Published:Updated:

கனமழை எச்சரிக்கை... உடல்நலம் காக்க செய்ய வேண்டியவை, கூடாதவை! #MonsoonDiseases

கனமழை எச்சரிக்கை... உடல்நலப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை, கூடாதவை!

கனமழை எச்சரிக்கை... உடல்நலம் காக்க செய்ய வேண்டியவை, கூடாதவை! #MonsoonDiseases
கனமழை எச்சரிக்கை... உடல்நலம் காக்க செய்ய வேண்டியவை, கூடாதவை! #MonsoonDiseases

மிழகத்தில் வரும் 7-ம் தேதி அதிதீவிர கனமழை பெய்யும் எனச் செய்திகள் பரவின. இதையடுத்து ஒட்டுமொத்த தமிழகமும் 'அலர்ட்' நிலைக்கு வந்தது. ஆனால், தற்போது அந்த 'ரெட் அலர்ட்' விளக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தமிழகம், அதிலும் முக்கியமாகச் சென்னை, சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இருந்தும், வரும் மழைக் காலத்தை கணக்கில் கொண்டு, இத்தகைய பருவநிலையில் நம்மைத் தற்காத்து கொள்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற நேரங்களில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அல்லது நீர்நிலைகளின் அருகே குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று பேரிடர் மேலாண்மை இயக்குநரகம் தரப்பில் கூறப்படுகிறது. 

அரசு தரப்பில், மழைவெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால், இன்னொரு பக்கம் மழைக்காலங்களில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் சேர்ந்தே மிரட்டுகின்றன. எனவே, உடல்நலன் தொடர்பான பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மழைக்காலம் தொடங்கியதும் சாதாரண சளி, காய்ச்சலில் தொடங்கி டெங்கு, டைபாய்டு, தொற்றுநோய் வரை பாதிப்புகள் வரிசைகட்டி நிற்கும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக உள்ள குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழலே இதற்குக் காரணம். ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசுக்கள் மற்றும் ஈக்களால் பரவும் தொற்றுநோய்களும் அதிகரித்துவிடும். பாதுகாப்பான சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் இந்த நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம். அவை பற்றிப் பார்ப்போம்.

உணவில் கவனிக்க வேண்டியவை!

* குடிநீரைக் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்த பிறகே அருந்த வேண்டும். வெளியிடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தவிர்க்க, சுகாதாரமற்ற முறையில் தயாராகும் உணவுகளையும் பாதுகாக்கப்படாத உணவுகளையும் சாப்பிடக் கூடாது. சாலையோரக் கடைகளில் விற்கப்படும் ஃப்ரூட் சாலட், பழ ஜூஸ்களில் கிருமித்தொற்று இருக்கக்கூடும். எனவே அவற்றையும் தவிர்க்க வேண்டும். 

* மழை மற்றும் குளிர்காலத்தில் ஜீரண சக்தி குறைந்துவிடும். இதனால், கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, அதிகமாகச் சாப்பிட வேண்டும். அவற்றையும் நன்றாகக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். பழங்களைப் பகல் வேளைகளில் சாப்பிடுவது நல்லது.

* சமைத்த உணவை ஐந்து மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். முடிந்தால் அவ்வப்போது சமைத்துச் சூடாகச் சாப்பிடுவது நல்லது. எப்போதும் பாலைக் காய்ச்சியே குடிக்க வேண்டும். பாதுகாக்கப்படாத இறைச்சி உணவுகளை உண்ணக் கூடாது. 

* மழைக்காலத்தில் தாகம் அதிகம் ஏற்படாது என்பதற்காக நீர் அருந்தாமல் இருக்கக் கூடாது. இரண்டு லிட்டர் தண்ணீரைத் தவிர சூப்,  ரசம், பால், டீ, காபி போன்ற திரவ உணவுகளையும் அருந்த வேண்டும். செயற்கைக் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றால் நீர் வறட்சி ஏற்படுவதுடன் ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது. 

தனிநபர் சுகாதாரத்தில் கவனிக்க வேண்டியது!

* சாப்பிடுவதற்கு முன்னரும் மலம் கழித்த பின்னரும் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். 

* தினமும் மிதமான அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். சைனஸ், ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் தலைக்குக் குளிக்கலாம். அதேநேரத்தில் குளித்தவுடன் உடனடியாகத் தலையை நன்றாக உலர்த்த வேண்டும்.

* மழைநீருடன் கழிவு நீர் கலந்தால், அது மனிதர்களுக்குக் கிருமித்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது வாசலிலேயே கை, கால், முகத்தை வெதுவெதுப்பான நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும்கூட காலணி அணியாமல் நடக்கக் கூடாது.

* நகங்களை வெட்டி அழுக்குச் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* தும்மல் வந்தாலோ, சளி வெளிப்பட்டாலோ கர்ச்சிப்பைப் பயன்படுத்த வேண்டும். எப்போதும் கையில் ஒரு கர்ச்சிப் வைத்திருப்பது நல்லது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது குடை அல்லது ரெயின்கோட்டை மறக்காமல்  உடன் எடுத்துச் செல்லுங்கள்.

