Published:Updated:

ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!

ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!

ஸ்ரீகுமார் ராகவன்,எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்ஹெல்த்

ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!

ஸ்ரீகுமார் ராகவன்,எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்ஹெல்த்

Published:Updated:
ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!

``தசைப்பிடிப்பு... வயது பாகுபாடின்றி எல்லோருக்கும் வரும் பொதுவான பிரச்னை என்பதால், இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஆனாலும், எப்போதும் இது எளிதான பிரச்னையாக இருக்காது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். சில நேரங்களில் இது மிகத் தீவிரமான பிரச்னையின் அறிகுறியாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன’’ என்கிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீகுமார் ராகவன். தசைப்பிடிப்பு குறித்து அவர் தரும் விளக்கங்களைப் பார்ப்போம்.

ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!

“காலின் ஆடுசதைப் பகுதியில் வலி மற்றும் வீக்கம், நடந்தால் வலி, வீக்கம் அதிகமாவது மற்றும் ஆடுசதைப் பகுதியைத் தொட்டாலே வலிப்பது, கால் மரத்துப் போவது, காலின் வீக்கமுள்ள பகுதி மிகவும் இறுக்கமாக இருப்பது, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரைச் சந்திப்பது நல்லது. ஏனென்றால், மேற்சொன்ன அறிகுறிகள் அந்தப் பகுதியில் ஏற்படும் ரத்தம் உறைதலின் (Blood Clot) அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!



உதாரணமாக கார், பஸ், விமானத்தில் ஒருவர் நீண்ட தூரம் பயணம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பயணம் முடிந்து கீழே இறங்கியதும், ஆடுசதையில் வலி, வீக்கம், மரத்துப்போவது போன்ற உணர்வுகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரைச் சந்திப்பது நல்லது. நீண்டதூரப் பயணத்தின்போது உட்கார்ந்துகொண்டே பயணம் செய்தால், கால்வலி மற்றும் மூட்டுகளில் வலி வருவது சகஜம். அது பயப்படக்கூடிய தீவிரமான பிரச்னை இல்லை. என்றாலும், ஆடுசதையில் வலி, வீக்கம் வந்தால் அந்த இடத்தில் ரத்தம் உறைந்திருக்கிறது என்று அர்த்தம். இதைக் கண்டுகொள்ளாமல்விட்டுவிட்டால் உடலில் ரத்தச் சுழற்சி நடக்கும்போது உறைந்த ரத்தம் இதயத்துக்கோ, இதயத்திலிருந்து  மூளைக்கோ செல்லும்போது மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம்கூட இருக்கிறது. அதனால்தான் `ஆடுசதையில் வலி, வீக்கம், மரத்துப்போவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், அலட்சியம் காட்டாமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்’ என்கிறோம்.

ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!

நம் கால் ஆடுசதையின் மேற்பரப்பிலுள்ள `சூப்பர்ஃபிஷியல் வெயின்’ (Superficial Vein) எனப்படும் நரம்பில் ரத்தம் உறைந்தால் வலி, வீக்கத்துடன் பிரச்னை முடிந்துவிடும். பெரிய பாதிப்பு இருக்காது என்றாலும், ஆடுசதையின் ஆழமான பகுதியிலிருக்கும் `டீப் வெயின்’ (Deep Vein) எனப்படும் நரம்பில் ரத்தம் உறைந்தால்தான் பிரச்னையே. இந்த இடத்தில் ரத்தம் உறையும்போது வலி, வீக்கம் உண்டாகும். ஓரிரு நாள்களில் வலியும் வீக்கமும் குறைந்தால்கூட உறைந்த ரத்தம் அந்த இடத்தில் அப்படியே இருக்கும். சம்பந்தப்பட்ட நபரும் இயல்பாக இருப்பார். ஆனால், அவர் நடக்கும்போது ரத்தச் சுழற்சி ஆரம்பிக்கும். அப்போது உறைந்துபோன ரத்தம் திடீரென்று `டீப் வெயின்’ வழியாக இதயத்துக்குச் செல்லும். அங்கிருந்து நுரையீரலுக்கும் பயணமாகும். இதனால் மாரடைப்பு உண்டாகும் வாய்ப்பு உருவாகும். அதனால்தான் ஆடுசதையை `உடலின் வெளிப்பகுதியிலிருக்கும் இதயம்’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது.

