குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகளாவது, நான்  39 வயதிலேயே  ‘தங்கி’ இருந்திருப்பேன். `40 ஆயிடுச்சு’ என்று சொல்வதில் எனக்கும் பெரும் தயக்கம் இருந்ததுண்டு.  40 வயதைத் தொட்ட பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். வயதைக் கேட்டால், “லேட் 40ங்க” என்று நாகரிகமாகச் சொல்லும் அழகுப் பாட்டிகள் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1

“அங்கிள், 12-பி பஸ் போயிருச்சா?” என்று எங்கேனும் ஓர் இளைஞி கேட்டுவிட்டால் பதற்றம் சூழ்ந்துகொள்கிறது.வீட்டுக்கு ஓடிவந்து வழக்கமாக ஜட்டி பனியன் தொங்கப்போடப் பயன்படுத்தும் டிரெட் மில்லில் ஓடி, 5 கிலோ தம்புல்ஸை மூச்சிரைக்க நகர்த்தி, கை வீங்கி பனியனைக் கழற்றவும் மாட்டவும் ஆள்தேடிய வரலாறு பலருக்கும் இருக்கலாம். “அங்கிள்... என் அகராதியிலேயே இல்லாத, எனக்குப் பிடிக்காத அசிங்கமான வார்த்தையாக்கும்’’ எனக் கொக்கரிக்கும் புதுச் சித்தப்பன்கள் நகர்ப்புறத்தில் அதிகம். ஆம்!  நாற்பது,  அநேகமாய் நம்மில் பலருக்கும் பிடிக்காத வயதுதான்.  இருபதைக் கொண்டாடிய மாதிரி நாற்பதைக் கொண்டாடுவதில்லை யாரும். 

‘நாற்பது பிறந்தாலே நாயின் குணம்’ என்பார்கள். அதோடு, உடல் பற்றிய கவலை வேறு... இந்த வயதை அழகாக, ஆரோக்கியமாக, ஆனந்தமாக நகர்த்துவது எப்படி..?  இது ஒட்டுமொத்த உலகமும் யோசிக்கும் முக்கியக் கேள்வி. கடந்த ஆண்டு இறுதியில்கூட  உலக சுகாதார நிறுவனம் Global Health Challenges -2018 அறிக்கையில் “நாற்பதை ஒட்டியவர்களே நாள்பட்ட நோய்களில் அதிகம் சிக்குகிறார்கள்” என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வயோதிக வியாதிகள் எல்லாம் வாலிப வியாதியாக மாற்றம் கொள்ள, வாலிபர்கள் சிட்டுக்குருவி லேகியம் தேடிய காலம்போய், சிக்ஸ் பேக்குக்காக ஜிம்மைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

‘`நாற்பதில் மாஸ்டர் செக்கப் செய்யணும்ங்கிறது நம்ம சாங்கியம். செஞ்சே ஆகணும். இல்லைன்னா சாமி கண்ணைக் குத்தும்” என ஆபீஸில் பக்கத்து சீட் பெண் யதேச்சையாகச் சொல்லித்தொலைக்க, “சார்! நீங்க ஏன் இந்த காம்போ ட்ரை பண்ணக் கூடாது?” என்று வளைக்கும் ரத்த சோதனைக் கம்பெனிகளின் மாஸ்டர் பிளானில் சிக்கி, ரிசல்ட்டைப் படிக்கும் மருத்துவர்,  ‘சிக்கிட்டாண்டா’ எனச் சிரிப்பது நாற்பதுகள் பார்க்கும் மருத்துவரிலக்கணம்.

‘`பெருசா ஒண்ணுமில்லை... சுகர் லைட்டா பார்டர் தாண்டுது, இனி சர்க்கரை வேணாம்’னு சொன்ன மாத்திரத்தில், டாக்டர் பாகிஸ்தான் ராணுவம் போலாவதும், நாம் அந்தரத்திலிருந்து விழுந்த அபிநந்தன் போலாவதும் இயல்புதான். அதோடு, “சிறுநீரில் லேசா புரதம் காட்டுது... பி.பி இருக்கா என்ன?” எனக் கேட்கையில் இதயம் எக்குத்தப்பாக எகிறிக்குதிக்கும்.

“இனி உப்பு வேண்டாம்... கொழுப்பைக் குறைச்சுக்கணும். அடுத்த தபா  நீங்க வர்ரச்ச ஆஞ்சியோ பண்ணிடலாம். அப்புறம், இந்த ஈரல் கொழுப்பு துளி கூடுதே, ஆல்கஹால் உண்டோ..?”

