ஹெல்த்
Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26
பிரீமியம் ஸ்டோரி
News
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26

குடும்பம்

விரதம் மேற்கொள்வது காலத்துக்கு ஒவ்வாத பழக்கம் என்ற ஒரு கருத்து பரவலாகிவருகிறது. ஆனால், இதே காலத்தில்தான் வாயுத் தொல்லை தொடங்கி அபெண்டிக்ஸ் எனும் குடல்வால் உறுப்பை அகற்றுவதுவரை செரிமானம் தொடர்பான பிரச்னைகள் கணக்கில்லாமல் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. குடல்வால் என்பது ஓர் உறுப்பு என்பதை மறந்து, அது ஏதோ ஆபத்தான கட்டி என்ற பீதி நம்மிடையே உருவாகிவிட்டது. சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில் தனித்து நீண்டிருக்கும் மெல்லிய நான்கு அங்குல நீளக்குழாய் அபெண்டிக்ஸ். வால் என்பதாலேயே அது தேவையில்லாமல் தொங்கிக்கொண்டிருப்பதான படிமம் நமக்குள் உருவாகிவிட்டது. அதனால் சர்வ சாதாரணமாக அறுத்துக் கடாசிவிடும் பொறுப்பின்மை மேலோங்கிவிட்டது. 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26

அபெண்டிக்ஸ், சிறுகுடலின் வேலையையும் செய்வதில்லை; பெருங்குடலின் வேலையையும் செய்வதில்லை. ஆனால், இந்த இரண்டு முக்கிய உறுப்புகளுக்கும் பாலமாக இருந்து மிக அரிதான செயல்களைச் செய்துகொண்டிருக்கிறது. பெருங்குடலில் மலத் தேக்கம் மிகுந்து அல்லது இறுகிக்கிடக்கும் சூழலில், சிறுகுடலிலிருந்து உந்தப்படும் செரித்துச் சக்கையான உணவையோ அல்லது அரைகுறையாகச் செரிக்கப்பட்ட உணவின் ஒரு பகுதியையோ அபெண்டிக்ஸ் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளும். அரை திட வடிவத்தில் உள்ள மேற்படிக் கழிவை வாயுவாக மாற்றி, பெருங்குடலுக்கு அனுப்பி, வெளியேற்றத் துணைபுரியும். அதன் மூலம் பெருங்குடலின் வேலையில் ஒரு பகுதியைத்தான் ஏற்றுக் கொள்கிறது குடல்வால்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26அதேபோல நீடித்த தவறான உணவுப் பழக்கத்தினாலோ அல்லது நச்சுத் தன்மை மிகுந்த உணவை உட்கொள்ளும்போதோ பெருங்குடல் தளர்ந்து, வயிற்றுப்போக்கு எனும் நீர்த்த மலப்போக்கு ஏற்படும்போது பெருங்குடலுக்கும் சிறுகுடலுக்கும் உதவிபுரிகிறது குடல்வால். மலப் போக்கு நின்ற பிறகு, துவண்டுபோயிருக்கும் சிறுகுடல் அதன் வழக்கமான வேலைகளைச் செய்ய இயலாது. எனவே, செரிமானத்துக்குத் தேவையான நொதிப்பான்களை உருவாக்கித்தரும் ஆபத்பாந்தவனாகவும் செயல்படுகிறது குடல்வால். அதேபோல மலப்போக்கின்போது பெருங்குடல் முற்றிலும் வற்றி உலர்ந்து போவதால் மலத்தைப் பக்குவப்படுத்தும் நல்ல பாக்டீரியாக்களை பெருங்குடலுக்கு அனுப்பி, அதற்கு மறு ஊக்கம் அளிக்கிறது.

அபெண்டிக்ஸ் உப்புதல், எரிச்சல், வலி போன்ற அனைத்துத் தொல்லைகளின்போதும் நாம் உடனடியாகச் செய்யவேண்டியது உண்பதை நிறுத்துதல் மட்டுமே. அதன் வீக்கத்தையும் வலியையும் நீக்க, குடல்வாலை அறுத்து எடுத்தல் உடனடித் தீர்வுபோலத் தோன்றலாம். ஆனால், காலப்போக்கில் செரிமானத்திலும் மல வெளியேற்றத்திலும் அது மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்கும். ஒவ்வொரு வலிக்கும் அந்தந்த பாகங்களை நீக்கிவிடுவது என்று புறப்பட்டால், உடலில் ஒரு பாகமும் மிஞ்சாது. அபெண்டிக்ஸ் வலிக்காக அறுவை மேற்கொண்டு அதை அகற்றிவந்த மருத்துவத்துறை இன்று தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டது. அதன் பணி குறித்த தீவிரமான ஆய்வுகள் நடந்துவருகின்றன.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26

அவசரகால நண்பனாகிய அபெண்டிக்ஸை அறுத்தெரியாமல் பாதுகாப்பதுடன் நமது கடமை முடிந்து விடாது. மாறாக, எப்போதும் ஓய்வில்வைத்திருந்தால் மட்டுமே அவசரகாலத்துக்கு அதை  முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அபெண்டிக்ஸை ஓய்வில் வைத்திருப்பது என்றால், சிறு குடலையும் பெருங்குடலையும் சீரான இயக்கத்தில்வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு குடல்களும் சீராக இயங்க வேண்டும் என்றால், வயிறு எனும் இரைப்பையில் காற்று, அமிலம் போன்றவை தேங்காத அளவுக்கு நமது உணவுப் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

உண்ட உணவு இரைப்பையில் அரைத்துக் கூழாகி, சிறுகுடலுக்கு இறங்கும் முன்னர் மேலும் மேலும் அதில் உணவு, நீர், சிறுதீனி, இடைப்பானம் போன்ற எதையுமே நாம் இரைப்பைக்குள் செலுத்தக் கூடாது. அப்படிச் செலுத்தினால், முன்னர் உண்ட உணவு அரைகுறையாக அரைக்கப்பட்ட நிலையில் சிறுகுடலை நோக்கி உந்தப்பட்டுவிடும். ஆனால், உணவு செரிமானத்துக்காகச் சுரந்திருக்கும் நொதிகளும், உணவின் அமிலத் தன்மையும் பெருமளவு இரைப்பையிலேயே தங்கிவிடும். அப்படித் தங்குகிற அமிலமும் நொதிகளும் புளித்த நீராகவும் காற்றாகவும் (ஏப்பம்) வெளியேறா முயலும். இரைப்பையில் தங்கும் அளவு அதிகரிக்கும்போது ஒரு படிமம் இரைப்பைச் சுவரில் படிந்து நாளடைவில் புண்களையும் உருவாக்கும்.

தற்கால நோய்களின் தோற்றத்தில் செரிமானத்தின் தரம் கெட்டுப்போதல் முக்கியமான பங்குவகிக்கிறது. இரைப்பை, சிறுகுடல் போன்ற உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்படும்போதும் சரி, செரிமானத்தின் தரம் கெடுகிறபோதும் சரி, நாம் செய்யவேண்டியதெல்லாம் உணவின் அளவைக் குறைப்பதும், நீர்த்த உணவை உண்பதும்தான்.

குழந்தைப் பருவம் தொட்டே நம் உணவுப் பழக்கம், மிக வேகமாக செரிமான மண்டலத்துக்குத் தீங்கிழைப்பதாகவே மாறிவருகிறது. பச்சிளம் குழந்தையின் ஒவ்வோர் அழுகைக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். அத்தனைக்கும் பாலைப் புகட்டினால், அழுகை தற்காலிகமாக நிற்கும். ஆனால், மீண்டும் சிறிது நேரத்திலேயே குழந்தை அழும்.  

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26

குழந்தையின் பாலுக்கான தேவையின்போது பால் புகட்டினால் அது முழு ஆர்வத்துடன் சப்பத் தொடங்கும். மாறாக, அதன் வேறு தேவையைப் புரிந்துகொள்ளாமல் வாயை மார்பில்வைத்து அழுத்தினால் நான்கு வாய் சப்பிவிட்டு, வாயில் வைத்திருந்த பாலை `பொழி’ச்சென்று துப்பிவிட்டு ‘இப்போ நான் பாலா கேட்டேன்... அட மண்டு மண்டு’ என்று தலையில் அடிக்காத குறையாக இன்னொருவிதமாக அழும். பச்சிளம் குழந்தையின் முக்கியமான இரண்டு அழுகைகளைப் பெற்றோர் புரிந்து கொண்டால்தான் வயிறு, செரிமானம் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். அதைத் தொடர்ந்து உருவாகக்கூடிய மலச்சிக்கல் – காற்று பிரிதல் பிரச்னைகளையும் தவிர்க்க முடியும். அந்த இரண்டு அழுகைகள் என்னென்ன?

ஒன்று, பாலுக்கு அழுவது. இன்னொன்று, நீருக்கு அழுவது. பால் என்பது உணவு. அதாவது, உடலின் இயக்கத்துக்கு, பராமரிப்புக்கு, வளர்ச்சிக்குத் தேவையான ஒன்று. மற்றொன்று, நீர். உண்ட பாலை செரிப்பதற்கு அவசியமானது அது. குறிப்பாகக் குழந்தைக்குச் சுரந்தளிக்கும் பால் கொழுப்பும், புரதமும், நுண்சத்துகளும் நிறைந்து, அமிலத் தன்மையும்கொண்டது. அந்த மிகை அமிலத்தை நீர்க்கச்செய்ய, நீரின் காரத் தன்மை சேரும்போதுதான் செரிமானம் முழுமை அடையும். குழந்தைக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி... நீர் எந்தக் கட்டத்தில் தேவை என்பதை வெளியிலிருந்து எந்த நிபுணர்களாலும் தீர்மானிக்க முடியாது. நீரின் தேவையை உடல்தான் அறிவிக்கும், தாகம் என்ற உணர்வின் வாயிலாக.

செரிமானத்தின் வெவ்வேறு கட்டத்தில் உடலுக்கு நீர் தேவைப்படும். தாகத்துக்கு நீர்தான் அருந்த வேண்டும். ஆவேசமான தாகத்தைத் தணிக்க நாம் எத்தகைய உயர்ந்த பானத்தை அருந்தினாலும் அது நீருக்குரிய தேவையை ஈடு செய்யாது. நல்ல வெயில் நேரத்தில் அலைந்து திரிந்து, நாவறட்சி ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது குளிர்பானமோ பழச்சாறோ அருந்தினால் உடல், அதில் ஒரு பகுதியாக இருக்கும் நீரை, குறைந்த அளவு மட்டும் எடுத்துக்கொள்ளுமே தவிர தன் தேவையை ஈடு செய்துகொள்ளாது. எனவே, அடுத்த சில நிமிடங்களிலேயே  மீண்டும் தாகம் எடுக்கும்.

எந்தச் சுவையும் இல்லாத நீர் மட்டுமே உடலின் நீர்த் தேவையை ஈடுசெய்யும். மற்றபடி நீர்த் தன்மையுள்ள சிறிதளவு இனிப்பு, புளிப்புச் சுவை சேர்ந்த எந்த பானங்களையும் உடல், உணவாகவே கணக்கில்கொள்ளும். ஏனென்றால், நீர் என்பது அடிப்படையில் காரத் தன்மை உடையது. இனிப்பு, புளிப்பு இரண்டு சுவைகளும் அடிப்படையில் அமிலத் தன்மை உடையவை. அமிலத்தை முறிக்க, செரிக்க உடலுக்குக் காரத் தன்மை வேண்டும். நீர் தேவைப்படும்போது நீருக்குப் பதிலாக வேறு பானங்களை அருந்தினால் நீர்த் தேவை ஈடுசெய்யப்படாதது மட்டுமல்ல... வயிறு, நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளும் வேகமாக பாதிப்படைந்துவிடும்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26

1980-களில் சிங்கப்பூர் நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டிருந்த நேரம். மக்களின் வாங்கும் திறன் அதாவது நுகர்வுத் திறன் சடசடவென உயர்ந்துகொண்டிருந்தது. இன்னொருபுறம், திடீரென்று சிறுநீரகம் மற்றும் செரிமான உறுப்புகள் தொடர்பான பிரச்னைகளால் மக்கள் மருத்துவமனை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். அங்கே மருத்துவம் கிட்டத்தட்ட அறவே தனியார் வசம் இல்லை. அங்கிருப்பது மக்கள்நல அரசு.இந்த நிலையில் சிறுநீரகம் – செரிமானம் தொடர்பான ஒரே மாதிரியான பிரச்னைகள் மக்களிடம் அதிகரித்துவருவதற்கான காரணம் என்னவென்று தீவிரமான ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் மக்களிடம் தண்ணீர் குடிக்கும் பழக்கம் குறைந்துகொண்டு வருவதே  காரணம் என்று கண்டுணர்ந்தனர். மக்களிடம் நுகர்வுத் திறன் அதிகரித்துவிட்டதால் சந்தையில் மென் பானங்கள் மலிந்துகிடப்பதால் தாகமெடுக்கும்போது யாரும் தண்ணீர் குடிப்பதில்லை. கார்பனேட்டட் பானாங்களை மட்டுமே குடித்திருக்கிறார்கள். அதனால் உடலின் உள்ளுறுப்புகளுக்குத் தேவையான நீர் ஆற்றல் கிடைக்காமல் உள்ளுறுப்புகள் விரைவிலேயே பலவீனமடைந்து நோய்கள் தோன்றுகின்றன என்பது உறுதியானது.

அப்போதைய பிரதமர் லீக்வான் யூ முதற்கொண்டு அரசின் அத்தனை மட்டங்களிலும் மக்களை நீரைக் குடிக்கவைப்பதற்கான பிரசார இயக்கத்தில் இறங்கினர். உணவக மேசைகளில் குடிநீர் ஜக்கும் குவளையும் இருக்கவேண்டியது கண்டிப்பான விதியானது. மக்களிடம் உயர்ந்து வந்த சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் பெருமளவு குறைந்தன.

தாகத்தை உணர்ந்து நீர் அருந்தும் பழக்கத்தை பச்சிளம் குழந்தை முதலே தொடங்கவேண்டியிருக்கிறது. `குவா... குவா...’ தவிர வேறு மொழி அறியாத குழந்தையின் நீர்த்தேவையை எப்படிப் புரிந்துகொள்வது? அது மிக எளிது. தொடர்ந்து பார்ப்போம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...