Published:Updated:

செரிமானக்கோளாறுகளைத் தீர்க்கும் பாரம்பர்யமிக்க `தங்கப்பால்!’

மஞ்சள் பால்… கலர் பால்… மருந்துப் பால்… மசாலாப் பால், கலவைப் பால் எனப் பல பெயர்கள் இதற்கு இருந்தாலும், இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் பெயர் `தங்கப்பால்’தான்.

செரிமானக்கோளாறுகளைத் தீர்க்கும் பாரம்பர்யமிக்க `தங்கப்பால்!’
செரிமானக்கோளாறுகளைத் தீர்க்கும் பாரம்பர்யமிக்க `தங்கப்பால்!’

ங்கப்பால்... பசும்பால் தெரியும் ஆட்டுப்பால் தெரியும் ஒட்டகப்பால் தெரியும்… அதென்ன தங்கப்பால். விலை உயர்ந்த தங்கத்தைப் பாலில் சேர்த்துக் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் பாலா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். தங்கத்தின் விலை பற்றியெல்லாம் கணக்கிட்டு கற்பனையை ஓடவிட வேண்டாம். சளி, இருமல், ஜலதோஷம் பாடாய்ப்படுத்தும்போது, வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பரிந்துரைக்கும் உன்னதமான மருந்துதான் இந்த `தங்கப்பால்’. 

நெடுங்காலம் முதலே பாலுடன் மஞ்சள் மற்றும் சில மணமூட்டிகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருத்துவக்குணமிக்க மஞ்சள் பாலைத்தான், இப்போது `தங்கப்பால்’ என்கிறார்கள் மேலை நாட்டினர். உண்மைதான்… விலை உயர்ந்த தங்கத்தைவிட, மூலிகைப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் மஞ்சள்பால் கொடுக்கும் பலன்கள் அதிகமானவை. பாலோடு மஞ்சள் சேர்க்கும்போது கிடைக்கும் நிறம், தங்கம் போல ஜொலிக்கும் தானே!... தாராளமாக இதைத் தங்கப்பால் என அழைக்கலாம். 

சமைத்து முடித்த உணவுகளுக்கு நிறத்தைக் கொடுக்கவும் அழகூட்டவும் மட்டுமே இவ்வளவு நாள்களாக மேலைநாடுகளில் மஞ்சளைப் பயன்படுத்தப்படுத்தி வந்தனர். மஞ்சளுக்குள் விரவிக் கிடக்கும் மருத்துவக் கூறுகளை அலசி ஆராயத் தொடங்கியதன் விளைவாக, இப்போது மஞ்சளை விசாலமாகப் பயன்படுத்தும் சிந்தனை அவர்களுக்குத் துளிர்விட்டிருக்கிறது. நம்மிடம் உள்ள இந்த அற்புதமான மருந்தை, நாம்தான் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லையோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. நம் நாட்டின் மருத்துவப் பெருமை இப்போது `கோல்டன் மில்க்’ (Golden milk) என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியே!

பாலில் மஞ்சள், மிளகு, ஏலம் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்துத் தயாரிக்கப்படும் `தங்கப்பால்’ பல்வேறு நோய்களை நீக்கும் குணமுடையது. அதுவும் இப்போது தொடங்கியிருக்கும் மழைக்காலத்துக்கு மிகவும் அவசியமான மருத்துவப் பானம் இது. மூக்கிலிருந்து நீர்வடியும் போது… தொண்டையில் கரகரப்பு மேலோங்கும் போது… தலை பாரமாக உணரும் போது… அடுக்கடுக்காக இருமல் துன்பப்படுத்தும் போது… உடனடியாக மாத்திரைகளைப் பயன்படுத்த பரபரக்க வேண்டாம். பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்துக் குடித்துப் பாருங்கள். எந்தவிதப் பக்கவிளைவும் இல்லாமல் விரைவில் பலன் கிடைக்கும். 

மஞ்சளில் இருக்கும் `குர்குமின்’ (Curcumin) எனும் வேதிப்பொருள், மஞ்சள் பாலின் வீரியத்தை அதிகரிக்கிறது. குர்குமினின் நோய் போக்கும் திறனை, உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. மனதை உற்சாகப்படுத்தி, மனச்சோர்வை (Depression) குறைக்கும் வன்மையும் குர்குமினுக்கு இருப்பதாக ஆய்வு நிரூபிக்கிறது. ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் தங்கப்பாலைப் பயன்படுத்தலாம். 

பாலுடன் மஞ்சள், சுக்கு, மிளகுத் தூள், அமுக்கிராங்கிழங்கு பொடி, பாதாம் பருப்பு என இயற்கைப் பொருள்களை சேர்த்துத் தங்கப்பாலின் மதிப்பை மேலும் கூட்டலாம். இவை உடலுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும். பொதுவாகப் பாலில் மஞ்சள், மிளகு, இஞ்சி, ஏலம் போன்ற பொருள்களைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சளுடன் மிளகு சேர்க்கும்போது, இரண்டின் மருத்துவக் குணங்களும் அதிகரிக்கும். மஞ்சளின் `குர்குமின்', மிளகின் `பைப்பரின்’ ஆகியவை வினைபுரிந்து, வீரியமிக்க மருந்தாக மாறும். கிருமிநாசினி செய்கையுடைய இவை, தொற்றுக்கிருமிகளின் ஆதிக்கத்தை அழித்து நோய்களிலிருந்து நீக்கி துரித நிவாரணம் அளிக்கும்.  