 என அடுக்கடுக்காக அடுக்க... மொத்த சீனும் மாறிப்போயிருக்கும். ஜீன்ஸ் பனியனைக் கழற்றிவிட்டு, தோஹாவின் அரபு வணிகர் மாதிரி ஆஸ்பத்திரி கவுன் மாட்டி, வாயில் 15-16 தெர்மாமீட்டரைச் செருகிவைத்திருப்பதுபோல ஃபீலிங் வரும். பினாயில் வாசத்தோடு ஊதா கவுன் போட்டு நர்ஸ் வேஷத்தில் மனைவியும், வார்டுபாய் மாதிரி அவசரத்தில் பிறந்த பத்தாங்கிளாஸும் நிற்பர். ஆமாம். நாற்பது, கண்ணசந்தால் நோயாளியாக்கும் வயது.

  நம் அப்பாவின் நாற்பதுகளில் இவ்வளவு நோய்ப் பிரச்னை இருக்கவில்லை.  சுகரெல்லாம் பணக்காரருக்கு வருகிற வியாதி. பசிக்கும்போது, முந்திரிப்பருப்பை வறுத்துத் தின்பவருக்கு வருவது. அவர்கள் பார்த்த,கேன்சர் வந்த இரண்டே இளைஞர்கள், ‘வாழ்வே மாயம்’ கமல்ஹாசனும், ‘பயணங்கள் முடிவதில்லை’ மோகனும் மட்டும்தான். இன்று, புதிய நோயாளி அட்டைபெறும் அத்தனை பேரும் அநேகமாய் நாற்பதுகள்தாம். 

ஏன்? என்ன நடக்கிறது இங்கே? 

 நம் முந்தைய  தலைமுறையின்  நாற்பதுக்கும்,  நம் நாற்பதுக்கும் வாழ்வியலின் ஒவ்வொரு கூற்றிலும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். இலையில் போடும் இட்லியிலிருந்து, காற்றில் இருக்கும் suspended particles அளவு வரை எல்லாவற்றிலும் வேறுபாடு. நம் அப்பாவின் நாற்பதில், ஏழாம் முறையாக ஷேவிங் செய்த 25 பைசா அசோக் பிளேடை எட்டாவது முறைக்காகப்பாதுகாப்பாய் பட்டர் ஷீட்டில் வைத்திருப்பார். 

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1

அந்தப் பணி முடிந்ததும், நம் பென்சில் சீவ, பத்திரமாய் ஒரு வருடம் வீட்டிலிருக்கும். நாம், நம் நாற்பதில் நான்கு பிளேடை ஒரே பிடியில் நிறுத்திச் சவரம் செய்யும் உலகத்தரமான அல்ட்ரா மாடர்ன் பிளேடை 350 ரூபாய்க்கு வாங்கி, பயன்படுத்திய மாத்திரத்தில் தூர எறிகின்றோம். தூர எறிந்த அந்த நெகிழிக் குப்பையின் ஏதோ ஒரு பாலிவினைல் கூறு, எங்கோ ஒருவனுக்கு ‘லிம்போமா’வைத் தருகிறது. ஒரு பெரும் கும்பலுக்கு ஏராளமாகக் காசை உருவாக்கித் தருகின்றது. சவரம் செய்த அசோக் பிளேடு முதல், சவாரி செய்த அட்லஸ் சைக்கிள் வரை அத்தனையும் அந்தக்கால நாற்பதுக்கு நலம் தந்தது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1