வளரும் குழந்தைகள் உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது விளையாடும்போதோ ஆடுசதையில் வலி ஏற்படும்; ஆனால் வீக்கம் ஏற்படாது. இது இயல்பான ஒன்று. ஆனால், சற்று வயதானோருக்கு ஆடுசதையில் வலி, வீக்கம் ஏற்படும்போதுதான் அதைக் கூடுதலாக கவனிக்க வேண்டும். ஆண்களைவிட, பெண்களுக்கு ஆடுசதைப் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மிகவும் பருமனான உடல்வாகுள்ள பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆடுசதையில் ரத்தம் உறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இயக்கங்கள் எதுவும் இல்லாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் ஆடுசதையில் பிரச்னை ஏற்படலாம். குறிப்பாக, காலில் அடிபட்டு நீண்ட நாள் மாவுக்கட்டு போட்டு ஓய்விலிருப்பவர்கள் அதன் பிறகு குணமாகி நடக்க ஆரம்பிக்கும்போது, ரத்தம் உறைவதால் அவர்களது ஆடுசதையில் வீக்கமும் வலியும் ஏற்படலாம். எனவே, இது போன்ற நேரங்களில் மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

புகைபிடிப்பவராக இருந்தால், ஆடுசதைப் பிடிப்பை அலட்சியம் செய்யக் கூடாது. தீவிர  புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஆடுசதையில் வலி மற்றும் வீக்கம் வருவதுடன் காலின் நிறம் நீலமாக மாறும்; நடக்கும்போது வலி அதிகமாகும்; நின்று, நின்று நடக்கவேண்டியிருக்கும். இதயத்தில் அடைப்பு ஏற்படுவதுபோல `ஆர்ட்டெரி’ (Artery)  எனப்படும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்தால், இது போன்ற பிரச்னைகள் உண்டாகும். எனவே, புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள், ஆடுசதையில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை அலட்சியம் செய்யக் கூடாது.

ஆடுசதையில் பிடிப்பா... அலட்சியம் வேண்டாம்!

இந்தத் தசைப்பிடிப்பு பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் தாக்கும். என்றாலும், இளவயதினருக்கு ஏற்படும் கால்வலிப் பிரச்னைகள் சில நேரங்களில் ஆபத்தான ஒன்றாக மாற வாய்ப்பிருக்கிறது. அதுவரை சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைக்கு கால்வலி, காலை ஊன்றி நடக்கவே முடியாமல் இருப்பது போன்றவற்றால் பாதிக்கப்படுவதோடு கூடவே காய்ச்சலும் ஏற்பட்டால், உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும். `ஆஸ்டியோமைலிட்டிஸ்’ (Osteomyelitis) எனப்படும் எலும்புகளில் ஏற்படும் தொற்றாகக்கூட இது இருக்கலாம். வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டாலும், குழந்தைகளுக்கு ஆடுசதையில் வலி அல்லது மற்ற இடங்களில் தசைப்பிடிப்பு ஏற்படலாம். வயதானவர்களுக்கு ஆடுசதையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்து, அந்தப் பகுதியைத் தொட்டுப் பார்த்தால் இறுக்கமாக இருக்கும். வயதானவர்களுக்கு ஆடுசதையில் பிடிப்பு ஏற்பட்டால், காலை மடக்கி நீட்டச்  சொல்ல வேண்டும். அடுத்து எந்தக் காலின் ஆடுசதையில் பிடிப்பு ஏற்பட்டிருக்கிறதோ, அந்தக் காலின் பாதத்தை மேலும் கீழும் ஆட்டச் சொல்ல வேண்டும். பிறகு ஏதேனும் ஒரு வலி நிவாரணி மருந்தை ஆடுசதைப் பகுதியில் மென்மையாகத் தடவினாலே சற்று நேரத்தில் நிவாரணம் கிடைத்துவிடும். பொதுவாக, ஆடுசதையில் பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் 30 விநாடிகள் முதல் அதிகபட்சம் ஒரு நிமிடம்வரை மட்டுமே வலி தீவிரமாக இருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்துவிடும். வலி தொடர்ந்து தீவிரமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டியது அவசியம். தசைப்பிடிப்புடன் மூச்சுத்திணறல், தலைவலி, மயக்கம், நெஞ்சுவலி போன்றவை சேர்ந்திருந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள், பேருந்து, விமானத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி நீண்டதூரப் பயணம் மேற்கொள்பவர்கள் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். 30 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். கார் ஓட்டுபவர்கள் பிரேக்கை அழுத்தி, அழுத்தி விடுவதைப்போல உட்கார்ந்திருக்கும்போது பாதங்களை அவ்வப்போது மடக்கி நீட்டவேண்டும். உடலில் கொழுப்பு அதிகம் சேரும்போது `ஆர்ட்டெரி’ ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.’’

