ஹெல்த்
Published:Updated:

இதயம் நலமா?

இதயம் நலமா?
பிரீமியம் ஸ்டோரி
News
இதயம் நலமா?

இதயம் நலமா?

இதயம் நலமா?

ந்த நூற்றாண்டில் மனிதகுலத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை, இதயம் மற்றும் ரத்த நாளங்கள் சார்ந்த தொற்றா நோய்களே. உலகளவில்  ஏற்படும் மொத்த இறப்புகளில் 25 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம்வரையிலான மரணங்கள் இதயநோய் பாதிப்புகளாலேயே ஏற்படுகின்றன. திடீரென மரணமடையும் 50 சதவிகிதம் பேர் இதயம் தொடர்பான நோய்களால்தான் (Sudden Cardiac Death) இறக்கிறார்கள். சில மேற்கத்திய நாடுகளின் புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுக்கு 3.90 லட்சம் பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே இறந்துபோகிறார்கள். இரண்டு லட்சம் பேர் மருத்துவமனைகளில் இறந்துபோகிறார்கள். இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் முதல் அறிகுறியை உணர்ந்தநிலையிலேயே இறந்து போகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது கொடுமை. 

இதயம் நலமா?

``இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாக, இதயம் குறித்த சில அடிப்படையான விஷயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் இதயநோய் மருத்துவர் ராஜேஷ்குமார்.

இதயம் நலமா?
இதயம் நலமா?

இதயம்

இதயத்தில் வலதுபுறம் இரண்டு, இடதுபுறம் இரண்டு என நான்கு அறைகள் உள்ளன. அவை, ‘வலது ஆரிக்கிள்’, ‘வலது வென்ட்ரிக்கிள்’, ‘இடது ஆரிக்கிள்’, ‘இடது வென்ட்ரிக்கிள்’ என அழைக்கப்படுகின்றன. ‘வலது ஆரிக்கிள்’, ‘இடது ஆரிக்கிள்’ ஆகிய இரண்டும், இரண்டு முதல் நான்கு சென்டிமீட்டர் அளவே இருக்கும் சிறிய, மெல்லிய அறைகள். இந்த அறைகள் ரத்தத்தைக் கடத்த மட்டுமே உதவிபுரியும். அதே நேரம், வலது வென்ட்ரிக்கிள் மற்றும் இடது வென்ட்ரிக்கிள் ஆகிய இரண்டும் ரத்தத்தை பம்ப் செய்யும் அளவுக்கு கனமான அறைகளைக்கொண்டவை. 

இதயம் நலமா?

தலை, கைகால் போன்ற உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வலது ஆரிக்கிள் பகுதிக்கு முதலில் அசுத்த ரத்தம் வருகிறது. அங்கிருந்து வலது வென்ட்ரிக்கிளைச் சென்றடைகிறது. வலது வென்ட்ரிக்கிள் பகுதியில் ரத்தம் பம்ப் செய்யப்பட்டு, நுரையீரலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, ரத்தத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு அனைத்தும் நீங்கி, புதிய ஆக்சிஜன் ரத்தத்துடன் கலப்பதால், ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இந்தப் புதிய ரத்தம் இடது ஆரிக்கிள் வழியாக, இடது வென்ட்ரிக்கிளுக்குச் செல்கிறது. அங்கிருந்து ரத்தம் பம்ப் செய்யப்பட்டு, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் செல்கிறது. ஆரிக்கிள்கள் மற்றும் வென்ட்ரிக்கிள்களுக்கு தேவையான  ரத்தத்தை ‘கரோனரி தமனி’ (Coronary Artery) கொண்டு செல்கிறது. 

இதயம் நலமா?

இந்த நான்கு அறைகளும் சீராக ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதயம் சரியாக இயங்கும். ஒரு முறை ரத்தத்தைச் சுத்திகரித்து, நல்ல ரத்தத்தை உடல் உறுப்புகளுக்குக் கொண்டு செல்ல, சரியாக ஒரு நொடிக்கும் குறைவான நேரமே (0.80 விநாடி) ஆகும். இதையே நாம் இதயத்துடிப்பு (Pulse) என்கிறோம். இந்தச் செயல்பாடுகள் நடைபெற இதயத்துக்குள் ஒரு மின்னோட்டம் (Electrical Activity) நிகழும். இதயத்தில் நான்கு அறைகள் இருப்பதுபோல நான்கு வால்வுகளும் இருக்கின்றன. இதயத்தின் பாகங்கள் பற்றித் தெரிந்துகொண்டோம். அடுத்ததாக, இதயம் தொடர்பான நோய்கள் எப்படி உருவாகின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இதயம் நலமா?

