பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை, விலைமதிப்பில்லாத மூன்று மனித உயிர்களை சாலை விபத்தில் இழந்துகொண்டிருக்கிறோம் என்றால் நம்ப முடிகிறதா? மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான சாலை விபத்துகள் நடப்பது தெரியவந்திருக்கிறது. ஒட்டுமொத்த சாலை நிகழ்வுகளில் 30.4 சதவிகித சாலை விபத்துகளும், அவற்றால் ஏற்படும் 36 சதவிகித உயிரிழப்புகளும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்கின்றன. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒப்பிடும்போது மாநில நெடுஞ்சாலைகளில் 25 சதவிகித சாலை விபத்துகளே நடைபெறுகின்றன. ஆனால், மொத்த உயிரிழப்பில் 44.6 சதவிகிதம் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்றன. இதில் கவலை தரும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான சாலை விபத்துகள் தடுக்கக்கூடியவையே.

சாலை விபத்துகள் நடப்பதற்குத் தரமில்லாத சாலைகள், பராமரிக்கப்படாத வாகனங்கள், மோசமான வானிலை எனப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், சாலை விபத்துகளுக்கான முதல் முக்கியக் காரணம் தனிமனிதத் தவறுகளே. குறிப்பாக ‘வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களின் தவறுகளால்தாம் சுமார் 78 சதவிகித சாலை விபத்துகள் நடக்கின்றன’ என்கின்றன புள்ளிவிவரங்கள். சாலை விபத்துகளுக்கு தனிமனிதத் தவறுகள் எவ்வாறு காரணமாகின்றன, அவற்றை எப்படித் தடுக்கலாம் என்று விளக்குகிறார் விபத்து சிகிச்சை மருத்துவ நிபுணர் தவப்பழனி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சோர்வாக இருக்கும்போது வாகனம் ஓட்டுவது, கவனமின்மை, கவனச்சிதறல், போதிய தூக்கமில்லாமல் வாகனம் ஓட்டுவது, பிற வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் கவனமில்லாமல் எதிரே வருவது, மதுப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு தனிநபர் சார்ந்த விஷயங்களே சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

மதுப்பழக்கம்
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால்தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்துக் காவல்துறையின் பதிவேடுகள் கூறுகின்றன. போதைப் பொருள்களின் பயன்பாடும் மதுப்பழக்கத்துக்கு இணையான முக்கியக் காரணமாக அமைகிறது. மது, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவோர் தங்களை மறந்து, மயக்கநிலையில் இருப்பார்கள். அவர்களால் வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்த முடியாமல் போவதால், விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனம் ஓட்டுபவர் மது அருந்தியிருக்கிறாரா என்பதைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதிகள் நமது போக்குவரத்துக் காவல்துறையிடம் உள்ளன. ஆனால், போதைப் பொருள்கள் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டுவதைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதிகளும், போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தால் வழக்கு பதிவுசெய்யும் நடைமுறையும் இல்லை.

செல்போன்
வாகனம் ஓட்டும்போது ஏற்படும் கவனச்சிதறலும் விபத்துகளுக்குக் காரணமாக அமைகின்றன. பெரும்பாலும் செல்போன் பயன்படுத்துவதுதான் கவனச்சிறதலை ஏற்படுத்துகிறது. சிலர் காரின் உள்ளே போன் ஸ்பீக்கரை ஆன் செய்து பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள்; காதில் வைத்துப் பேசவில்லை என்றாலும், அது கவனச்சிறதலை ஏற்படுத்தும். வாகனத்தை இயக்கும்போதே பல வேலைகளில் கவனம் செலுத்துவதையும் இந்த வகையில் சேர்க்கலாம். சிலர், ‘தனக்குப் பழக்கப்பட்ட சாலை’, ‘இந்தப் பகுதியில் போக்குவரத்து குறைவாக இருக்கும்’ என்பது போன்ற அதீத நம்பிக்கைகளால் (Over Confidence) கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளாவார்கள்.

பார்வைக் குறைபாடு
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வாகனத்தை இயக்குவது ஆபத்தானது. வயதானவர்கள் என்றில்லாமல், அனைத்து வயதினருக்குமே பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது என்பதால் ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பரிசோதனை என்றால், அதிகப் பணம் செலவழித்து பலகட்டப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதல்ல. கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடுகள் இருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்ளும் எளிய பரிசோதனைகளைச் செய்தால் போதுமானது.

