தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

செரிமான உறுப்புகளின் ஆபத்பாந்தவன்! - ஓமம்

செரிமான உறுப்புகளின் ஆபத்பாந்தவன்! - ஓமம்
பிரீமியம் ஸ்டோரி
News
செரிமான உறுப்புகளின் ஆபத்பாந்தவன்! - ஓமம்

அஞ்சறைப் பெட்டி

ழலை போல அழகான பிறை வடிவ விதைகள்; உருவத்தில் சிறியவை. ஆனால், மருத்துவக் குணங்களை வெளிப்படுத்தும் போது, `இந்தச் சிறிய விதைகளுக்குள் இவ்வளவு ஆச்சர்யங்களா!’ என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும் நறுமணமூட்டி ஓமம். அஞ்சறைப் பெட்டியையே கமகமக்கச் செய்யும் மற்றொரு நலப் புதையல் இது!

பஞ்சாப் பகுதி மக்களால் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படும் உணவு வகை `ஓம பராத்தா’. ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓமம் கலந்த ரொட்டி வகைகள் பிரபலமாக உள்ளன. பருப்பு சேர்ந்த உணவுகள், வாய்வுக்கோளாற்றை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, பருப்புச் சமையலில் ஓமத்தைத் தவறாமல் சேர்ப்பது நமது பாரம்பர்ய வழக்கம். பொடித்த ஓமம் மற்றும் பெருங்காயம் கலந்த மோர்… பனைவெல்லம், இஞ்சி, புளி, ஓமம் சேர்த்த பானகம்… இப்படி நமது பாரம்பர்ய பான வகைகள், ஓமத்தின் சேர்க்கையால் மருத்துவக் குணத்தில் உச்சம் பெறுகின்றன.

பண்டைய காலத்திலேயே இந்தியாவில் ஓமம் விளைவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்தியா தவிர்த்து எகிப்து, இரான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது. ஓமத்தின் பூர்வீகம் இந்தியா என்றும் கிரேக்கம் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. கிரேக்க மருத்துவர்கள் கேலன், டியோஸ்காரிடஸ் போன்றோர் செரிமானப் பிரச்னைகளைப் போக்க ஓமத்தை முக்கிய மருந்தாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

செரிமான உறுப்புகளின் ஆபத்பாந்தவன்! - ஓமம்

ஓமத்தில் இருக்கும் சைமீன், பைனீன், லிமோனீன் ஆகிய வேதிப்பொருள்கள், செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி, உடலுக்கு நலமூட்டுகின்றன. செரிமானப் பகுதிகளில் உள்ள தசைகளில் ஏற்படும் உபாதைகளைத் தடுக்கும் சக்தி, ஓமத்துக்கு இருக்கிறது. இதிலுள்ள தைமோல்  எனும் வேதிப்பொருளுக்குக் கிருமிநாசினி செய்கை இருப்பதால், நுரையீரல் பாதைத் தொற்றுகளுக்குச் சிறந்த மருந்தாகிறது. `கால்சியம் சேனல் பிளாக்கர்’ போலவே செயல்பட்டு, அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகளுக்கு, இசிவு அகற்றி செய்கை (Anti-spasmodic) கொண்ட ஓமத்தைப் பயன்படுத்தலாம்.

செரிமான உறுப்புகளின் ஆபத்பாந்தவன்! - ஓமம்


குடல்பகுதியில் இருக்கும் புழுக்களை அழித்து வெளியேற்றும் திறனும், சில வகையான பாக்டீரியாக்களின் அமைப்பைச் சிதைக்கும் தன்மையும் ஓமத்துக்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. உணவு வகைகளை நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்க இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பல நாடுகளின் சமையலில் ஓமம் நேரடியாகச் சேராவிட்டாலும், அங்கே புழங்கும் இருமல் மருந்துகள், பற்பசைகள் மற்றும் மவுத்-வாஷ்களில், ஓமத்தின் ஆதிக்கம் அதிகம் உண்டு.

தீப்பியம், அசமோதம் ஆகிய வேறு பெயர்களைக் கொண்ட ஓமம், உமிழ்நீரைப் பெருக்கி, செரிமானச் சுரப்புகளை அதிகரித்து, பசியை முறைப்படுத்தி உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். `சீதசுரங் காசம் செரியா மந்தம் பொருமல்…’ எனத் தொடங்கும்  அகத்தியர் குணவாகடப் பாடல், செரிமானப் பாதையில் உண்டாகும் பல்வேறு பிரச்னைகளுக்கும், கப நோய்களுக்கும் ஓமம் முதன்மையான மருந்து என்பதைச் சொல்கிறது.

