Published:Updated:

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்
டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்

சுந்தரராஜன், நுரையீரல் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

பிரீமியம் ஸ்டோரி

னிதகுலத்துக்கு சவாலாக விளங்கும் நோய்களில் ‘க்ரானிக்’ (Chronic) எனப்படும் நாள்பட்ட நோய்கள் பிரதானமானவை. மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் பிரச்னைகளைத்தான் ‘க்ரானிக்’ என்று வகைப்படுத்துகிறார்கள். இந்த வகை நோய்களுக்கு முக்கியமான உதாரணம், சுவாசக் கோளாறால் ஏற்படும் ஆஸ்துமா. ஆஸ்துமாவைப் பற்றி நிறைய மூடநம்பிக்கைகள் உண்டு. இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். 

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்

ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன... அறிகுறிகள் என்னென்ன... வராமல் தடுப்பது எப்படி?

நுரையீரல் சிறப்பு மருத்துவர் சுந்தரராஜன் விரிவாக விளக்குகிறார்.

“ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள். இது மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்னை என்பதால், நேரடியாக அவற்றுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். ஆகவேதான் ஆஸ்துமாவைப் பொறுத்தவரை, மாத்திரைகளுக்குப் பதில் இன்ஹேலர் மூலம் மருந்து உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும்போல சில பக்கவிளைவுகள் இருக்கின்றன. மாத்திரை வடிவில் அந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து, பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்ஹேலர் வழியாக உறிஞ்சும்போது, மருந்து நேரடியாக நுரையீரலைச் சென்றடையும் என்பதால், பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்பரிசோதனைகள்

பாதிக்கப்பட்டவருக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றன, மூச்சுத்திணறல் தொந்தரவின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது, இருமல் இருக்கிறதா, நெஞ்சு இறுக்கம் காணப்படுகிறதா, தொடர்ச்சியாகப் பேசுவதில் சிக்கல் இருக்கிறதா, குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் ஆஸ்துமா தொந்தரவு இருந்திருக்கிறதா போன்ற தகவல்கள் முதலில் பெறப்படும். தொடர்ந்து, எந்தெந்தச் சூழலில் மேற்கூறிய அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருக்கின்றன என்று பார்க்கப்படும். உதாரணமாக இரவு அல்லது அதிகாலை நேரங்களிலோ, அதிகப் புகையை சுவாசிக்கும்போதோ, செல்லப்பிராணிகளுடன் விளையாடும்போதோ, அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகும்போதோ மூச்சுத்திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் ஆஸ்துமா பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்

அடுத்தகட்டமாக, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (Lung Function Test) செய்யப்படும். குறிப்பாக, `பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ (Pulmonary Function Test) செய்யப்படும். ‘மெத்தகோலின் சேலஞ்ச் டெஸ்ட்’ (Methacholine Challenge Test), ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) இயந்திரப் பரிசோதனை, பீக் ஃப்ளோ போன்றவற்றையும் செய்ய வேண்டும். மூச்சுக்குழாயின் சுவாசப்பாதையில் எந்தளவுக்கு பாதிப்பு அல்லது அடைப்பு உள்ளது என்பது இவற்றின் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கேற்றவாறு மருந்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டு இன்ஹேலர் அளிக்கப்படும்.

ஆஸ்துமாவைக் கட்டுக்குள்வைத்திருக்க...

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, அந்தக் காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. அவற்றை முறையாக உட்கொண்டால், பிரச்னைகள் ஏற்படாது. 

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்

தினமும் சரியான அளவு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, காலத்துக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும் என்பதால், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஆஸ்துமா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தங்களுக்கு எத்தகையச் சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம். எனவே, எத்தகையச் சூழலிலும் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.

ஆஸ்துமாவின் மூன்று நிலைகள்

Well Controlled Asthma: முறையாக மாத்திரைகள் சாப்பிட்டு, நுரையீரல் மற்றும் மூச்சுத்திணறல் தொந்தரவுகள் இன்றி இருக்கும் நிலை .

Partially Controlled Asthma: பருவ மாற்றங்கள் ஏற்படும்போது, தொற்று பாதிப்புகள் அதிகரித்து உடல்நலம் மோசமடையும் நிலை.

Poorly Controlled Asthma: இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் ஆஸ்துமா பிரச்னை மிக அதிகமாகத் தெரியும் நிலை. ஆஸ்துமா இருப்பவர்கள் இந்த அடிப்படைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் சுந்தரராஜன்.

குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமா பாதிப்புகளைக் கண்டறிவது எப்படி? 

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்

“குழந்தைகளின் ஆஸ்துமா பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது மிகவும் சவாலானது” என்கிற குழந்தைகளுக்கான நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஆயிஷா, இது குறித்து விரிவாக விளக்குகிறார்.

 “குழந்தைகளைப் பொறுத்தவரை அறிகுறிகள் மூலமாகத்தான் பாதிப்பின் தன்மையைக்  கண்டறிய வேண்டும். அதனால் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.

முக்கியமான அறிகுறிகள்

இரவு நேரத்தில் அளவுக்கதிகமாக இருமல், அடிக்கடி சளித்தொந்தரவு, நெஞ்சுப்பகுதியில் சளி அடைத்துக்கொண்டு மூச்சுவிடுவதில் சிரமம், அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுவது, விளையாடி முடித்த பிறகோ, ஓடி வந்த பிறகோ அதிகம் மூச்சுவாங்குதல்.

குறிப்பிட்ட ஏதோவொரு நேரத்தில் மேற்கூறிய அறிகுறிகள் தீவிரமாகத் தெரியலாம். ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, மாசு காரணமாக ஏற்படும் ஒவ்வாமைதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முடிந்தவரை குழந்தையை அதிக மாசு மற்றும் புகை நிறைந்த சூழலில் விடாமல் இருப்பது நல்லது. சில குழந்தைகளுக்கு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அத்தகைய ஒவ்வாமைப் பிரச்னைகள் பெரும்பாலும் குழந்தையின் வளரிளம் பருவத்தில் சரியாகிவிடக்கூடும். ஒவ்வாமை தீவிரமாக இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்

குழந்தைகளுக்கென பிரத்யேகமாக திறன் வாய்ந்த இன்ஹேலர் வகைகள் இருக்கின்றன. எனவே, பயமின்றி இன்ஹேலர் பயன்படுத்தலாம். குடும்பப் பின்னணியில் ஆஸ்துமா பாதிப்பிருக்கும் குழந்தைகள், சுற்றுச்சூழல் கேடு அதிகம் உள்ள பகுதியில் வளரும் குழந்தைகள், அதிக ஒவ்வாமை பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படிப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்கிறார் ஆயிஷா. 

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்

ஆஸ்துமா ஏற்படுத்தும் ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கான சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரனிடம் ஆஸ்துமாவை அதிகப்படுத்தும் சூழல்கள் (Asthma Triggers) குறித்தும், அவற்றைத் தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கேட்டோம்.

“ஆஸ்துமா என்ற இந்த நாள்பட்ட நோய், மூச்சுக்குழாயில் சுருக்கம் மற்றும் வீக்கத்தைக் கொடுத்து, சளியை உருவாக்கும். அதனால் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் தொந்தரவு அதிகமாகும். தொடர்ந்து, மூச்சு விடும்போது விசில் சத்தத்தைக் ஏற்படுத்தும். ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட, எந்த வயதுக் கட்டுப்பாடும் கிடையாது. எந்த வயதிலும் பாதிப்பு ஏற்படலாம். அதே நேரம், ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், சரியான மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். ஆஸ்துமாவில் நிறைய வகைகள் இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இரண்டு வகைகள், வெளிப்புற காரணிகளால் ஏற்படும் ஆஸ்துமா (Extrinsic) மற்றும் இயல்பிலேயே இருக்கும் உடல் சார்ந்த பிரச்னைகளால் (Intrinsic) ஏற்படும் ஆஸ்துமா. முதல் வகை, ஒவ்வாமையால் ஏற்படக்கூடியது. சுவாசம், உணவு, சுற்றியிருக்கும் பொருள்கள் என எதன் வழியாக வேண்டுமானாலும் இவ்வகை ஒவ்வாமை ஏற்படலாம். இரண்டாவது வகை, மரபணு காரணமாக ஏற்படும் பாதிப்பு. குழந்தைப் பருவத்திலேயே ஏற்படும் ஆஸ்துமா பாதிப்புகள், இந்த வகையைச் சேர்ந்தவை.

ஆஸ்துமாவை அதிகரிக்கும் சூழல்கள்

வீட்டினுள்ளேயே இருக்கும் பொருள்கள் மூலம் ஏற்படும் ஒவ்வாமைப் பிரச்னைகள் (Indoor  Triggers), வெளியிடங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் ஒவ்வாமைப் பிரச்னைகள் (Outdoor Triggers), வேலை செய்யும் இடத்திலுள்ள சூழல் காரணமாக ஏற்படும் ஒவ்வாமைப் பிரச்னைகள் (Occupational Triggers) என ஆஸ்துமா அதிகரிக்கும் சூழல்களில் மூன்று முக்கியமான வகைகள் இருக்கின்றன.

வீட்டினுள்ளேயே ஒவ்வாமை அதிகரிக்கும் சூழலுக்கான உதாரணங்கள்

* கரப்பான், கொசு போன்ற பூச்சிகளை அழிக்க உபயோகப்படுத்தும் மருந்துகளிலிருந்து வெளிவரும் ரசாயனங்கள்.

* செடி கொடிகளில் உள்ள மகரந்தம்.

*
ஈரக்கசிவில் இருக்கும் பாசி மற்றும் காளானின் நுண்ணிய துகள்கள்.

பொதுவாக, ஒவ்வாமைப் பிரச்னையை ஏற்படுத்துவதில், மிக முக்கியமானது டஸ்ட் மைட் (Dust Mite) என்ற உண்ணி வகைகள்தாம். அளவில் மிகவும் சின்னதாக இருக்கும் இந்த உண்ணி, புரதம் ஒன்றைக் கழிவுப் பொருளாக வெளியேற்றும். ஆஸ்துமா நோயாளிகள் அவற்றை சுவாசிக்க நேர்ந்தால், அவை மூச்சுக்குழாய்க்குள் சென்று அங்கு தீவிரமான ஒவ்வாமையை ஏற்படுத்தும். அன்றாடம் வீட்டில் உபயோகப்படுத்தும் படுக்கை விரிப்பு, தலையணை உறைகள், போர்வை, துணியால் செய்யப்பட்ட பொம்மைகளில்தான் இந்த உண்ணிகள் அதிகம் இருக்கும். இப்படி அடிப்படையான, அத்தியாவசியமான பொருள்களிலேயே உண்ணிகள் இருப்பதால், இவற்றை ‘யுனிவர்சல் அலெர்ஜன்’                  (Universal Allergen) என்றும், ‘டஸ்ட் மைட்ஸ்’ (Dust Mites) என்றும் குறிப்பிடுவோம்.

.வெளியிடங்களில் பரவும் ஒவ்வாமை அதிகரிக்கும் சூழலுக்கான உதாரணங்கள்

சிகரெட் புகை, மரங்களிலுள்ள மகரந்தங்கள், வாகனப் புகை, பருவநிலை மாற்றங்கள், மரம் அல்லது குப்பைகளை எரித்தால் அதிலிருந்து வெளியேறும் புகை, காற்றிலிருக்கும் சில பூஞ்சைத் தொற்றுகள்.

வேலை செய்யும் இடத்தில் ஒவ்வாமையை அதிகரிக்கும் சூழலுக்கான உதாரணங்கள்

மர வேலை, கட்டட வேலை, துணி தொழிற்சாலை மற்றும் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலை போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு அங்கிருக்கும் சூழல், அங்கே உபயோகிக்கப்படும் ரசாயனங்கள் ஒவ்வாமைப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். எல்லா தொழிற்சாலைகளிலும், ஏதோவொரு புகை வெளிவருவதோ, மாசடைவதோ இயல்புதான். ஆனால், நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அவற்றை எதிர்கொள்ளும்போது பாதிப்புகள் அதிகரிக்கும். எனவே, ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் பணிபுரியும் இடங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சிலருக்கு `வீசிங்’ பிரச்னை இல்லாமல் இருமல் மட்டும் ஏற்படலாம். அது, `காஃப் வேரியன்ட் ஆஸ்துமா’ (Cough Variant Asthma) எனப்படுகிறது. இந்த பாதிப்புக்கு, `ஆன்டிபயாடிக்’ கொடுப்பது சரியான தீர்வல்ல. `வீசிங்’ பிரச்னை இல்லாததால், ஆஸ்துமா பாதிப்பாக இருக்காது என்று நினைத்து சிலர் இதன் தீவிரத் தன்மையை உணராமல் இருப்பார்கள். எனவே, தீவிரமான இருமல் மற்றும் மூச்சுக்குழாய் பிரச்னை ஏதேனும் இருப்பவர்கள் தாமதிக்காமல், சுய மருத்துவம் எதுவும் செய்யாமல் அதற்கான மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

அனைத்து வகை ஆஸ்துமா பாதிப்புகளுக்கும் சரியான சிகிச்சை, இன்ஹேலர் உபயோகம்தான். எனவே, ஆஸ்துமா நோயாளிகள், தடுப்பு மற்றும் நிவாரண மருந்துகொண்ட இன்ஹேலர் வகைகளை சரியான நேரத்தில், சரியான அளவில் உபயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்ஹேலர் உபயோகிக்கும்போது, அதிலிருக்கும் ஸ்டீராய்டு உடலைச் சென்றடையும் என்பதே பலருக்குமான பயம். அதனாலேயே அவற்றைத் தவிர்த்துவிட்டு, மருந்து அல்லது ஊசி மூலமாக சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். உண்மையில், மாத்திரைகள், மருந்துகள் உட்கொண்டால்தான் ஸ்டீராய்டு பாதிப்பு மற்றும் பக்கவிளைவுகள் மிக அதிகமாக இருக்கும்.

ஆஸ்துமா இருப்பவர்கள், வீடுகளில் கொசுவத்தி மற்றும் சாம்பிராணி பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உணவு தொடர்பான ஒவ்வாமை உள்ளவர்கள், வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செயற்கையான நிறங்கள் பயன்படுத்தப்படும் உணவு, துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும். ஒவ்வொருவருடைய உடலுக்கும், ஒரு வகைப் பொருள் ஒவ்வாமையை அதிகப்படுத்தும். அந்தச் சூழலை அறிந்துகொண்டு, முன்னெச்சரிக்கையாக அதைத் தவிர்த்துவிட வேண்டும். எத்தகையச் சூழலிலும், இன்ஹேலர் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கூடாது” என்கிறார் ஸ்ரீதரன்.

- ஜெ.நிவேதா

இன்ஹேலரில் இரண்டு வகைகள்

ரிலீவர்: ஆஸ்துமாவின் தீவிரம் அதிகரிக்கும்போது, மூச்சுவிட சிரமப்படவேண்டியிருக்கும். அதன் காரணமாக, ‘அக்யூட் ஆஸ்துமா அட்டாக்’ என்ற பாதிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட நேரங்களில், உடனடி தீர்வுக்காக ரிலீவர் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும்.  மருந்து உட்கொண்ட சிறிது நேரத்தில் இதன் தீவிரத் தன்மை குறைந்துவிடும். திடீரென அதிகரிக்கும் ‘ஆஸ்துமா அட்டாக்’ பிரச்னையைத் தற்காலிகமாகத் தடுப்பதற்கு மட்டுமே ரிலீவரைப் பயன்படுத்த வேண்டும். ‘ரிலீவர்’ வகை இன்ஹேலரை அதிகம் பயன்படுத்துவது, ஆபத்து.

கன்ட்ரோலர்: தினமும் எடுத்துக்கொள்ளும் `இன்ஹேலர்’ சிகிச்சை இது. ஆஸ்துமாவைக் கட்டுக்குள்வைத்திருக்க நினைப்பவர்கள், சரியான அளவில் இந்த வகை இன்ஹேலரைப் பயன்படுத்த வேண்டும். இவற்றின் தாக்கம், அதிகபட்சம் 12 மணி நேரம்வரை உடலில் இருக்கும். ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் இரண்டு முறையாவது இந்த வகை இன்ஹேலரைப் பயன்படுத்தவேண்டியிருக்கும்.

கர்ப்ப காலத்தில் ஆஸ்துமா

ர்ப்பமாக இருக்கும் பெண்களில் எட்டு சதவிகிதம் பேருக்கு அந்தக் காலகட்டத்தில் ஆஸ்துமா ஏற்படலாம். அந்த நேரத்தில், சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் பிரசவத்தின்போது உயர் ரத்தஅழுத்தப் பிரச்னை ஏற்படுவது, குறித்த நேரத்துக்கு முன்பே பிரசவவலி எடுப்பது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் இயல்பான சிக்கல்கள் என அனைத்தும் மிகத் தீவிரமாகலாம். எனவே, ஆஸ்துமா பிரச்னை உள்ள கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். 

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு