Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது

டந்த ஐந்தாறு வருடங்களில், நம் மக்களிடையே உருவாகியிருக்கும் ஒரு நல்ல விஷயம் நடைப்பயிற்சிப் பழக்கம். நகர்ப்புறப் பூங்காக்கள், காலை நேரத்தில் நாற்பதுக்கு மேற்பட்டவர்களால் நிரம்பிவழிகின்றன. போதாக்குறைக்கு, பூங்காக்களின் வாசலில் வகைவகையான கீரைகளும், ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ என வழக்கொழிந்த மருத்துவ மலர்களும் புதிதாய்க் குடியேறியுள்ளன. அறுகம்புல்லிலிருந்து பருத்திப்பால்வரை பல உற்சாக பானங்களாக உலா வருகின்றன. கூடவே, ‘எக்கா இதையும் இங்க வச்சு வித்துக்கட்டா?’ என மருந்து போடாத பப்பாளியையும் வெண்டைக்காயையும் அள்ளிக்கொண்டுவந்து கடைபோடும் நம் கிராமத்துச் சகோதரிகளையும் பார்க்க முடிகிறது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

தற்போது நகர்ப்புறப் பூங்காக்களைச் சுற்றி, இப்படி வளர்ந்து வரும் காலை நேரச் சந்தை, கிட்டத்தட்ட நாம் கனாக்காணும் சந்தை. எந்தப் பூங்கா வாசலிலும் பன்னாட்டு சிப்ஸ் பாக்கெட், வெளிநாட்டு புஷ்டி பழங்கள், பளபளப்பான காய்கறிகள் விற்கப்படுவதில்லை. பக்கத்து நிலத்தில் விளையும் கீரையும் காய்கறிகளும் பழங்களும்தான். ‘ரெண்டே மாசத்தில் உடம்பிளைக்க மாசம் 8000 ரூபாய்க்கு டானிக்’,  ‘கொல்லிமலை அல்லது குவாண்டமாலா மலை குலேபகாவலி மூலிகைகளால் குறுக்கு சிறுக்க வைக்க, 5000 ரூபாய்க்கு கேப்ஸூல்’ என்றெல்லாம் சொல்லிக் குறுக்குவழிவணிகம் செய்பவர்கள் அவ்வப்போது தென்பட்டாலும், சீக்கிரம் அவர்கள் காணாமல்போய்விடுகிறார்கள்.

``இதெல்லாம் ஆர்கானிக்கா? இவங்ககிட்ட சர்ட்டிஃபிகேட் ஏதாச்சும் இருக்கா? ‘டர்ட்டி’யா இருக்கே? ‘ஆர்கானிக்’னு சொல்லி மொத்தமா ஏமாத்துறாங்கப்பா?” என அம்மாவை, அடுத்த வீட்டு மனிதனை நம்பாமல், அமேசானை மட்டுமே நம்பும் படித்த ஆப்பிள்கள், ஆண்டிராய்(ட)ர்களின் புலம்பல்கள் நடையினூடே நம் காதுகளில் கேட்கும். நடைப்பயிற்சி நம் நலத்தை மட்டும் காப்பதில்லை, கொஞ்சூண்டு கிராமிய நலத்தையும் கூடவே சேர்த்துக் காக்கிறது.

சரி... நாம் கொஞ்சம் நடந்துகொண்டே பேசலாம். 

‘நான் ஏழு படிக்கையில் என் அப்பாவுக்கு நாற்பது வயது இருக்கலாம். மார்க்கெட், ஆபீஸ், சினிமா பார்க்க ராயல் தியேட்டர் என  எல்லா இடங்களுக்குமே சைக்கிள்தான் அவருக்கு. திருநெல்வேலி டவுனிலிருந்து இரட்டை அடுக்குப் பாலத்தின் அடியில் உள்ள சைக்கிள் போகும் வழியில் புரம் அருகே மூச்சிரைக்க ஏறி, பூர்ணகலா தியேட்டர் பக்கம் இறங்குகையில் மட்டுமே அவரும் அவர் சைக்கிளும் விரசலாகப் போகும். மற்ற நேரங்களில் ஆடு கோழியெல்லாம் அவரை முந்திக்கொண்டு செல்லும். மெதுவாய் ஓட்டிய சைக்கிளும் நடையும்தான் அந்தக்கால நாற்பதுகளின் ஒரே வலிமையான உடற்பயிற்சி. ஜிம்முக்குப் போவதை சாமிகுத்தமாகப் பார்த்த தலைமுறை அது.

சராசரியாக 8-10 கி.மீட்டர் சைக்கிள் பயணமும், 3-5 கி.மீட்டர் நடையும், அன்றாட வாழ்வின் நகர்வுகளோடு ஒட்டியிருந்தன. சாம்பாரில் ஊறிய இட்லிகளைக் காலையிலும், சட்டி சுடுசோற்றை மதியமும், மீந்த சோற்றைத் தயிரூற்றி இரவும், சாப்பிட்டும்கூட, நம் அப்பா சமூகம், இன்சுலின் போடாமைக்கு நடையும் சைக்கிளும்கூட ஒரு முக்கியக் காரணமாய் இருந்திருக்கக் கூடும். இப்போதைய நாற்பதின் வாழ்வியல் அப்படியில்லை. இந்தத் தலைமுறையை ‘FAANG’ நிர்வகிக்கும் தலைமுறை என்கின்றார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘FAANG’ என்றால் ‘ஃபேஸ்புக், ஆப்பிள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள்’ என்பதன் சுருக்கமாம். நம் பிரபஞ்சம், ‘மண்டிணைந்த நிலமும், நிலமேந்திய விசும்பும், வளித்தலையீய தீயும்” என, மண், நீர், தீ, காற்று, ஆகாயமெனும் ஐம்பூதத்தாலானது எனத் தொல்காப்பியம் அன்று சொன்னது. ஆனால், இப்போதைய பிரபஞ்சத்தின் அத்தனை நகர்வுக்கும் இந்த ‘FAANG’ ஐம்பூதங்கள்தாம் காரணம். இந்த ஐந்தும்தாம் ‘நாம் இட்லிக்கு எந்தக் கலர் சட்னி அரைக்க வேண்டும்’, ‘பையனை நீட்டுக்கு எந்தக் கோச்சிங் சென்டருக்கு அனுப்ப வேண்டும்?’, ‘ஆய் போகவில்லையென்றால் அமேசானில் எந்த மருந்து வாங்க வேண்டும்?’ என எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன.

இந்த ஐம்பூதங்கள் செய்த முதல் அநியாயம், நம்மை எதற்காகவும் நடக்கவிடாமல் சோம்பேறியாக்கியதுதான். இந்தப் பூதப்பிடியிலிருந்து தப்பித்து, தினசரி 4-5 கி.மீட்டர் நடந்தே ஆகவேண்டும். காலையோ மாலையோ எப்போது நேரம் கிடைத்தாலும் நடக்கலாம். சித்த மருத்துவமும் சரி, சிர்காடியன் ரிதமும் சரி... மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் அதிக உடலுழைப்பு, உடற்பயிற்சி வேண்டாம் என்கின்றன. மெல்லக் குறுநடையைச் செய்யலாமே ஒழிய, இரவு 9 மணிக்கு வியர்க்க விறுவிறுக்க ட்ரெட்மில்லில் நடக்க வேண்டாம். அதேபோல, நல்ல திட உணவு சாப்பிட்ட பின்னரும் நடப்பது நல்லதல்ல. யோகாசனமும் சரி, நடைப்பயிற்சியும் சரி... சாப்பிட்டு 2 மணி நேரம் ஆனபின்னர் செய்வதே நல்லது. திரவ உணவென்றால் 30 நிமிடங்கள் கழித்த பின்னர், காலில் ஷூவைக் கட்டலாம். அதேபோல், சர்க்கரை நோயாளிகள் தாழ் சர்க்கரை நிலை வராதிருக்க, சிறிய கோப்பையில் சர்க்கரை-பாலில்லா தேநீர் எடுத்துவிட்டு, அல்லது சற்று ஆற்றல் தரும்படியான சிறு பழத்துண்டுகள், சிறுதானிய (மைதா சேர்க்காத) பிஸ்கட்டுகள் சாப்பிட்டுவிட்டு 20 மணித்துளிகளுக்குப் பின்னர் நடைப்பயிற்சிக்குப் போகலாம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது


