாக்சைடு, குளோரோஃபுளூரோ கார்பன்கள் (CFC) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு என்று தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் இஷ்டத்துக்கு நம் வளிமண்டலத்தில் புகுத்த, அதையும் நாம் சுவாசித்துப் பிரச்னைகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறோம். புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துவது, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி புகையை வெளியிடும் வாகனங்களில் சீறிப்பாய்வது போன்ற விஷயங்கள் இதற்கு முதல்தரக் காரணிகள் என்றால், விவசாய நிலங்களில் பயிர்களை எரிப்பது, சமையல் எரிவாயு அதிகமாகப் பயன்படுத்துவது, புகைபிடிப்பது போன்ற செயல்கள் இரண்டாம், மூன்றாம் தரக் காரணிகள்.

ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?

காற்றில் என்னனென்ன மாசுகள் கலந்திருக்கும்..? அவற்றால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன..? அவற்றைத் தவிர்க்கச் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள் என்னென்ன?

நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர் திருப்பதியிடம் கேட்டோம்.

“காற்றில் கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, குளோரோஃபுளூரோ கார்பன், ஓசோன் போன்ற பல்வேறு நச்சு வாயுக்கள் கலந்திருக்கின்றன. இவற்றால், ஏற்படும் விளைவுகள் ஏராளம்.

கார்பன் மோனாக்சைடு

வாகனப்புகை, சிகரெட் புகை, மரங்கள் போன்ற எரிபொருள்கள் முழுவதும் எரிக்கப்படும்போது கார்பன் மோனாக்சைடு வாயு வெளியாகிறது. இந்த வாயு ரத்தத்தில் கலக்கும் பிராணவாயுவின் அளவைக் குறைக்கும். மூளை, நரம்புகள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளைக் குறைக்கும்.

கார்பன் டை ஆக்சைடு

கரி, பெட்ரோலியப் பொருள்கள், இயற்கை எரிவாயு போன்றவற்றை எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது. தலைவலி, உடற்சோர்வு, மூச்சுத்திணறல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை இது உருவாக்கும்.

நைட்ரஜன் ஆக்சைடு

பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற பொருள்கள் எரிக்கப்படும்போது, நைட்ரஜன் ஆக்சைடு உருவாகிறது. புகை நிறைந்த பனி மற்றும் அமில மழை ஏற்பட இது காரணமாக இருக்கிறது. குளிர்காலத்தில் குழந்தைகள் சுவாச மண்டலம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவதற்கு நைட்ரஜன் ஆக்சைடும் ஒரு காரணம்.

சல்பர் டை ஆக்சைடு

நிலக்கரி எரிக்கப்படும்போது, அனல் மின் நிலையங்கள், பேப்பர் தயாரித்தல், உலோகங்கள் உருக்கப்படுதல் போன்ற தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து சல்பர் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இது மூச்சுத்திணறல், மூச்சிரைப்பு உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், புகை கலந்த மூடுபனி மற்றும் அமில மழை ஏற்படவும் இது காரணமாகும். 

ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?குளோரோஃபுளூரோ கார்பன்

ஏ.சி அறை, ஃபிரிட்ஜ், ஃப்ரீஸர் போன்றவற்றி லிருந்து குளோரோஃபுளூரோ கார்பன் வெளியாகிக் காற்று மண்டலத்தில் கலக்கிறது. புவியைச் சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தின் அளவைக் குறைக்கும். சருமப் புற்றுநோயை ஏற்படுத்தும்.

ஓசோன்

வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் இருக்கிறது, ஓசோன் படலம். இந்த முக்கியமான வாயுவை, தீங்கு விளைவிக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியைப் பாதுகாக்கும் கேடயம் என்றே சொல்லலாம். ஆனால், பூமியின் பரப்பில் இது தீமையை ஏற்படுத்தும் வாயு. பெரும்பாலும் வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்துதான் ஓசோன் வாயு வெளியாகிறது. இது, நம் கண்களில் எரிச்சல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும். சி.பி.ஓ.டி எனப்படும் நாள்பட்ட நுரையீரல்பாதைத் தடுப்பு நோய் உருவாகவும் காரணமாகிறது.   

ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?
ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?

காற்றில் மிதக்கும் துகள்கள், தூசு போன்றவை காற்று மண்டலத்தில் நீண்ட நேரம் இருக்கும். இவை புகை மண்டலத்தை உருவாக்கிப் பார்க்கும் தன்மையைக் குறைக்கும். மிகச் சிறிய அளவிலான துகள்களை நாம் சுவாசிக்கும்போது, அவை நம் நுரையீரலில் தேங்கி, சுவாச மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும். காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) ஒவ்வொரு நகரத்துக்கும் தனித்தனியாக வெளியிடப்படுகிறது. இந்தக் குறியீடு 150-ஐத் தாண்டினால் ஏற்கெனவே ஆஸ்துமா, அலர்ஜி என சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் முகத்துக்கு மாஸ்க் அணிந்த பிறகு வெளியே செல்லலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மூலம் பொதுமக்களுக்குச் சுற்றுச்சூழல் மாசு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்கிறார் டாக்டர் திருப்பதி.

பின்னிரவு நேரங்களில், கடும் பசியில், ரோட்டோரக் கடைகளில் நின்று சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் பற்றிப் பெரிதாகக் கவலைப் படுவதில்லை. சாப்பிடும் உணவில் கலப்படம் என்று அறிந்தால் எவ்வளவு கொதித்துப் போகிறோம்? அப்படியிருக்கும்போது, உண்மையில் நாம் உண்ணும் உணவில் தெரிந்தே நஞ்சைக் கலக்கும் நம்மீது நமக்குக் கோபம் வர வேண்டாமா?  

ஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா?

முகத்துக்கு மாஸ்க் அணிந்து மாசிலிருந்து காத்துக்கொள்ள நினைக்கிற பலரும், தெருவோரக் கடைகளில் உணவு உண்ணும்போது கவலைப்படுவதில்லை. பெரிய ஹோட்டல்கள், ஸ்வீட் ஸ்டால் என எல்லாவற்றிலும் கடைகளுக்கு வெளியே, திறந்த வெளியில் விற்பனை நடக்கிறது. சாலையின் மாசு மொத்தமும் அந்த உணவுகளில் தான் படியும். இப்படித் திறந்தவெளிக் கடைகளில் சாப்பிடுவதால் என்னென்ன உடல்நலப் பிரச்னைகள் வரும் எனப் பொதுநல மருத்துவர் விஜய் சக்கரவர்த்தியிடம் கேட்டோம்.

“ரோட்டோரக் கடைகளில் அவசரத்துக்காகவும் விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காகவும் சாப்பிடுபவர்களுக்குச் சுகாதாரம் பற்றிய அக்கறை பெரிதாக இருப்பதில்லை. தரமான பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? இல்லை. சாலையில் கடந்து செல்பவர்களை ஈர்க்க இந்த உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் செயற்கை நிறமூட்டிகளும் உணவின் சுவையைக் கூட்டப் பலவிதமான ரசாயனப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன, அதோடு கடையை முறையாகப் பராமரிக்காமல், திறந்தவெளியில் உணவைச் சமைக்கிறார்கள். இதனால், வாகனப் புகை, தூசு, மண், புழுதி... எனப் பல நச்சுப் பொருள்களையும் உணவோடு சேர்த்து இலவசமாகத் தருகிறார்கள். இதனால், உணவு செரிமானமாவதில் பிரச்னை, வயிற்றுப்போக்கு, நோய்த்தொற்றுகள் உருவாக இந்த உணவுகள் காரணமாகின்றன. இதற்கு என்ன தீர்வு? உணவுப் பொருள்களில் மாசுகளைத் தவிர்த்துவிட்டாலே இந்தப் பிரச்னை பெருமளவுக்குத் தீர்ந்துவிடும்” என்கிறார் மருத்துவர் விஜய் சக்கரவர்த்தி.

தற்போதைய சூழல் மாசு நிலவரப்படி, இந்தியாவில் புகை பிடிக்காதவர்களே கிடையாது என்கிறது ஒரு தரவு. நேற்று பிறந்த குழந்தை முதல் 90 வயதைத் தாண்டிய முதியவர்கள் வரை அனைவரும் புகை பிடிக்கிறார்கள். அதாவது, வாகனப் புகை தொடங்கி தொழிற்சாலைப் புகை வரை நாம் அனைவருமே சுவாசிக்கிறோம். புகை மண்டலமாக மாறியிருக்கிறது நம் துணைக் கண்டம். உலகச் சுகாதார மையத்தின் தரவுப்படி, இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே தரமான காற்றைச் சுவாசிக்கிறார்கள். மக்கள் அனைவரும் அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதன் மூலம், சிறிது சிறிதாக நஞ்சைத் தங்கள் நெஞ்சுக்குள் புதைக்கத் தொடங்கியுள்ளனர். காற்று மாசடைந்த பகுதிகளில் ஜாகிங் செல்வதைத் தவிர்க்கச் சொல்லி டெல்லியில் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மற்றொரு புறம் தண்ணீரும் மாசடைவதால், உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் சில வருடங்களில், நாம் வெளியே செல்லும் சுதந்திரத்தையே இழக்க நேரிடும் என்பது நிதர்சனம்.

- ர.சீனிவாசன், ஜி.லட்சுமணன்

கவனம்... ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (AQI)

காற்றின் மாசு அளவைக் குறிக்கும் அலகின் பெயர்தான் இந்த `ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்.’ காற்று மாசை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பெரிய துகள்கள் மற்றும் சிறிய துகள்கள். அவற்றில் பெரியவைதான் `PM 10.’ இவற்றில் கலந்துள்ள துகள்கள் 2.5 முதல் 10 மைக்ரோமீட்டர்கள் வரை அளவுகொண்டவை. மற்றொரு வகை, 2.5 மைக்ரோமீட்டர்களைவிடச் சிறியதாக இருக்கும். இவற்றை `PM 2.5’ என அழைக்கிறார்கள். மிக ஆபத்தான இந்தச் சிறிய துகள்கள் நேரடியாக நுரையீரல் வரை சென்று படிந்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

வருகிறது வன நகரம்!

காற்று மாசுபடுவதைத் தடுக்க உலகின் முதல் ‘வன நகரம்’ (Forest City) ஒன்றைக் கட்டமைக்கத் தொடங்கியுள்ளது சீனா. 30,000 பேர் வசிப்பதற்கு ஏற்ற வகையில் கட்டப்படும் இந்த நகரத்தில், 100 விதமான தாவர வகைகளில் 40,000 மரங்கள் மற்றும் 10 லட்சம் செடிகளைப் பயன்படுத் தவிருக்கிறது. இந்தப் பசும்போர்வை வருடத்துக்கு 10,000 டன் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் 57 டன் மாசுபடுத்தும் இதர வாயுக்களை எடுத்துக்கொண்டு, 900 டன் ஆக்சிஜனை உருவாக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தட்பவெப்பநிலையில் மாற்றம், காற்றின் தரம் உயர்தல், சிறந்த வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடம் அமைதல் போன்றவை நிகழும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு