Published:Updated:

கிழங்கு மஞ்சளைச் சமையலில் ஏன் பயன்படுத்தலாம் தெரியுமா?!

``மஞ்சள், கேன்சர் செல்களுக்குப் போகிற ரத்தக் குழாய்களின் வளர்ச்சியைக் குறைத்து விடும். இதனால் கேன்சர் செல்கள் பரவாது. இதை மருத்துவ ஆராய்ச்சிகளும் உறுதிப்படுத்திவிட்டன.''

கிழங்கு மஞ்சளைச் சமையலில் ஏன் பயன்படுத்தலாம் தெரியுமா?!
கிழங்கு மஞ்சளைச் சமையலில் ஏன் பயன்படுத்தலாம் தெரியுமா?!

வர் நம்முடைய அவள் விகடன் வாசகி. தூத்துக்குடியைச் சேர்ந்தவர். மஞ்சள் கிழங்கில்கூட விதவிதமாக ரெசிப்பிகள் செய்கிற அளவுக்குத் தேர்ந்த சமையல்கலை நிபுணரும்கூட. ஸ்டெர்லைட் ஆலை காரணமாக தலைவலி, காய்ச்சல் வருவதுபோல தன் ஊர் மக்களுக்கு கேன்சர் வருகிற அவலத்தைச் சொன்னவர், அதன் காரணமாகவே மஞ்சளில் விதவிதமாக ரெசிப்பிகள் செய்ய கற்றுக்கொண்டேன் என்கிறார். 

``நான் முதல் தடவை மாசமா இருக்கும்போது, ஆறு மாசத்துல வயித்துக்குள்ளேயே பிள்ளைக்கு இதயத் துடிப்பு நின்னு போயிடுச்சு. என் சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தி. என்னைவிட சின்னவ. மாசமா இருக்கிறப்போதான் அவளுக்கு கேன்சர் இருக்கிறதைக் கண்டுபிடிச்சாங்க. குழந்தை பிறக்கிற வரைக்கும், அவளுக்கு கேன்சர் இருக்கிறதையே மறைச்சிட்டோம். குழந்தை பிறந்த பிறகு தன்னோட நிலைமையைத் தெரிஞ்சுக்கிட்டவ, பிள்ளையை விட்டுட்டுப் போகப் போறோமேன்னு பட்டபாடெல்லாம் இப்பவும் என் கண்ணுக்குள்ளேயே இருக்குதுங்க. இப்ப அவ உயிரோட இல்லை. 

லண்டனில் ஒரு கேன்சர் பேஷன்ட். கீமோ தெரபிக்கு அப்புறம் தனக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரையில் குர்குமின்  அதிகமா இருப்பதைத் தெரிஞ்சுக்கிட்டு, தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. அஞ்சு மாசம் கழிச்சு டெஸ்ட் பண்ணிப் பார்த்தப்போ கேன்சர் செல்கள் பரவாம இருந்திருக்கிறதைக் கண்டுபிடிச்சிருக்காங்க. இங்கிலீஷ் வெப்சைட்டில் இந்த நியூஸைப் படிச்சதும் என் மனசுக்கு அப்பாடான்னு ஒரு நிம்மதி வந்துச்சுங்க'' என்றவர், அதன் பிறகு கிழங்கு மஞ்சளை தங்கள் வீட்டு தினசரி உணவுகளில் ஒன்றாக்கி விட்டிருக்கிறார். 

இந்த வாசகி சொன்னதைப் பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ளவும், மஞ்சளின் மகிமையை அறிந்துகொள்ளவும் இயற்கை மருத்துவர் யோ.தீபாவிடம் பேசினோம். 

``அந்த வாசகி சொன்னது நிஜம்தான். ஆராய்ச்சிகளிலும் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய உடம்பில் இருக்கிற செல்கள் டேமேஜ் ஆகிவிட்டால், அவை நம் உடம்பில் கழிவுகளாகச் சேர்ந்து விடும். இதை ஃபிரீ ரேடிக்கல்ஸ் என்று சொல்வோம். இதுதான், பின்னாளில் நம் உடம்பில் புற்றுநோயாக மாறும். சமையலில் நாம் சேர்க்கிற மஞ்சளுக்குப் புற்றுநோய் வருகிற ஆபத்தைக் குறைக்கிற குணம் இருக்கிறது. 

லண்டனில் ஒரு பெண்மணிக்கு கேன்சர் செல்கள் பரவவில்லை என்று சொன்னார் இல்லையா? அதற்குப் பின்னால் இருக்கிற மருத்துவக் காரணத்தைச் சொல்கிறேன். மஞ்சள், கேன்சர் செல்களுக்குப் போகிற ரத்தக் குழாய்களின் வளர்ச்சியைக் குறைத்து விடும். இதனால் கேன்சல் செல்கள் பரவாது. இதை மருத்துவ ஆராய்ச்சிகளும் உறுதிப்படுத்திவிட்டன. அதிலும் குடல் புற்றுநோய்க்கு பயங்கர எதிரி  மஞ்சள். 

கேன்சருக்கு மட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் வரும் ரிஸ்க்கையும் 65  சதவிகிதம் குறைப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மஞ்சளில் இருக்கிற குர்குமினும் மிளகில் இருக்கிற பெப்பரினும் சேர்ந்து நம் வயிற்றுக்குள் போனால், கொழுப்புச் சக்தியை ஜீரணிக்கிற சக்தியை அதிகமாக்கும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்கலாம். மஞ்சள் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர நீரிழிவும் கட்டுக்குள் இருக்கும். தவிர, ஹார்மோன்களை ஒரே சீராக வைத்திருப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது, ஆர்த்தரைட்டீஸ் காரணமாக வருகிற வலி, வீக்கத்தைக் குறைப்பது, அல்சமைரை கட்டுக்குள் வைப்பது, நம் உடம்புக்குள் அழையா விருந்தாளிகளாகப் பாக்டீரியா, வைரஸ் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி அவற்றை விரட்டியடிப்பது என்று மஞ்சளின் மகிமைகள் ஏராளம்'' என்கிறார் மருத்துவர் தீபா. 

மஞ்சளைப் பற்றி சித்த மருத்துவர் விக்ரம்குமார் பேசுகையில், ``மஞ்சளைச் சமைத்தாலும் அதன் மருத்துவக் குணங்கள் கொஞ்சம்கூட குறையாது. நீங்கள் இளமையாக, ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்றால் வீட்டிலேயே மஞ்சளை அரைத்துப் பயன்படுத்துங்கள்'' என்றவரிடம், முகத்துக்குப் பயன்படுத்துகிற மஞ்சள், சமையலுக்குப் பயன்படுத்துகிற மஞ்சள் இரண்டில் எது சிறந்தது என்று கேட்டோம். 

``இரண்டுமே சமமான மருத்துவக் குணங்கள் கொண்டவைதான். முறைப்படி நல்லெண்ணெயில் ஊற வைத்தோ அல்லது கோமியத்தில் ஊற வைத்தோ பக்குவப்படுத்திய மஞ்சளை உணவில் சேர்த்துக்கொண்டீர்கள் என்றால், குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும்'' என்று முடித்தார் மருத்துவர் விக்ரம் குமார்.