
ஐந்து நிமிட உடற்பயிற்சி, இதயத்துக்கு நல்லது!
தினமும் ஐந்தே நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து இதய அதிர்ச்சிக்கான ஆபத்தைக் குறைப்பது சாத்தியமா? `சாத்தியம்தான்’ என்கிறார்கள் நிபுணர்கள். அந்த உடற்பயிற்சியின் பெயர், `ஐஎம்எஸ்டி’ (IMST - Inspiratory Muscle Strength Training). அதாவது, மூச்சை உள்ளிழுக்கும் தசைகளை வலுவாக்கும் பயிற்சி. இந்த உடற்பயிற்சியை யார் வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எப்போதும் செய்யலாம். ஆனால், இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு கருவியைப் பயன்படுத்தி மூச்சுவிட வேண்டும். அது ஒரு செயற்கைத் தடையை உருவாக்கி, அதன் மூலம் மூச்சை உள்ளிழுக்கும் தசைகளை வலுவாக்கும். `ஐஎம்எஸ்டி’ பயிற்சி பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால், சில குறிப்பிட்ட பிரச்னைகளைக்கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே இந்தப் பயிற்சியை அளித்தார்கள். `நலமாக இருக்கும் பொதுமக்களும் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் அவர்களது இதயம் வலுவாகும்’ என்று இப்போது கண்டறிந்திருக்கிறார்கள். `ஆனால், `ஐஎம்எஸ்டி’ பயிற்சியை ஒருவர் தானாகவே தொடங்கிவிடக் கூடாது’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். முதலில் அவர் தன்னுடைய மருத்துவரிடம் இது பற்றிப் பேச வேண்டும். அவருடைய உடல்நிலைக்கு இந்தப் பயிற்சி உகந்ததுதானா என்று மருத்துவர் தீர்மானித்த பிறகே பயிற்சியைத் தொடங்கலாம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிகரெட்டைவிட குப்பை உணவே கேடு!
ஒருவர் சிகரெட் புகைக்கிறார். இன்னொருவருக்குப் புகைப்பழக்கம் இல்லை, ஆனால் குப்பை உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார். இவர்கள் இருவரில் யார் அதிக ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

`புகைப்பழக்கம் தீமையானது என்பதில் ஐயமில்லை; ஆனால், ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் அதைவிடத் தீமையானது’ என்கிறது சமீபத்திய ஆய்வு. 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு `த லேன்செட்’ (The Lancet) என்ற சர்வதேச மருத்துவ இதழில் வெளியாகியிருக்கிறது. ஆரோக்கியமற்ற உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது பெரிய ஆபத்து. குறிப்பாக, முழு தானியங்கள், பழங்களை அதிகம் சாப்பிடாதவர்களும், சோடியத்தை அளவுக்கதிகமாக உணவில் சேர்த்துக்கொள்பவர்களும் பல பிரச்னைகளைச் சந்திப்பார்கள். அதேபோல், பதப்படுத்தப்பட்ட மாமிசம், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், `டிரான்ஸ் ஃபேட்டி’ (Trans Fatty) அமிலங்களைக்கொண்ட உணவு வகைகள் போன்றவற்றைக் குறைவாகச் சாப்பிடுவது நல்லது.

சத்தான உணவைக் கண்டறியும் மொபைல் செயலி!
ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், `எந்த உணவில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன, எவையெல்லாம் நம் உடலுக்குத் தேவை என்று எப்படித் தெரிந்துகொள்வது... இதற்காக ஒவ்வொரு வேளையும் ஓர் உணவியல் நிபுணரைத் தேடிப்போக முடியுமா... அல்லது அவர் தரும் பட்டியலை மனப்பாடம் செய்து அதன்படி சாப்பிட முடியுமா?’ என்ற கேள்வி நம் எல்லோருக்கும் எழும்.

இது போன்ற சிரமங்களைத் தீர்ப்பதற்காகத் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்துகிறது `கேலரி மமா’ (Calorie Mama) என்ற மொபைல் செயலி. இந்தச் செயலி உங்கள் செல்பேசியில் இருந்தால் போதும், எந்த உணவையும் சாப்பிடுவதற்கு முன்னர் அதை இந்தச் செயலியில் படம் பிடித்துக்கொள்ள வேண்டும். உடனே, `ஃபுட் ஏஐ’ (Food AI) என்ற செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் அந்த உணவைத் தானாகவே அடையாளம் கண்டு அதிலுள்ள சத்துகள் மற்றும் கலோரிகளைப் பட்டியலிட்டுவிடும். இதில் இந்திய உணவுகளும் வருகின்றன; ஆனால், அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பதில்லை. இந்தியர்கள் பலர் இதைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால்தான் தோசை, இட்லி, சப்பாத்தியையெல்லாம் சரியாக அடையாளம் காணும்போல!

சர்க்கரை பானங்களால் உடல் பருமன் ஆபத்து!
இரண்டு முதல் ஐந்து வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை அதிகரித்துவருகிறது. எனவே, இதைச் சரிசெய்ய என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால், இந்தப் பிரச்னைக்கான காரணம் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிடுவதாகச் சொல்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. `அகாடமிக் பீடியாட்ரிக்ஸ்’ (Academic Pediatrics) என்ற பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வின்படி, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சர்க்கரை அதிகமுள்ள பானங்களை நிறைய அருந்துவதால், அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்தில் உடல் பருமன் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிகிறது. அதேபோல், ஒரு குழந்தை இரண்டு வயதுவரை சர்க்கரை அதிகமுள்ள பானங்களை அதிகமாகக் குடித்துவந்தாலும் இதே பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த ஆய்வில் பங்கேற்ற பல பெற்றோர்களுக்கு, எந்தெந்த பானங்களில் சர்க்கரை அதிகமாகச் சேர்க்கப்படுகிறது என்பது தெரியவில்லை. சர்க்கரையால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, இது பற்றிய விழிப்புஉணர்வை உண்டாக்குவதுதான் அனைவருக்கும் நன்மை தரும்.
என்.ராஜேஷ்வர்