 சளியை வெளியேற்ற, சிறிது ஓமத்தை நீரிலிட்டு கொதிக் கவைத்துத் தேன் சேர்த்துப் பருகலாம்.

 ஒரு டீஸ்பூன் ஓமத்தைப் பொடியாக்கி, துணியில் கட்டி அவ்வப்போது முகர்ந்துவந்தால் மூக்கடைப்பு விலகும்.

 தொண்டைப்புண், குரல்கம்மல் போன்ற காரணங்களுக்காக வாயைக் கொப்பளிக்கும்போது, உப்புடன் சிறிது ஓமம் சேர்த்துக் கொண்டால் விரைவில் பலன்கள் கிடைக்கும். இந்த `ஓம மவுத் வாஷை’ப் பயன்படுத்த வாய்நாற்றம் மறைந்து வாய் மணக்கும். 

செரிமான உறுப்புகளின் ஆபத்பாந்தவன்! - ஓமம்

வயிறு மந்தமாக இருக்கும் போது, ஓமத்துடன் தோல் சீவிய சுக்கு சம அளவு சேர்த்து இரண்டும் சேர்ந்த அளவுக்குக் கடுக்காய்ப் பொடி சேர்க்க வேண்டும். அதை மூன்று விரல் அளவு மோரில் கலந்து குடித்தால்  படிப்படியாக உப்புசம் குறைவதை உணரலாம்.

 உணவு எதுக்களிப்பதால் உண்டாகும் நெஞ்செரிச்சலைக் குறைக்க, மோருடன்  ஓமம், பெருங்காயம், இஞ்சித் துண்டுகள் சேர்த்துப் பருகலாம்.

 சிறிது ஓமத்தை வெற்றிலைக்குள் வைத்து மென்று சாப்பிட வாய்வுக் கோளாறுகள் மறையும்.

 பசி உணர்வை அதிகரிக்க, அரை டீஸ்பூன் ஓமத்தை நீர்விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, சிட்டிகை அளவு இந்துப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

 குழந்தைகளின் வயிற்றுவலியைக் குறைக்க ஓமத்தை எண்ணெயில் வதக்கி, வயிற்றின்மீது பற்று போடலாம்.

 வாய்வுப்பிரச்னை இருக்கும்போது, ஓமத்தை வெற்றிலையில் வைத்துக் கசக்கி, அடிவயிற்றுப் பகுதியில் பற்று போடலாம்.

 ஓமத்திலிருக்கும் `தைமால்’, சளிப்படலத்தால் சுருங்கியிருக்கும் நுரையீரல் பாதையை விரிவடையச் செய்து சுவாசத்தை எளிமையாக்கும்.

 ஓமம் மற்றும் சுக்கு சம அளவு எடுத்துக்கொண்டு, அவை மூழ்குமளவு எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, வெயிலில் உலரச் செய்ய வேண்டும். பிறகு இஞ்சிச் சாறு ஊற்றி மீண்டும் உலரச் செய்து, பொடியாக்கிக் கொள்ளவும். இதில் 1-2 கிராம் அளவு எடுத்து, மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க அஜீரணத் தொந்தரவுகள் தலை தூக்காது.

 தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக் குளித்தால் சளி, இருமல் அதிகரித்துவிடும் என்று பயம்கொண்டவர்கள் பொடித்த ஓமம், மிளகை உச்சந்தலையில் தேய்த்த பிறகு எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளலாம்.

 மீன் உணவுகளைச் சமைக்கும்போது உண்டாகும் நாற்றத்தைப் போக்கும் திறன், ஓமத்துக்கு மட்டுமே உண்டு என்ற நம்பிக்கை ஒருகாலத்தில் வட இந்தியாவில் இருந்திருக்கிறது. ஓமத்தைப் பொடியாக்கி வெண்ணெயில் நன்றாகக் கலந்து காய்களின்மீது தடவிச் சமைத்தால் அவற்றின் சுவை அதிகரிக்கும்.

 சமையல் கூட்டணியில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் மற்றும் ஓமம் இணைபிரியாத நண்பர்கள். ஓமத்தைச் சமையலில் அதிகளவில் சேர்த்தாலும், நன்றாகக் கரைந்து தனது மருத்துவக் குணத்தை மட்டுமே வெளிப்படுத்தும்.

 மணக்கும் சமையலின் மூலம் பிறர் மனம் கவர, ஓமம் எனும் மணம்மிக்க கருவியின் உதவியை நாடலாம். சமைத்து முடித்த உணவுகளின்மீது ஓமத்தைத் தூவிப் பரிமாறுவதும் ஒரு சமையல் நுணுக்கமே.

 மங்கிய காபி நிறத்தில் வாசனையுடன் இருக்கும் ஓமம்தான் தரமானது. ஓமத்தை வாங்கும்போது, வேறு ஏதேனும் திப்பிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பதும் அவசியம்.

ஓமம்... செரிமான உறுப்புகளின் ஆபத்பாந்தவன்!

- டாக்டர் வி.விக்ரம்குமார்  படம் : மதன் சுந்தர்

ஓமத் தீநீர்: ஓமத்துடன் நீர் சேர்த்து, வாலை இயந்திரத்தில் வைத்து பாரம்பர்ய முறைப்படி ஓமத் தீநீர் தயாரிக்கப்படுகிறது. இப்போதும்கூட ‘ஓம வாட்டர்’ எனும் பதம், பல இடங்களில் புழக்கத்தில் இருப்பதற்கு செரியாமை, பேதி, வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் எனப் பல குறிகுணங்களுக்கு உடனடியாகத் தீர்வு தரும் அதன் மருத்துவக் குணங்களே காரணம். ஒருகாலத்தில் அனைத்து வீடுகளிலும் அங்கம் வகித்த ஓமத்தீநீரில், சுமார் 25 நலம் பயக்கும் வேதிப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செரிமானப் பொடி:
இரண்டு பங்கு ஓமம், தலா ஒரு பங்கு கொத்தமல்லி விதைகள், திப்பிலி, சீரகம்… இவற்றை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். அஜீரணம், வாய்வுக்கோளாறு, வாந்தி உணர்வு போன்ற குறிகுணங்கள் தோன்றும்போது இந்தப் பொடியை, அரை டீஸ்பூன் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தடைபட்ட செரிமானம் விவேகமடையும். 

பட்ரா: சேப்பங்கிழங்கின் இலைகளுக்குள் அரிசிமாவு, புளி, பனைவெல்லம், ஓமம் மற்றும் சில நறுமணமூட்டிகளைச் சேர்த்து, ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும் `பட்ரா’ எனும் உணவு ரகம், குஜராத்திய சமையலின் சிறப்பு ரெசிப்பி!

மத்திஸ்: கோதுமை மாவு, ஓமம், மிளகு, நெய், பெருங்காயம் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த ஆரோக்கியமான நொறுவை, பஞ்சாபியர்களின் விருப்ப உணவு.

ஓமக்களி: குழந்தை பெற்றெடுத்த தாயின் கருப்பை விரைவில் இயல்புநிலைக்குத் திரும்ப, கருப்பட்டியைப் பாகு செய்து, அதில் ஓமப்பொடியைக் கலந்து ‘ஓமக்களி’ செய்து கொடுக்கும் வழக்கம் கிராமங்களில் இன்றைக்கும் உண்டு.

சாட் மசாலா: தலா ஒரு டீஸ்பூன் ஓமம், சோம்பு, மாங்காய்ப் பொடி, மிளகு, இஞ்சி விழுது…

தலா இரண்டு டீஸ்பூன் சீரகம், கொத்தமல்லி விதைகள், இந்துப்பு… அரை டீஸ்பூன் உலர்ந்த புதினா இலைகள்… இரண்டு சிட்டிகை பெருங்காயம்… ஓமம், சோம்பு, மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகளை இளவறுப்பாக வறுத்து நன்றாக அரைக்கவும். இதை மாங்காய்ப் பொடி, இஞ்சி விழுது, புதினா இலைகள், இந்துப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துப் பத்திரப்படுத்தவும். இதிலிருக்கும் நறுமணமூட்டிகள் பிரத்யேகமான மணத்தைச் சமையலில் அறிமுகப்படுத்தும். குழம்பு வகைகள், சிற்றுண்டி வகைகளில் இந்த சாட் மசாலாவைச் சேர்க்க, சுவைக்கு உத்தரவாதம்.