Published:Updated:

`பீர் வாஷிங்' முடி கொட்டுவதைத் தடுக்குமா - மருத்துவர்கள் சொல்வதென்ன?

`பீர் ஷாம்புவே வந்துடுச்சே சார் ' என நமக்கு அதிர்ச்சி இன்ட்ரோ கொடுத்தார் 'அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக்

`பீர் வாஷிங்' முடி கொட்டுவதைத் தடுக்குமா - மருத்துவர்கள் சொல்வதென்ன?
`பீர் வாஷிங்' முடி கொட்டுவதைத் தடுக்குமா - மருத்துவர்கள் சொல்வதென்ன?

முடி உதிர்தல் இன்று அனைவருக்குமான பொதுப் பிரச்னையாக மாறியிருக்கிறது. அன்றாடம் ஐந்து நிமிடமாவது முடி உதிர்வது குறித்து கவலை கொள்ளவேண்டியிருக்கிறது. மாறிவிட்ட நம் உணவுப் பழக்கவழக்கங்களும், நாம் பயன்படுத்தும் ஷாம்பு, கண்டிஷனர் போன்றவையும்தாம் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லப்படுகிறது. உதிரும் முடியைக் காப்பாற்ற, அடர்த்தியாக வளர என்ன செய்யலாம் என்று இணையத்தில் தேடினால் பாட்டி வைத்தியம் முதல் ஃபாரின் மருத்துவம் வரை லட்சோப லட்சத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

சமீபத்தில், `பீரால் முடியை அலசினால் முடி கொட்டாமலிருக்கும்' என்று ஒரு வீடியோவும் வைரலானது. `முடி உதிராமலிருக்க, அடர்த்தியாக வளர, வாரம் ஒருமுறை பீருடன் வாழைப்பழம் சேர்த்து அலச வேண்டும்'  என அறிவுரை வழங்குகிறார் வீடியோவில் தோன்றும் பெண். பத்திரிகைகளிலும் இதுபற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன. புகழ்பெற்ற அரோமாதெரபிஸ்ட்டுகள் சிலரும் இதைப் பரிந்துரைக்கும் வீடியோக்களையும் பார்க்கமுடிகிறது.

உண்மையிலேயே தலைமுடி நன்றாக வளர பீர் பயன்படுமா, அல்லது, தேவையில்லாத புதிய பிரச்னைகளை உண்டாக்குமா என்று அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக்கிடம் கேட்டோம்.

 `பீர் ஷாம்புவே வந்துடுச்சே சார் ' என நமக்கு அதிர்ச்சி இன்ட்ரோ கொடுத்தார் அவர். `முடி வளர பீர் உண்மையிலேயே பயன்படுமா?' என்ற கேள்விக்கு விரிவாகப் பதில் தந்தார் கீதா அசோக்.

``முடியில் வெளிப்புறமாக நாம் என்ன சிகிச்சை செய்தாலும் அது முடியின் தோற்றத்தை தற்காலிகமாக மாற்ற மட்டுமே பயன்படும். முடி வளர்ச்சிக்கோ, முடி உதிர்வதைத் தடுக்கவோ ஒருபோதும் உதவாது. பீரில் முடியை அலசினாலும் அப்படித்தான் ஆகும். முடி உதிர்வதைத் தடுக்கவோ, முடியை வளரச் செய்யவோ பீர் எந்தவிதத்திலும் உதவாது. பார்லி வாட்டரை நாட்கணக்கில் புளிக்கவைத்துத்தான் பீர் தயாரிக்கிறார்கள். அதனால்  முடிக்குத் தற்காலிகமாக சில நாள்கள் பளபளப்பு கிடைக்கும். பீருடன் ஆப்பிள் சீடர் வினிகர், வாழைப்பழம், சப்போட்டா, சுகர், விளக்கெண்ணெய் போன்றவற்றைக் கலந்து முடியை அலசும் பழக்கம் நம் நாட்டில் இருக்கிறது. வெளிநாடுகளில் பீர், ரம், ஒயின் என அனைத்தையுமே முடி அலசப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் முடி வளர்தலில் உள்ள அடிப்படை பிரச்னைகளை இவையெல்லாம் சரி செய்யாது.

முடி வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும் அடிப்படையாக இருப்பது இரண்டே விஷயங்கள்தாம். ஒன்று ரத்தத்தில் காணப்படும் ஊட்டச்சத்துகள் மற்றொன்று ஆக்சிஜன். இவை இரண்டும் போதிய அளவில் கிடைக்காமல்போனால் முடி வளர்வதில் பிரச்னைகள் உண்டாகும். ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால் நிச்சயமாக முடி அடர்த்தி குறைந்துவிடும். அதேபோல, ரத்தத்தில் புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் முடி செம்பட்டையாக மாறிவிடும். இளநரை ஏற்படும். அதுதவிர மரபணு ரீதியான காரணங்கள், குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீர், ஷாம்பு போன்றவை காரணமாகவும் நரை உண்டாகும் வாய்ப்பு உள்ளது. நரை ஏற்பட என்ன காரணம் என்பதை நிபுணர்களிடம் ஆலோசித்து அதற்கேற்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 

முடியின் அடர்த்திக் குறைவாக இருந்தால் ரத்தப் பரிசோதனை செய்து ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி அதற்கான  ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். போதிய ஊட்டச்சத்துக் கிடைத்தாலும், முடியின் வேரில் நாள்பட்ட பொடுகு, சொரியாசிஸ் போன்ற பிரச்னைகள் இருந்தால் வேர்களுக்கு போதிய ஊட்டச்சத்துக் கிடைக்காமல் அதன் காரணமாகவும் முடி உதிரும் பிரச்னை உண்டாகும். அரோமாதெரபிஸ்டிடம் அதற்கான ஆலோசனைகளைக் கேட்டு அதைச் சரிசெய்து கொள்ளலாம். `ஹேர் கண்டிஷனர்' அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் முடியின் அடர்த்தி குறைந்து மெல்லியதாக மாறி முடி உதிரும். எனவே, அடிக்கடி கண்டிஷனர், ஷாம்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பார்லி வாட்டருக்காக பீர்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. பீரில் இருக்கும் ஆல்கஹாலும் முடியின் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல. பார்லி வாட்டர் தேவைப்பட்டால் நேரடியாகக் கடைகளில் பார்லி அரிசியை வாங்கிப் பொடியாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். 

முடி வளர்வதற்கென்று நேரடியாக எந்தச் சிகிச்சையும் இல்லை. ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரிசெய்வதும், முடியின் வேர்களுக்கு அவை சரியாகக் கிடைக்கச் செய்வது மட்டுமே முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான ஒரே வழி. தற்காலிகத் தீர்வு வேண்டுமென்றால் நல்லெண்ணெய்யையும், விளக்கெண்ணெய்யையும் கலந்து நன்றாக ஊறவைத்து வாரத்தில் மூன்று நாள்கள் குளித்து வந்தால் முடி உதிர்வதை ஓரளவுக்குக் குறைக்க முடியும் `` என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.