Published:Updated:

ஆரோக்கியத்துக்கான தூண்கள் - கருஞ்சீரகம்

ஆரோக்கியத்துக்கான தூண்கள் - கருஞ்சீரகம்
பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கியத்துக்கான தூண்கள் - கருஞ்சீரகம்

அஞ்சறைப் பெட்டி

ஆரோக்கியத்துக்கான தூண்கள் - கருஞ்சீரகம்

அஞ்சறைப் பெட்டி

Published:Updated:
ஆரோக்கியத்துக்கான தூண்கள் - கருஞ்சீரகம்
பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கியத்துக்கான தூண்கள் - கருஞ்சீரகம்

சீரகம் தெரியும், பெருஞ்சீரகம் தெரியும்; அதென்ன கருஞ்சீரகம்? ஆரோக்கியம் தருவதில் சீரகமும் கருஞ்சீரகமும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள். தாளிக்கும் பொருள்களின் கூட்டணியிலும் சமையல் வகையிலும் அதிகம் இடம்பிடித்த கருஞ்சீரகம், இப்போது கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், கருமையான விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் நலம் பயக்கும் நுண்கூறுகள் நமது ஆரோக்கியத்துக்கான தூண்கள் என்றே சொல்லலாம்.


`மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்குமான அற்புத மருந்து’ என இஸ்லாமும், ‘கருஞ்சீரகம் நோய் தீர்க்கும்’ எனக் கிறிஸ்தவமும் கருஞ்சீரகத்தின் குணத்தைப் புகழ்ந்துள்ளன. `கருஞ்சீரகந்தான்… காய்ச்சல் தலைவலியுங் கண்வலியுங்…’ எனும் சித்த மருத்துவப் பாடல், கருஞ்சீரகத்தின் பயனைப் பட்டியலிட்டுள்ளது.

அரேபியாவில் `ஆசீர்வதிக்கப்பட்ட விதைகள்’ என்று கருஞ்சீரகத்தைக் குறிப்பிடுகின்றனர். பெர்சிய மருத்துவரான `அவிசென்னா’ தனது நூலில் கருஞ்சீரகத்தின் பயன் குறித்து விவரித்துள்ளார். `டட்’ (Tut) எனும் எகிப்திய அரசரின் கல்லறையில்  கருஞ்சீரக விதைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியத்துக்கான தூண்கள் - கருஞ்சீரகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஷ்மீர் உணவுகளில் கருஞ்சீரகத்தின் சேர்க்கை அதிகம். மத்தியக் கிழக்கு நாடுகளில் கோதுமையைக் கொண்டு செய்யப்படும் ‘கிப்பே’ (Kibbeh) எனப்படும் உணவில் கருஞ்சீரகம் சேர்க்கப்படுகிறது. எத்தியோப்பியாவின் சில பான வகைகளையும், ரஷ்ய நாட்டின் ரை-ரொட்டி
களையும் (Rye-bread) சுவையூட்டு கிறது கருஞ்சீரகம்.

கருஞ்சீரகத்தில் மட்டுமே இருக்கும் `தைமோகுயினோன்’ (Thymoquinone) என்ற வேதிப் பொருளும் தைமால், பைனீன், அனிதால் போன்றவையும் இதன் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன. பீட்டா கரோட்டின், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, சோடியம், கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் என உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டங்களைக் கொண்டுள்ளது கருஞ்சீரகம்.

உடலுக்குள் கிருமிகள் நுழையும்போது, அவற்றை எதிர்க்கும் செல்களின் செயல்பாட்டைக் கருஞ்சீரகம் முடுக்கிவிடுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முதிர்ந்த வயதிலும் நோய் எதிர்க்கும் திறனை மேம்படுத்தும் திறன் கருஞ்சீரகத்துக்கு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கருஞ்சீரகம் ரத்த அழுத்தத்தைக் குறைத்துச் சிறந்த பலனைத் தந்துள்ளது.

புற்றுக்கட்டிகளின் வளர்ச்சிக்கு, புதிய ரத்தக் குழாய்கள் உருவாவதைத் தடுக்கும் திறன், இதற்கு இருப்ப தாகப் புற்று சார்ந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மரபணுக்களை இயக்கும் புரதங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றல், கருஞ்சீரகத்தில் உள்ள `தைமோகுயினோன்’ என்ற மூலப்பொருளுக்கு இருக்கிறது. ஒவ்வாமை சார்ந்த நோய்களுக்கு இதன் எண்ணெய் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதயநோய்களை உருவாக்கக் காரணியாக இருக்கும் கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்கவும் கருஞ்சீரகம் சேர்ந்த மருந்துகள் உதவும்.

உபகுஞ்சிகை, அரணம் ஆகிய வேறு பெயர்களைக் கொண்ட கருஞ்சீரகத்துக்கு சிறுநீர்ப்பெருக்கி, புழுக்கொல்லி, நஞ்சகற்றி, வாய்வகற்றி போன்ற செய்கைகள் உள்ளன. சரும நோய்கள், உடல்சூடு, வயிறு உப்புசம், இருமல், வாந்தி, வீக்கம் போன்றவற்றுக்குக் கருஞ்சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கிறது அகத்தியர் குணவாகடப் பாடல். கொத்தமல்லி மற்றும் மிளகின் சுவைகளைத் தன்னகத்தே வைத்திருக்கும் கருஞ்சீரகத்தைச் சமையலில் தொடர்ந்து சேர்த்து வந்தால் புத்துணர்வு கிடைக்கும்.

நொச்சி இலைகளை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, அதில் கருஞ்சீரகப் பொடியைச் சேர்த்துக் குடித்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். தலைபாரம், மூட்டுவீக்கம் போன்றவற்றுக்கு, கருஞ்சீரகத்தை மையாக அரைத்து பற்றுப்போட்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். தீராத விக்கலை உடனடியாக நிறுத்த, இதன் விதைப்பொடியை மோருடன் கலந்து பருகலாம். தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தடைபட்ட சுவாசம் எளிதாகும். இதன் மருத்துவக் குணங்களைப் பெற, ரொட்டி வகைகளில் கருஞ்சீரக விதைப்பொடியைத் தூவிச் சாப்பிடலாம்.

பெண்களைப் பாதிக்கும் சில நோய்களைக் குணப்படுத்த, பண்டைய கிரேக்க மருத்துவரான `ஹிப்போகிரேடஸ்’ கருஞ்சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார். பூப்பு சுழற்சியை முறைப்படுத்த கருஞ்சீரகப் பொடியை சாதம் வடித்த கஞ்சியில் சேர்த்துக் கொடுத்து வரலாம். குழந்தை பிறந்ததும், கருப்பையின் உள்ளே இருக்கும் அழுக்கை முற்றிலும் வெளியேற்ற கருஞ்சீரகம் உதவுகிறது. தடைபட்ட மாதவிடாயை வெளியேற்ற, ஒரு கிராம் கருஞ்சீரகப் பொடியைச் சிறிது கீழாநெல்லி மற்றும் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.

இதன் விதையிலிருந்து பிரித்தெடுக்கும் எண்ணெயை வெற்றிலையில் தடவி மென்று சாப்பிட வீரியவிருத்தி உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். கருஞ்சீரக எண்ணெயைத் துணியில் தடவி மோந்து பார்த்தால் மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பழங்காலத்தில் நுரையீரல் பாதை தொற்றுகளைக் குணப்படுத்த கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புழுக்களை வெளியேற்ற இதன் பொடியை மிதமான வெந்நீரில் கலந்து பருகலாம் அல்லது கால் டீஸ்பூன் பொடியை, அரை டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம். சிறுவர்களுக்கு மூன்று சிட்டிகை பொடியைத் தேனில் குழைத்துக் கொடுத்தால் புழுக்கள் வெளியேறும்; பசி உணர்வு அதிகரிக்கும். கருஞ்சீரகச் சூரணத்துடன், நெருஞ்சில் விதை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்துக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.

புதினா, கொத்தமல்லி, இஞ்சி, சீரகத்துடன் கருஞ்சீரகம் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சிக் குடித்துவந்தால் ரத்த அழுத்தம் சீராகும். நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயம், நாவல்கொட்டைத் தூளுடன் கருஞ்சீரகம் சேர்த்து அவ்வப்போது சாப்பிட, பாதங்களில் உண்டாகும் எரிச்சல், சோர்வு மறையும்.