இதயநோய்
மூச்சுத்திணறல், அடிக்கடி நெஞ்சுவலி, வலிப்பு, திடீர் மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் வாகனம் ஓட்டுவது சரியல்ல. `மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், வலிப்புநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட காலம்வரை கனரக வாகனங்களை ஓட்டக் கூடாது’ என்று சில நாடுகளில் சட்டம் இருக்கிறது. அடிக்கடி வலிப்பு வரும் நோயாளிகளின் வாகன உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறைகளும் உள்ளன. அது போன்ற விதிமுறைகளை நமது நாட்டில் அமல்படுத்தினால் சாலை விபத்துகள் குறையும். மாரடைப்பு வந்தவர்கள் குறைந்தது ஓராண்டுக்கு வாகனங்களை இயக்கக் கூடாது. வலிப்பு நோயாளிகளுக்கு ஓராண்டாவது வலிப்பு வராமலிருந்தால், அவர்கள் வாகனத்தை இயக்கலாம். தொழில்முறை ஓட்டுநர்கள் இந்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிக வேகம்
சாலையில் பயணம் செய்யும்போது, சில இளைஞர்கள் அதி வேகத்தில் போக்குவரத்தின் நடுவே புகுந்து வளைந்து செல்வதைப் பார்த்துப் பதறியிருப்போம். இது போன்ற சாகசநிலையில் வாகனத்தை இயக்குபவர்களின் அட்ரீனல் சுரப்பியில் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும். அது போதை உண்டாக்குவது போன்ற ஒருவித இன்பத்தைக் கொடுக்கும். அந்த இன்பத்தைப் பெறுவதற்காக மீண்டும் மீண்டும் அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவார்கள். சட்டவிரோதமாகச் சாலைகளில் பைக் பந்தயங்களில் பங்கேற்று கைதானவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இது போன்ற பந்தயங்களில் பங்கேற்பவர்கள் நரம்பு மண்டலம், இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் ஆகியவற்றைத் தூண்டும் ஊக்க மருந்துகள் (Stimulants) மற்றும் ஆற்றல் தரும் பானங்களை எடுத்துக்கொள்வார்கள். அவை பந்தயத்தின்போது அதிக வேகத்தில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.

தூக்கம்
போதிய தூக்கம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்குத் தொடர்ந்து வாகனத்தை இயக்குவது சிரமமாக இருக்கும். அவர்களுக்குச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற விழிப்புஉணர்வு குறைந்துவிடும் என்பதால், விபத்து ஏற்பட அது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. வாகனத்தை இயக்கும்போது கட்டாயம் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை இடைவெளி எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் வாகனத்தை இயக்கக் கூடாது. தொடர்ந்து பயணம் செய்யவேண்டியிருந்தால், மாற்று ஓட்டுநர்களைப் பயன்படுத்த வேண்டும். சொந்த வாகனத்தில் குடும்பத்தினருடன் தொலைதூரப் பயணம் செய்பவர்களுக்கும் இந்த ஆலோசனைகள் பொருந்தும். முக்கியமாக, குடும்பத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

பரிசோதனை
வாகனம் ஓட்டுவதைத் தொழிலாகக்கொண்டவர்கள் இதயம், சிறுநீரகம், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான பரிசோதனைகளைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதால் மயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தை இயக்கும்போது அது போன்ற நிலை ஏற்பட்டால் நிச்சயம் விபத்துக்குள்ளாக நேரிடும்.

வாகனப் பராமரிப்பு
வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். கண்களைக் கூசச் செய்யும் அதிக வெளிச்சமுள்ள விளக்குகளைப் (High Beam Lights) பயன்படுத்தக் கூடாது. இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை பாதிக்கப்பட்டு, விபத்துகள் ஏற்படலாம். வாகனத்தை ஓட்டுபவர் மட்டும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல், எதிரே வருபவர்களுக்கும் அதே பாதுகாப்பை அளிக்கவேண்டியது நமது கடமை. பைக், கார் போன்றவற்றை ஓட்டும்போது ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவற்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

மாத்திரைகள்
நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகள் தூக்கத்தை வரவழைக்கலாம். உதாரணத்துக்கு சளி, ஒவ்வாமை போன்றவற்றுக்கான மருந்துகள். சில நோய்கள் அல்லது குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் தூங்குவதற்காக மருத்துவர்கள் தூக்க மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். அவை 12 மணி நேரம்கூட தூக்கத்தைக் கொடுக்கலாம். அதனால் வாகன ஓட்டிகள் எந்த நோய்க்குச் சிகிச்சை பெற்றாலும் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்கும்போதே ‘இதைச் சாப்பிட்டால் தூக்கம் வருமா?’ என்று மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

மனநலம் முக்கியம்
மனச்சோர்வு, மனநிலையில் ஏற்ற இறக்கம், மனஅழுத்தம், மன உளைச்சல் போன்ற உளவியல்ரீதியான பாதிப்பு உள்ளவர்கள் வாகனங்களை இயக்காமல் இருப்பது நல்லது. மனநிலை சீராக இல்லாதபோது வாகனத்தை இயக்கினால், கவனச்சிறதல் ஏற்பட்டு விபத்துகள் நிகழலாம். எனவே, மனநிலை சீராகும்வரை வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டுபவர்களுக்கு உளவியல்ரீதியான பிரச்னைகள் இருந்தால், உடனடியாக மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். மனநல சிகிச்சைக்கான மாத்திரைகள் தூக்கத்தை வரவழைக்கும் என்பதால், மருந்துகள் எடுக்கும்போது வாகனம் ஓட்டுவது குறித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
உயிரிழப்பு

சாலை விபத்துகளில் மூளையில் அடிபடுவது, பிரதான ரத்தக்குழாய்கள் சேதமடைந்து அதிக ரத்த இழப்பு ஏற்படுவது ஆகியவற்றால் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னரே உயிர் பிரிவதற்கான வாய்ப்புகளும் உண்டு. நெஞ்சுப் பகுதி, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் ஆகியவை சேதமடைந்தாலும், இடுப்பெலும்பு முறிந்துபோனாலும் அதிக ரத்த இழப்பு ஏற்படும். இதுவும் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். எனவே, அடிபட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தால், அவர்களைக் காப்பாற்றிவிடலாம். வெளியேறிய ரத்த அளவை மீட்டெடுக்க, அவர்களின் உடலில் ரத்தம் ஏற்ற வேண்டும். எந்தப் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது என்பதை அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைத்து, ரத்தக்கசிவை நிறுத்த முடியும்.
விபத்தில் கைகால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், செயற்கை எலும்புகள் பொருத்தலாம். ஆனால், சிலருக்கு எந்தச் சிகிச்சையும் அளிக்க முடியாத அளவுக்கு உறுப்புகள் சிதைந்து, ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க முடியாமல் போகும். அது போன்றச் சூழலில், உயிரைக் காப்பாற்ற கைகால் போன்ற பாதிக்கப்பட்ட உறுப்புகளை நீக்கவேண்டிய நிலை ஏற்படும். சாலை விபத்துக்கு ஆளாகிறவர்களுக்குத்தான் அதிக அளவில் கைகால்கள் அகற்றப்படுகின்றன. விபத்துகளில் முதுகுத் தண்டுவடம் சேதமடைந்தால், ஊனம் ஏற்பட்டு வீல்சேரில் இயங்கவேண்டிய சூழல் ஏற்படலாம். உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், உடல் இயக்கம் தடைப்படுவதால், அவர்கள் குடும்பத்துக்கு பாரமாகிவிடுவார்கள். எனவே, தனிமனிதத் தவறுகளைத் தவிர்த்துவிட்டால், விபத்தில்லா சாலைகளை உருவாக்க முடியும்.
ஜெனி ஃப்ரீடா
காதில் ரத்தம் வந்தால் உயிர் போகுமா?
விபத்தில் சிக்கிய கதாநாயகனின் காதிலிருந்து ரத்தம் கசிவதுபோலவும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழப்பதுபோலவும் சில திரைப்படக் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். காதிலிருந்து ரத்தம் கசிவது என்பது மண்டை ஓட்டில் அடிபட்டிருக்கிறது என்பதற்கான ஓர் அறிகுறி, அவ்வளவுதான். மண்டை ஓட்டில் தீவிரமான காயம், மூளை ரத்தக்குழாய்களில் கட்டுப்படுத்த முடியாத அளவு ரத்தக்கசிவு, மூளையில் அழுத்தம், மூளையில் ரத்தக்கசிவுக்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பது போன்ற சூழலில் உயிரிழப்பு ஏற்படும். பாதிப்புகள் சிறிய அளவில் இருந்தால் உயிரிழப்பு ஏற்படாது. அதனால் காதில் ரத்தக்கசிவு ஏற்படும் அனைவரும் உயிரிழந்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. காதில் ரத்தம் கசிந்தால் உடனடியாக ஸ்கேன் செய்து பார்த்து அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
