பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

எனக்குத் தைராய்டு பிரச்னை இருப்பது சமீபத்தில்தான் தெரியவந்தது. விரைவில் எனக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. தைராய்டு பிரச்னை இருப்பதால், கருவுறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா?

- சுகிர்தா, தேனி

கன்சல்ட்டிங் ரூம்

தைராய்டு பிரச்னை, ஒரு பெண்ணின் கருமுட்டை வெளியேற்றும் திறனை பாதிக்கக்கூடியது. எனவே, அது கருவுறுவதில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. தைராய்டு சுரப்பி, அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோனைச் சுரந்தால் ஹைப்பர்தைராய்டிஸமும், தேவைக்கும் குறைவாக தைராய்டு ஹார்மோனைச் சுரந்தால் ஹைப்போதைராய்டிஸமும் ஏற்படும். இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பிரச்னை என்பதைக் குறிப்பிடவில்லை. என்றாலும், இரண்டில் எந்த வகை தைராய்டு பிரச்னையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அது உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. முறையற்ற மாதவிடாய், கருவுறுதலுக்கான சாத்தியங்களைக் குறைக்கலாம். கவலைப்படத் தேவையில்லை. மருத்துவ ஆலோசனையின்படி மாத்திரை உட்கொள்வதன் மூலம் தைராய்டு சுரப்பைச் சமச்சீராக்கி, பிரச்னையிலிருந்து விடுபடலாம். தைராய்டு பிரச்னை கர்ப்பகாலத்திலும் சில பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதால், இதற்குத் தொடர் மருத்துவக் கண்காணிப்பு அவசியம்.

- எம்.இராதா, பொது மருத்துவர்

எனக்கு வயது 63. மெனோபாஸ் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த சில நாள்களாக எனக்கு வெள்ளைப்படுகிறது. ஆனால், துர்நாற்றம் எதுவும் இல்லை. என் பெரியம்மா ஒருவருக்கு இதே பிரச்னை இருந்து, அதை கவனிக்காமல் விட்டுவிட்டதால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கும் அப்படி ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன செய்வது?

- பி.ரத்தின மகேஸ்வரி, அருப்புக்கோட்டை

கன்சல்ட்டிங் ரூம்

மெனோபாஸ் முடிந்து பல வருடங்கள் கழித்து வெள்ளைப்படுகிறது என்றால், கர்ப்பப்பையில் ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம். ஆனால், துர்நாற்றம் எதுவும் வரவில்லை என்பதால் பயப்படத் தேவையில்லை. நீங்கள் உடனே, மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். அவர், கையுறை போட்டுக்கொண்டு பிறப்புறுப்பில் ஒரு பரிசோதனை செய்து பார்ப்பார். அதில் ஒரு பிரச்னையும் இல்லை என்றால், உங்களுக்கு 95 சதவிகிதம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இல்லை. நீங்கள் தைரியமாக இருக்கலாம். ஒருவேளை மீண்டும் வெள்ளைப்படுதல் ஏற்பட்டாலோ அல்லது அதனுடன் துர்நாற்றம் மற்றும் ரத்தப்போக்கு இருந்தாலோ புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம். தாமதிக்காமல் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், உடனே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்துகொள்வதே நல்லது.

- கங்காதரன், புற்றுநோய் மருத்துவர்

கன்சல்ட்டிங் ரூம்

எனக்குக் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. சிசேரியன் பிரசவம். தொப்புளுக்குக் கீழே உணர்ச்சியே இல்லை. இது ஏன்?

- கீதா கணேஷ், விருதுநகர்

கன்சல்ட்டிங் ரூம்

கர்ப்பமாக இருக்கும்போது, கர்ப்பப்பையுடன் சேர்த்து அந்தப் பகுதியில் உள்ள தசை, சருமம் இரண்டும் விரிவடையும். குழந்தை பிறந்த பிறகு கர்ப்பப்பையுடன் சேர்ந்து இவை சுருங்க ஆரம்பிக்கும். இந்த மாற்றங்களால் இந்தக் காலகட்டத்தில் அடிவயிற்றில் தொடு உணர்வில் கொஞ்சம் வித்தியாசத்தை உணரலாம். நீங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு அல்லது உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்த பிறகு பழையபடி அடிவயிற்றில் உணர்ச்சி வந்துவிடும். அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில்தான் சிசேரியன் செய்கிறோம் என்பதால், அதற்கும் இந்த உணர்ச்சியற்ற தன்மைக்கும் தொடர்பில்லை. உங்களுக்கு வந்திருப்பது கொஞ்சம் அரிதாக நடக்கிற விஷயம் என்றாலும், பயப்படுகிற அளவுக்கு எதுவுமில்லை. குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டதால், இன்னும் சில மாதங்களில் சரியாகிவிடும்.

- விஜயா கணேஷ், மகப்பேறு மருத்துவர்

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு