ஹெல்த்
Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

தகவல்

நீங்கள் அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு ஊர்சுற்றுகிறவரா? உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியொன்றை அறிவித்திருக்கிறது ஃபின்லாந்திலிருக்கும் ஹெல்சின்கி பல்கலைக்கழகம்.

டாக்டர் நியூஸ்!

இங்கு நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றின்படி, ஆண்டுதோறும் மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேல் விடுமுறை எடுக்கிறவர்கள் ஒப்பீட்டளவில் அதிக ஆண்டுகள் வாழ்கிறார்களாம். தொடர்ந்த பணி அழுத்தத்திலிருந்து அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்வது இவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது கண்டறியப்பட்டிருக்கிறது.

அடிக்கடி விடுமுறை எடுக்க இயலாத வேலையில் உள்ளவர்கள் ஆரோக்கியத்தை மட்டும் நன்றாகப் பார்த்துக்கொண்டால் போதாதா? `எவ்வளவுதான் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டாலும், வருடம் முழுக்க ஒரே வேலையைச் செய்வதில் இருக்கும் அழுத்தம் நம் உடலுக்கு நல்லதில்லை’ என்கிறார்கள். அவ்வப்போது ஒரு வார அளவில் விடுமுறை எடுத்துக்கொண்டு, வேலைகளை மறந்து, மகிழ்ச்சியாகச் சுற்றிவிட்டு வந்தால் இன்னும் சுறுசுறுப்பாக வேலை பார்க்கலாம்.

டாக்டர் நியூஸ்!

ளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகள் பிறருடன் எளிதில் பழகவோ உரையாடவோ இயலாமல் சிரமப்படுவார்கள். காரணம், எதிரில் இருப்பவர் என்ன நினைக்கிறார், எப்படிப் பேசுகிறார் என்பதைச் சரியாகக் கணிக்க இயலாமல் அவர்கள் தடுமாறுவார்கள். `கூகுள் கிளாஸ்’ (Google Glass) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தப் பிரச்னையைத் தீர்க்க இயலும் என்கிறது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆய்வுக்குழு. இப்படிப்பட்ட குழந்தை கூகுள் கிளாஸ் மூக்குக்கண்ணாடியை அணிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கண்ணாடி எதிரிலுள்ளவரின் முகத்தைத் தொடர்ந்து கவனிக்கிறது; அவர்களுடைய உணர்வுகளை அடையாளம் கண்டு குழந்தைக்குத் தெரிவிக்கிறது, அதற்கேற்பக் குழந்தை எதிர்வினையாற்றுகிறது.

`இப்படித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிறருடைய உணர்ச்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள், பிறருடன் சகஜமாகப் பழக ஆரம்பிப்பார்கள்’ என்று தொடக்கநிலை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டாக்டர் நியூஸ்!

ங்கிலாந்தில் இளைஞர்கள் மத்தியில் மனநலப் பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை நிபுணர்கள் ஆராய்ந்துவருகிறார்கள்.

டாக்டர் நியூஸ்!இதற்காக நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றில், சிறு வயதில் `Resilience’ எனப்படும் தாக்குப்பிடிக்கும் திறனை வளர்த்துக்கொண்ட குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மனநலப் பிரச்னைகள் வரும் வாய்ப்பு குறைவு என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது, வாழ்க்கையில் வரும் சவால்களைத் துணிவோடு சந்திப்பது, அழுத்தத்தைக் கண்டு பதறாமல் நேர்மறையாக எதிர்கொள்வது போன்ற குணங்களைக் குழந்தைகளிடம் வளர்த்தால், அவர்கள் மனநலனுடன் வளர்வார்கள்.

குழந்தைகளுக்கு இதைக் கற்றுத்தருவது எப்படி?

பதற்றத்தை, எதிர்மறை எண்ணங்களைக் கையாள்வதற்கு அவர்களுக்குச் சொல்லித்தரலாம். குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள், மற்றவர்களிடம் நன்கு பேசிப்பழக ஊக்கப்படுத்தலாம். `ஏதாவது ஒரு பிரச்னை என்றால் பேசுவதற்கும் ஆதரிப்பதற்கும் நமக்கு இவர்களெல்லாம் இருக்கிறார்கள்’ என்கிற எண்ணமே தாங்குதிறனை வளர்க்குமாம்.

டாக்டர் நியூஸ்!

