தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், கோடைக்காலத்தில் ஏற்படும் தலைவலிக்கு, சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களின் தாக்கம் நேரடியாக உடலில் படுவதுதான் காரணம். சூரிய ஒளி உடலில்படுவதால், உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதால் தலைவலி ஏற்படுகிறது. அதேபோல, இந்த வெயில் காலத்தில்தான் ‘மைக்ரேன்’ என்னும் ஒற்றைத் தலைவலி பிரச்னை அதிகரிக்கும்.

சூரிய ஒளி அதிக நேரம் தலையில்பட்டால், தலையின் உள்ளேயிருக்கும் ரத்தக்குழாய்கள் விரிவடைந்து, பக்கத்திலுள்ள நரம்புகளை அழுத்தி, தலைவலி ஏற்படும். உடல் உஷ்ணம் அதிகரித்து தாதுச்சத்துகள் குறைந்தாலும், தலைவலி வரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படித் தவிர்ப்பது?
* ஒரு நாளைக்கு மூன்று முதல் மூன்றரை லிட்டர்வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
* காபி, டீ போன்றவை டீஹைட்ரேஷனை ஏற்படுத்தும். எனவே, அவற்றை அருந்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

* புறஊதாக் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்க கூலிங் கிளாஸ் அணியுங்கள்.
* குளிர்ந்த நீரில் காலை, மாலை என இரு வேளையும் குளியுங்கள்.
* வெயிலில் செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிந்துகொள்ளுங்கள்.
* குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்த்துவிட்டு, மோர், பதநீர் போன்ற இயற்கை பானங்களை குடிக்க வேண்டும்.

* வெயில் காலத்தில் அதிக வியர்வை வெளியேறும்போது அதனுடன் சோடியம் போன்ற தாதுச்சத்துகளும் வெளியேறிவிடும். இதைத் தவிர்க்க இளநீர் குடிக்கலாம்.
* கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்தாலும் சிலருக்குத் தலைவலி ஏற்படும். எனவே, வெயில் உச்சத்தில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம்.
ஜி.லட்சுமணன்