பொதுவாகவே மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உண்டு. மஞ்சளுடன் பாலில் சேர்க்கப்படும் இதர நறுமணமூட்டிகளிலும் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கின்றன. இவை வளர்சிதை மாற்றத்தால் உடலில் உருவான கழிவுகளை (Free radicals) வெளியேற்றி செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் புற்றுநோய் செல்கள் தூண்டப்படாமல் பார்த்துக்கொள்ளவும் இந்தக் கலவைப் பாலில் உள்ள வேதிப்பொருள்கள் உதவுகின்றன. இஞ்சியில் உள்ள `ஜிஞ்ஜெரால்’ எனும் வேதிப்பொருள், புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது.

மஞ்சள், ஏலம், மிளகு… என அனைத்துக்கும் உடலில் உண்டாகும் வீக்கத்தைக் கரைக்கும் தன்மை இருக்கிறது. மூட்டுகளில் உண்டாகும் வலியைக் குறைப்பதற்கும், ரத்தக் குழாய்களில் ஏற்படும் சிறு மாறுதல்களை முறைப்படுத்துவதற்கும் இவை உதவும். மூளையின் செல்கள் புத்துணர்ச்சி அடைவதற்கும் மறதியைத் தடுக்கவும் நறுமணமூட்டிகள் கலந்த பாலை பருகலாம். முதிர்ந்த வயதில் உண்டாகும் `அல்சைமர்’ நோய்க்கு மூளையில் படியும் அமைலாய்டு திட்டுகள் (Amyloid plaques) முக்கியக் காரணம். இந்தத் திட்டுகள் ஏற்படாமல் தடுக்க மஞ்சள் உதவும் என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம். ஒவ்வாமை சார்ந்து தோலில் உண்டாகும் குறிகுணங்களைக் குறைக்கவும் மஞ்சள் பால் பயன்படும்.

கறந்த பாலை அப்படியே எடுத்துவந்து, மென்மையான புன்னகையுடன் அளந்து ஊற்றி, வீட்டில் உள்ள சிறு குழந்தைக்காகக் கொஞ்சம் கொசுறு பால் ஊற்றி, சுவரில் சின்னக் கோடு கிழித்துவிட்டுச் செல்லும் பால்கார அண்ணன்களை இந்தத் தலைமுறை அறியுமா எனத் தெரியவில்லை. கறந்த பாலில் இருக்கும் கதகதப்புடன் மஞ்சள் மற்றும் கறுப்புத் தங்கமான மிளகைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, மழைக்காலத்தில் உண்டாகும் கபநோய்களுக்கான மருந்தைத் தயாரித்துக் கொடுக்கும் சூழல் ஒவ்வொரு வீட்டிலும் அதிகரிப்பது முக்கியம். 

சுண்ணாம்புச் சத்து குறைபாடு இருப்பவர்களுக்கும் இந்தப் பானம் ஒரு வரப்பிரசாதம். எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். கலப்படமில்லாத மஞ்சளை மருந்தாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியம். செயற்கைச் சாயங்கள் நிறைந்த மஞ்சள் தூளைக் கொண்டு தயாரிக்கப்படும் மஞ்சள் பால், விபரீதங்களையே உண்டாக்கும். சிறுவியாபாரிகளிடமிருந்து மஞ்சள் கிழங்கை நேரடியாக வாங்கி, உலர்த்திப் பயன்படுத்துவது சிறந்தது. வாய்ப்பிருந்தால் பாலையும் நேரடியாக வாங்க முயலலாம். பால் பவுடர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம், மருத்துவப் பானமாக இருக்காது. 

மேலை நாடுகளில் அதிகளவில் காணப்படும் செரிமானப் பாதை சார்ந்த நோய்களுக்கு நம்முடைய பாரம்பர்யமிக்க `தங்கப்பால்’ நிச்சயம் பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலைநாட்டு உணவுக் கலாசாரத்துக்குப் பழகிவரும் நமக்கும் அதிகளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தங்கப்பாலைப் பருகலாம். இதை தினசரி பானமாகப் பயன்படுத்தாமல், குறிகுணங்களுக்கேற்ப மருந்தாகப் பயன்படுத்துவது சிறந்தது. பாலின் சர்க்கரையை செரிக்க முடியாத `லாக்டோஸ் இண்டாலரன்ஸ்’ நோய் நிலையில், பாலைப் பயன்படுத்த முடியாது. பருமனான உடலமைப்பு உடையவர்கள், நீண்ட நாள்கள் தொடர்ந்து பாலைப் பருக வேண்டாம். ஒரு டம்ளர் பாலில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளும், மற்ற நறுமணமூட்டிகள் கால் டீஸ்பூனும் சேர்த்துக் கொதிக்க வைத்து தங்கப்பாலைத் தயாரிக்கலாம். 

மஞ்சள் பால்… கலர் பால்… மருந்துப் பால்… மசாலாப் பால், கலவைப் பால் எனப் பல பெயர்கள் இதற்கு இருந்தாலும், இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் பெயர் `தங்கப்பால்’தான். இவ்வளவு பெருமைகள் நிறைந்த நமது பாரம்பர்ய பால், உண்மையில் `தங்கப்பால்’ தானே!