சு.கவிதா

தசைப்பிடிப்பு... என்ன செய்யலாம், செய்யக் கூடாது?

சைப்பிடிப்பு என்பது காலில் ஆடுசதை, தொடை, கணுக்கால், முன்கால், பின்கால் என்று எந்த  இடத்திலும் ஏற்படும். வியர்க்க வியர்க்க ஓடினாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைவு காரணமாக தசைப்பிடிப்பு உண்டாகும். நீர்ச்சத்துக் குறைவால் தசைப்பிடிப்பு ஏற்பட்டால், எலெக்ட்ரால் போன்றவற்றை அருந்தி நீரிழப்பைச் சரிசெய்து, தசைப்பிடிப்பிலிருந்து  நிவாரணம் பெறலாம். வெயில் காலம் என்பதால் அதிகமாக வியர்க்கும். வியர்வை, தாகத்துடன் தசைப்பிடிப்பும் இருந்தால், உடலில் நீர்ச்சத்து குறைந்துவிட்டது என்று அர்த்தம். அப்போது எலெக்ட்ரால் பருகி, நீரிழப்பைச் சரிசெய்தால் தசைப்பிடிப்பு சரியாகிவிடும். அதேபோல சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அடுத்தது தசைப்பிடிப்பும் ஏற்படலாம். எனவே, வெயில் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரு நாள் திடீரென்று நீண்ட தூரம் நடக்கிறீர்கள் அல்லது புதிதாக சைக்கிளிங் செய்ய அல்லது ஜிம்முக்குச் செல்ல ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மறுநாள் காலில் வலி இருக்கும். தசைகளை அழுத்தினாலும் வலி தெரியும். இது தசைப்பிடிப்பு அல்ல. திடீரென்று பழக்கமில்லாத ஒரு வேலையைச் செய்வதால், உடலில் லாக்டிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் உண்டாகும் வலி. அதுமட்டுமல்ல, தசைப்பிடிப்பு என்பது இரண்டு கால்களிலும் ஏற்படும். இதனால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால்,  தசைப்பிடிப்பைச் சரிசெய்யப் பலர் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பார்கள். அது சில நேரங்களில் வீக்கத்தை அதிகப்படுத்திவிடும். எனவே, குளிர் ஒத்தடம் கொடுப்பதுதான் எப்போதுமே சிறந்தது.

பருமனான பெண்கள் உஷார்!

டல் பருமன் பிரச்னையுள்ள பெண்களும், தைராய்டு, சர்க்கரைநோய் மற்றும் நீர்க்கட்டி பிரச்னையுள்ள பெண்களும் அடிக்கடி தசைப்பிடிப்பால் பாதிக்கப்படுவார்கள். அதேபோல 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருவருக்குமே அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டால், மக்னீசியம் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையுடன் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல பி காம்ப்ளெக்ஸ் சத்துக் குறைபாட்டாலும் காலில் வலி ஏற்படலாம். வைட்டமின் ஈ, கால்சியம் போன்றவற்றின் சத்து குறைந்தாலும், தசைகளின் வலிமை குறைந்து தசைப்பிடிப்பு ஏற்படலாம்.