Published:Updated:

முதுமையில் இளமை!

முதுமையில் இளமை!

முதுமையில் இளமை!

முதுமையில் இளமை!

Published:Updated:
முதுமையில் இளமை!
##~##

முதுமை என்பது வருந்தத்தக்க நிகழ்வு அல்ல; அது ஒரு பருவம். முடி நரைக்கும்போதே பலருக்கும் முகம் வாடத் தொடங்கிவிடுகிறது. 'ஐயோ, என் இளமை இவ்வளவுதானா?’ எனத் துடித்துவிடுகிறார்கள். முதுமை என்பது சம்பந்தப்பட்ட நபரின் மனம், உடல் மற்றும் சூழலைப் பொருத்த விஷயம். முதுமை காலப் பிரச்னைகளை மருத்துவம், குடும்பம் என இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் சார்ந்த பிரச்னைகள்...  

முதுமையில் இளமை!

நடுத்தர வயதில் ரத்த அழுத்தம், ரத்த சோகை, எலும்புத் தேய்வு இருக்கும்போது அதை உணர்ந்து உடனடியாக சிகிச்சைக்கு சென்றுவிடுவோம். ஆனால், வயோதிக காலத்தில் நோயின் தொல்லைகள் மாறுபடும். எந்த வலியுமே பெரிதாகத் தெரியாது. வலியின் வீரியம் குறைந்துபோகும்.  

வயதான ஒருவருக்கு நெஞ்சு வலி வந்தால், 'காலையில நெஞ்சுல ஏதோ சுருக்னு லேசா வலிச்சா மாதிரி இருந்தது. வாயு கோளாறாத்தான் இருக்கும்’ என்று அலட்சியமாக இருந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. உண்மையில், அந்த வலி மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

பெரிய வியாதிகள்கூட வெளியே தெரியாமல், உள்ளுக்குள்ளேயே மறைந்திருக்கும். இதனால்தான் வயோதிகர்களுக்கு வரும் நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே உணரமுடிவது இல்லை. சாதாரண ஜுரம் என்று நினைத்தால், சிகிச்சையின்போது பல வியாதிகளின் பாதிப்பு புலப்படும். அதனால், கணக்கு வழக்கில்லாமல் மாத்திரைகளைச் சாப்பிடும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இளவயது உடம்பே அதிகப்படியான மாத்திரைகளை ஏற்காது. முதிய வயதில் நாம் சாப்பிடும் மாத்திரைகளே நமக்குப் பாதிப்பாகிவிடும் அபாயம் இருக்கிறது. உடல் வெளிக்காட்டும் எத்தகைய வலியையும் அலட்சியப்படுத்தாமல், அடுத்த கணமே சிகிச்சைக்குத் தயாரானால், முடிந்த மட்டும் முதுமை நோய்களைத் தடுத்துவிடலாம்.

குடும்பம் சார்ந்த பிரச்னைகள்...

தனிமைதான் முதுமைக்கு விரோதி. தனிமை ஒருவரின் மனதைத் தவிப்புக்கு உள்ளாக்குகிறது. வீட்டிலும் வெளியிலும் உரிய மரியாதை கிடைக்காதபோது முதியவர்களின் மனம் துவண்டுவிடுகிறது. அடுத்தடுத்து அந்தப் புறக்கணிப்பு தொடரும்போது யாரிடமும் பேசாமல் அவர்கள் மௌனத்துக்கு ஆளாகிறார்கள். இதனால், ரத்த அழுத்தம், நீரிழிவு, மனசோர்வு, தூக்கமின்மை ஏற்படுகிறது. வயதாகும்போது உடம்பில் உள்ள செல்களின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடுகிறது. இதனால், அறிவுத்திறனில், வீழ்ச்சி ஏற்பட்டு ஞாபக சக்தி குறைகிறது. மூக்குக் கண்ணாடியை அணிந்துகொண்டே, அதைத் தேடுபவர்களும் உண்டு.

என்ன செய்யலாம்?

முதுமையின் இளமை 50 வயதில் ஆரம்ப மாகிறது. மிகவும் கவனமாக இருக்கவேண்டிய பருவம் இது. அளவான, நிறைவான, சத்தான உணவைக் குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கம் மிக அவசியம்.  வாக்கிங், எளிமையான உடற்பயிற்சி, பிராணாயாமம், தியானம், யோகா  என உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது முக்கியம். பெரும்பாலும் தனிமையைத் தவிர்த்து, அடுத்தவரிடம் மனம்விட்டுப் பேசவும். இசை, ஆன்மிகம், புத்தக வாசிப்பு... எனப் பிடித்த பொழுது போக்கான விஷயங்கள் மனதை இதமாக்கும்.

முதுமை என்பதும் இளமை என்பதும் நம் மனதின் நினைப்பில்தான் இருக்கிறது. காலத்துக்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக்கொள்வதில்தான் மகிழ்ச்சியின் இருப்பிடம் இருக்கிறது!

தொகுப்பு: ரேவதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism