Published:Updated:

``ஜன்னலோரப் பயணங்கள்... மனஅழுத்தத்திலிருந்து விடுவிக்கும்!" - பாஸ்கர் சக்தி #LetsRelieveStress

பொதுவாக மனஅழுத்தம் என்பதே நாமாக ஏற்படுத்திக்கொள்வதே. ஒரு பிரச்னை என்றால், அதைப் பல்வேறு வடிவங்களில் யோசிக்கும்போது அந்தப் பிரச்னையின் தீவிரம் இன்னும் கூடிவிடும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில்தான் அதைக் கடந்துசெல்லமுடியும்.

``ஜன்னலோரப் பயணங்கள்... மனஅழுத்தத்திலிருந்து விடுவிக்கும்!" - பாஸ்கர் சக்தி #LetsRelieveStress
``ஜன்னலோரப் பயணங்கள்... மனஅழுத்தத்திலிருந்து விடுவிக்கும்!" - பாஸ்கர் சக்தி #LetsRelieveStress

`மெட்டி ஒலி’ தொலைக்காட்சி நெடுந்தொடருக்கு வசனம் எழுதியதன்மூலம் பெரும் கவனம் பெற்றவர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.`வெண்ணிலா கபடிக்குழு’, `அழகர்சாமியின் குதிரை’ போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணியாற்றினார். அந்த இரண்டு படங்களுமே வசனத்துக்காக அதிகம் பேசப்பட்டன. `பழுப்புநிற புகைப்படம்', `முயல்தோப்பு', `காற்று வளையம்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கும் பாஸ்கர் சக்தி, வாழ்க்கையில் தனக்கு மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அவற்றை எதிர்கொண்ட விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

``மனஅழுத்தம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியதே. என்னைப் பொறுத்தவரை மனஅழுத்தத்தை மிக எளிதாக அணுகுவேன். என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள் என்பதால், அவர்களுடன் பேசி சிரித்து, மகிழ்ச்சியாகக் கடந்துசெல்வேன். ஆகவே, எனக்கு மனஅழுத்தம் குறைவுதான். 

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது நான் ஒரு ஆஸ்துமா நோயாளி. பனிக்காலம் வந்தாலே எனக்குப் பிரச்னையாகிவிடும். மூச்சுவிட சிரமப்படுவேன். நண்பர்கள் பள்ளிக்குப் போகும்போது நான் மட்டும் வீட்டில் இருப்பேன். அதனால் மிகுந்த மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறேன். அப்போதெல்லாம் கதைப் புத்தகங்களை படிப்பது, ரேடியோவில் கிரிக்கெட் கமென்ட்ரி கேட்பது என என்னுடைய பொதுஅறிவை வளர்த்துக்கொண்டேன். அவை என் மனஅழுத்தத்திலிருந்து கடந்து செல்ல உதவியாக இருந்தன. உடல்நலமில்லையென்றாலும் மாத்திரை போட்டுக்கொண்டு கிரிக்கெட் விளையாடுவேன். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இந்த அணுகுமுறை மனஅழுத்தத்தை கடக்க எல்லோருக்கும் உதவுமென்று நினைக்கிறேன்.

படிப்பு முடிந்து, வேலைக்குப் போனபோது வேலை சார்ந்த மனஅழுத்தங்கள் வந்தன. நான் வேலையை வாழ்க்கையாகக் கருதியதில்லை. வாழ்க்கையின் ஒரு பகுதிதான் வேலை என்று நினைப்பேன். வேலை எனக்கு அழுத்தம் கொடுக்கும். அதை அன்றே முடித்துக்கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். முக்கியமாக சீரியல்களுக்கு வசனம் எழுதும்போது அந்த அழுத்தம் இருந்தது. ` ஐந்து காட்சிகள் வரும்படி எழுதிக்கொடுங்கள்’ என்பார்கள். முதல் நாள் இரண்டு மணி வரை விழித்திருந்து காட்சிகளை எழுதிமுடித்துவிட்டு தூங்கப்போயிருப்பேன். காலையில் வந்து `சார்.. இன்றைக்கு டபுள் யூனிட்.. டபுள் யூனிட்டுக்கும் எழுதுங்க’ என்று சொல்வார்கள். அவர்கள் அப்படிச்சொல்லும்போது கோபம் வரும்; மனஅழுத்தம் ஏற்படும். ஆனால், அதை எப்படியும் எழுதி, முடித்தாக வேண்டும். அதிலிருந்து வெளியே வர முடியாது. ஏனென்றால், அந்த வேலைக்காக நான் ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட சூழலில் வேலையை அழுத்தமாக நினைக்காமல், கடகடவென எழுத ஆரம்பித்துவிடுவேன். என்னுடைய பேனாவின் மை பேப்பரில் ஊறிக் காய்வதைப் பார்த்துக்கொண்டே எழுதும்போது எனக்கு அலுப்பு தெரியாது. காலையில் எழுந்து நடப்பது, நண்பர்களைச் சந்திப்பது என நானே மகிழ்ச்சியின் பாதைகளை தேடித்தேடிப் போவேன். அவைதான் எனக்கு மனஅழுத்தத்தைப் போக்கிக்கொள்வதற்கான வழிகளாக இருக்கும். 

பொதுவாக மனஅழுத்தம் என்பதே நாமாக ஏற்படுத்திக்கொள்வதே. ஒரு பிரச்னை என்றால், அதைப் பல்வேறு வடிவங்களில் யோசிக்கும்போது அந்தப் பிரச்னையின் தீவிரம் இன்னும் கூடிவிடும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில்தான் அதைக் கடந்துசெல்லமுடியும். அந்த நேரத்தில் பிரச்னையை நேருக்குநேராக எதிர்கொண்டால் போதும். அதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும்போது பிரச்னையின் கனத்தைவிட யோசிப்பதன் கனம்தான் அதிகமாக இருக்கும். இந்தப் புரிதல் வந்தபிறகு, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை அந்த நேரத்தில் மட்டுமே எதிர்கொள்ள பழகிக்கொண்டேன். எல்லா நேரமும் அதையே டிசைன் டிசைனாக யோசித்துக் கொண்டிருப்பதில்லை. 

இலக்கியக் கூட்டங்கள், புத்தகக் காட்சிகளுக்குச் செல்வது, நல்ல இசை கேட்பது போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல, விளையாட்டுகளைப் பார்ப்பது எனக்கு மிகப்பெரிய அவுட்லெட்டாக இருந்திருக்கிறது. வயது அதிகரித்தபோது எல்லாமே தற்காலிகமான விஷயங்கள்தாம் என்பதை அறிந்துகொண்டேன். 15 வருடங்களுக்கு முன்பு ஏதாவது ஒன்றை பெரிய பிரச்னையாக நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், இன்றைக்கு அது ஒரு பிரச்னையே இல்லை என்பது தெரியும். காலப்போக்கில் எல்லாம் அற்பமாகத் தோன்றுகிறது. எதற்காக இப்படி அலுத்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவம் ஒருகட்டத்தில் எல்லோருக்கும் வந்தாக வேண்டும். அந்தக் கண்ணோட்டத்தில் பெரும்பாலானோர் யோசிப்பதில்லை. அப்படி யோசித்தால் எந்தவொரு பிரச்னையிலிருந்தும் எளிதாக வெளியே வந்துவிடலாம். 

இயல்பாகவே உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினால், அதற்கான வாய்ப்புகளைத் தேடி நீங்கள் செல்வீர்கள். அது காலாற நடந்துபோவதாக இருக்கலாம். கூட்டம் நிறைந்த ஒரு தெருவின் ஓரமாக  நின்றுகொண்டு பலவிதமான மனிதர்கள் நடந்துபோவதை ரசிப்பதாக இருக்கலாம்.

ஒருமுறை திருவிழாவுக்குப் போனபோது ஒரு பெரியவர், `எதற்காக எல்லோரும் திருவிழாவுக்குச் செல்வதை விரும்புகிறார்கள் தெரியுமா, ஆயிரக்கணக்கான மக்களைப் பார்க்கும்போது இந்த உலகத்தில் நம்மைப்போல பிரச்னைகள் உள்ள பலர் இருக்கிறார்கள். நம்முடைய பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை என்பதை உணர்வதற்குத்தான்’ என்று சொன்னார். அப்படியாக நம்முடைய பண்டிகைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் மனஅழுத்தத்தை கடந்துசெல்வதற்கான ஒரு வழியாகவே பார்க்கிறேன். 

பேருந்து அல்லது ரெயிலின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணிப்பது மன அழுத்தத்திலிருந்து விடுபட துணைபுரியும். அது நமக்கு மிகப்பெரிய மனஅமைதியைக் கொடுக்கும். எனக்கும் அப்படித்தான் நடந்திருக்கிறது. அந்த நேரத்தில்தான் எனக்கு நிறைய ஐடியாக்கள் தோன்றியது. பயணம், இசை, விளையாட்டு, மக்களைச் சந்திப்பது, நண்பர்களோடு உரையாடுவது என எல்லாமே மன அழுத்தத்தைப் போக்கும் வழிகளே. ஆனால், பலருக்கும் இன்று மனஅழுத்தம் தரும் விஷயமாக சோஷியல் மீடியா உருவாகியிருக்கிறது. 

முகநூலில் ஒருவரது கருத்துக்கு மாறாக இன்னொருவர் ஒரு கருத்தைப் பதிவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுவிடுகிறது. அதுபோன்ற அழுத்தங்களை தவிர்க்கவேண்டும். அதேநேரத்தில் மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ள சோஷியல் மீடியாக்களைப் பயன்படுத்தமுடியும். அது நம் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கை அழுத்தம் தரக்கூடியது என்றாலும், அதைப் புரிந்து நடந்தால் மனஅழுத்தம் என்ற ஒன்று இல்லை.” என்கிறார் பாஸ்கர் சக்தி.