ஹெல்த்
தொடர்
Published:Updated:

டாக்டர் நியூஸ்

டாக்டர் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்

தகவல்

டாக்டர் நியூஸ்

குளூக்கோஸைக் கண்டறிய இனி வியர்வை போதும்!

டலில் சிறு காயங்கள் ஏற்படும்போது, பேண்ட் எய்டு போடுவார்கள். அந்தக் காயத்தின் மீது வெளிக்காற்றோ, கிருமிகளோ படாமலிருப்பதுடன், காயத்தை விரைவில் ஆற்றவும் இது உதவும். அதே பேண்ட் எய்டைப் பயன்படுத்தி, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்க-சீன ஆய்வாளர்கள். சமீபத்தில் `த ஜர்னல் ஆஃப் அனாலிடிகல் கெமிஸ்ட்ரி’ (The Journal of Analytical Chemistry) என்ற இதழில் இந்த ‘ஸ்மார்ட் பிளாஸ்டர்’ பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த பிளாஸ்டரில் நான்கு சிறிய குழிகள் இருக்கின்றன. அவற்றில் பல்வேறு சாயங்கள் நிரப்பப்பட்டிருக்கும். பிளாஸ்டரை ஒருவரது உடலில் ஒட்டும்போது, அவரது வியர்வை இந்தக் குழிகளில் நிரம்பி, சாயங்களின் நிறத்தை மாற்றும். அதன் மூலம் அவருடைய குளோரைடு, குளூக்கோஸ், கால்சியம் மற்றும் பி.ஹெச் அளவுகளைக் கண்டறியலாம். வலி நிறைந்த ரத்தப் பரிசோதனைகளுக்கு இந்தக் கண்டுபிடிப்பு ஒரு மாற்றாக அமையும்.

டாக்டர் நியூஸ்

புகைப் பழக்கத்தை நிறுத்த உதவும் நறுமணங்கள்!

பு
கைபிடிப்பது உடலுக்குப் பல்வேறு தொந்தரவுகளைத் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அந்தப் பழக்கத்தை விட முடியாமல் தவிப்பவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஏதோ ஒரு முறையைக் கையாண்டு புகைபிடிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திய பலர், சில நாள்களுக்குப் பிறகு அதே பழக்கத்துக்குத் திரும்பிவிடுவார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைப்பார்கள். `இந்தக் ‘கெட்ட’ புகையை நிறுத்தும் வல்லமை, சில ‘நல்ல’ வாசனைகளுக்கு உண்டு’ என்கிறது அமெரிக்கன் சைக்கலாஜிக்கல் அசோசியேஷன் நடத்திய ஆய்வு. அதாவது, சாக்லேட், ஆப்பிள், பெப்பர்மின்ட், எலுமிச்சை, வெனிலா போன்ற நறுமணங்களை நுகரும்போது, உடனே சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற துடிப்பு பெருமளவு குறைகிறதாம். சுமார் ஐந்து நிமிடங்கள்வரை இந்தக் கட்டுப்பாட்டைத் தக்கவைத்திருக்க முடிகிறதாம். புகைபிடிக்கும் பழக்கத்தை உண்மையிலேயே விட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம்.

டாக்டர் நியூஸ்

காபிக்கொட்டையின் மணம் காபி குடித்ததற்குச் சமம்!

‘மி
கவும் சோம்பலாக இருக்கிறது, சரியாகச் சிந்திக்க முடியவில்லை, ஒரு காபி (அல்லது டீ) சாப்பிட்டுவிட்டு வருகிறேன்’ என்ற சொற்றொடரை அநேகமாக தினமும் கேட்கிறோம். ‘காபி சாப்பிட்ட பிறகுதான் வேலை சுறுசுறுப்பா நடக்குது’ என்பவர்களைப் பார்க்கிறோம். உண்மையில், காபிக்கு அப்படியொரு சக்தி உண்டா... அது என்ன சுறுசுறுப்பை வழங்கும் மருந்தா... `இல்லவே இல்லை’ என்கிறது `சயின்ஸ் டைரக்ட்’ அமைப்பு நடத்திய ஆய்வு. ‘நெடுநாளாக காபி குடிப்பவர்களின் மூளை அந்தத் தூண்டுதலுக்குப் பழகிவிடும். ஆகவே, காபி குடித்ததும், எல்லாம் ஒழுங்காக நடப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. அவ்வளவுதான். உண்மையில் காபி குடிக்காமலேயே அந்தத் தோற்றத்தை உருவாக்குவது சாத்தியம்தான்’ என்கிறார்கள் இந்த ஆய்வை நடத்திய நிபுணர்கள்.

டாக்டர் நியூஸ்

அது எப்படிச் சாத்தியம்?

ருவர் நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட கடையில் காபி குடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். என்றைக்காவது ஒருநாள் அவர் அந்தக் கடைவழியாக நடந்து செல்லும்போது, அங்கு தயாராகும் காபியின் மணத்தை நுகர்ந்தாலே காபி குடித்ததுபோல மூளையில் மாற்றம் நிகழ்ந்துவிடுமாம். அது மட்டுமல்ல,  காபிக்கொட்டைகள் அரைக்கப்படுவதைப் பார்த்தாலோ அல்லது காபிக் கடையின் விளம்பரத்தைப் பார்த்தாலோ மூளையில் காபி குடித்ததற்கு இணையான மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றனவாம். `ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பார்கள். ஆனால், ஏட்டு காபி சுறுசுறுப்புக்கு ஆகும்போல!

டாக்டர் நியூஸ்

நடுக்காலை நேரமே உடற்பயிற்சிக்கு உகந்தது!

`உ
டற்பயிற்சி எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?’ என்று கேட்டால், `இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா... அதிகாலையிலோ, மதியத்திலோ அல்லது மாலையிலோ எப்படியாவது உடற்பயிற்சி செய்தால் போதாதா?’ என்று நீங்கள் சொல்லலாம். இந்த விஷயத்தில் நாம் அப்படியெல்லாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. `இந்த நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது’, `இத்தனை மணிக்குள் சாப்பிட்டால் அதிகபட்ச பலன்கள் கிடைக்கும்’ என்றெல்லாம் கூறப்படுகிறது. அதேபோல், `இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், அதன் நன்மைகளை முழுமையாகப் பெறலாம்’ என்று ஒரு கணக்கு இருக்கத்தானே செய்யும்.இது பற்றிய ஓர் ஆய்வை நிகழ்த்தியிருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், `காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது’ என்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நாமெல்லாம் அலுவலகங்களில் சுறுசுறுப்பாக வேலைபார்க்கும் நேரமான பள்ளி, கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் நடுக்காலை நேரம்தான் உடற்பயிற்சிக்கு உகந்ததாம். இதன் மூலம் செல்களுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைப்பதுடன் உடலில் புத்துணர்வு அதிகரிக்கிறதாம். கார்போஹைட்ரேட் இன்னும் நன்றாகப் பயன்படுத்தப்படுமாம். கொழுப்பு, அமினோ அமிலங்கள் சிறப்பாக உடைக்கப்பட்டு ஆற்றலைத் தருமாம்.

டாக்டர் நியூஸ்

ஒல்லி, குண்டு... ஜீன்கள் செய்யும் விந்தை!

சி
லர் எப்போதும் ஒல்லியாகவே இருப்பார்கள். கிடைப்பதைச் சாப்பிடுவார்கள்; அதுவும் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவார்கள். அதனால் எடைபோடாமல் நலத்துடன் இருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் ‘கொழுக் மொழுக்’ பேர்வழிகளுக்கு வியப்பு உண்டாகும். ‘நாங்க எடையைக் குறைக்கப் படாதபாடு படுறோம். சாப்பாட்டைக் கட்டுப்படுத்தணும்னு நினைக்கிறோம். ஆனா முடியலை. இவங்க மட்டும் இயற்கையா டயட்டுல இருக்காங்களே... அது எப்படி?’ என்ற கேள்விக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். `MC4R’ என்ற ஜீன்தான் இதற்குக் காரணமாம். பொதுவாக, ஒருவர் உணவை உட்கொள்ளும்போது `MC4R’ என்ற ஜீன் தனது செயலைச் செய்கிறது. ‘வயிறு நிரம்பிவிட்டது’ என்று சிக்னல் கொடுத்ததும், அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறார்கள். ஆனால், சிலரிடம் இந்த `MC4R’ என்ற ஜீன் சரியாகச் செயல்படுவதில்லையாம். அதனால், தாங்கள் முழுக்கச் சாப்பிட்டுவிட்டோம் என்பதை அறியாமல் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். வேறு சிலரிடம், இந்த `MC4R’ ஜீன் எப்போதும் தொடர்ந்து செயல்படுகிறது; அதனால், அவர்கள் வயிறு நிரம்பிவிட்டதுபோலவே உணர்கிறார்கள்; மேலும் மேலும் சாப்பிடாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். ஆக, ஒருவருடைய ஜீன்ஸ் இறுக்கிப் பிடிப்பதற்கும், இன்னொருவரின் ஜீன்ஸ் `தொளதொள’ என்று இருப்பதற்கும் காரணம், ஜீன்கள்தானோ?

டாக்டர் நியூஸ்

தூக்கம் பற்றிய தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!

நி
யூயார்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 8,000-க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஆய்வுசெய்து, அவற்றில் தூக்கம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் தவறான நம்பிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

டாக்டர் நியூஸ்* ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் தூங்கினால் போதும். (தவறு. ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.)

* குறட்டைவிடுவதால் எந்த ஆபத்தும் இல்லை. (தவறு. குறட்டைப் பிரச்னையைத் தீர்க்க மருத்துவரைச் சந்திப்பது நல்லது.)

* கொஞ்சம் மது அருந்தினால் நன்றாகத் தூக்கம் வரும். (தவறு. மதுவால் ஆழமான தூக்கம் பாதிக்கப்படும்.)

* டி.வி பார்த்தால் நன்றாகத் தூக்கம் வரும் (தவறு. அது தூக்கத்தைத் தாமதப்படுத்தும்.)

* அலாரம் அடித்த பிறகும் தொடர்ந்து தூங்கினால், எந்தப் பிரச்னையும் வராது. (தவறு. விழிப்பு வந்த பிறகும் தொடர்ந்து படுத்திருப்பது பல்வேறு தொந்தரவுகளைத் தரும்.)

இனிமேல் இவற்றை யார் சொன்னாலும் நம்பாதீர்கள், ஒழுங்காகத் தூங்கி உடலைக் காத்துக்கொள்ளுங்கள்!

என்.ராஜேஷ்வர்