ஹெல்த்
Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 18வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

காசநோயை ஒழிக்க நம் மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் இதற்கென பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்திவருகிறது. காசநோய் தொடர்பான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது, விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது, மருந்துகளை இலவசமாக வழங்குவது, நோயாளி மாத்திரை சாப்பிடுவதை உறுதிசெய்வது போன்ற பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்தப் பணிகளில் பல தன்னார்வ அமைப்புகளும் இணைந்து பணியாற்றுகின்றன.

தொற்று நோய்களின் உலகம்!

காசநோய்க்கு அரசு வழங்கும் சிகிச்சைக்குப் பெயர், ‘டாட்ஸ்’ (DOTS - Directly Observed Treatment Short course). ‘டாட்ஸ்’ சிகிச்சை என்பது, ஓர் ஒருங்கிணைந்த செயல்முறை. பிற நோய்களுக்கு நோயாளியை மருத்துவமனைக்கு வரவழைத்து மாத்திரைகள் வழங்குவார்கள். அதோடு மருத்துவ ஊழியர்களின் பணி முடிந்துவிடும். காசநோய்க்கு அப்படியல்ல. காச நோயாளி இடைவிடாமல் மாத்திரை சாப்பிடுவதைத் தன்னார்வலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

முன்பெல்லாம், ‘வாரத்துக்கு மூன்று நாள்கள் மட்டும் மாத்திரை சாப்பிட்டால் போதும்’ என்ற நிலை இருந்தது. இப்போது, ‘தினமும் சாப்பிட வேண்டும்’ என்று தீர்மானித்திருக்கிறார்கள். அதேபோல, ‘முதல் இரண்டு மாதங்களுக்கு நான்குவிதமான மாத்திரைகள், அடுத்த நான்கு மாதங்களுக்கு இரண்டுவிதமான  மாத்திரைகள்’ வழங்கப்பட்டு வந்தன. இப்போது காசநோய்க் கிருமியின் எதிர்ப்புத்திறன் அதிகரித்துவிட்டதால், ‘முதல் இரண்டு மாதங்களுக்கு நான்குவித மாத்திரைகள், அடுத்த நான்கு மாதங்களுக்கு மூன்றுவித மாத்திரைகள்’ என்று மாற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து நோயின் தன்மை, நோயாளிகளின் எதிர்ப்பு சக்தி தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்துவருவதால் சிகிச்சை முறைகளிலும் மாற்றம் வந்துகொண்டே இருக்கிறது. 

தொற்று நோய்களின் உலகம்!காசநோயைக் கண்டறிவதில் சிறிது தாமதமானாலும் அது மேலும் பலருக்குப் பரவிவிடும் ஆபத்து இருப்பதால் அரசு இப்போது பல புதிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. புள்ளிவிவரங்களைத் துல்லியமாகச் சேகரிப்பதற்காக எல்லா மருத்துவர்களும் தங்களிடம் வரும் காச நோயாளிகள் பற்றிய விவரங்களை அரசுக்குத் தர வேண்டும் என்று விதிமுறை வகுத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளிகளாகச் சேர்பவர்களின் விவரங்களை மட்டும்தான் வழங்க வேண்டும். இப்போது, காசநோய் உறுதியானாலே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

காசநோயைச் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டாலோ, சிகிச்சையைப் பாதியில் நிறுத்தினாலோ காசநோயின் தன்மை கடுமையாக மாறிவிடும். அதை, எம்.டி.ஆர் - டி.பி                                (Multi Drug Resistant TB) என்பார்கள்.  எம்.டி.ஆர் - டி.பியை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. 

தொற்று நோய்களின் உலகம்!

காசநோய்க்குத் தரப்படும் மருந்துகளைக்கொண்ட பிளேட்டுகளில் அந்தக் கிருமியைவைத்து வளர்க்க வேண்டும். சில பிளேட்டுகளில் கிருமிகள் வளரும். சில பிளேட்டுகளில் வளராது. வளரும் பிளேட்டில் இருக்கும் மருந்துக்குக் காசநோய்க் கிருமி கட்டுப்படாது. எந்த மருந்தைக்கொண்ட பிளேட்டில் கிருமிகள் வளரவில்லையோ அதை நோயாளிக்கு மருந்தாகத் தர வேண்டும். இந்த மருத்துவ நுட்பம் புரிந்துகொள்ளச் சற்று சிரமமாக இருக்கலாம். எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், `ரிஃபாம்பிசின்’ (Rifampicin), ‘ஐசோனையஸிடு’         (Isoniazid) ஆகிய இரண்டு மருந்துகளுக்கும் கட்டுப்படாத காசநோய் எம்.டி.ஆர் - டி.பி. 

என்ன சிக்கலென்றால், கிருமிகள் வளர்ந்து, ஆய்வுகள்  முடிந்து ரிசல்ட் வரக் குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகிவிடும். அதற்குள் நோயின் தன்மை மிக மோசமாகிவிடும். நிறைய பேருக்கு பரவியும்விடும்.

ரிஃபாம்பிசின், ஐசோனையஸிடு மருந்துகளுக்கும் கட்டுப்படாமல், ஸ்ட்ரெப்டோமைசின், (Streptomycin),  குயினோலோன் (Quinolone) வகைகளைச் சேர்ந்த மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் காசநோயின் தன்மை வீரியமானால் அதை, எக்ஸ்.டி.ஆர் - டி.பி (Extremely Drug Resistant TB) என்பார்கள்.  மேற்கண்ட மருந்துகள் மட்டுமின்றி, வேறெந்த மருந்துக்குமே கட்டுப்படாத காசநோய், `டி.டி.ஆர் - டி.பி’ (Totally Drug Resistant TB) என்று அழைக்கப்படும்.

இன்னும் காசநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இப்போதைக்கு காசநோய் குறித்து இந்த அளவோடு நிறுத்திக்கொள்வோம். அடுத்து இன்னொரு புதுவிஷயம் பேசுவோம்!

 - களைவோம்...