நம் உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலைக் கொடுப்பது, ரத்தம். ரத்த ஓட்டம் நின்றுவிட்டால், உடலின் மொத்த இயக்கமும் நின்றுபோகும். நகம், முடி, கருவிழி தவிர உடலின் அனைத்து பாகங்களிலும் பயணம் செய்யும் ஒரே உயிர்ப்பொருள் ரத்தம்.

“எலும்பு மஜ்ஜையில் (Bone Marrow) உற்பத்தியாகும் ரத்தம், ஒருநாளில் உடல் முழுக்க 19 ஆயிரம் கி.மீ தூரம் பயணம் செய்கிறது. அப்படிப்பட்ட ரத்தத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்” என்கிறார் ரத்தவியல் மருத்துவர் ரேவதிராஜ். மேலும், உடலின் இயக்கத்துக்கு ரத்தம் எப்படி உதவுகிறது, அதிலுள்ள உட்பொருள்கள் என்னென்ன, அவற்றின் பணிகள், நோய் கண்டறிவதில் ரத்தம் எந்த வகையில் உதவுகிறது என்பனவெல்லாம் குறித்தும் விவரிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரத்தத்தில், ரத்தச் சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்லெட்டுகள் (Platelets) என மூன்றுவிதமான அணுக்களும், `பிளாஸ்மா’ என்னும் திரவப்பொருளும் இருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ரத்தம்.
சிவப்பணுக்களிலுள்ள ‘ஹீமோகுளோபின்’ என்ற புரதம்தான் ரத்தத்தின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இதுதான் அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துகளையும் எடுத்துச் செல்கிறது. அதோடு அங்கு பெறப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளை அகற்றி எடுத்துச் செல்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை அதிலுள்ள ரத்த வெள்ளை அணுக்கள்தாம். அதனால்தான் இவற்றை நோய்களுக்கு எதிராகப் போராடும் ‘படை வீரர்கள்’ என்று அழைக்கிறோம். உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது, உடனடியாகச் செயல்பட்டு உறைதலை ஏற்படுத்தி, ரத்தக்கசிவைத் தடுக்கும் பணியை பிளேட்லெட்டுகள்தாம் செய்கின்றன. பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், புரதப் பொருள்களும் இருக்கின்றன.
நோய் கண்டறிவதில் ரத்தத்தின் பங்கு!
ரத்தம், நோய்களைக் காட்டும் கண்ணாடி. இதைப் பரிசோதிப்பதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் கண்டறிய முடியும். சாதாரண சளி, காய்ச்சல் முதல் சர்க்கரைநோய்வரை எந்த நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்றாலும், முதலில் ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

ரத்தப் பரிசோதனைகள் ஏன், எதற்கு?
கம்ப்ளீட் பிளட் கவுன்ட் (Complete Blood Count - CBC)
இந்தப் பரிசோதனையை ‘ரத்த அணுக்கள் பரிசோதனை’ என்றும் சொல்லலாம். ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் உள்ளிட்டவற்றின் வகைகள், சதவிகிதம், அடர்த்தி, தரம் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள இந்தப் பரிசோதனை உதவும். இது தவிர நோய்த்தொற்று, ரத்தச்சோகை, சிவப்பணுக்களில் இயல்புக்கு மீறிய தன்மை இருக்கிறதா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள உதவும்.
ஹீமோகுளோபின் பரிசோதனை (Hemoglobin Test)
ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதிப்பதன் மூலம் ரத்தச்சோகையைக் (Anemia) கண்டறியலாம். பொதுவாக, ஒரு லிட்டர் ரத்தத்தில் 120 முதல்180 கிராம் ‘ஹீமோகுளோபின்’ இருக்க வேண்டும். இது வயது, பாலினத்தைப் பொறுத்து மாறுபடும். ஒரு டெசி லிட்டரில் ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்வரை, பெண்களுக்கு 13 முதல் 15 கிராம்வரை இருக்க வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு
சாப்பிடுவதற்கு முன்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, 126 மி.கி/டெ.லி-க்கு அதிகமாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு 200-மி.கி/டெ.லி-க்கு அதிகமாகவும் இருந்தால், அவர்களுக்கு சர்க்கரைநோய் இருக்கிறது என்று அர்த்தம். கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 140 மி.கி/டெ.லிவரை இருந்தால், அதுதான் சரியான அளவு. அதற்கு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு ‘கர்ப்பகால சர்க்கரைநோய்’ இருக்கிறது என்று அர்த்தம்.

ஹெச்பிஏ1சி பரிசோதனை
சர்க்கரை நோயாளிகள், எந்த அளவுக்கு சர்க்கரையைக் கட்டுக்குள்வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை உதவும். பரிசோதனையில் 6-க்கு கீழ் இருந்தால், சீரான கட்டுப்பாடு என்று அர்த்தம். 7 முதல் 8வரை இருந்தால் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கிறது என்றும், 9-க்கு மேல் இருந்தால், சர்க்கரை கட்டுக்குள் இல்லை என்றும் பொருள்.
தைராய்டு பரிசோதனை
தைராய்டு செயல்பாட்டை அறிய உதவும் ரத்தப் பரிசோதனைக்கு ஃப்ரீ டி3 (Free T3), ஃப்ரீ டி4 (Free T4) மற்றும் டிஎஸ்ஹெச் (TSH) என்று பெயர். இது ரத்தத்தில் உள்ள தைராய்டு அளவைத் துல்லியமாகக் கண்டறிய உதவும் பரிசோதனை.
பிளட் கல்ச்சர் டெஸ்ட் (Blood Culture Test)
ரத்தத்தில் பாக்டீரியா அல்லது பூஞ்சை போன்ற நுண்கிருமித் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
கொழுப்புப் பரிசோதனை (Lipid Profile)
ரத்தத்தில் கொழுப்பு அளவைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனை இது. இந்தப் பரிசோதனையை, வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். பரிசோதனையில் ரத்தத்தில் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 மி.கி இருக்க வேண்டும்.
ஹெபடைட்டிஸ் (Hepatitis) வைரஸ் பரிசோதனை
இதில், ஹெபடைட்டிஸ் ஏ ஆன்டிஜென், ஹெபடைட்டிஸ் ஏ-வுக்கு எதிரான ஆன்டிபாடி, ஹெபடைட்டிஸ் பி ஆன்டிஜென் எனப் பல பரிசோதனைகள் உள்ளன. இவை, ஹெபடைட்டிஸ் கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறியவும், சிகிச்சை எந்த அளவுக்குப் பலனளித்திருக்கிறது என்பதைக் கண்டறியவும் உதவும்.
கல்லீரல் செயல்திறன் பரிசோதனை (Liver Function Test)
கல்லீரலின் செயல்திறனைக் கண்டறியவும், ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறியவும் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சில மாத்திரை, மருந்துகளை உட்கொள்ளும்போது, அவை எந்த அளவுக்குக் கல்லீரலைப் பாதித்திருக்கின்றன என்பதை அறியவும், கல்லீரல் நோய்க்கு அளிக்கும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறியவும், கல்லீரல் சுருக்க நோய் ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறியவும் இந்தப் பரிசோதனை உதவும்.
சிறுநீரகச் செயல்திறன் பரிசோதனை
உடலில் உள்ள நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. இவற்றில், பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய சீரம் கிரியாட்டினின் (Serum Creatinine), குளோமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட் (Glomerular Filtration Rate), பிளட் யூரியா நைட்ரஜன் (BUN) ஆகிய பரிசோதனைகள் உதவும்.
பிளட் யூரியா நைட்ரஜன் பரிசோதனை
நாம் சாப்பிடும் புரதச்சத்து உடைக்கப்படும்போது யூரியா, நைட்ரஜன் போன்றவை உருவாகும். யூரியாவின் அளவு 7 என்றும் நைட்ரஜன் அளவு 20 என்றும் இருந்தால் இயல்புநிலை. குறிப்பிட்ட இந்த அளவுக்கு மேல் யூரியா இருந்தால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.
ரத்ததானம், ரத்தத்தில் ஏற்படும் நோய்கள், ரத்த சுத்திகரிப்பு... மேலும் பல தகவல்கள் அடுத்த இதழில்...
- ஜி.லட்சுமணன்
காய்ச்சல் கண்டறிய உதவும் ரத்தப் பரிசோதனைகள்!
* காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வந்திருப்பது எந்த வகைக் காய்ச்சல் என்பதைக் கண்டறிய பொதுவான ‘பிளட் கல்ச்சர் டெஸ்ட்’ (Blood Culture Test) செய்துகொள்ளலாம். இந்த ரத்தப் பரிசோதனையை `ஆன்டிபயாடிக்’ உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும்.
* டெங்குக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், `டெங்கு என்எஸ்1 ஆன்டிஜென் பரிசோதனை’ (Dengue NS1 Antigen Test), `டெங்கு ஐஜிஎம்’ (Dengue IGM) ரத்தப் பரிசோதனை போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
* நிமோனியா காய்ச்சலுக்கு ரத்த அணுக்கள் பரிசோதனை (Complete Blood Count), பிளட் கல்ச்சர் டெஸ்ட் (Blood Culture Test) ஆகிய பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்
* டைபாய்டு காய்ச்சலுக்கு, `வைடால்’ எனும் ரத்தப் பரிசோதனை, பிளட் கல்ச்சர் டெஸ்ட் மற்றும் பிசிஆர் (PCR - Polymerase Chain Reaction) பரிசோதனை ஆகிய ரத்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
* மலேரியா காய்ச்சலுக்கும் பிளட் ஸ்மியர் (Blood Smear) எனும் ரத்தப் பரிசோதனை,பிசிஆர் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
* சிக்குன் குன்யாவுக்கு எலிசா (Enzyme-Linked Immunosorbent Assay (ELISA) பரிசோதனை, என்எஸ்1 ஆன்டிஜென், டெங்கு ஐஜிஎம் அல்லது டெங்கு ஐஜிஜி ஆகிய பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
* பன்றிக்காய்ச்சலுக்கு ஆர்ஐடிடி (Rapid Influenza Diagnostic Tests (RIDTs) என்னும் பரிசோதனையைச் செய்யவேண்டியிருக்கும்.
*எலிக்காய்ச்சலுக்கு ‘லெப்டோ ஸ்பைரோசிஸ் செராலஜி’ (Leptospirosis Serology Test) எனும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.

‘பாம்பே ஓ’ ரத்தவகை
உலகில் முதன்முதலில் 1952-ம் ஆண்டு மும்பை நகரில் ஒருவருக்கு இந்த அரிய வகை ரத்தப்பிரிவு இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், மும்பையின் அன்றைய பெயரான `பாம்பே’ என்ற பெயரையும் சேர்த்து `பாம்பே ஓ’ வகை ரத்தம் என்று பெயர் வைத்தனர். இந்த ரத்த வகை இந்தியாவில் 10,000 பேரில் ஒருவருக்கும், ஐரோப்பிய நாடுகளில் ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கும் இருக்கலாம். இந்த வகை ரத்தத்தைச் சாதாரண ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியாது. பாம்பே ஓ ரத்த வகையை ரிவர்ஸ் டைப்பிங் (Reverse Typing) சோதனை மற்றும் ஹெச் ஆன்டிசீரா (H Antisera) சோதனையிலும் கண்டறியலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் இந்தப் பரிசோதனைகள் செய்யப்படாததால் பாம்பே ஓ வகை ரத்தம் உடையவர்கள், ஓ பாசிட்டிவ், நெகட்டிவ் என்றே நினைத்துக்கொண்டிருப்பார்கள். மற்றவர்களுக்கு ரத்தம் தரும்போதும், மற்றவர்களிடமிருந்து ரத்தம் பெறும்போதும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போதும் மட்டுமே இவர்களுக்குப் பாம்பே ஓ வகை ரத்தம் இருப்பது கண்டறியப்படுகிறது.

