Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 33வி.ராமசுப்பிரமணியன் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

நாம் அறிந்துவைத்திருக்கவேண்டிய மற்றுமொரு தொற்றுநோய் மலேரியா. உலகில் அதிக உயிர்களை பலிவாங்கும் நோய்களின் பட்டியலில் இதுவும் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நோய் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இதன் ருத்ர தாண்டவம் பெரும் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. ஏராளமான குழந்தைகளும் கர்ப்பிணிகளும் இதற்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தொற்று நோய்களின் உலகம்!

பொதுவாக, மலேரியாவைப் பரப்பும் கிருமிகளில் நான்கு வகைகள் உள்ளன. இப்போது புதிதாக ஒரு கிருமி கண்டுபிடிக்கப்பட்டிருகிறது. ‘பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்’ (Plasmodium vivax) கிருமிதான் பொதுவானது. இதன் தாக்கம் மிதமாக இருக்கும். மிகவும் கடுமையான விளைவை ஏற்படுத்தக்கூடிய கிருமி, `பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம்’ (Plasmodium falciparum). இவை இரண்டும்தான் இப்போது அதிகமாக மக்களை பாதிக்கின்றன. வைவாக்ஸ் கிருமி, க்ளோரோக்குயின் (Chloroquine) வகை மாத்திரைகளுக்குக் கட்டுப்படும். ஃபால்ஸிபேரம் கிருமி,  க்ளோரோக்குயின் மாத்திரைகளுக்குக் கட்டுப்படாது.

மூன்றாவது கிருமியின் பெயர், ‘பிளாஸ்மோடியம் ஒவேல்’ (Plasmodium ovale). நான்காவது வகை கிருமி, ‘பிளாஸ்மோடியம் மலேரியே’ (Plasmodium malariae). சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட ஐந்தாவது வகைக் கிருமி, ‘பிளாஸ்மோடியம் நோலசி’ (Plasmodium knowlesi). மலேசியா, தாய்லாந்து பகுதிகளில் இந்தக் கிருமி கண்டறியப்பட்டிருக்கிறது. இது வைவாக்ஸ் கிருமியைப் போன்றது. பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தொற்று நோய்களின் உலகம்!



ஆக, மலேரியாவை உருவாக்குபவை, இந்தக் கிருமிகள்தாம். இவை ‘அனோபிலஸ்’ என்ற கொசுக்கள் மூலம் பரவுகின்றன. அனோபிலஸ் கொசுக்களில் பெண் கொசுக்களே இந்த நோயைப் பரப்பும் வேலையைச் செய்கின்றன. மலேரியாவால் பாதிக்கப்பட்ட  ஒருவரைக் கடிக்கும் அனோபிலஸ் கொசுக்கள், அவரிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சி, பசியாறிவிட்டு, சிறிதளவைச் சேமித்துவைக்கும். மற்றொருவரைக் கடித்து ரத்தம் உறிஞ்சும்போது, ஏற்கெனவே சேமித்துவைத்திருக்கும் கிருமித்தொற்றுள்ள ரத்தத்தை உள்ளே செலுத்திவிடும். இப்படித்தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மலேரியா பரவுகிறது. ரத்தத்தில் கலக்கும் கிருமி, கல்லீரலில் போய் வசதியாக அமர்ந்துகொள்ளும். அங்கிருந்து பெருகி, மீண்டும் ரத்தத்தில் ஊடுருவி உடலை கன்ட்ரோல்செய்யத் தொடங்கிவிடும். கல்லீரலிலிருக்கும் கிருமி, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை குட்டிகளைப் போடும். அவ்வப்போது அமைதியாகிவிடும். குட்டிகளைப் போடும்போது அவற்றை அழிக்க, உடல் தன் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாகப் பயன்படுத்தும். அந்த நேரத்தில் கடுமையான காய்ச்சலும் குளிரும் ஏற்படும்.

‘வைவாக்ஸ்’ கிருமியும், ‘ஒவேல்’ கிருமியும் 48 மணி நேரத்துக்கு ஒரு முறை இப்படி குட்டிகளைப் போடும். ‘ஃபால்ஸிபேரம்’ கிருமி, 24 மணி நேரத்துக்கு ஒரு முறையும், ‘மலேரியே’ கிருமி 72 மணி நேரத்துக்கு ஒரு முறையும் இப்படி குட்டிகளைப் போட்டுத்தள்ளும். உதாரணமாக, வைவாக்ஸ் கிருமியால் ஒருவருக்கு மலேரியா வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கிருமி, குட்டிகள் போடும் சமயத்தில் கடகடவென்று உடல் நடுங்கும் அளவுக்குக் குளிர் ஏற்படும். காய்ச்சல் கொதிக்கும். எட்டு முதல் பத்து மணி நேரத்துக்கு இந்தத் தாக்கம் இருக்கும். அடுத்த 48 மணி நேரம் நன்றாக இருப்பார். மீண்டும் உடல் நடுங்கும். இதுதான் மலேரியா சைக்கிள். 

தொற்று நோய்களின் உலகம்!

`கடுமையான காய்ச்சல் டாக்டர்... குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு விட்டுருச்சு. நானும் குளிச்சுட்டு ஆபிஸ் போயிட்டேன். ஆனா, திரும்பவும் அதைவிட அதிகமான காய்ச்சல்...’ என்று என்னிடம் நிறைய பேர் வருவார்கள். எல்லாம் கிருமிகள் செய்யும் மாயம். சமீப காலங்களில் வேறொரு வகையான பாதிப்பைப் பார்க்கிறேன். ஒரேவகை கிருமிதான். ஒன்று, 10 மணிக்கு குட்டி போடுகிறது. இன்னொன்று 12 மணிக்கு குட்டி போடுகிறது. ஆக, கிருமியின் தன்மை மாறிக்கொண்டேயிருக்கிறது. தாக்கத்தின் இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது.

இந்தக் கிருமிகள் சிறுக சிறுகப் பெருகி, ஒரு கட்டத்தில் ரத்தத்துக்குள் நுழைந்து மிக பலமான தாக்குதலை நடத்தும். சிவப்பு உயிரணுக்களில் ஊடுருவி, அதற்குள் குட்டிகளைப் போடும். ஒரு கட்டத்தில் சிவப்பு உயிரணுக்கள் வெடித்துச் சிதறி அழிந்துவிடும். ஹீமோகுளோபின் குறைந்துகொண்டே வரும்.

 ஃபால்ஸிபேரம்  இன்னும் விபரீதமான வேலைகளைச் செய்யும். அது பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

- களைவோம்...