குடிப்பழக்கத்தின் தீமைகளை எல்லோரும் அறிவார்கள். அதே நேரத்தில், `ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்று கணக்கு வைத்துக்கொண்டு அளவாகக் குடிப்பதில் தவறில்லை. அது உடலுக்கு நல்லது’ என்று பலர் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது, இதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை என்பதை அண்மையில் ஓர் ஆய்வு சொல்லியிருக்கிறது.

இதற்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட முந்தைய ஆய்வுகளை நிபுணர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். 23 நலப்பிரச்னைகளுக்கும் மதுவுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து ஒருவர் எந்த அளவு மது அருந்தினால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கண்டறிய முயன்றார்கள். `அந்த அளவு பூஜ்ஜியம்தான்’ என்று பதில் வந்திருக்கிறது.

இனிமேலாவது, `கொஞ்சமாக் குடிச்சா நல்லது' என்பது போன்ற வாதங்களை நிறுத்திக்கொள்வதுதான் நல்லது!

டாக்டர் நியூஸ்!

ருத்துவம், உடல்நலம் சார்ந்த புகைப்படங்களுக்கான சர்வதேசப் போட்டியொன்றை அறிவித்திருக்கிறது ‘வெல்கம் அறக்கட்டளை.’ முன்பு மருத்துவத் துறை நிபுணர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தப் போட்டியில் இப்போது பொதுமக்களும் பங்கேற்கலாம். சிறந்த புகைப்படத்துக்கு முதல் பரிசு 15,000 யூரோக்கள், கிட்டத்தட்ட பதினான்கு லட்ச ரூபாய்!

எதற்காக இந்தப் போட்டி... புகைப்படங்களுக்கும் மருத்துவத்துக்கும் என்ன தொடர்பு?

`ஒரு விஷயத்தைச் சொற்களால் எழுதுவதைவிட, பேசுவதைவிட, புகைப்படமாகக் காண்பிக்கும்போது மிக விரைவாகவும் சிறப்பாகவும் மக்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள். மருத்துவம் போன்ற சிக்கலான துறையைப் பற்றிய உரையாடல்களை ஊக்கப்படுத்துவதற்குப் புகைப்படங்கள் மிகவும் பயன்படும்’ என்கிறார் வெல்கம் அறக்கட்டளையின் இயக்குநர் ஜெரெமி ஃபர்ரர்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் மருத்துவம், அது குறித்த சமூகப் பார்வை, நோய்கள், அவை பரவும் முறைகள், மனித உடல் இயங்கும்விதம் போன்றவை குறித்த தரமான புகைப்படங்களை டிசம்பர் 17-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: https://wellcome.ac.uk/what-we-do/our-work/photography-prize

டாக்டர் நியூஸ்!

`எவ்வளவுதான் ருசியாகச் சமைத்தாலும் குழந்தைகள் ஒழுங்காகச் சாப்பிட மறுக்கிறார்கள்’ என்பதுதான் பெரும்பான்மையான பெற்றோர்களின் குற்றச்சாட்டு. இதனால் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போய்விடுமோ என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

கோபன்ஹாகென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து நிகழ்த்திய ஆய்வில் சில வியக்கவைக்கும் விஷயங்கள் தெரியவந்திருக்கின்றன. பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் உணவை எப்படிப் பரிமாறுகிறார்கள் என்பதைப் பொறுத்து அதை விரும்புகிறார்களாம் அல்லது ஒதுக்கிவிடுகிறார்களாம்! உதாரணமாக, எட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் தங்கள் தட்டிலுள்ள உணவுப் பொருள்கள் ஒன்றோடொன்று கலக்கக் கூடாது என்று விரும்புகிறார்களாம். இதற்குக் காரணம், தாங்களே அவற்றைக் கலந்து சாப்பிட விரும்பலாம் அல்லது உணவுப் பொருள்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் உண்ண விரும்பலாம்.

12 முதல் 14 வயதுள்ள குழந்தைகள் இதற்கு நேரெதிர். அவர்களுக்கு உணவைக் கலந்து பரிமாறினால்தான் அதிகம் பிடிக்கிறதாம். ஆக, உணவின் சுவை, நிறம், அளவு போன்றவற்றோடு, பரிமாறும்விதத்தையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள் என்பது புரிகிறது. பெற்றோர் உணவு அலங்கரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தால், பிள்ளைகளின் ஊட்டத்தையும் முன்னேற்றலாம்!

- என். ராஜேஷ்வர்