ஹெல்த்
Published:Updated:

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

சாருமதி பொதுநல மருத்துவர்ஹெல்த்

``வாய் நாற்றம், உடல் நாற்றம், வாயுத் தொல்லை, சிறுநீர்க் கசிவு... மன உளைச்சலை ஏற்படுத்தும் இத்தகையப் பிரச்னைகளால் பலர் பொது இடங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி, தர்மசங்கடமான சூழலை எதிர்கொண்டிருப்பார்கள். நண்பர்களிடமிருந்து விலகவும் தம்பதிகள் பிரியவும்கூட இவை காரணமாக அமைவதுண்டு. ‘பெர்சனல் ஹைஜீன்’ எனப்படும் அந்தரங்கச் சுகாதாரத்தைச் சரியாகப் பின்பற்றினாலே இவற்றில் பல பிரச்னைகள் சரியாகிவிடும். சில நேரங்களில் அவை உடலின் உள்ளே காணப்படும் சில பிரச்னைகளை நமக்கு உணர்த்தும் ஓர் எச்சரிக்கையாகவும் இருக்கக்கூடும்” என்கிற பொதுநல மருத்துவர் சாருமதி, அந்தப் பிரச்னைகள் குறித்து விரிவாக விளக்குகிறார். 

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

வாய் நாற்றம்

வாய் நாற்றம், நோய்களின் ‘அலர்ட் சிக்னலா’கவும்கூட இருக்கலாம். சுகாதாரமின்மையால் வரும் நாற்றம், வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் பின்பற்றினால் சரியாகிவிடும்.

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!காரணங்கள்: வாய் சுகாதாரமின்மை, தொடர்ச்சியாக வாய் உலர்ந்து போவது, ஈறுகளில் பிரச்னை, மூக்கு, தொண்டை மற்றும் சைனஸ் பகுதியில் ஏற்படும் நோய்த் தொற்று, செரிமானப் பிரச்னைகள், அசிடிட்டி, அல்சர், சர்க்கரைநோய், மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றால் வாய் நாற்றம் ஏற்படலாம். குடல், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளில் பிரச்னை இருந்தாலும் வாய் நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தீர்வுகள்: காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும்; வெங்காயம், பூண்டு மற்றும் அதிகக் காரம் சேர்த்த உணவுப் பொருள்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்; சீரான இடைவெளியில் சாப்பிட வேண்டும்; அசைவ உணவுகளை உண்ட பிறகு, பல் துலக்க வேண்டும்; எதைச் சாப்பிட்டாலும் சுத்தமான தண்ணீரால் வாய் கொப்புளிக்க வேண்டும். பல் இடுக்குகளிலிருக்கும் உணவுப் பொருள்களை நீக்க, நூலைவைத்துச் சுத்தப்படுத்தும் ‘டெண்டல் ஃப்ளாஸ்’ (Dental Floss) முறையை ஒரு நாளைக்கு இரு முறை செய்ய வேண்டும். வாயிலுள்ள உமிழ்நீரிலிருக்கும் பிஹெச் அளவு குறைந்தால், நாற்றம் ஏற்படும். ‘மவுத் வாஷ்’ பயன்படுத்துவது, உமிழ்நீரின் பிஹெச் அளவைச் சீராகப் பராமரிக்க உதவும். அதே நேரத்தில் `ஆல்கஹால் இல்லாத மவுத் வாஷ்’  (Alcohol Free Mouthwash) பயன்படுத்தினால்தான் வாய் நாற்றம் நீங்கும். வாய்ப் பகுதியை சுத்தமாகப் பராமரித்தும் வாய் நாற்றம் தொடர்ந்தால், மருத்துவரைச் சந்தித்து நாற்றம் ஏற்படுவதற்கான காரணத்தைச் சரிசெய்ய வேண்டும்.

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

வாயுத் தொல்லை

உணவு செரிமானமாகும்போது குடலில் வாயு உண்டாகி, அது ஆசனவாய் வழியாக வெளியேறும். வாயு உற்பத்தியாவது சாதாரணமானது. அதுவே அளவுக்கு அதிகமாகும்போது, தொந்தரவாக மாறும்; பொது இடங்களில் சத்தமாக வாயு வெளியேறினால் நமக்குத்தான் தர்மசங்கடம். சில நேரங்களில் வயிற்று உப்புசம் அதிகமாகி, வலியும் ஏற்படலாம்.

காரணங்கள்: ஆழ்ந்த தூக்கமின்மை, அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வது, `இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable Bowel Syndrome),  சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா சேர்வது, குளூட்டன் என்னும் புரதம் செரியாமை போன்றவற்றால் வாயுத் தொல்லை ஏற்படும். பால் பொருள்கள் உட்கொள்வது, பீன்ஸ், வாழைக்காய், முளைகட்டிய தானியங்கள், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை போன்ற உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிடுவது, குளிர்பானங்கள் அருந்துவது, எண்ணெயில் பொரித்த இறைச்சி, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றாலும் வாயுத் தொல்லை ஏற்படலாம்.

தீர்வுகள்: வாய்வை உண்டாக்கும் உணவைக் குறைவாக சேர்த்துக்கொள்வது அல்லது தவிர்ப்பது நல்லது. குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் குளூட்டன் இல்லாத உணவுகளைச் சாப்பிடலாம். மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், தள்ளிப்போட வேண்டாம்.

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

சிறுநீர்க் கசிவு 

சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலையையே `சிறுநீர்க் கசிவு பிரச்னை’;  (Urinary Incontinence) என்பார்கள். சர்க்கரை நோயாளிகள், மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்கள் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

காரணங்கள்: மனஅழுத்தம், உடல் பருமன், அதீத செயல்பாடுகொண்ட சிறுநீர்ப்பை, அல்சைமர் எனும் மறதி நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர்க் கசிவு ஏற்படலாம். ஆண்களில் புராஸ்டேட் சுரப்பி வீக்கம், புற்றுநோய் இருப்பவர்களுக்குக் கடைசிநிலையில் சிறுநீர்ப்பை அழுத்தப்பட்டு சிறுநீர்க் கசிவு ஏற்படலாம். பெண்களுக்கு இடுப்புதசை பலவீனமடைவது, மாதவிடாய் நின்று சிறுநீர்ப் பாதை சுருங்குவது, சிறுநீர்ப்பை அழுத்தம் ஏற்படுவது, தொடர் கர்ப்பம் காரணமாக, கர்ப்பப்பை அழுத்தப்படுவது ஆகியவற்றால் இது ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தீர்வுகள்: சர்க்கரை நோயாளிகள் அவ்வப்போது சிறுநீரை வெளியேற்ற வேண்டும்; சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.  புகைபிடித்தல், மதுப் பழக்கம், காபி குடிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். கீகல் உடற்பயிற்சி (Kegel Exercises) என்னும் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் நல்ல பலனளிக்கும். பிற பிரச்னைகளால் ஏற்படும் சிறுநீர்க் கசிவுக்கும் அறுவை சிகிச்சையே நிரந்தரத் தீர்வாக அமையும். மனஅழுத்தம், அல்சைமர்  போன்ற மூளை, நரம்பியல் நோய்களால் ஏற்படும் சிறுநீர்க் கசிவுக்கு சிகிச்சை கிடையாது. இவர்கள், விரும்பினால்  டயாப்பர் பயன்படுத்தலாம்.

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

வியர்வை நாற்றம்

வியர்வைக்கு வாசனை கிடையாது. வியர்வைச் சுரப்பிகளுடன், ‘சீபம்’ எனப்படும் எண்ணெய்ச் சுரப்பிகளும் அமைந்துள்ளன. எண்ணெய்ச் சுரப்பிகளிலிருந்து வரும் எண்ணெயுடன் வியர்வை கலந்து வெளியேறும்போது, அதனுடன் சில பாக்டீரியாக்களும் சேர்வதால்தான் வியர்வையில் துர்நாற்றம் ஏற்படுகிறது. 

காரணிகள்: மரபுவழி மட்டுமல்லாமல், உடல் பருமனாக உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், காரமான உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு வியர்வை நாற்றம் உண்டாகலாம். சிலருக்கு சருமப் பிரச்னைகள், அரிப்பு, பூஞ்சைத்தொற்று காரணமாகவும் வியர்வை நாற்றம் ஏற்படலாம்.

தீர்வுகள்: தினமும் இரண்டு வேளை குளித்து, சுத்தமான ஆடைகளை உடுத்தினால் வியர்வை நாற்றப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். ‘அக்குள்’ போன்ற மறைவிடங்களிலிருக்கும் ரோமங்களை நீக்கி, முறையாகச் சுத்தம் செய்து பராமரித்துவந்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும். குளிக்கும்போது அதிகம் வியர்க்கும் இடங்களில் மட்டும் வெந்நீரால் சுத்தம் செய்யலாம். 

நீண்ட நாள் உடல் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போட்டாக்ஸ் (Botox) என்ற ஊசியை அதிகமாக வியர்க்கும் இடங்களில் போட்டுக்கொள்ளலாம். இதனால், அந்த இடத்தில் வியர்க்காது. குறிப்பிட்ட மாத இடைவெளியில் மீண்டும் மீண்டும் இந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

பாதங்களில் நாற்றம்

கால்களில் போதுமான காற்றோட்டம் இல்லாதபோது அந்த இடத்தில் பாக்டீரியாக்கள் அதிகரித்து, வியர்வையுடன் சேர்ந்து நாற்றத்தை ஏற்படுத்தும். சிலருக்கு பாதங்களின் அடிப்பாகத்தில் அதிகமாக வியர்க்கும். இதனால் ஷூக்களை அணியும்போது ஏற்படும் வியர்வை நாற்றம் மற்றவர்களை முகம்சுளிக்க வைக்கும். 

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

காரணங்கள்: ஹைப்போதைராய்டு, ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (Hyperhidrosis) என்னும் அதிக அளவில் வியர்வை வெளியேறும் பிரச்னை உள்ளவர்களுக்கு நாற்றம் ஏற்படலாம். சிந்தெடிக் காலணிகளைப் பயன்படுத்துவதாலும் இறுக்கமான ஷூக்கள், காலுறைகளை அணிவதாலும் ஏற்படலாம்.

தீர்வுகள்: தினமும் பாதங்கள் மற்றும் விரல் இடுக்குகளில் ஆன்டிபாக்டீரியல் சோப் தேய்த்துக் கழுவ வேண்டும். தரமான, ஈரத்தை உறிஞ்சும் சாக்ஸ் அணிய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் இரண்டு டீஸ்பூன் பிளாக் டீ பவுடரைக் கலந்து, அதில் 15 முதல் 20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்க வேண்டும். பிளாக் டீயிலிருக்கும் டானிக் ஆசிட் (Tannic acid) பாத துர்நாற்றத்தை நீக்கும். பாதங்களுக்கென்றே பிரத்யேகமாக விற்கப்படும், நாற்றம் போக்கும் ஸ்பிரேக்கள், ஆன்டிஃபங்கல் (Antifungal) பவுடர்களைப் பயன்படுத்தலாம். மேற்பூச்சாகத் தடவக்கூடிய, வியர்வை உற்பத்தியைத் தடுக்கும் ஆன்டிபெர்ஸ்பிரன்ட்ஸ் (Antiperspirants) களிம்புகள் மற்றும் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

குறட்டை

 நாம் சுவாசிக்கும் காற்று வாய், மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை அடைகிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்பட்டால் குறட்டை ஏற்படும். சிகிச்சை எடுக்காவிட்டால் இதயநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், பக்கவாதம் போன்ற பல பிரச்னைகளுக்கும் இது காரணமாகலாம்.

காரணங்கள்: குறட்டைப் பிரச்னைக்கு மரபுவழி, உடல்பருமன் போன்றவை முக்கியக் காரணங்கள். மூக்கடைப்பு, மூக்கு இடைச்சுவர் வளைவு, சைனஸ், டான்சில், தைராய்டு போன்றவையும் குறட்டைப் பிரச்னையை உருவாக்கும்.

தீர்வுகள்: தலையணையை உயரமாக வைத்துப் படுப்பதும், ஒருபக்கமாக ஒருக்களித்துத் தூங்குவதும் குறட்டை ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். மது, புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும். சளி, மூக்கடைப்புத் தொந்தரவுகள் இருந்தால், தூங்கச் செல்வதற்கு முன்னர் வெந்நீரில் ஆவிபிடிப்பது நல்லது. இது மூச்சுக்குழாயில் ஏற்பட்டிருக்கும் தற்காலிக அடைப்பை நீக்கி, காற்று எளிதாகச் செல்ல வழிவகுக்கும். நோயாளியின் உடலில் எலேக்ட்ரோடுகளைப் பொருத்தி, இதயத்துடிப்பு, மூச்சின் அளவு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு போன்றவை ‘ஸ்லீப் ஸ்டடி’ (Sleep Study) மூலம் அளவிடப்படுகின்றன. அதன்படி மருந்து, மாத்திரை அல்லது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

தர்மசங்கடம் தவிர்க்கலாம்!

அரிப்பு

சிலருக்கு ஆசனவாயைச் சுற்றித் தாங்க முடியாத அரிப்பு ஏற்படும். பொது இடங்களில் இது தர்மசங்டத்தை ஏற்படுத்தும்.

காரணங்கள்: ஆசனவாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்கள், குடல்பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மலக்குடல் பிதுக்கம்  (Rectal Prolapse), மூலநோய் உள்ளவர்களுக்கு ஆசனவாய் அரிப்பு ஏற்படும். குழந்தைகளுக்கு ஆசனவாயைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் துடைப்பான்களால்கூட (டிஷ்யூ பேப்பர்) இந்தப் பிரச்னை  வரலாம். 

தீர்வுகள்:
குழந்தைகளின் ஆசனவாயைச் சுத்தப்படுத்த ஈரமான துடைப்பான்களைப் (Wet Tissue Paper) பயன்படுத்தலாம்.  ஆன்டிஃபங்கல் ஆயின்மென்ட்/பவுடர்களைப் பயன்படுத்தலாம்.  மலக்குடல் பிதுக்கத்தால் சிறு குழந்தைகளும் முதியோரும் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், நோய் முற்றிச் சிக்கலை ஏற்படுத்திவிட வாய்ப்பிருக்கிறது. ஆசனவாய் நோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரச்னையில்லை. சிறு வயதில் ஏற்படும் இந்த நோய் தானாகவே குணமாவதுண்டு. பெரியவர்களுக்கு வந்தால் மலக்குடலை உள்ளே தள்ளி நிலைநிறுத்தும் (Rectopexy) அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

- ஜி.லட்சுமணன்