ஹெல்த்
Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை!

நிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை!

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

யோகப் பயிற்சிகளில் `பந்தா சிகிச்சை’ என்பது நம் மரபு சார்ந்த முக்கியச் சிகிச்சை. உடலை இறுகப் பிடித்து, பூட்டுப் போடுவது அல்லது உடலின் ஆற்றலை நிறுத்திவைத்து ஆற்றல் இல்லாத வேறு இடத்துக்குத் திருப்பி அனுப்பி பிரச்னையைச் சரிசெய்வதே இதன் யுக்தி. பந்தா சிகிச்சையில் குறிப்பிடத்தக்க மூன்று வழிமுறைகள் உள்ளன. மூல பந்தா, உத்தியான பந்தா, ஜலந்திர பந்தா. யோகா செய்யும்போது இவற்றையும் சேர்த்துச் செய்தால், முழுமையான பலன் கிடைக்கும். பந்தாக்கள் மூன்றையும் ஒரே நேரத்தில் செய்தால், அது மகா பந்தா. மகா பந்தாவைப் பெரும்பாலும் யோகிகள் ஒரே நேரத்தில் செய்வதுண்டு.

நிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை!

முதலில் மூல பந்தா. தியானநிலையில் அமர்ந்து, கண்களை மூடி, மூச்சை உள்ளிழுக்கும்போது ஆசனவாயைச் சுருக்கிக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து மூச்சை வெளியேவிடும்போது ஆசனவாய்ப் பகுதியை இயல்பானநிலைக்குத் தளர்த்த வேண்டும். இதைச் செய்யும்போது இடுப்புப் பகுதி தசைகள் உள்நோக்கி இழுக்கப்பட்டு வலுப்பெறும். மலம் மற்றும் சிறுநீர் தானாக வெளியேறுதல், தாம்பத்யக் குறைபாடு, உயிரணு எண்ணிக்கைக் குறைவு, மாதவிடாய்ப் பிரச்னை போன்றவை சரியாகும்.

வயிறு மற்றும் நுரையீரலுக்கு இடைப்பட்ட பகுதியைக் கட்டுப்படுத்தக்கூடியது உத்தியான பந்தா. மூச்சை உள்வாங்கும்போது வயிற்றுத் தசைகளை உள்நோக்கி இழுப்பதே உத்தியான பந்தா. இதனால் செரிமானக் கோளாறுகள், சுவாசப் பிரச்னைகள் சரியாகும். வயிற்றுநோய்களைப் போக்கி மண்ணீரல், கல்லீரல் சிறப்பாகச் செயல்படவும், வாய், தொண்டை மற்றும் நுரையீரலைச் சுத்திகரிக்கவும் உதவும். முகத்தை வசீகரமாக்கும். பாலியல் தூண்டல்களைக் கட்டுப்படுத்தும். மூல பந்தாவுடன் உத்தியான பந்தாவைச் சேர்த்துச் செய்தால், உடலுக்குப் போதுமான ஆற்றல் கிடைக்கும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை!நெஞ்சைச் சற்று நிமிர்ந்தநிலையில் வைத்தபடி, உள்ளிழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றி, தலையைத் தாழ்த்தி தொண்டைக்குழியில் படுமாறு வைக்க வேண்டும். அப்போது கண்கள் மூக்கின் நுனியைப் பார்க்க வேண்டும். கைகளை சின் முத்திரையில் வைக்க வேண்டும். இதுதான், ஜலந்திர பந்தா. இதைச் செய்வதால் தண்டுவடம் வழியாக ஆற்றல் மேல்நோக்கிக் கொண்டு செல்லப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கழுத்துப் பகுதியிலுள்ள ரத்தத்தை மூளைப் பகுதிக்கு திசை திருப்பி இதயத்துடிப்பை மெதுவாக்கும், படபடப்புத் தன்மையைக் குறைக்கும். 

நிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை!

ஹைப்போதைராய்டு உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் பருமன், உடல் சோர்வு போன்றவற்றைச் சரிசெய்யவும் ஜலந்திர பந்தா பெரிதும் உதவும். மனதை ஒருநிலைப்படுத்தும். கூன் விழுந்து முன்பக்கமாக சாய்ந்து நடக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு இந்த ஜலந்திர பந்தா தீர்வுதரும். தொண்டையில் அழுத்துவதால், விசூதி சக்ரா தூண்டப்பட்டு தைராய்டு கோளாறுகள், தொண்டைப் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கும். தொண்டையை வலிமைப்படுத்துவதுடன் குரல் இனிமை பெற உதவும். தொண்டைப் பகுதியிலுள்ள குரல்வடத்தைப் பாதுகாப்பதுடன் சிரமமின்றிப் பேசவும் ஜலந்திர பந்தா உதவும்.யோகா செய்யும்போது அதன் பயன் முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்றால் உடல், மனம், ஆற்றலை ஒருநிலைப்படுத்தி பந்தா சிகிச்சை செய்ய வேண்டும்.

அடுத்த இதழில் சிரிப்பு சிகிச்சை பற்றிப் பார்ப்போம்.

- எம்.மரிய பெல்சின்