Published:Updated:

அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’

அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

Published:Updated:
அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’
அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’

சகசா... இதன் விதைகள் நறுமணமூட்டிகளில் மிகவும் சிறியவை. ஆனாலும், சமையலை உச்சத்தில் தூக்கி நிறுத்தும் இந்த `வெண்ணிற விதைப் பந்துகள்’. சின்னஞ்சிறியதாக, அமைதியாக அஞ்சறைப் பெட்டியில் தவமிருக்கும் நமக்கான வரம் `கசகசா’. இதைத் தண்ணீரில் சிறிதுநேரம் ஊறவைத்து, சமையல் தயாரிப்புகளில் அரைத்து ஊற்றியதும் நிகழும் மாயா ஜாலத்தால் பிறப்பெடுக்கும் உணவுக்காக நம்மைத் தவமாய்த் தவமிருக்கச்செய்யும்.

பண்டைய எகிப்தியருக்குப் பரிச்சயமாக இருந்த கசகசா தாவரம், 8-ம் நூற்றாண்டில் நம் தேசம் நோக்கி நகர்ந்தது. தூக்கத்தை வரவழைக்கும் செய்கைக்காக கசகசா பயன்பட்டதாக, 3,000 ஆண்டு பழைமையான எகிப்திய மருத்துவ நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. கசகசாவின் விதைகளுக்காக இதன் தாவரத்தைப் பயிரிட்டதற்கான சுமேரியத் தடயங்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. ஜெர்மனி மற்றும் போலந்து நாட்டு உணவு வகைகளில் கசகசாவை அதிகம் சேர்க்கும் பழக்கம் இருக்கிறது.

கசகசாவில் புரதங்கள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், கால்சியம், நார்ச்சத்து, தயாமின், ஃபோலேட் என ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்தியாவசியக் கூறுகளைக் கொண்டுள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்கி, சீராக செரிமானமாக உதவும். மூளையின் நரம்பிழைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆழ்ந்த உறக்கத்தை உண்டாக்கி, உறக்கத்தின் தரத்தை உயர்த்தும் பொருளாக கசகசாவை சுட்டிக்காட்டுகிறது ஆராய்ச்சி. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நுண்கூறுகள் இதில் அங்கம் வகிப்பது சிறப்பு. ஆன்டி-ஆக்ஸிடன்ட் செயல்பாட்டுக்கு உதவிபுரியும் நொதிகளைத் தூண்டுவதற்கும் கசகசா உதவும்.

அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கசகசாவை நீரில் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து பருகினால், அற்புதமான உறக்கம் ஏற்பட்டதை மறுநாள் உணரலாம். கசகசாவை லேசாக வதக்கி, தேனில் குழைத்துச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறால் ஏற்பட்ட வயிற்றுவலி குணமாகும். கசகசா வைப் பாலில் அரைத்து, அமுக்கரா பொடி, பனங்கற்கண்டு சேர்த்து இனிப்புச் சுவை இழையோட சுவைத்தால், வளமான வாலிபம் நீடித்து நிலைக்கும். கசகசாவுடன் சிறுநாகப்பூ, அதிவிடயம், கடுக்காய்ப்பூ சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீர், கழிச்சல் வகைகளைக் கட்டுப்படுத்தும் `மருந்து நீர்’.
 
தேங்காயைத் துருவி அதனுடன் கசகசா சேர்த்து அரைத்தால் தயாராகும் மசாலாக் குழம்பு, வயிற்றுக்குக் கெடுதல் செய்யாது; செரிமானம் சார்ந்த பிரச்னைகளைச் சீர் செய்யும் தரமான உணவு. சாம்பார்/குழம்பு வகைகளுக்கு திடம், சுவை, மருத்துவக் குணங்கள் கிடைக்க, சிறந்த தேர்வு அஞ்சறைப் பெட்டியின் ‘துறுதுறு’ துகள்களான கசகசா.

பீர்க்கங்காய் கிரேவியில் கசகசா சேர்த்து சுவையைக் கூட்டுவது வங்காள மக்களுக்குக் கைவந்த கலை. மேற்குவங்காளத்தின் சில பகுதி மக்கள், தங்களது சமையலில் கசகசாவைச் சேர்க்கவில்லை என்றால் உணவு முழுமைபெறாது என்பதில் உறுதியாக இருப்பார்களாம்.

மசூர் பருப்புடன் கசகசா மற்றும் கருஞ்சீரக விதைகளை இணைத்து, இறைச்சித் துண்டுகளுக்கு முலாம் பூசி தயாரிக்கப்படும் உணவு ரகம், ஊட்டத்தைக் கொடுப்பதில் கில்லாடி. கசகசா, முந்திரி, சாரைப்பருப்பு, துருவிய தேங்காய் உதவியுடன் அசைவக் குழம்பை மெருகேற்றச் செய்யும் வித்தை லக்னோ மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

கசகசா, நிலக்கடலை, எள், தேங்காய் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு பெரும்பாலான ஹைதராபாத் குழம்பு வகைகள் முற்காலங்களில் தயாரிக்கப்பட்டன. ரொட்டி, பிஸ்கட்டுகளில் கசகசாவைத் தூவி, அதன் பலன்களை காஷ்மீரி மக்கள் அனுபவிக்கின்றனர். முற்கால இந்தியாவில் கசகசாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய், நெய்யை உணவு தயாரிக்கவும் விளக்கு எரிக்கவும் பயன்படுத்தினர்.

உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவு என்பதால், மற்ற இயற்கை இனிப்புகளுடன் சேர்த்து, ‘கசகசா மிட்டாய்கள்’ புழக்கத்தில் இருந்தன. `பிர்ணி’ எனப்படும் பாயசம் போன்ற உணவு வகையில் கசகசாவைச் சேர்க்கும் வழக்கம் வடஇந்திய இஸ்லாமியரிடம் காணப்படுகிறது.

அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’

‘கிராணி யதிசாரஞ் சிரநீர் அநித்திரை போம்… உருவழகும் காந்தியுமுண்டாகும்… விந்துவுமாம்…’ என்பது கசகசா பற்றிய அகத்தியர் குணவாகட பாடல். கசகசா சாப்பிடுவதால் தூக்கமின்மை, கழிச்சல், தலைபாரம் நீங்கும் எனக் குறிப்பிடுகிறது. உடலுக்கு ஒளியைக் கொடுத்து, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இனிப்புச் சுவையுடன் உடலுக்கு உரம் தரும் நறுமணமூட்டியான கசகசாவை மையாக அரைத்து, தேங்காய்ப் பாலுடன் கலந்து பருகினால், வாய்ப்புண்கள் குணமாவதோடு, வயிற்றுப்போக்கு நிற்கும். உடலுக்கு ஊட்டம்தரும் பாரம்பர்ய கஞ்சி வகைகளில் கசகசாவைச் சேர்த்து, அதன் மருத்துவக் குணங்களை அதிகரிக்கலாம்.

கசகசா மற்றும் தேங்காய்ச் சீவல்களை ரொட்டிக்குள் திணித்து மொறுமொறுவென சுட்டு உருவாக்கப்படும் ‘கஜூர்’ எனும் சிற்றுண்டி, இஸ்லாமியர்களின் சுவைமிக்க தயாரிப்பு. முகலாயர் கால குறிப்புகளில் இதைப் பற்றிய பகிர்வு காணப்படுகிறது. வேகவைத்த சாதத்துடன் கசகசாவைச் சேர்த்து, ‘கசகசா பாத்’ எனப்படும் உணவு, 100 ஆண்டுகளுக்கு முந்தைய பீகார் இல்லங்களின் அன்றாட ரெசிப்பியாக இருந்ததை ஆங்கிலேய எழுத்தாளர் ஒருவர் பதிவுசெய்துள்ளார்.

வெல்லத்தைப் பாகு காய்ச்சி, கசகசா சேர்த்து ‘லட்டு’ தயாரிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்திருக்கிறது. கசகசாவுடன் தேன், முட்டை, வெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் `ஹங்கேரியன் ரோல்’ எனப்படும் சிற்றுண்டி, ஹங்கேரி நாட்டு திருவிழாக் காலங்களில் விற்பனையில் களை கட்டுமாம்.

கசகசாவை இரவு முழுவதும் பாலில் ஊறவைத்து உருவாக்கப்படும் `கசகசா கேக்’, உக்ரைனின் சிறப்புச் சிற்றுண்டி. ஐரோப்பிய நாடுகளில் பிரெட், கேக் போன்ற உணவுப் பொருள்களின்மீது எள்ளைத் தூவுவதைப் போல கசகசாவையும் தூவிச் சாப்பிடு கிறார்கள்.