நாற்பது வயதில், நடக்கும்போது பாதங்களைப் பாதுகாப்பது மிக முக்கியம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே முக்கியம். நவகிரக தலங்களில் பிராகாரத்தை நடையாய் நடந்துசுற்றிவந்துவிட்டு கால் முழுவதும் புண்ணாகிப்போய் சிகிச்சைக்கு வந்த சர்க்கரை நோயாளிகள் நிறைய பேர் உண்டு. கோயில் பிராகாரமே என்றாலும் சர்க்கரை நோயாளிகள், காலுறை அணிவது நல்லது. காலுறை அணியும் கட்டாயத்தில் இருக்கும் நாற்பதுகள், காலுறையை உள்ளாடை போல் பராமரிப்பது அவசியம். உள்ளாடையைத் துவைக்காமல் ஐந்தாறு நாள்களுக்குப் போடுவோமா? சாக்ஸை மட்டும் நான்கைந்து நாள்கள் போடும் சோம்பேறி நாற்பதுகள் சொச்சம்பேர் நம் ஊரில் உண்டு. அப்படியானவர்களுக்குச் சொறி, சிரங்கு, படை, பூஞ்சை எனப் பத்து வகையான தோல் நோய்கள் வர வாய்ப்புகளுண்டு.

நடைப்பயிற்சியிலும் சரி, அலுவலகப் பணியிலும் சரி... காலுறை சுத்தம் மிக முக்கியம். ‘நடக்கும்போது காலணி வேண்டாம்; அது ஒரு வணிக உத்தி’ என வாதிடுவோரும் இன்று உண்டு.அவர்களின் வாதங்களில் சில உண்மைகளும் இருக்கின்றன. வெளிநாடுகளில் ‘bare foot walking’ எனும் குழுக்களே இருக்கின்றன. ‘பாதங்கள் தரையில் பற்றி நடக்கையில்தான் அதன் புற நரம்புகள் தூண்டப்பட்டு ஆரோக்கியத்துக்கு வலுச்சேர்க்கும்’ என்கிறார்கள் அந்தக் கருத்தை வலியுறுத்தும் நண்பர்கள். பழக்கமில்லாதவர்கள், ரத்தச் சர்க்கரை அளவினை நன்கு கட்டுப்படுத்திவிட்டு, கால்களுக்கும் பாதங்களுக்கும் உரமேற்றும் தனி உடற்பயிற்சிகளைச் செய்துவிட்டு, அதன் பின்னர் வெறுங்காலில் நடக்கலாம்.

எல்.கே.ஜியில் இருந்தே கழுத்தில் டை, காலில் ஷூ என வளர்க்கப்பட்டு, முதல் பெஞ்சிலேயே காலம் முழுவதும் இருந்து, கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்து, அங்கேயும் முதல் பெஞ்ச் ‘ஞே’ யாகவே வளர்ந்து, கேம்பஸ் இன்டர்வியூவில் படிப்புக்குத் தொடர்பில்லாத ஒரு வேலையில் சேர்ந்து, வெளிநாட்டு பேங்குக்கு கோடு எழுதும் குபீர் குமாஸ்தாக்களை திடீரெனச் செருப்பில்லாமல் நடக்கச் சொன்னால், அவர்கள் பள்ளம், மேடு, பாக்டீரியா, வைரஸ் என பயந்துதான் சாவார்கள்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

