Published:Updated:

அஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு

அஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு

அஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு

`கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற முதுமொழி நம் செவித்திரையில் பலமுறை விழுந்திருக்கும். அளவில் சிறியதாக இருந்தாலும் கடுகிலுள்ள நலக்கூறுகள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். கார்ப்பும் கசப்பும் கலந்த சுவைகொண்ட கடுகைச் சமையலுக்கான ஒரு `ஸ்டார்ட்-அப்’ என்று சொல்லலாம். `கடுகில்லாமல் தாளிப்பா’ என்று சொல்லுமளவுக்குச் சமையலில் கடுகின் தாக்கம் அதிகம். அஞ்சறைப் பெட்டி டப்பாவை, `கடுகு டப்பா’ என்று சொல்லுமளவுக்கு அடுப்பங்கரையில் கடுகுக்கு அவ்வளவு சிறப்பு!

அஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு

புத்தர் முதல் இன்றைய புதின ஆய்வாளர்கள் வரை சின்னஞ்சிறிய கடுகில் உள்ள ஆச்சர்யங்களைப் பற்றி சிலாகிக்கத் தவறியதில்லை. மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதக்குறிப்புகளிலும் சுட்டிக்காட்டப்படும் நறுமணமூட்டி கடுகுதான். கடுகை நறுமணமூட்டியாகப் பயன்படுத்தும் வழக்கம் பற்றி புத்தர் நூல்களிலும் பேசப்பட்டுள்ளன.

ரோமானியர் கடுகு சார்ந்த உணவுகளைச் சமைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்கிறது வரலாறு. பல்வேறு நாடுகளுக்கு மதிப்புமிக்க கடுகை கொண்டுசேர்த்ததில் ரோமானிய சாம்ராஜ்யத்துக்குப் பெரும் பங்குண்டு. கடுகுடன் நல்லெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘சாஸ்’ சீனர்களின் சமையலில் சிறப்பு வாய்ந்தது. கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் எனத் தாளிப்பில் பங்குபெறும் நமது தென்னாட்டுச் சமையற்கலையின் நுணுக்கத்தையும் பெருமையாகப் பேச வேண்டியது அவசியம். சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த `சன்ஹுதாரோ’ (Chanhudaro) பகுதியில் அகழ்வாய்வு செய்தபோது கடுகின் படிமங்கள் கிடைத்தன.

மருத்துவர் பிளைனி ‘நெடியுடன் தீயைப்போல எரிந்தாலும், உடலுக்கு அத்தியாவசியமானது கடுகு’ என வியந்து கூறியுள்ளார். அமைதியாக இருந்துவிட்டு, தாளிக்கும்போது காளையாகச் சீறும் கடுகு விதைகளின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருப்பது `மைரோசினேஸ்’ (Myrosinase) எனும் நொதிதான். மக்னீசியம், செலினியம் போன்ற தாதுப்பொருள்களை நிறையவே கொண்டுள்ளன. கடுகின் வாசனை, எச்சில் சுரப்பை பல மடங்கு அதிகரித்து செரிமானத்துக்கு அடித்தளம் அமைக்கும். இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் நோய்த் தொற்று எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பளிப்பது கடுகு என்கின்றன ஆய்வுகள்.

புற்றுநோய் செல்களை எதிர்க்கும் பல்வேறு நலக்கூறுகள் கடுகில் இருக்கின்றன. கிருமிநாசினி செய்கைகொண்ட கடுகை அரைத்து, கைகளில் தேய்த்துக்கொண்டு, தங்கள் வழக்கமான பணிகளைச் செய்யும் வழக்கம் முற்கால  இந்தியாவில் இருந்திருக்கிறது. கடுகிலிருக்கும் நுண்கூறுகள் வயதானோருக்கு உண்டாகும் புராஸ்டேட் வீக்கத்துக்கான மருந்தாகச் செயல்படுகிறது. கடுகு எண்ணெயிலிருக்கும் `ஆல்ஃபா - லினோலெனிக் அமிலம்’ (ALA), மூளையின் நரம்பு செல்களைப் பாதுகாக்கும் காரணியாகச் செயல்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு

அசைவ உணவுகளுக்குத் தனித்துவம் கொடுக்க, கடுகை இரவில் ஊறவைத்து பசை போல செய்து சமையலில் பயன்படுத்து கிறார்கள். கிழக்கிந்தியாவில் மீன் கறிக்கு ருசியூட்ட, கடுகைப் பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லித்தழையுடன் கடுகு விதை களைச் சேர்த்து அரைத்து, இறைச்சியின்மீது தடவி சமைக்கிறார்கள். பாதி சமைத்த மீன் துண்டுடன் கடுகைத் தூவி மீண்டும் வேக வைத்து, சுவையைக் கூட்டுவது காஷ்மீரி மக்களின் உத்தி.

ஊறுகாய் மற்றும் சட்னி தயாரிப்பில் நீங்கா இடம்பிடித்து, அவற்றின் ஆயுள்காலத்தைக் கூட்ட உதவும் `இயற்கை பிரிசர்வேடிவ்’ கடுகு. ஆட்டிறைச்சியில் காரத்தைக் கூட்ட, `மிளகு-கடுகு’ காம்பினேஷனை முயற்சி செய்யும் வழக்கம் சேர நாட்டுச் சமையலில் பிரசித்தம். கடுகைச் சேர்த்து நெய்யைக் குழைத்துச் சமைத்த சாதம், `கடுகன்னம்’ என்ற பெயரில் பண்டைய மக்களின் மெனுவில் இருந்திருக்கிறது. வேகவைத்த பீன்ஸ்மீது துருவிய தேங்காய் மற்றும் கடுகு தூவி சாப்பிட்டால் உடனடி ஊட்டம் கிடைக்கும். கடுகுச்செடியின் இலைகளைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடும் வழக்கம் வடஇந்தியாவில் அதிகம். நொதிக்கவைத்த திராட்சை ரசத்துடன், கடுகு விதைகளைச் சேர்த்துத் தயாரிக்கும் பானத்தை ஐரோப்பிய நாடுகளில் அதிகமாகப் பருகுகின்றனர்.

ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் `டோக்லா’ (Dhokla) எனும் சிற்றுண்டி ரகத்தில் கடுகைத் தூவி முழுமையடைகின்றனர் குஜராத்வாசிகள். சேம்பு இலைகளுடன் கடலை மாவு சேர்த்துத் தயாரிக்கப்படும் `படோட்’ எனும் சுவையான உணவைச் சாப்பிடும்போது, செரிமானக்கோளாறு ஏற்படக் கூடாது என்பதற்காகக் கடுகை தாராளமாகச் சேர்ப்பது உத்தரப்பிரதேசச் சமையல் நுணுக்கம்.

குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் உடலில் வெப்பத்தை அதிகரிக்க கடுகு சார்ந்த உணவுத் தயாரிப்புகள், பருவகாலத்துக்கு ஏற்ப அக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. இது சிறுநீரைப் பெருக்குவதுடன், பசியைத் தூண்டக் கூடியது. மேலும் பல்வேறு அத்தியாவசிய செய்கைகளைக்கொண்ட கடுகு, உடலில் தேங்கிய அசுத்தங்களையும் அகற்றும். 

கடுகு தூவிய தயிர் சாதம், கடுகு தாளித்த மோர்க்குழம்பு போன்றவை நாவில் நீர்  ஊறவைக்கும். இக்காலத்தில் மட்டுமல்ல, அக்கால ராஜ உபசார விருந்துகளிலும் இடம் பிடித்த உணவுகள் இவை. கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, வெங்காய விதைகள் போன்ற நறுமணமூட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘பஞ்ச நறுமணமூட்டிகள் பொடி’ வங்காளச் சமையலைத் தூக்கி நிறுத்த உதவும் `நறுமண ஆயுதம்’.

அஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு

கடுகைத் தேனில் உரைத்துக் கொடுத்தால் இருமல், மூச்சிரைப்பு குறையும். கடுகுத் தூளை வெந்நீரில் ஊறவைத்து வடிகட்டிய ஊறல் பானத்தைக் குடித்தால் விக்கல் உடனடியாக நிற்கும். வாந்தியுண்டாக்கி நஞ்சை வெளியேற்ற, இரண்டு கிராம் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுக்கலாம். கடுகு, மிளகு, உப்பு… சம அளவு சேர்த்து, குறைந்த அளவு சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடிக்க, வாதம், பித்தம், கபம் சமநிலை அடையும் என்கிறது சித்த மருத்துவம்.

கடுகை அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து, நீர்விட்டு களிபோல கிளறி, துணியில் தடவி மார்பின் மீது பற்றுபோட, இருமலின் தீவிரம் குறைந்து சுவாசம் எளிமையாகும். இதற்கு `கடுகு உக்களி’ என்று பெயர். மூட்டுவலி மற்றும் தசைவலிக்கு, கடுகை அரைத்து பற்றுப் போடுவதால் கிடைக்கும் பலனை ஹிப்போகிரேட்ஸ் தனது அனுபவத்தில் விவரித்திருக்கிறார். கடுகு, கழற்சிக்காய், ஆமணக்கு இலை ஆகியவற்றை ஆமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி, மாவாக அரைத்து, கட்டிகளின்மீது வைக்க, அவை விரைவில் பழுக்கும். இடைவிடாமல் தொடர்ந்து விக்கல்  வரும்போது கடுகை அரைத்து, துணியில் தடவி மார்புக் குழியில் பற்றுப் போடலாம்.