வலது ஆரிக்கிள்

உடல் உறுப்புகளிலிருந்து அசுத்த ரத்தத்தை வலது ஆரிக்கிளுக்குக் கொண்டுவருபவை ‘சுப்பீரியர் வேனா காவா’ (Superior vena cava), ‘இன்ஃபீரியர் வேனா காவா’  (Inferior vena cava) எனப்படும் ரத்த நாளங்கள்தாம். இவற்றைச்  சுருக்கமாக எஸ்.வி.சி., ஐ.வி.சி என்று சொல்லலாம். உடலின் மேற் பகுதியிலிருந்து எஸ்.வி.சியும், கீழ்ப் பகுதியிலிருந்து ஐ.வி.சியும் ரத்தத்தைக் கொண்டு வருகின்றன. இந்த இரண்டு ரத்த நாளங்களில் ஏதேனும் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டால் முக வீக்கம், கைகால்களில் நரம்பு புடைத்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

இதயம் நலமா?

வலது ஆரிக்கிளுக்கு வரும் அசுத்த ரத்தம், அங்கிருந்து வலது வென்ட்ரிக்கிளுக்குக் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றுவிட வேண்டும். அதற்கு இதயத்திலுள்ள மின்னோட்டம் சரியாக இருக்க வேண்டும். அதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு காலதாமதம் ஏற்பட்டால், இதயம் சீராக இயங்காது. படபடவென்று துடிக்க ஆரம்பித்துவிடும். இது வயதானவர்களுக்கு மட்டுமே அதிகமாக ஏற்படும். 

இதயம் நலமா?

இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும். அதிகபட்சம் 100 முறை துடிக்கலாம். இதற்குக் குறைவாகத் துடித்தாலோ, அதிகரித்தாலோ  பிரச்னைகள் ஏற்படும். ‘அட்ரியல் ஃபிப்ரிலேஷன்’ (Atrial Fibrillation) என்னும் இந்தப் படபடப்பானது  மிகவும் கொடுமையான ஒரு நோய். ஆனால், அறிகுறிகள் சாதாரணமாகவே இருக்கும்.  இந்த பாதிப்பால் இதயத்தில் ரத்தம் தேங்கி, ரத்தக்கட்டியாக மாற வாய்ப்பிருக்கிறது. அதனால் இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். குறிப்பாக, மூளைக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் போவதால் பக்கவாதம் ஏற்பட்டு, உடலுறுப்புகள் செயலிழந்து, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வயதானவர்களுக்கு அடிக்கடி படபடப்பு ஏற்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது.

இதயம் நலமா?

இதயம் துடிப்பதற்குத் தேவையான மின்னோட்டம், வலது ஆரிக்கிளிலுள்ள  ‘சைனஸ் நோடு’ (Sinus node) பகுதியில் உருவாகிறது. அதுவே இதயத்தின் இயற்கையான பேஸ்மேக்கராகச் செயல்படுகிறது. சைனஸ் நோடில் ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது, இதயத்துடிப்பில் பாதிப்பு ஏற்படும். ஆகவேதான் செயற்கை பேஸ்மேக்கர் கருவி பொருத்தவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதில் தற்காலிகமாக வெளியே பொருத்திக்கொள்ளும் ‘எக்ஸ்டர்னல் பேஸ்மேக்கர்’, நிரந்தரமாக உள்ளேவைத்து அறுவை சிகிச்சை செய்துகொள்ளக்கூடிய ‘இன்டர்னல் பேஸ்மேக்கர்’ என இரண்டு வகைகள் உள்ளன.

இதயம் நலமா?

வலது வென்ட்ரிக்கிள்

வலது ஆரிக்கிளில் இருந்து வரும் அசுத்த ரத்தம் ‘ட்ரைகஸ்பிட் வால்வு’  (Tricuspid valve) வழியாக வலது வென்ட்ரிக்கிளுக்கு வருகிறது. இந்த வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. வலது வென்ட்ரிக்கிளில் பம்ப் செய்யப்படும் ரத்தம், பல்மனரி வால்வு வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்த வால்வில் அடைப்போ, கசிவோ ஏற்பட்டால் அடிக்கடி மூச்சு வாங்கும். இதயம் ஒரு பக்கமாக வீங்கிக்கொள்ளும். 

இதயம் நலமா?

நுரையீரலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும், வலது வென்ட்ரிக்கிள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.  காசநோய் போன்ற பாதிப்பு இருந்தால் வலது வென்ட்ரிக்கிள் பாதிக்கப்படலாம். இது தவிர, பல்மனரி தமனியில் (Pulmonary
Artery) ரத்த அழுத்தம் ஏற்பட்டாலும், வலது வென்ட்ரிக்கிள் நேரடியாக பாதிக்கப்படும். நாள்பட நாள்பட இடது வென்ட்ரிக்கிளும் பாதிக்கப்பட்டு, இதயச் செயலிழப்பு ஏற்பட வாய்பிருக்கிறது. வலது வென்ட்ரிக்கிளுக்கு வரும் மின்னூட்டங்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், ‘ரைட் பண்டில் பிராஞ்ச் பிளாக்’ (Right Bundle Branch Block) ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இதயம் நலமா?

இது பயப்படக்கூடிய பாதிப்பல்ல. வயதாகும்போது இயல்பாகவே இந்த அடைப்பு ஏற்படும். சில நேரங்களில் இந்த அடைப்பு திடீரென்று ஏற்படும். அது கண்டிப்பாக ஏதோவொரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவரைச் சந்தித்து ஈ.சி.ஜி சோதனை செய்தால், அது எதனால் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்ப மருத்துவர் தேவையான சிகிச்சைகள் வழங்குவார்.

இதயம் நலமா?

இடது ஆரிக்கிள்

வலது ஆரிக்கிளும் இடது ஆரிக்கிளும் ஒரே மாதிரியாக, ஒரே நேரத்தில் வேலை செய்யக்கூடியவையே. நுரையீரலிலிருந்து இங்குதான் நல்ல ரத்தம் வரும். இங்கேயும் ‘அட்ரியல் ஃபிப்ரிலேஷன்’ என்று சொல்லப்படும் இதயம் சீரற்ற முறையில் துடிக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ‘பல்மனரி வெயின் அப்லேஷன்’ (Pulmonary Vein Ablation) என்னும் சிகிச்சை மூலம் இந்தப் பிரச்னையைச் சரிசெய்யலாம். மேலும், இடது ஆரிக்கிளில் ஒட்டியிருக்கும் ‘அப்பண்டேஜ்’ (Appendage) என்ற சிறு தசையில் ஏற்படும் கோளாறால் பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ‘அட்ரியல் ஃபிப்ரிலேஷன்’ காரணமாக ஏற்படும் ரத்தக்கட்டிகளும் இங்குதான் உண்டாகின்றன. அறுவை சிகிச்சை மூலம் இந்தத் தசைகளை நீக்கவோ, அடைத்துவிடவோ முடியும்.

இதயம் நலமா?

இடது வென்ட்ரிக்கிள்

இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் மிக முக்கியமானது இடது வென்ட்ரிக்கிள்தான். மற்ற அறைகளைவிட மிகவும் தடிமனானது இந்த அறை. இங்கிருந்துதான் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் நல்ல ரத்தம் செல்கிறது. அதுபோல இந்த அறையில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதிகமான பாதிப்புகள் உண்டாகும். உதாரணமாக, இடது வென்ட்ரிக்கிளில் ஏற்படும் அடைப்புதான் மாரடைப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது. இதயச் செயலிழப்பும் (Heart Failure) பெரும்பாலும் இடது வென்ட்ரிக்கிளில்தான் ஏற்படும். இந்த அறைக்குத் தேவையான மின்னூட்டம், ‘லெஃப்ட் பண்டில் பிராஞ்ச் (Left Bundle Branch) வழியாகச் செல்கிறது.

இதயம் நலமா?