முதலில் நடக்கச் சொல்லுவோம். அப்புறமாய் ஷூவைக் கழற்றலாம். நடக்காத நாற்பதுகளுக்கு நோயும் அதிகம். ஆயுளும் கம்மி என்கின்றன ஆய்வு முடிவுகள். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, புற்றுகள் வரும் வாய்ப்பு நடைப்பயிற்சி இல்லாதவர்களுக்குச் சற்று அதிகம்தான். ‘யானைக்கு ஞாபகசக்தி அதிகம்; அதைச் சீண்டினால், வைத்துச் செய்யும்’ எனப் படித்திருக்கிறோம். ஆனால், ‘அந்தப் பிள்ளையார் ஃபேமிலிக்கும்கூட அதிகம் மோதகம் சாப்பிட்டால் சுகர் வரும்’ எனக் கனவில்கூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆமாம்... நம்மூர் யானைகளுக்கும், கேரளத்து யானைகள் பலவற்றுக்கும் சர்க்கரை வியாதி வருவது கண்டறியப்பட்டிருக்கிறது. அவையெல்லாம், நிறைய ஒண்ணுக்குப்போய் மெலிகிறதா எனத் தெரியவில்லை.

ஆனால், பிரமிக்கவைக்கும் பருத்த ஜீவன்களுக்கு, ஆறாப்புண்களும் இன்னும் பல சர்க்கரை வியாதி அவஸ்தைகளும் வருவதாகக் கால்நடை மருத்துவர்கள் கவலையுடன் சொல்கிறார்கள். மிகச் சாதாரணமாக 15 கி.மீட்டர் வரை நடக்கும் அந்த யானைகளுக்குப் பொங்கலும் புளியோதரையும் ‘பனானா சாலட்டும்’ கொடுத்து, கொடுத்த காசுக்குக் கும்பிடுபோடும் நம்மூர் அரசியல்வாதி மாதிரி ஆக்கியதில், நடக்காத அத்தனை யானைகளும் ‘டயாபட்டாலஜிஸ்ட்’களைத் தேடிக் கொண்டிருக்கின்றன. 3-7 டன் வரை  எடையுள்ள அவ்வளவு பெரிய வஸ்தாது... தன் எடையில் 6%-7% எடையுள்ள உணவைச் சாப்பிடும் பழக்கம் கொண்டது... நாற்பது வயதில் நம்மைவிடப் படுவேகமாக ஓடக்கூடிய மரபுப் பழக்கமுள்ளது...  எந்த மாத்திரையுமில்லாமல், தினமும் சுமார் 100-130 கிலோ சாணம் போடத் தெரிந்த யானைக்கே இந்த கதி என்றால், நடக்காத மனிதனுக்கு நோய் வராதா என்ன..?
நடந்தேயாக வேண்டும்.

உலகத்திலேயே, பொலிவியா மணிக்யூ ஆற்றோரம் வசிக்கும் தென்னமெரிக்க ‘Tsimane’ பழங்குடியினருக்குத்தான் மிக மிக வலிமையான, நோயற்ற இதயம் இருக்கிறதாம். அந்த இதயத்தின் உள்ளே, ரத்த நாளங்களில், கெட்ட கொழுப்புப் படிதல் இல்லை. அதோடு அவர்களின் இதய ரத்த நாளங்கள் மிக வலிமையாக உள்ளனவாம். தி லான்சட் முதலான பல மருத்துவ அறிக்கைகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. அதற்கு, அவர்கள் சாப்பிடும் பழங்கள், மீன்கள் தாண்டி தினசரி நடக்கும் 16,000 அடிகள் நடை மிக முக்கியக் காரணமாம்.

நாற்பதுகளின் இதயம் நலமாய் இருக்க, சர்க்கரை நோய் வாராதிருக்க, வந்தாலும் தலைவிரித்து ஆடாமலிருக்க, நாம் குறைந்தபட்சம் 10,000 அடி நடையாவது நடந்தேயாக வேண்டும் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். அதைக் கணக்கிட்டுச்சொல்ல, பல கைப்பேசிச் செயலிகள் உள்ளன. எல்லாவகைக் கைப்பேசியிலும் இவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்யமுடியும்.