அஞ்சறைப் பெட்டியில் அங்கம் வகிக்கும் கடுகின் ஆயுள்காலம் மூன்று ஆண்டுகளே. உலகம் முழுவதும் கருங்கடுகு, வெண்கடுகு, மஞ்சள்நிற கடுகு எனப் பல்வேறு வகைகள் புழக்கத்தில் உள்ளன. சிறிய அளவில் பிரவுன் மற்றும் கறுப்பு நிறமுள்ள கடுகுக்கு மருத்துவக் குணங்கள் அதிகம். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்களைப் போக்குவதில் வெண்கடுகு சிறந்தது.

தீய சக்திகளைத் தடுக்கும் மந்திரப் பொருள் கடுகு என்னும் நம்பிக்கை முற்காலத்தில் இருந்திருக்கிறது. `ஐயவி (வெண்கடுகு) புகைக்கவும்…’ என்னும் புறநானூற்றுப் பாடல் வரி, `போரில் காயம்பட்ட வீரர்களைத் தீயசக்திகள் தீண்டாமலிருக்க வெண்கடுகு புகைக்கப்பட்டது எனும் குறிப்பை வழங்குகிறது. `ஆரல் மீனின் முட்டை போன்று தோற்றமளிக்கும் பொருள் வெண்கடுகு’ என சங்க இலக்கியம் உவமை பேசுகிறது.

நோய்களை அழிக்கும் பேராயுதம், நம் சின்னஞ்சிறு கடுகு விதைகள்!

-டாக்டர் வி.விக்ரம்குமார்

கடுகு கமகம...

தெயின் டூசா (Dain doosa): மூன்று முதல் நான்கு டீஸ்பூன் கடுகு விதைகளை நன்றாக வதக்கவும். ஒரு டீஸ்பூன் இந்துப்புடன் இரண்டு வறுத்த மிளகாய்களைச் சேர்த்து, மேற்சொன்ன கடுகு விதைகளையும் சேர்த்து நன்றாக அரைத்து காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும். செரிமானக் கோளாற்றால் அவதிப்படுபவர்கள் இந்தப் பொடியை நெய் சேர்த்து, தொடு உணவாகப் பயன்படுத்தலாம்.

பழக்கடுகு பானம்: அரிசி ஊறவைத்த நீர், புளி, நாவல், எலுமிச்சை போன்ற புளிப்புத் தன்மையுடைய பழங்களுடன், இனிப்புக்கு கற்கண்டையும், காரத்துக்கு கடுகையும்சேர்த்து சுவை தத்துவ அடிப்படையில் உருவாக்கப்படும் இந்தப் பழக்கடுகு பானம், இந்தியாவின் பல பகுதிகளில் மருந்தாகப்  பரிந்துரைக்கப்படுகிறது. சுவையுடன் மருத்துவக் குணங்களையும் அள்ளித்தரும் இதை ‘ராகா’ என்பார்கள்.

கடுகு - முட்டை கடையல்: ஒரு கப் கடுகு விதைகளை, வெண்ணெய் அல்லது வினிகரில் கலந்து மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு அதில் இரண்டு முட்டை, ஒரு கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் அடுப்பேற்றி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கலக்கவும். இதை அசைவ உணவுகளுக்கு தொட்டுக்கொள்ளவும், வறுத்த மீனுக்கு மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம். அமெரிக்க மக்களிடையே பிரபலமான தொடு உணவு இது. 

கடுகு- மிளகு சாதம்: கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி, தலா ஒரு டீஸ்பூன் கடுகு விதைகள், சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்வறுவலாக வதக்கவும். ஏற்கெனவே வெந்த சாதத்தை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், சீரகத்தூள், கொஞ்சம் உப்பு மற்றும் கடுகு சேர்த்துக் கிளறினால் நோய்களைப் போக்கும் சாதம் தயார். சுவாசப் பாதையில் ஏற்படும் உபாதைகளுக்கான மருத்துவ உணவாக இதை வழங்கலாம்.

கடுகுத் தயிர்: கடுகை அரைத்து உருளைக் கிழங்கு ஊறிய தயிருடன் சேர்க்கவும். சூரிய ஒளியில் இரண்டு மணிநேரம் வைத்து புளிப்பு ஏறும் வகையில் தயாரிக்கப்படும் சுவைமிக்க ரெசிப்பி, காஷ்மீரி பகுதியின் சிறப்பு உணவு.