பெரிகார்டியம்

இதயத்தில் உள்ள நான்கு அறைகளும் `பெரிகார்டியம்’ என்னும்  பெரிய அறைக்குள்தான் இருக்கின்றன. நான்கு அறைகளுக்கும் இதுதான் பாதுகாப்பு அறை. பெரிகார்டியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இதயச் செயலிழப்பு உண்டாகும். சில நேரங்களில் ஏதேனும் தொற்று காரணமாக `பெரிகார்டியம்’ மிகவும் தடிமனாக மாறிவிடும்.  இதயத்தைச் சுருங்கி விரிய விடாது. அதற்கு ‘கன்ஸ்ட்ரிக்டிவ் பெரிகார்டைட்டிஸ்’
(Constrictive Pericarditis) என்று பெயர். அதேபோல சில நேரம் பெரிகார்டியத்துக்குள் ரத்தமோ, சீழோ செல்வதால் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில நேரம் பெரிகார்டியத்தையே நீக்கும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இதயத்தையும் நுரையீரலையும் பிரிக்கும் மிக முக்கியப் பகுதியாக பெரிகார்டியம் செயல்படுகிறது.

இதயம் நலமா?

இதயத்தில் துளைகள்

இரு ஆரிக்கிள்களுக்கு இடையேயிருக்கும் வால்வில் ஏதேனும் துளைகள் இருந்தால், அவற்றை ‘அட்ரியல் செப்டல் டிஃபெக்ட்’ (Atrial Septal Defect-ASD) என்பார்கள். அதுபோல இரு வென்ட்ரிக்கிள்களுக்கு இடையே ஏதேனும் துளைகள் இருந்தால் அவற்றை ‘வென்ட்ரிகுலர் செப்டல் டிஃபெக்ட்’ (Ventricular Septal Defect) என்பார்கள். இப்படித் துளைகள் இருந்தால், சுத்த ரத்தமும் அசுத்த ரத்தமும் கலந்து பல்வேறுவிதமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதயத்தில் ஏற்படும் அத்தனைத் துளைகளையும் அடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. காலப்போக்கில் சில துளைகள் தாமாகவே சரியாகிவிடும். துளைகளின் தன்மையைப் பொறுத்து, அவற்றை அடைக்க வேண்டுமா, தாமாகவே சரியாகிவிடுமா என்பதை இதய நிபுணர்கள் முடிவுசெய்வார்கள்.

இதயம் நலமா?

இந்தப் பிரச்னையைக் குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே கண்டறிந்துவிட்டால் சரிசெய்வது எளிது. கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பிற்காலத்தில் இதயச் செயலிழப்பு உண்டாகி, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மூச்சுவாங்குதல், படபடப்பு, வளர்ச்சிக் குறைபாடு, குழந்தைகளின் நெஞ்சில் வித்தியாசமான ஒலி கேட்பது போன்றவை இதயத்தில் துளை இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, அத்தகைய அறிகுறிகள் காணப்படும் குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் கூட்டிச் செல்லவேண்டும்.

இதயம் நலமா?

மாரடைப்பு

இதயம் தொடர்பான பாதிப்புகளில் முதன்மையாக இருப்பது மாரடைப்பு. உலகளவில் மனித இறப்புக்கான மிக முக்கியக் காரணியாக இருப்பதும் மாரடைப்புதான். மரபணு மூலமாகவும், உடலில் அதிகக் கொழுப்பு சேர்வதன் காரணமாகவும், புகைபிடித்தல் போன்ற  பழக்கங்களாலும் மாரடைப்பு ஏற்படலாம். வயது மூப்பு காரணமாகவும் சிலருக்கு ஏற்படும்.

இதயம் நலமா?

இதயத்தில் உள்ள கரோனரி தமனியில் (Coronary Artery) வலதுபுறத்தில் ஒன்று, இடதுபுறத்தில் இரண்டு என மொத்தம் மூன்று ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இந்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான் மாரடைப்பு உண்டாகிறது.  கொழுப்பு மற்றும் கால்சியம், ரத்தக்குழாயில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து ஒரு கட்டத்தில் முழுமையடைந்து ரத்தக்குழாயை அடைத்துவிடும். அப்போது நெஞ்சுவலி உண்டாகி, உயிரிழப்பு ஏற்படுகிறது. வலதுபுறத்திலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது ‘இன்ஃபீரியர் மையோகார்டியல் இன்ஃபார்க்‌ஷன் (Inferior Myocardial Infarction) என்றும், இடதுபுறத்தில் அடைப்பு ஏற்படுவது ‘ஆன்டீரியர் மையோகார்டியல் இன்ஃபார்க்‌ஷன்’ (Anterior Myocardial Infarction) என்றும் அழைக்கப்படுகின்றன.

இதயம் நலமா?