‘`தசரதனுக்கும் கேராதான் நரைச்சுதாக்கும்” எனத் தன் வெள்ளிப்பனி படர்ந்த காதோர நரையைப் பெருமையாகக் காட்டியவர்கள்  நம் அப்பாக்கள். ‘`ஷேவ் பண்றச்ச மீசையைக் கவனிக்க மாட்டீங்களா? லெப்ட் லேட்டரலா  3-4 முடி நரைச்சு என்னைக் கேவலப்படுத்துது” என்கிற ராஜமாதாவின் வசனத்தை உள்வாங்கி, “இந்த அம்மோனியா, பெட்ரோல் பென்சீன் எல்லாம் இல்லாத ஹேர் டை இருக்கா?” என நமது நாற்பது வயது கேட்டு அலைகின்றது. அநேகமாகப் பாதி வாழ்வைக் கடந்திருக்கின்றோம் என்ற உடலின் எந்த அடையாளத்தையும் நாம் பெற விரும்பவில்லை. அன்றைய  நாற்பதில் பூப்போட்ட சட்டைகூட ஆண்களுக்கு அசிங்கம். அதெல்லாம், நம்பியாருடன் தண்டால் பஸ்கி எடுக்கும் கபாலியும் மொட்டையும் மட்டுமே போடுவார்கள்; அல்லது திருந்துவதற்கு முன் வில்லன் போடும் சட்டை அது. இன்று முழங்காலில் கிழித்த ஜீன்ஸையும்,பையன் அலமாரியிலிருந்து எடுத்த சட்டையையும் நம்மால் போடமுடிகிறது. என் அம்மா ஒரே ஒருமுறை  நைட்டிபோட்டு (அப்போது அதற்குப் பெயர், மாக்ஸீ) பால் வாங்கப்போனதில் ஒட்டு மொத்தத் தெருவும் பதறிப்போய் புறணி பேசியதை மறக்கமுடியாது.  அந்த ஒருநாளைக்குப் பின் அவர் தன் 65 வயதில் ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஒருமுறை நைட்டி போட்டிருந்ததாக ஞாபகம். அன்றைய நாற்பது, அலுவலகம் விட்டுவந்த கையோடு, கைலியோ வேஷ்டியோ கட்டி ஈஸிசேரில் உட்கார்ந்து, காலையில் வந்த தினமணியில்  ‘ஏ.என் சிவராமன் என்ன எழுதியிருக்கார்?’ என்று படித்துக்கொண்டே, சுவரில் சாய்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளைக் கண்காணிக்கும்.  இன்றைய காட்சி வேறு. பதினேழு பாக்கெட் உள்ள, பையனுடைய டவுசரை எடுத்துப்போட்டுக்கொண்டு,சோபாவில் கோணலாகப் படுத்துக்கொண்டு, ‘வாட்ஸ் அப்பில் புளூ டிக் வந்துவிட்டதா?’ என மூன்று நிமிடத்துக்கு ஒருமுறை பார்த்துக்கொண்டு, ‘தொலைக்காட்சியில் டாட்டாவின்  ஷேர் ஏறுகிறதா?’ என்பதை என் நாற்பது கண்காணிக்கிறது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1

நம் அம்மாக்களின் நாற்பதுகளைவிட இன்றைய பெண்ணின் நாற்பது இன்னும் வலி நிறைந்தது. ஜன்னலுக்கு வெளியே உள்ள உலகத்தை அன்று அவள், பாரதிராஜாக்களிடமும், பாலகுமாரன்களிடமும் மட்டுமே கேட்ட றிந்திருந்தாள்.  சீறிவந்த கோபமும் அழுகையும் பதற்றமும் கடந்து போகும்வரை,தனக்கான பிரச்னைக்கும்,  நிற்கப்போகும் மாத விடாய்க்கும் உள்ள தொடர்பு அவளுக்குத் தெரியாது. ஸ்டோர் ரூமின் இருட்டில், எப்போதோ கிடைத்த அவசர முத்தத்தை அழித்துவிட்டு, ‘`வீட்ல வயசுக்கு வந்த புள்ள இருக்கான்னு தெரியாதா?”  எனப் போலியாகவோ, போதாமையாகவோ விலகிநின்று வெட்கி ஓடியதில் அவள் நலம் சற்று சரியாகவே இருந்தது. அல்லது சரியாக இருந்ததுபோல அவள் இருந்தாள்.

இன்றைய பெண்களின் நாற்பது அப்படியில்லை. என்னதான் ‘பாப்ஸ்மியரி’ல் கருப்பைப் புற்று இல்லை எனத் தெரிந்தாலும், மாதவிடாய்க்கு முந்தைய மார்பு கனத்தலிலும் அது ‘பைபிரோ அடினோமா’வா...  ‘மார்பகப் புற்றா’ என கூகுளில் தேடிக்கொண்டிருக்கிறாள். ‘கருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடணுமா? கசாயம் போடணுமா?’ எனப் பக்கத்து இருக்கைப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். “எங்கிட்ட பேசுறதுன்னா உங்களுக்கு டயம் இருக்காது; மனசு இருக்காது; ஏன் இப்ப மூஞ்சிகூட இருக்கிறதில்லை;

அவளோட பேசமட்டும் எல்லாமே இருக்கே. போன்லயே அப்படி இளிச்சு இளிச்சுப் பேசுறீங்க...” என நடுராத்திரியில் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் கணவனிடம் புலம்புவது, அவர்கள் இருவருக்கும் non communicable disease  பட்டியலில் கர்ச்சீப் போட்டுவைக்கும். 

‘கண்ணுக்குக் கீழே என்ன கறுப்பு வளையம்?’

‘முகத்தில் ஏன் இப்படி சாம்பல் திட்டு?’

‘என்னதான் யோகா, ஜிம்னு போனாலும் ஏன் சிசேரியன் தொப்பை சரிந்து தொங்குது?’

 ‘குறுக்கும் முதுகும் நோகுதே... இது கால்சியம் குறைவா, பிரசவத்துக்கு முதுகில் போட்ட இன்ஜெக்‌ஷன் வலியா?’

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1

‘எந்த நேரமும் கண்ணுக்குப் பக்கத்தில் வைத்து மகள் வாட்ஸ் அப்பில் நோண்டுகிறாளே, அந்தப் பையனுடன் எதனாச்சும் லவ்வாயிருக்குமோ?’

இப்படிப் பல  கேள்விகளுடன், பல்லைக் காட்டும் பக்கத்து சீட், ‘மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடலையா என்ன’ என அறிவாளியாய்க் கேட்கும் ஆபீஸ் தோழி, ‘அப்படி என்ன வேலையைக் கிழிக்கிறா’ன்னு தெரியலை அவனும்தான் மாடா உழைக்கிறான்... வந்தா அவனுக்கு ஒரு காபி போட்டுத்தரத் தெரியலை...
ஆபீஸ் விட்டு வந்ததும் சாஞ்சு படுத்துக்கறா’ என  டி.வி சீரியல் பார்த்துக்கொண்டே,  யாரிடமோ விஷம் கக்கும் மாமியார் என இவ்வளவு பேரையும் கடந்து இன்றைய பெண்ணின் நாற்பது நசுங்குகிறது.

அன்றைய நாற்பது எல்லாவற்றிலும் உசத்தி என ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. சரியாக  நாற்பதாவது வயதில், வயிற்றுவலியில் தடாலடியாய் எடை குறைந்து செத்துப்போன பக்கத்துவீட்டு ராணி அத்தையின் வயிற்றில் என்ன இருந்தது என ‘பேரியம் மீல் எக்ஸ்ரே’ எடுத்து அந்த அரசு ஆஸ்பத்திரியில் பார்த்தார்களா என எனக்கு நினைவில்லை.  ‘`சார்... இது அல்சர் வலி இல்லை. இதயத்துல மாரடைப்பு வர்ற மாதிரி, இரைப்பைக்கு உள்ள போற ரத்த நாடி அடைச்சிருக்கு. ஸ்டென்ட் வெச்சா காப்பாத்திடலாம்”
என வயிற்று ரத்த நாடியில் ஸ்டென்ட் வைத்து மரணத்தின் கடைசிக்கட்டத்தில் காப்பாற்றப்பட்ட பெண்மணியை எனக்கு இந்த நாற்பதில் தெரியும். 

நாற்பது வயது அப்பாக்களின் காதல்மொழி எதையும் எப்போதும் யதேச்சையாகக்கூட நம்மில் பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை.  காதல் வேண்டாம்; குறைந்தபட்சம்  அம்மாவுக்காக எப்போதேனும் சின்னதொரு கரிசன வார்த்தையாவது வந்து விழுந்திருக்குமா என்றால்,  நிச்சயம் வாய்த்ததில்லை.
ஆனால், இன்றைய நம் நாற்பது வேறு. தாமரையிடம், தபூசங்கரிடம் கடன் வாங்கியாவது மனைவியின் பிறந்த நாளுக்குப் பிதற்றியிருப்போம்.  எழுத்தாளர் ஜே.கே, ஒரு முறை கொலை வெறியாய் தன் அப்பாவைப்பற்றிப் பேசியது எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது. “ஏன் அப்பா மீது அப்படியொரு கோபம்?”

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1

என்றபோது, “திருப்பி அடிக்கவே முடியாத வலி தெரியுமா அந்த வேதனை...” என விளக்கியிருந்தார். “அப்பா என்கிற ஸ்தானத்துக்காகவே, நானும் என் அம்மாவும் அவர் செய்த அத்தனை வன்முறைகளையும் 16 ஆண்டுகள் தாங்கிக்கொண்டிருந்தோம். அந்த வலி உங்களுக்குத் தெரியாது” என்றார். இன்று நாற்பதின் ஆணாதிக்க வன்முறை கணிசமாய்க் குறைந்திருப்ப தாகத்தான் தோன்றுகிறது. இப்போது பிரச்னை வேறு.
 அதைத்தான் அடுத்தடுத்த வாரங்களில் அலசப் போகிறோம்.

அன்றைய நாற்பதில் அவர்களுக்கென  தனிமைகள், அந்நியோன்யங்கள் அநேகமாய்  இருந்ததில்லை. வீட்டின் ஒரே அறை... பகலில் பட்டாளை யாயிருக்கும்; இரவில் அதுவே படுக்கையறை; காலையில் வரவேற்பறை; மாலையில் படிக்கும் அறை.  எல்லா இரவிலும் என் பெற்றோருக்கு நடுவே நானோ,  நான்குநாள் கழித்து நடக்கப்போகும் நேர்முகத்தேர்வுக்கு ஊரிலிருந்து வந்த நாத்தனாரோ, ஒன்றுவிட்ட ஓர்ப்படியோ கட்டாயம் படுத்திருந்த காலச்சூழல் இது.  நாற்பதுகளின் காதலையோ, கரிசனத்தையோ, யாருக்கும் தெரியாமல் காட்டிக் கடந்த சமூகம் அது. வலியுடன் கடந்தனரா, வழியில்லாமல் கடந்தனரா எனத் தெரியாது. வலிமையுடன் கடந்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். 

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1

‘`யே! அதெல்லாம் ஒண்ணுமில்லை புள்ள... லேசா சீழ்கட்டி, நாளைக்குச் சீழை எடுத்துட்டா மறுநாள் சரியாப்போகும்”  என முதுகில் பழுத்து வீங்கிய கட்டியைத் துச்சமாகப் பார்த்த மனோவலிமை அன்றைய நாற்பதுக்கு அதிகம். இன்றைய நாற்பதோ, யதேச்சையாய் தான் வளர்த்தெடுத்த செல்லத் தொப்பையைக் கண்ணாடியில் உற்றுப்பார்க்கும்போது, ‘இது  பீர் தொப்பையா, இல்லாங் காட்டி, நீர் எதனாச்சும் கட்டி ஈரல் வீங்கி, சிறுநீரகம் சுருங்கி...’ எனக் கற்பனையை விரியவிட்டு, அதற்கும்மேல் கற்பனை செய்ய அஞ்சி, ‘ஐயோ...’ எனக் கண்ணாடியை விட்டு நகர்ந்து கூகுளில், ‘யார் பிரபலமான வயிற்று டாக்டர்’ என முகத்தில் வியர்வையுடன் தேடத்தொடங்கும். மொத்தத்தில், நாற்பதுகள் மிகக் கவனமாகக் கடக்க வேண்டிய காலகட்டம் இது. வாழ்வின் இதிகாசத்தில், நாற்பதுகள் நோய்க்காண்டமாக உருவெடுத்துள்ள பொழுதில் நாமிருக்கின்றோம். இந்த நோய்க்காண்டத்தில் கும்மிபாடும் எனக் கருதும் பல நோய்களுக்கு இன்றளவில் தடுப்பு மருந்து உணவு, வாழ்வியல் மற்றும் அந்த நோய் குறித்த தெளிவான விழிப்புணர்வும் மட்டும்தான்.  நாற்பதுகள் சந்திக்கும், சந்திக்கப்போகும் உலகைச் சற்று விசாலமாகப் புரிந்துகொண்டுவிட்டாலே, அதை எதிர்கொள்வது எளிது. ‘இன்னா நாற்பது...’ 

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1

நாற்பது வயதின் உடல், உள்ளம் இவற்றின் நகர்வுகளை, அதில் துளிர்க்கும் நலச்சவால்களை,  மன வெதும்பல்களைக் கொஞ்சம் அலசி ஆராய்ந்து   ஆற்றுப்படுத்த முனையும் தொடர்.

காதோரம் தொடங்கும் நரை, ரத்தத்தில் உயரும் இனிப்பு, வாழ்வில் தொடங்கும் கசப்பு, காதலில் ஏற்படும் பிறழ்வு, காமத்தில் விலகும் இயல்பு, முகத்தின் சுருக்கம், மனதின் இறுக்கம், தோள் சாய்ந்து தொலைவது, கரம் பற்றி நகர்வது, நுனிக்கண்ணில் கசிந்து அழுவது, நோயின்றி மகிழ்வது... ஏன், எட்ட நிற்கும் எமனையும் எட்டி உதைத்துச் சிரிப்பது என எல்லாவற்றையும் பேசுவோம்.

- இனியவை தொடரும்...

- கு.சிவராமன், படம்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism