மற்ற எபிசோடுகள்
Published:Updated:

காமமும் கற்று மற 7 - தாம்பத்யத்தால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்!

காமமும் கற்று மற
News
காமமும் கற்று மற

கூடற்கலை - 7

`தேகமழை நானாகும் தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வாராதோ...’

- மு.மேத்தா

சி, தூக்கம், இயற்கை உபாதைகளுக்கான உந்துதல்போல காமமும் ஓர் உணர்வு; அத்தியாவசியமான உணர்வு. இவையெல்லாம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்காவிட்டாலோ, இயல்புக்கு மாறாக இருந்தாலோ மனித உடல் நோய்க்கு ஆளாகிவிட்டது, உடனே அதை கவனிக்கவேண்டியது அவசியம் என்று அர்த்தம். இயற்கை வகுத்துவைத்திருக்கும் விதிகள் அற்புதமானவை. எப்போது அவற்றை மீறுகிறோமோ, அப்போது தொடங்குகிறது சிக்கல்.

காமமும் கற்று மற
காமமும் கற்று மற

ஒருவரின் தாம்பத்ய உறவு குறைபாடு இல்லாமல், முழு திருப்தியுடன் அமையுமானால், அவரின் தினசரி வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். எப்போதும் உத்வேகத்துடனும் புத்துணர்வுடனும் இருப்பார். எந்த வேலையையும் ஈடுபாட்டுடனும் விரைவாகவும் செய்து முடிக்கும் திறன் பெற்றவராக இருப்பார்.அனுபவத்தில் இதை நீங்களேகூட உணர்ந்திருக்கலாம். இதற்குக் காரணம், அப்போது சுரக்கும் ஹார்மோன்களே. `டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன்கள் நிகழ்த்தும் வித்தைகளால் உண்டாகும் காம உணர்வு, தாம்பத்யத்தில் தணியும்போது உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

அப்போது, மூளை ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் ஹார்மோனைச் சுரக்கச்செய்யும். மனிதர்களிடம் காதல், காம உணர்வை உணரச்செய்வதால், இதை, `காதல் ஹார்மோன்’ (Love Hormone) என்றும் சொல்வதுண்டு. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது இந்த ஹார்மோன் சுரக்கும்போதுதான்.

புத்தகம் படிக்கும்போது, படம் பார்க்கும்போது, பிடித்தவர்களுடன் பேசும்போது, விளையாடும்போது, பண வரவு அதிகமாக இருக்கும்போது, வாகனம் ஓட்டும்போது… இப்படி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சிக்கான சூழல் மாறுபடும். இந்தச் சூழல்களில் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கும்.

செக்ஸின்போது ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதனுடன் எண்டார்பினும் (Endorphin) சேர்ந்து, வலியைக் குறைக்கும் ஹார்மோன்களை உற்பத்திசெய்யும். உடல், அயர்ச்சியிலிருந்து விடுபட்டு ரிலாக்ஸ் நிலைக்குத் திரும்பும். எனவேதான், `உலகின் தலை சிறந்த இயற்கை வலிநிவாரணி’ (Natural Pain Reliever) என்று செக்ஸை வரையறுக்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். இங்கு வலி என்பது மனஅழுத்தம், மனக்குழப்பம் உள்ளிட்ட மனரீதியான சிக்கல்கள், அயர்ச்சி, அலுப்பு, சோர்வு, கோபம், வெறுப்பு, பொறாமை என அத்தனை எதிர்மறை உணர்வுகளையும் குறிக்கும்.

கார்த்திக் குணசேகரன்
கார்த்திக் குணசேகரன்

செக்ஸ், வெறுமனே மகிழ்ச்சியைத் தருவதோடு நின்றுவிடுவதில்லை. இதயம் சீராக இயங்குவதற்கும் பேருதவியாக இருக்கிறது. எவர் ஒருவர் தாம்பத்ய வாழ்க்கையில் குறைபாடின்றி இருக்கிறாரோ, அவரை இதயநோய்கள் நெருங்குவதில்லை. இது குறித்து நியூ இங்கிலாந்து ஆய்வகத்தில் (New England Research Institute) ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 40 முதல் 70 வயதுவரையிலான ஆயிரம் ஆண்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள். 1987-ம் ஆண்டில் தொடங்கிய ஆய்வு, 17 ஆண்டுகள் நடத்தப்பட்டது.

`வாரத்துக்கு இரு முறை செக்ஸ் உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு, இதயநோய்கள் வரும் வாய்ப்பு 45 சதவிகிதம் குறைவு. மாதத்துக்கு ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாக செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு, அவர்களைவிட இதயநோய்கள் வரும் வாய்ப்பு அதிகம்’ என்கிறது அந்த ஆய்வு முடிவு.

அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வதால், ஈஸ்ட்ரோஜென், டெஸ்ட்டோஸ்டீரான் அளவுகள் சரியாகப் பராமரிக்கப்படும். இது, இதய இயக்கத்தைச் சீராக வைத்திருக்க உதவும். இந்த இரு ஹார்மோன்களில் ஏதாவது ஒன்று அதன் இயல்பான அளவிலிருந்து குறைந்தால், இதயநோய்களும், எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற (Osteoporosis) நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகமாகும்.

செக்ஸால் பெண்களுக்குக் கிடைக்கும் நன்மைகளும் ஏராளம். தாம்பத்ய உறவில் முழு திருப்தியையும் உச்சத்தையும் தொடும் பெண்களுக்கு இதயநோய்களோடு, உயர் ரத்த அழுத்தமும் வராமல் தவிர்க்கப்படும்.

மெனோபாஸ் பருவத்துக்கு முன்னர் இளமையில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியாக இருக்கும் பெண்களுக்கு, முதுமையில் நோய்கள் வருவது தவிர்க்கப்படும். ஆக, ‘காலத்தே பயிர் செய்’ என்பது எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ காமத்துக்குப் பொருந்தும்.

காமமும் கற்று மற
காமமும் கற்று மற

விளையாட்டு விரர்களும், பாடி பில்டர்களும் செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று அனரோபிக் பயிற்சி (Anaerobic Exercise). உடல் தசைகளை வலுவாக்கவும், வேகம் மற்றும் ஆற்றல் பெறவும் செய்யப்படும் இந்தப் பயிற்சியால் இதயம் வலுப்பெறும். வாரத்துக்கு இரண்டரை மணி நேரம் இந்தப் பயிற்சியைச் செய்வது, உடலையும் உள்ளத்தையும் வலுவாக வைத்திருக்கும். சிரத்தை எடுத்து இதைச் செய்வதற்கு பதில், வாரம் இரு முறை செக்ஸ் வைத்துக்கொண்டாலே, இந்த எக்சர்சைஸ் செய்த பலன் கிடைத்துவிடும். உண்மையில், செக்ஸும் ஒரு அனரோபிக் எக்சர்சைஸ்தான். அதோடு, எப்போதும் இளமையுடன் இருக்கும் உணர்வு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், ஞாபகசக்தி, நல்ல உறக்கம் என செக்ஸ் தரும் நன்மைகள் எக்கச்சக்கம்.

`கரும்பு தின்னக் கூலி’ என்பதுபோல, தாம்பத்யத்தைச் சுவைப்போருக்கு, ஆரோக்கிய வாழ்க்கை போனஸ்!

- கற்போம்...