மாரடைப்பின் அறிகுறியாக முதலில் நெஞ்சுவலிதான் ஏற்படும். உடனே மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். நெஞ்சுவலி எதனால் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஈசிஜி கருவி உதவியுடன் மருத்துவர்கள் கண்டறிவார்கள். மாரடைப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளை வழங்குவார்கள். தொடக்கநிலையில் இருந்தால் மாத்திரை, மருந்துகள் மூலம் சரிசெய்துவிடலாம். மருத்துவரின் ஆலோசனைகளைச் சரியாகப் பின்பற்றினால் உயிரிழப்பிலிருந்து தப்பிக்கலாம்.

இதயம் நலமா?

ஒருவேளை 100 சதவிகிதம் அடைப்பு இருப்பது தெரியவந்தால் ரத்தக்கட்டியை ஊசிகள் மூலம் கரைப்பதா அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை மருத்துவர்கள் முடிவுசெய்வார்கள். ரத்தத்தை இதயத்துக்குக் கொண்டு செல்ல நம் உடலில் இயற்கையாகவே ஒரு பைபாஸ் (Collateral) வசதி இருக்கிறது. அதன் மூலம் ரத்தம் சிறிது நேரம் இதயத்துக்குச் செல்லும். அதற்குள் போதுமான சிகிச்சை அளித்து, ரத்த அடைப்பைச் சரிசெய்து, இதயத் தசைகள் பாதிக்கப்படாமல் காத்துக்கொள்ளலாம். 

இதயம் நலமா?

மாரடைப்பால் இறப்பவர்கள் பெரும்பாலும் மருத்துவமனைகளைச் சென்றடைவதற்கு முன்னரே இறந்துபோகிறார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். அதற்குக் காரணம், லேசாக வலி வரும்போது அலட்சியமாக இருப்பதுதான். அதனால் லேசாக நெஞ்சு வலிப்பது தெரிந்தாலும், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

இதயம் நலமா?

திடீர் மாரடைப்பு மரணம் (Sudden Cardiac Death)

1,000 பேர்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உலகளவில் ஏற்படும் இயற்கை மரணங்களில் 12 முதல் 15 சதவிகிதம் பேர் இந்த திடீர் மாரடைப்பு மரணத்தால் உயிரிழக்கிறார்கள். இந்த பாதிப்பு ஏற்பட்டால், ஒரு மணி நேரத்துக்குள் உயிரிழப்பு நிச்சயம். இதய வால்வுகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இதயச் செயலிழப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படும். இது தவிர அதிகமாக உடற்பயிற்சி (வார்ம்அப் எடுத்துக் கொள்ளாமல்) செய்பவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும். திடீரென்று படபடப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகள். மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் உயிர் பிரிந்துவிடும். அதனால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.

இதயம் நலமா?

இதயப் படபடப்பு (Arrhythmia)

இதயப் படபடப்பில் தீவிரமானநிலை, மிதமானநிலை என இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஏற்கெனவே இதயப் பிரச்னை இருப்பவர்களுக்கு தீவிர, படபடப்பான  ‘வென்ட்ரிக்குலர் அரித்மியா’ (Ventricular Arrhythmia) என்னும் பாதிப்பு ஏற்படும். மாரடைப்பு பாதிப்பால் உயிரிழப்பவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு மேல் இதனால்தான் உயிரிழக்கிறார்கள். ‘டீஃபிப்ரிலேஷன்’  (Defibrillation) என்ற கருவி மூலம் இந்த பாதிப்பைச் சரிசெய்யலாம். 

இதயம் நலமா?

‘சுப்ராவென்ட்ரிக்குலர் அரித்மியாஸ்’ (Supraventricular Arrhythmias) என்ற ஒரு பிரச்னை இருக்கிறது. இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும். இது குழந்தைகள், பெண்கள் என அனைத்து வயதினருக்கும் ஏற்படும். கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்து, தண்ணீர் குடித்தால் சிலருக்குத் தானாகவே இந்த பாதிப்பு சரியாகிவிடும். அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். 

இதயம் நலமா?

இதயத்திலுள்ள மின் இணைப்புகளில் ஷார்ட் சர்க்யூட் பாதிப்பு ஏற்பட்டால், படபடப்பு ஏற்படும். அதைச் சரிசெய்துவிட்டால் படபடப்பு நின்றுவிடும். ‘ரேடியோ அலைவரிசை சிகிச்சை’ (Radio Frequency Ablation) என்னும் நவீன சிகிச்சை முறை ஒன்று தற்போது வந்திருக்கிறது. அதன் மூலம் ஷாக் கொடுத்து இந்த பாதிப்பைச் சரிசெய்யலாம்.

இதயம் நலமா?

பெண்களுக்கு உண்டாகும் மாரடைப்பு

மாரடைப்பு, பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் ஏற்படும் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. இப்போது அந்தநிலை மாறிவிட்டது. `ஸ்பான்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்‌ஷன்’ (Spontaneous Coronary Artery
Dissection- SCAD) எனப்படும் இதய பாதிப்பு, 30 வயது முதல் பெண்களை பாதிக்கிறது. பொதுவாக, மாரடைப்பு ஏற்படுவதற்குச் சொல்லப்படும் காரணங்களான மரபணுக் கோளாறு, புகைபிடித்தல், உடலில் அதிகக் கொழுப்பு சேருதல் போன்றவை இல்லாமலேயே இந்த பாதிப்பு உண்டாகிறது. 

இதயம் நலமா?

உயர் ரத்த அழுத்தம், ரத்தக்குழாயிலுள்ள செல்களின் சீரற்ற வளர்ச்சி, செயற்கைக் கருத்தரிப்புக்காக அதிக ஹார்மோன் ஊசிகள் போட்டுக்கொள்வது, திடீரென்று கடினமான வேலையைச் செய்வது, மனஅழுத்தம் போன்றவை இந்த வகை மாரடைப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தேவையற்ற மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதன் மூலம் இது வராமல் தடுக்க முடியும்.

இதயம் நலமா?

வருமுன் காத்தல்

40 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை அல்லது இதயப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்துகொள்ள வேண்டும். மரபணுரீதியாக இந்த பாதிப்பு தொடர்ந்துவந்தால், 30 வயதிலேயே பரிசோதனை செய்ய வேண்டும். ஈ.சி.ஜி., எக்கோ, ட்ரெட்மில் சோதனைகள் மூலமும் இதயத்தைப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

இதயம் நலமா?

முதலுதவி சிகிச்சைகள்

மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஏ.ஈ.டி (Automated External Defibrillators) எனப்படும் முதலுதவிக் கருவி வைக்கப்பட்டிருக்கும். திடீர் மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில் அந்தக் கருவியின் உதவியோடு உடனடியாக முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இது பற்றி எல்லோருமே தெரிந்துவைத்திருக்க வேண்டும். இது தவிர, சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation) எனப்படும் அவசர முதலுதவி சிகிச்சை முறையை உடனே அளிக்க வேண்டும். 

இதயம் நலமா?

இந்தச் சிகிச்சை குறித்து அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அடுத்ததாக உடனடி மருத்துவ உதவி மிகவும் அவசியம். பாதிப்படைந்தவுடனேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், உயிரைக் காப்பாற்றிவிடலாம். திடீர் மாரடைப்பு ஏற்படுபவர்களில் ஒன்பது சதவிகிதம் பேர் மட்டுமே காப்பாற்றப்படுகிறார்கள் என்பது வேதனை தரும் செய்தி.

இதயம் நலமா?

வராமல் தடுப்பது எப்படி?

மாறிவிட்ட உணவுப் பழக்கத்தின் காரணமாகத்தான் அதிகளவில் இதய பாதிப்புகள் உண்டாகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுவதும் ஒரு காரணம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் உணவுகளில் சேர்த்துக்கொண்ட உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் அளவுக்கும், இப்போது சேர்த்துக்கொள்ளும் அளவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையில் அதிகமாகத்தான் சேர்த்துக்கொள்கிறோம். இவற்றைத் தவிர்த்தால் அல்லது மிகக் குறைவாகச் சேர்த்துக்கொண்டாலே இதய பாதிப்புகளிலிருந்து தப்பித்துவிடலாம்.

இதயம் நலமா?

அசைவ உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகளைச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது வளரிளம் பருவத்தினருக்கே  உடல் பருமன் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் சிறு வயதிலேயே கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இதயம் நலமா?

உடற்பயிற்சிகள் மிகவும் இன்றியமையாதவை. வேகமான நடைப்பயிற்சி போன்ற ஏரோபிக்ஸ் பயிற்சிகள் நம்மை இதய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும். இவை தவிர யோகா பயிற்சிகள் செய்தால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும். இதயப் பிரச்னைகள் ஏற்படாது.

- இரா.செந்தில்குமார்

இதயம் நலமா?

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.