ஹெல்த்
Published:Updated:

ஜீரோ ஹவர்! - 17

ஜீரோ ஹவர்! - 17
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீரோ ஹவர்! - 17

ஹெல்த்

டல்நலன் காக்கக்கூடிய நல்ல உடற்பயிற்சியை எப்படித் தேர்வுசெய்வது  என்று பார்த்துவருகிறோம். இதுவரை  ஐந்து ஸ்டெப்களைப் பார்த்திருக்கிறோம். இந்த இதழில் மீதி மூன்று ஸ்டெப்ஸ்.. 

ஜீரோ ஹவர்! - 17

ஸ்டெப் 6 - நல்ல எதிர்பார்ப்புகளே

நல்ல முடிவுகளைத் தரும்!

``சார் எனக்கு 30 கிலோ வெயிட் குறைக்கணும். ஆனா, மசில்ஸ் அப்பிடியே இருக்கணும்; பார்க்க ஜிம் பாடி மாதிரியே தெரியணும். அப்புறம் `சிக்ஸ் பேக்’னு சொல்றாங்களே... அதுவும் வேணும்; அதேநேரம் என்னைப் பார்த்தா சிக்குனு ஸ்லிம்மா தெரியணும்.இதையெல்லாம் ஆறே வாரத்துல செய்யணும்’’ என்று எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்புகளே எகிறி எகிறி அடிக்கும். ஆறே வாரங்களில் சிவப்பழகு எப்படி சாத்தியமில்லையோ அப்படித்தான் இவையெல்லாம்.

ஜீரோ ஹவர்! - 17

எதிர்பார்ப்புகளை எந்தளவுக்கு நியாயமாக வைத்துக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம். இது உடற்பயிற்சித் தேர்வில் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியதே. ஒரு வாரத்தில் அரை கிலோ மட்டுமே எடை குறைக்க முடியும்; ஒரு மாதத்தில் தொப்பை ஓரளவே குறையும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு எதிர்பார்ப்புகளைக் குறைக்கலாம்! இவற்றைச் சரிசெய்ய முக்கியமாகச் செய்யவேண்டியது டைம்லைனில் மாற்றம். ஓராண்டில் 10 கிலோ எடை குறைப்பது என வைத்துக்கொண்டு முயன்றால் நிச்சயம் சாதிக்கலாம். ஆனால், ஒரே மாதத்தில் 10 கிலோ எடைக் குறைப்பு என்பது ஆபத்தே. நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். `சிக்ஸ் பேக்’ வைக்க ஜிம்முக்குத்தான் போக வேண்டும். `யோகா பண்ணினேன்... சிக்ஸ்பேக் வரவில்லை’ என்று புலம்பினால் தவறு உங்களிடம்தான் உள்ளது!

ஸ்டெப் 7 - சரியான நண்பர்கள் முக்கியம்!

உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு ஆண்டுக்கணக்கில் ஆர்வத்துடன் உடற்பயிற்சியில் ஈடுபடும் நண்பர்களைக் கண்டறிவதும் மிக முக்கியம். நமக்கான மோட்டிவேஷனை பக்கத்திலேயே வைத்திருந்தால் நமக்கான உந்துதல் தானாகவே கிடைக்கும். முக்கியமாக அவர்களுடன் நம்மை நாமே அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வோம். எந்த அளவுக்கு உடற்பயிற்சி நண்பர்களைப் பெறுகிறோமோ அந்த அளவுக்கு அதிக ஆண்டுகள் நாம் அந்த உடற்பயிற்சியில் நீடிப்போம் என்பதுதான் உலக நீதி.

ஜீரோ ஹவர்! - 17இன்றைக்கு `பாட்மின்டன்’ தொடங்கி `யோகா’ வரை எல்லாமே குழுக்களாகத்தான் செயல்படுகின்றன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்களில் இணைந்துகொண்டால் அதுதொடர்பான நண்பர்களைப் பெற முடியும். குழுக்களில் இணையும்போது இயல்பாக அந்தக் குழுவில் சீன் போடவாவது எதையாவது செய்து காட்டவேண்டிய நிர்பந்தமும் நமக்கு ஏற்படும். அதனால் எதையாவது செய்துவிடுவோம். எந்த உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுத்தால் அதிக நண்பர்களைப் பெற முடியும் என்பதையும் விசாரியுங்கள். ஊருக்குள் நீங்கள் மட்டும் தன்னந்தனியாக `ஜிம்னாஸ்டிக்’ செய்வது நன்றாக இருக்காது என்பதையும் மனதில்கொள்ளுங்கள்.

ஸ்டெப் 8 - முடிவுகளை கவனியுங்கள்!

உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பது எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு அதில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவேளை பலன்கள் சரியாக இல்லை என்பதாக உணர்ந்தால், அதற்கேற்ப நம் உடற்பயிற்சிகளை உரிய ஆலோசனை பெற்று மாற்றியமைக்க வேண்டும். பயிற்சியாளரிடம் விவாதித்து, நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, வேறு உடற்பயிற்சிக்கு மாறலாம். ஆனால், எந்தப் பலனும் உடனடியாகக் கிடைக்காது. ஆறு மாதங்களாவது முயற்சிசெய்து பார்த்துவிட்டே அடுத்த இடத்துக்குத் தாவுவது நல்லது.

இந்த எட்டு படிநிலைகளும் உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க மட்டுமல்லாமல், நமக்கான நல்ல ஆரோக்கியமான உடல்வாகைப் பெறவும்,  நீண்ட காலம் உடற்பயிற்சியில் ஈடுபடவும் உதவும்!

நேரம் ஒதுக்குவோம்...

- வினோ