கருஞ்சீரகத்தை வறுத்துப் பயன்படுத்தி னால் மணம் அதிகரிக்கும். சமைத்து முடித்த உணவுகளில் ஒரு சிட்டிகை கருஞ்சீரகம் தூவினால் தனித்துவமான சுவை கிடைக்கும். அசைவ குழம்பு வகைகளில் மிளகைப் போலவே கருஞ்சீரகத்தையும் சேர்க்கலாம். சீரகத்துக்குச் சிறிது இனிப்பு, கார்ப்பு கலந்த சுவையும், கருஞ்சீரகத்துக்குக் கைப்பு, கார்ப்பு சேர்ந்த சுவையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருஞ்சீரகம்… அஞ்சறைப் பெட்டியின் அழகு!

- டாக்டர் வி.விக்ரம்குமார்

சுவைக்குப் பஞ்சமே இல்லை!

அட்டவர்க்கம்:
சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், ஓமம், இந்துப்பு, பெருங்காயம் போன்ற பொருள்களின் கூட்டணியில் அமைந்த ‘அட்டவர்க்கம்’ எனும் கூட்டு மருந்து, செரிமானம் முதல் மூட்டுவலி வரை நீக்கும்.

பஞ்ச விதைகள்: கருஞ்சீரகம், கடுகு, சீரகம் தலா இரண்டு டீஸ்பூன், தலா ஒரு டீஸ்பூன் வெந்தயம், பெருஞ்சீரகம் போன்றவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும் (அரைக்க வேண்டாம்).  தாளிக்கும்போது அதில் கால் டீஸ்பூன் எடுத்து எண்ணெய்விட்டு வதக்க, இந்தப் பஞ்ச விதைகளின் நறுமணம் வெளிப்பட்டு நம்மைப் பரவசப்படுத்தும்.

பஹரட் (Baharat): கருஞ்சீரகம், மிளகு, கொத்தமல்லி விதைகள், சீரகம், கிராம்பு, ஏலம் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து லேசாக வதக்கி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஜாதிக்காய் மற்றும் விரல் அளவு லவங்கப்பட்டையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் தனியாக எடுத்துவைத்த நறுமணமூட்டிகளுடன் சேர்த்து மையாக அரைக்கவும். அதில் குடமிளகாய் (உலர்ந்த பொடி) அரை டீஸ்பூன் சேர்க்க, இனிப்பும் கார்ப்பும் சேர்ந்த வித்தியாசமான சுவை அனுபவத்தைக் கொடுக்கும். அரபு நாடுகளில் அசைவ உணவுக்குச் சுவையூட்ட ‘பஹரட்’ மசாலாவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

தென்னிந்திய கிரேவி: காளான் மூன்று கப், பாதாம் அரை கப் எடுத்து எண்ணெய்விட்டு வதக்கி, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து, ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக விதை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். சத்துகள் முழுவதும் இறங்கியதும், தேவையான அளவு அரைத்த வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்கவும். மேலும் தலா ஒரு டீஸ்பூன் மாங்காய்ப் பவுடர், வெந்தயப் பொடி, சாம்பார் மசாலா, சீரகம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். கடைசியில் தனியாக எடுத்து வைத்த காளான் மற்றும் பாதாம் பருப்பைச் சேர்த்து, சிறிது கொண்டைக்கடலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிரேவிபோலச் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவைக்குப் பஞ்சமிருக்காது! 

ஆரோக்கியத்துக்கான தூண்கள் - கருஞ்சீரகம்

ண்களைச் சுற்றியிருக்கும் கருவளையத்தை நீக்குவதற்கான தீர்வு இது. கிரீன் டீ டிகாக்‌ஷன் 10 மில்லி, நாட்டுச்சர்க்கரை ஒரு டீஸ்பூன், விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பஞ்சில் நனைத்து, கண்ணைச் சுற்றித் தடவவும். அரைமணி நேரம் கழித்து மிருதுவான துணியால் துடைத்தெடுக்கவும். இப்படி 10 நாள்கள் தொடர்ந்து செய்துவர, கருவளையம் நீங்கி, கண்கள் கோலிக்குண்டுபோல ஜொலிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism