Published:Updated:

இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்! #NightFoods

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்! #NightFoods
இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்! #NightFoods

இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்! #NightFoods

நிலவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறூட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இன்றைக்கு செல்போனைக் காட்டி, சோறூட்டும் காலமாகிவிட்டது. குழந்தைகளின் நிலைமை இதுவென்றால், செல்போன்களின் துணையோடும் தொலைக்காட்சிகளின் அரவணைப்போடும்தான் பெரும்பாலானோர் இரவு உணவைச் சாப்பிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல இரவு உணவை அளவோடு முறையாகச் சாப்பிடுவதும் மிகவும் முக்கியம். 

`ஒருநாளில் எந்த வேளை உணவைச் சாப்பிடப் பிடிக்கும்’ என்ற கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், பெரும்பாலானோரின் பதில் `இரவு உணவு’ என்பதாகத்தான் இருக்கும். `இரவு நேரங்களில் ஓரளவு நேரம் கிடைக்கிறது. எனவே, மற்ற வேலைகளைவிட இரவில் அதிகமாகச் சாப்பிட முடியும்…’ என்று பலர் சொல்வதைக் கேட்கலாம். ஆனால், முப்பொழுதுகளில் குறைவாகச் சாப்பிட வேண்டிய பொழுது இரவுதான்!

காலையில் அரசரைப் போலவும், மதிய வேளையில் இளவரசரைப் போலவும், இரவில் யாசகனைப் போலவும் உணவின் அளவை அமைத்துக் கொள்ள அறிவுறுத்திய சமூகம் நம்முடையது. ஆனால், இன்றைய நிலையோ தலைகீழ். நேரமின்மை காரணமாக காலை உணவைக் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிக உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் சமூகமாக மாறிவிட்டோம். 

இரவு உணவை எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துக்கொள்வது நல்லது. சாப்பிட்டுவிட்டு, சிறிது தூரம் மெதுவான நடை மேற்கொண்டபிறகு உறங்கச் செல்வது நலம். இரவு 11 அல்லது 12 மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, தட்டிலேயே கை கழுவிவிட்டு, படுக்கையில் சாய்ந்து உறங்குவது போன்ற மிகப்பெரிய உணவியல் தவறு வேறு எதுவும் இருக்க முடியாது. சாப்பிட்டவுடன் உறங்குபவர்களுக்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் இரைப்பைக் குடலை நோக்கி மேலேறி புண்களை உருவாக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று. தொடர்ந்து இப்படிச் செய்வதால், இரைக்குழல் பகுதியில் ஏற்பட்ட புண், புற்றுநோயாகக்கூட மாற்றம் பெறலாம். 

நன்றாக உறங்கி இளைப்பாற வேண்டிய இரவு நேரத்தில், உணவுகளைச் சாப்பிட்டு செரிமான உறுப்புகளுக்கு பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. இந்தத் தவற்றைச் செய்பவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு, பாதிப்பு ஏற்படுவது உறுதி. `நான் என்ன செய்ய, எனது வேலை முடியவே 10 மணி ஆகிவிடுகிறது’ என்பவர்களுக்கான ஒரே வழி… எப்படி மதிய உணவை வீட்டிலிருந்தே பார்சல் செய்கிறோமோ, அதைப் போல இரவு உணவையும் சூழலுக்கேற்றபடி அமைத்துக்கொண்டு, 9 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. 

ஆவியில் வெந்த உணவுகளையும் செரிமானத்துக்குப் பிரச்னை தராத மென்மையான உணவுகளையும் இரவுநேரத்தில் சாப்பிடுவது நல்லது. இட்லி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். எண்ணெய் சூழ்ந்த பரோட்டாக்களும் காரமான குழம்பு வகைகளும், துரித உணவு ரகங்களும் இரவு உணவில் வேண்டாம். 

துரித உணவுகள் செரிமானத்துக்குப் பிரச்னை உண்டாக்குவதுடன் ஆழ்ந்த உறக்கத்தையும் கெடுத்துவிடும். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலான இரவுநேர பார்ட்டிகளில், செரிமானக் கடினமான உணவு ரகங்கள்தாம் பரிமாறப்படுகின்றன. அதனால், இரவுநேர பார்ட்டி உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை இரவில் சாப்பிட்டால் விஷ உணவுக் குறிகுணங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் இரவில் ஒதுக்கலாம். 

இரவில் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்போது, செரிமானமாகாத உணவுகள் வயிற்றுக்குள் எழுப்பும் `கடமுடா' ஓசைகளும், `தடதட' அசைவுகளும் நம்மை தட்டி எழுப்பிவிடக் கூடாது. எண்ணெய் அதிகம் நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள், நெஞ்செரிச்சல், உப்பிசம் போன்றவற்றை உருவாக்கும். குறிப்பாக அசைவ உணவுகளுக்கு இரவு உணவில் இடம் தர வேண்டாம். அசைவ உணவுகள் செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், மறுநாள் மலக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

‘அவரைப்பிஞ்சு அத்திக்காய்… எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், இரவில் சாப்பிடத் தகுந்த பதார்த்தங்களைப் பட்டியலிடுகிறது. அவரைப் பிஞ்சு, அத்திக்காய், பால், துவரம் பருப்பு, முருங்கைப் பிஞ்சு, தூதுவளை போன்றவை இதில் அடங்கும். குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களில் நார்ச்சத்துக்குக் குறைவில்லை. உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்க தூதுவளை உதவும். பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பதார்த்தங்கள் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. உணவியல் தத்துவப்படி, உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தால் இரவு உணவைச் சிறப்பாகக் கட்டமைக்கலாம்.

கீரை வகைகள், தயிர் ரகங்களுக்கு இரவு மெனுவில் தடை விதிப்பது கட்டாயம். கீரை மற்றும் தயிர் உணவுகளால் தலைபாரம், சளி, இருமல் தொந்தரவுகளுடன் ஒவ்வாமை சார்ந்த குறிகுணங்களும் கைகோத்துக் கொள்ளும். குளிர்ச்சித் தன்மையுடைய இவற்றைக் காலத்துக்கேற்ற வகையில் எடுப்பதுதான் அறிவுடைமை. இரவு நேரத்தில் காய்கள் அடங்கிய சூப் வகைகள், மிளகு மஞ்சள் சேர்த்த பால் போன்றவை உகந்ததாக இருக்கும். பன்னாட்டுக் குளிர்பானங்கள்... இரவில் மட்டுமல்ல எப்போதுமே வேண்டாம். 

நேரம் கிடைப்பது இரவில் மட்டும்தான் என்பதால் வயிறுமுட்டுமளவும் தொண்டைக்கு எட்டும் வகையிலும் இரவு உணவை அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் உணவுகளை அளவாக எடுத்துக்கொண்டால் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கவும் முடியும். 

நீண்ட நாள்களாக செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், இரவில் அளவாகவும் குறிப்பிட்ட நேரத்தில் மெல்லிய உணவுகளை எடுக்கும் உணவு முறையையும் கடைப்பிடித்துப் பாருங்கள். சில நாள்களில் நீங்கள் எதிர்பார்க்கும் தடங்கலில்லாத செரிமானம் பரிசாகக் கிடைக்கும். துரித வாழ்வில் வார நாள்களில் முடியவில்லையா, வரும் ஞாயிறு முதல் இரவு உணவை முறைப்படுத்திப் பாருங்கள். ஞாயிறு கொடுக்கும் பலனைப் பார்த்து, வாரத்தின் அனைத்து நாள்களிலும் முறையான இரவு உணவுப் பழக்கத்தை உங்கள் மனம் தேடும். 

துளிர்விட்டிருக்கும் நிலா வெளிச்சம்… மணம் கமழும் கிராமத்து வாசல்… வட்டமாக உட்கார்ந்திருக்கும் அன்பு உறவுகள்… நேசத்துடன் உணவுப் பரிமாற்றம்… பிறகு குடும்பத்துடன் குறுநடை… ஆழ்ந்த உறக்கம்!... இப்படியான இரவு உணவுச் சூழல் மீண்டும் கிடைக்குமா!... நகரங்களில் வாய்ப்பில்லை. இருப்பினும் மொட்டைமாடி நிலா வெளிச்சத்தில் இப்படிப்பட்ட இரவு உணவுச் சூழலை தாராளமாக அமைக்கலாம். நோயில்லாமல் வாழ இதுவும் ஒரு வழி!... 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு