ஹெல்த்
Published:Updated:

ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை!

ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை!

ஹெல்த்

ன்றைக்கு உடல் பருமனைப்போல ஊட்டச்சத்துக்குறைபாடு பிரச்னைக்குத் தீர்வு காண்பதும் சவாலாகவே இருக்கிறது. `இதற்குச் சத்தான உணவைச் சாப்பிடாதது மட்டும் காரணமல்ல, நாம் அன்றாடம் அருந்தும் சில வகை பானங்கள், கடைப்பிடிக்கும் பழக்கங்கள்கூட உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவைக் குறைக்கின்றன’ என்கிறார்கள் மருத்துவர்கள். அவ்வளவு ஏன், ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும், ஒன்றுக் கொன்று ஏற்றுக்கொள்ளாத இரண்டு உணவுகளைச் சாப்பிடுவதும், சில வகை உணவுகளுடன் மருந்துகளைச் சேர்த்து உட்கொள்வதும்கூட உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை முழுமையாகக் கிடைக்காமல் செய்துவிடும். உடலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளை முழுமையாகக் கிடைக்கவிடாமல் தடுப்பவற்றை ‘ஊட்டச்சத்து திருடர்கள்’ என்கிறோம். அவை எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன, எப்படித் தடுக்கலாம் என்று பார்ப்போம்...  

ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை!

ஆல்கஹால்

மதுப்பழக்கம் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். ஆல்கஹால் நீர்ச்சத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. குறைவாக மது குடித்தாலும், நீரில் கரையும் வைட்டமின்களை இழக்கச் செய்யும். ஆல்கஹால் பசி எடுப்பதைக் குறைப்பதால், உடலுக்குத் தேவையான மற்ற ஊட்டச்சத்துகள் கிடைப்பதும் குறைந்துவிடும்.

எப்படித் தடுக்கலாம்?


மதுப்பழக்கத்தைக் கைவிடுவதுதான் சிறந்த வழி. முதல்கட்டமாக மது குடிக்கும் அளவைக் குறைத்துக்கொண்டு, வைட்டமின் பி சத்து அதிகமுள்ள தானியங்கள், காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.   

ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை!

நார்ச்சத்து உணவுகள்

காய்கறிகள், கோதுமை பிரெட் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகள், உணவுக்குழாயில் உணவு நகரும் வேகத்தை அதிகப்படுத்தும். இதனால் உணவு உட்கிரகிக்கப்படும் அளவோடு, கால்சியம் போன்ற கனிமங்கள் உட்கிரகிக்கப்படும் அளவும் குறையும்.

எப்படித் தடுக்கலாம்?

நீங்கள் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், கால்சியம் அதிகமுள்ள பால்பொருள்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை!

ஆன்டிபயாடிக் மருந்துகள்

சாதாரணமாகவே நமது உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கும். நாம் உட்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகள், நோய்க்கிருமிகளை அழிப்பதோடு, உடலில் இருக்கும் இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். அதோடு, டெட்ராசைக்ளின் (Tetracycline antibiotics)  மருந்துகள் கால்சியத்துடன் வினைபுரியும் தன்மை கொண்டவை. இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டால் எதுவுமே உடலால் உட்கிரகிக்க முடியாமல் வீணாகும்.

எப்படித் தடுக்கலாம்?

நீண்ட நாள்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் உட்கொள்ள வேண்டுமெனில், நன்மை செய்யும் பாக்டீரியாக்களை வளர்க்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ப்ரோ-பயாடிக் (Probiotic) உணவுகளைச் சாப்பிட்டு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை மீண்டும் உருவாக்கலாம்.

ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை!



ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்

ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களைக் கட்டுப்படுத்தத் தரப்படும் ஏ.சி.இ (Angiotensin Converting Enzyme Inhibitor) வகை மருந்துகள உட்கொள்வதால் துத்தநாகக் குறைபாடு ஏற்படும்.

எப்படித் தடுக்கலாம்?

இந்த வகை மருந்துகளை நீண்ட நாள்கள் உட்கொள்பவர்கள் துத்தநாகம் அதிகமுள்ள பருப்புகள், முழுதானியங்கள், அசைவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை!

டீ மற்றும் காபி

டீ, காபி போன்ற பானங்களில் ‘பாலிபினால்’ (Polyphenol) என்கிற வேதிப்பொருள் உள்ளது. இது உடலில் இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுப்பொருள்களை உட்கிரகிக்கும் தன்மையை வெகுவாக பாதிக்கும். உணவோடு சேர்த்து காபி அருந்தினால் வழக்கத்தைவிட 80 சதவிகிதம் குறைவான இரும்புச்சத்தே கிடைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

எப்படித் தடுக்கலாம்?


சத்து  மாத்திரைகளை உட்கொள்ளும்போது காபி, டீ போன்றவற்றை அருந்துவதைத் தவிர்க்கவும். உணவுடன் தண்ணீர் அல்லது ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை அருந்துவதை வழக்கமாக்கிக்கொள்ளவும். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்தை உட்கிரகிக்க உதவும்.

- ஜி.லட்சுமணன்

- ச.கலைச்செல்வன்