* மழைக்காலம் முழுவதும் ஒரே போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. 15 நாள்களுக்கு ஒருமுறையாவது போர்வையைத் துவைத்து, உலர்த்திப் பயன்படுத்த வேண்டும்.

* பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் சிறுநீரை அடக்கக் கூடாது. அந்த உணர்வு ஏற்பட்டால் சிறுநீர் கழித்துவிடுவது நல்லது.

* கொசுக்கடியிலிருந்து தற்காத்துக்கொள்ள உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியலாம். தினமும் இரண்டுமுறை அழுக்குத் தேய்த்துக் குளித்து, வியர்வை உடம்பில் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.கொசுவலையைக் கட்டி வைத்து அதன் உள்ளே தூங்கலாம். 

* முறையான பரிசோதனை இன்றியோ, மருத்துவரின் ஆலோசனை இல்லாமலோ தாமாக மருந்து மாத்திரை உட்கொண்டால் அது நோய்க்கான அறிகுறிகளைக் குறைத்துவிடும். அத்துடன் நோயின் தீவிரம் வெளியே தெரியாமல் உடல்நிலையை மோசமடையச் செய்துவிடும். எனவே, மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. அருகே உள்ள பொது மருத்துவரை அணுக வேண்டும்.

பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

* சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை அவற்றுக்குரிய தொட்டிகளில் கொட்ட வேண்டும். வீட்டிலும், வீட்டைச்  சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றி அவ்வப்போது பிளீச்சிங் பவுடரைத் தூவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* கொசுக்களைக் கட்டுப்படுத்த அவற்றின் வாழ்விடங்களை அழிப்பது முதன்மையானது. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்து, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தவிர்த்து, தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்கிநிற்பதைத் தவிர்க்க வேண்டும். அந்த இடங்களில் மணலைக் கொண்டு நிரப்பி, நீர் தேங்காதவாறு சமப்படுத்த வேண்டும். 

* ஒரு வாரத்துக்கும் மேலாகப் பாத்திரங்கள், டின்களில் தண்ணீரைச் சேர்த்துவைப்பதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் அல்லது அவற்றை நன்றாக மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்குகளின் மூடிகளை காற்றுப் புகாமல் மூடிவைக்க வேண்டும். 

* ரசாயனங்கள் கலந்த கொசுவத்தி, கொசுவத்தி திரவம் போன்றவற்றைத் தவிர்த்து, முடிந்தவரை மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டின் கதவு, ஜன்னல்களைப் பூட்டி வைத்து, கொசுக்களை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கலாம். வீட்டின் கதவுகள், ஜன்னல்களுக்குக் கொசு புகாத வலைகளைப் பொருத்தலாம்.

* கிணறுகள், பெரிய சிமென்ட் தொட்டிகள், அலங்காரத் தொட்டிகளில் கம்பூசியா மற்றும் கப்பி வகை மீன்களை வளர்த்து ஏடிஸ், அனோபிலெஸ் கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம். பயன்படாத கிணறுகள் மற்றும் கழிவுநீர்த் தேக்கங்களில் கப்பி வகை மீன்களை வளர்க்கலாம். 

* முதிர் கொசுக்களை அழிக்க (Adult mosquito control) வீட்டின் சுவர் மற்றும் கூரைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கலாம் (Indoor residual spraying). வீடுகளில் மனிதர்களைக் கடிக்கும் கொசுக்கள் முட்டைகள் போடும்வரை சுமார் 48 மணி நேரம் சுவர்கள் அல்லது கூரைகளில் ஓய்வெடுக்கின்றன. எனவே, இந்த இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பம்புகள் மூலம் டெல்டா மெத்ரின் (Dichlorodiphenyltrichloroethane (DDT) போன்ற கொசு மருந்துகளைத் தெளிக்க வேண்டும். 

* தேங்கியுள்ள நீர்நிலைகள், கழிவு நீர் சிமென்ட் தொட்டிகள், கிணறுகள், டிரம்கள் போன்ற கொசு உற்பத்தியாகும் இடங்களில் வாரம் ஒருமுறை மட்டும் புழுக்கொல்லிகளைத் (Larvicide) தெளிப்பதன் மூலம் கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம். டெம்பாஸ் (Temephos) என்ற கொசுப் புழுக்கொல்லியை நன்னீரில் பயன்படுத்தலாம். கொசுப் புழுக்கொல்லி எண்ணெய் (Mosquito larvicidal oil) பாக்டிஸைடு (Bacticide) போன்றவற்றைக் கழிவு நீரிலும் பயன்படுத்தி கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம். 

* மழை தொடர்பான புகார்களைப் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். பருவமழை பாதிப்புகள் பற்றி 1070, 1077 ஆகிய கட்டணமில்லா எண்ணில் புகார் செய்யலாம்.  '9445000414' என்ற பேரிடர் வருவாய் நிர்வாக ஆணையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.