கசகசாவுடன் துத்தியிலை சேர்த்து, தண்ணீர்விட்டு குடிநீர் போலக் காய்ச்சி வடிகட்டி, துணிக்குள் முடிந்து, வயிற்றுவலி, மூட்டு வீக்கங்களில் ஒத்தடமிடலாம். கசகசாவை எலுமிச்சைச்சாறு அல்லது தயிர் சேர்த்து அரைத்து, உடலில் அரிப்பு தோன்றும் இடங்களில் தேய்த்துக் குளித்தால் பலன் கிடைக்கும். கசகசாவை திருநீற்றுப் பச்சிலை, குப்பைமேனி ஆகியவற்றுடன் சேர்த்து பால்விட்டு அரைத்து தேமல், படை, கண்களுக்குக் கீழ் உண்டாகும் கருவளையங்களில் தேய்த்து வந்தால் நிற மாற்றம் நிகழும்.

`பாப்பவர் சோம்னிஃபெர்ம்’ (Papaver somniferum) என்ற தாவரத்தின் காயின் உள்ளே இருக்கும் விதைகளே கசகசா. காய்கள் முற்றியதும், அதன் உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துப் பயன்படுத்தலாம். இதன் காய்க்கு `போஸ்தக்காய்’ என்ற பெயரும் உண்டு. இதன் காய்களைக் கீறி அதிலிருந்து வடித்தெடுக்கும் பால் போன்ற திரவமே ‘அபின்’ எனப்படும் போதை வஸ்து. இதைக்கண்டு பயப்பட வேண்டாம், கசகசாவில் போதைத் தன்மையை உண்டாக்கும் கூறுகளுக்குப் பதிலாக, நன்மை செய்யும் கூறுகள் மட்டுமே இருப்பது ஆச்சர்யம்!

வெள்ளைக் கசகசா மட்டுமல்ல... கறுப்பு, நீல நிறங்களிலும் கசகசா ரகங்கள் இருக்கின்றன. கசகசாவைத் தேவைக்கேற்ப அளவறிந்து பயன்படுத்தினால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

கசகசா… நலத்திலிருந்து துளிர்க்கும் துகள்கள்!

`போஸ்டோ படா’ (Posto bata): கசகசா உதவியுடன் செய்யப்பட்ட சட்னியை, கடுகு எண்ணெயைக்கொண்டு சுவையூட்டி உருவாக்கப்படும் தொடு உணவு ரகம் இது. வங்காள கசகசா பிரியர்கள், இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடுகிறார்கள்.

சிட்டு (Siddu): கோதுமை மாவு அரை கிலோ எடுத்து, அதில் நீர்விட்டுப் பிசைந்துகொள்ளவும். அரை கப் கசகசாவை லேசாக வதக்கி, கால் கப் பனைவெல்லத்துடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவுக்குள் தேவையான அளவு கசகசா - பனைவெல்லக் கலவையைத் திணித்து, விரும்பிய வடிவங்களில் வடிவமைத்து, ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும் சிற்றுண்டி இது. இதை நெய்யில் தொட்டுச் சாப்பிடுவது இமாலயப் பகுதி மக்களின் உணவுப் பழக்கமாகும்.

கசகசா அல்வா: 200 கிராம் கசகசாவை 100 மி.லி நீர் சேர்த்து பால் நிறமாகும் வரை தொடர்ந்து அரைக்கவும். ஒரு சட்டியில் மூன்று டீஸ்பூன் நெய் சேர்த்து, அரைத்த கசகசா கலவையை அதில் கலந்து, அடிபிடிக்காமல் கிளறவும். கலவையின் நிறம் மாறும்போது, 100 கிராம் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து, கசகசா கலவையில் கலந்து சுவைமிக்க அல்வாவாகப் பரிமாறலாம். வித்தியாசமான சுவையுடன் மனப்பதற்றத்தை அமைதிப்படுத்தும் மருத்துவ அல்வா இது.

அமுக்கரா-கசகசா பால்: கசகசா அரை டீஸ்பூன், அமுக்கரா சூரணம் அரை டீஸ்பூன், பாதாம் பருப்பு மூன்று எண்ணிக்கை எடுத்து, சில நிமிடங்கள் நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இதைப் பாலில் கலந்து கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் சுவையும் மருத்துவக் குணங்களும் நிறைந்திருக்கும்.

கசகசா லேகியம்: கசகசா, வாதுமைப் பருப்பு, வால்மிளகு, பனங்கற்கண்டு சமஅளவு எடுத்து அரைத்து, முறைப்படி தேன், நெய் சேர்த்து, லேகியப் பதமாகக் காய்ச்ச வேண்டும். இதில் ஐந்து கிராம் எடுத்து, பாலில் கலந்து தினமும் சாப்பிட்டால் உடல் வன்மை பெற்று ஆண்மை அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism