ஹெல்த்
Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 22வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

ய்ட்ஸ் என்பது, ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிப்பில் ஓர் உச்சநிலை. எய்ட்ஸ் இருக்கும் எல்லோருக்கும் ஹெச்.ஐ.வி இருக்கும்; ஹெச்.ஐ.வி இருக்கும் எல்லோருக்கும் எய்ட்ஸ் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எய்ட்ஸுக்கு அமெரிக்காவில் ஒரு வரையறை; ஐரோப்பாவில் வேறொரு வரையறை. அமெரிக்காவைப் பொறுத்தவரை சிடி4 அணுக்களின் எண்ணிக்கை 200-க்கும் கீழே சென்றால், அவர் எய்ட்ஸ் நோயாளி. அதற்குரிய சிகிச்சைகள், சலுகைகள் அவருக்கு வழங்கப்படும். ஐரோப்பாவில் சிடி4 எண்ணிக்கை எத்தனை என்பதையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை. ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்ட 15 பாதிப்புகளில் ஏதேனும் ஒன்றை எதிர்கொள்கிறார் என்றால் அவர் எய்ட்ஸ் கட்டத்தை அடைந்துவிடுகிறார்.

தொற்று நோய்களின் உலகம்!

ஹெச்.ஐ.வி பாதிப்பில் இரண்டு நிலைகள் உண்டு. ‘சிம்டமேட்டிக்’ (Symptomatic), ‘ஏசிம்டமேட்டிக்’ (Asymptomatic). ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட சிலருக்கு எந்த அறிகுறிகளுமே தோன்றாது. ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால், உடம்பில் ஹெச்.ஐ.வி வைரஸ் இருக்கும். இப்படி உடலில் வைரஸைச் சுமந்துகொண்டு எவ்வித பாதிப்புமில்லாமல் நெடுங்காலம் வாழ்ந்தவர்கள் உண்டு. அவர்கள் ‘ஏசிம்டமேட்டிக்’ பிரிவுக்குள் வருவார்கள். ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான பெரும்பாலானோருக்கு அவ்வப்போது காய்ச்சல், எடை குறைதல், வாயில் புண், அக்கி போன்றவை வரலாம். அவர்கள் ‘சிம்டமேட்டிக்’ பிரிவில் அடங்குவார்கள். ‘சிம்டமேட்டிக்’ பிரிவில் உள்ளவர்களுக்கு மேலும் சில பிரச்னைகள் ஏற்பட்டால், அவர்கள், ‘எய்ட்ஸ் நிலையை அடைந்துவிட்டார்கள்’ என்று பொருள்.

தொற்று நோய்களின் உலகம்!சிலருக்குக் கண்களை பாதிக்கக்கூடிய ‘டாக்ஸோப்ளாஸ்மோசிஸ்’ தொற்று (Toxoplasmosis) ஏற்படலாம். இது சாதாரண மனிதருக்கு வந்தால், ஐந்தாறு நாள்கள் காய்ச்சல் இருக்கும். நெறி கட்டிக்கொள்ளும். மூட்டுவலி இருக்கும். அதோடு தானாகவே சரியாகிவிடும். மருத்துவமே தேவையில்லை. இதே பாதிப்பு ஹெச்.ஐ.வி பாதித்தவருக்கு ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் மூளையில் கட்டி வந்துவிடும். இதை ‘செரிப்ரல் டாக்ஸோப்ளாஸ்மோசிஸ்’ (Cerebral Toxoplasmosis) என்போம். ஒரு ஹெச்.ஐ.வி நோயாளி இந்த பாதிப்புக்கு உள்ளானால் அவர் எய்ட்ஸ் நிலைக்கு வந்துவிட்டார் என்று பொருள். 

தொற்று நோய்களின் உலகம்!
தொற்று நோய்களின் உலகம்!

இதேபோல, கண்களைத் தாக்கும் ஒருவிதமான வைரஸ்... சி.எம்.வி - ‘சைட்டோமெகலாவைரஸ்’ (CMV - Cytomegalovirus). நம் நோய் எதிர்ப்பு சக்தியே இதை அழித்துவிடும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களை இந்த வைரஸ் தாக்கலாம். இந்த வைரஸ், ஹெச்.ஐ.வி நோயாளியைத் தாக்கினால் சி.எம்.வி ரெட்டினைட்டிஸ் (CMV Retinitis) என்ற பாதிப்பை உருவாக்கும். அந்த பாதிப்பை எட்டியவர், எய்ட்ஸ் கட்டத்தை  எட்டிவிடுவார். ஹெச்.ஐ.வி  பாதித்தவருக்கு உணவுக்குழாயில் பூஞ்சைத்தொற்று  ஏற்படுவதும் எய்ட்ஸ் நிலைக்கான அறிகுறி. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்குக் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்பட்டாலோ, ஹெச்.ஐ.வி பாதித்தவருக்கு ‘ஹெர்பிஸ்’ என்ற பால்வினை நோய் வந்து ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தாலோ அது எய்ட்ஸ் நிலை. ‘டிமென்ஷியா’ என்ற ஞாபகமறதிநோயால் ஹெச்.ஐ.வி தாக்குதலுக்குள்ளானவர் பாதிக்கப்பட்டால் அவர் எய்ட்ஸ் கட்டத்தை அடைந்துவிட்டார் எனக்கொள்ளலாம். இப்படி 15 விதமான பாதிப்புகளை வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சரி... எய்ட்ஸ் நிலை எப்படிப்பட்டது... எய்ட்ஸ் நிலை அடைந்தவர்களுக்கு என்ன தீர்வு?

- களைவோம்...