நடக்கும்போது இடையிடையே 30 மணித்துளிகளுக்கு ஒருமுறை அரை டம்ளர் நீரருந்துவது நலம். வீட்டிலிருந்து குட்டி பாட்டிலில் அதைக் கொண்டுவந்துவிடுங்கள். 40-50 வயதுக்குள் இருப்பவர்கள், சர்க்கரை நோயுடனோ, இதயநோயுடனோ இருக்கும்பட்சத்தில், இடையிடையே சிறிதளவு நீர் அருந்துவது திடீர் தாழ்சர்க்கரைக்கு, திடீர் நீர்த்துவக்குறைவுக்கு நல்லது.

 தள்ளாமல் பாதுகாக்கும். நடையின் வேகத்தை வைத்து வாழ்நாளைக் கணக்கிட ஆரம்பித்துள்ளனர். ‘நடைப்பயிற்சியின்போது, உங்கள் பேரன், பேத்தி வேகத்துக்கு நீங்கள் நடந்தால், நிச்சயம் சராசரி ஆயுட்காலத்தை ஆரோக்கியமாகக் கடப்பீர்கள்’ என நல்லதொரு ஆய்வு அழகாய்க் கண்டறிந்து சொல்லியுள்ளது. சாதாரணமாக, மணிக்கு 3 கி.மீட்டர் வேகநடை கொண்டவர்களின் ஆரோக்கியம் மிகச்சிறப்பு என்கிறது ஓர் ஆய்வு. நடைப்பயிற்சியின்போது சற்று அதைவிட வேகமாக, 4.5 -5 கி.மீட்டர்வரை இருப்பது நல்லது. உடல் எடையைப் பொறுத்தும் இதயத் துடிப்பைப் பொறுத்தும் இந்த வேகத்தைத் தீர்மானிக்க வேண்டும். நல்ல வேகநடையில்தான் நுரையீரல், இதயத்தின் பங்களிப்பு மிகச்சிறப்பாக இருக்கும். ஜிம்களில் போய் மெஷினில் ஓடுவதைவிடப் பூங்காக்களில் நடப்பது மிக மிக நல்லது. சாலையோரம், வீதியோரங்களில் வாகன ஓட்டம் இல்லாதபோது நடக்கலாம்.

நடக்கும்போது வாட்ஸ் அப்பில் எவனோ எடுத்த வாந்தியை அள்ளிவழித்து அனுப்பும் ‘சகதோஷ’ங்களால் சந்தோஷங்களைத் தொலைத்து அந்தக் குப்பைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டே நடப்பது நல்லதல்ல.

நடை, கிட்டத்தட்ட ஒரு தவம். நடையில் நம் மனம் நம்மோடு கவிதையாய்ப் பேசும். நம் ஆழ்மன அழுக்குகள் எல்லாம் வியர்வையில் வெளியேறும். குடையும் சிக்கல் பலவற்றுக்கு மூளையின் பதிவுகளிலிருந்து புதிய விடைகள் புறப்பட்டு வரும். நடந்து முடிக்கையில், சின்னதாய் ஒரு புன்னகை முகத்தில் பற்றிக்கொள்ளும். ஏதாவது விசேஷம் என்றாலோ, விஷயமே இல்லை என்றாலோகூட மனைவிக்கு அவசர முத்தம் ஒன்றைக் கொடுக்கச்சொல்லி, ஹைப்போதலாமஸை உசுப்பும். இவையெல்லாம் புனைவு இல்லை... அத்தனையும் ஆய்ந்து சொல்லப்பட்ட புதிய அறிவியல் செய்திகள். நாற்பதில் காதல் கொப்பளிக்க, ‘அமுக்கரா’, ‘வயாகரா’ என்றெல்லாம் செலவழிக்க வேண்டாம். வியர்க்க விறுவிறுக்க ஒரு நடை நடந்துவிட்டு வந்தால் போதுமாம்!

- இனியவை தொடரும்... 

-கு.சிவராமன்; படங்கள்: க.பாலாஜி