பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 5

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 5
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 5

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 5

கோபமும் பரபரப்பும் நாற்பதின் மிக முக்கியமான நோய்க் காரணிகள். ‘`பொண்ணு பார்க்கப் போறச்சே  ‘மௌன ராகம்’ ரேவதியாட்டம் இருந்தா... இப்போ ‘சந்திரமுகியாட்டம்’ல மாறிட்டா?’’ என்று மிரண்டு நிற்பவர்கள் இன்றைய நாற்பதுகளில் நிறைய உண்டு. ‘`ம்... நாங்கூட ‘அலைபாயுதே’ மாதவன்னுதான் நினைச்சேன்... போகப் போகல்ல தெரியுது, எல்லாத்தையும் குதர்க்கமா பேசிப்பேசியே மட்டம் தட்டுற ‘கல்கி’ பிரகாஷ்ராஜ்னு” எனக் குமுறும், மெனோபாஸ்க்கு முந்தைய சுற்றில் ஓடும்  நங்கைகளும் சமமாய் இங்குண்டு.

வேடிக்கை என்னவென்றால், இருவருமே தங்கள் துணையை முடிவுசெய்தது, வாழ்வின் நுணுக்கங்களை அழகாய்ச் சொல்லும் இலக்கியங்களின் கற்பிதத்தால் அல்ல.  எத்தனையோ பிரச்னைகள் இருந்தும் கவித்துவமாய் வாழ்வை நகர்த்தும் நண்பர்களின் நிழல்களிருந்தும் அல்ல.  அவர்கள் செலக்‌ஷன் நடந்த விதமே வேறு. மனம் இறக்கை கட்டிப் பறந்து, புளகாங்கித வெகுசன சினிமாப் புனைவுகளின் போலிபிம்பங்கள் மீதுதான் இவர்களின் திருமணத்தேர்வுகள் முடிவு செய்யப்பட்டன. அவர்கள் துளியேனும்  புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’யையும், வண்ணதாசனின் ‘சின்னு’வையும் வாசித்திருப்பார்களேயானால், வாழ்க்கையைக் கொஞ்சமேனும் புரிந்துகொள்ளும் பயிற்சி கிடைத்திருக்கும்.

 இன்றைய நாற்பதுகள் பலருக்கும் வாசிப்பு அனுபவமும், வாழ்வியல் அனுபவமும் மிகவும் குறைவு. இதனால், எதிர்பாராதவற்றை எதிர்கொள்ளும்போது பெரும் வலியைச் சுமக்க நேர்கிறது. பல நேரங்களில்  இன்றைய நாகரிக நாற்பதால், குடும்பம் என்பதைக் குதூகலமான கட்டமைப்பாகப் பார்க்கமுடியவில்லை.

குடும்பத்தை சுயநலச் சித்தாந்தத்தின் முதல் கட்டுமானமாகவும், அடக்குமுறைகளின் வடிவமாகவும் பார்க்கிற நாற்பதுகள் இப்போது அதிகரித்து வருகிறார்கள். ‘உன் உலகமும் உன்னோடு பயணிப்பவர்களும் வேறு; என்னுடைய உலகம் வேறு’ எனும் `லிவிங் டுகெதர்’ சித்தாந்தம் இப்போது நாற்பதுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், அதுவும்கூட அதற்குரிய ஒரு வரையறைக்குள் அடங்குவதில்லை. மொத்தத்தில், இயல்பாய் நிகழும் விஷயங்கள் ஏமாற்றங்களாகி, அவற்றை சனிக்கிழமை இரவு,  கூட்டமான குடியிலும்,  வெள்ளிக்கிழமை காலை, கோயில் பிராகாரங்களிலும் மூக்கைச்சிந்தி அழுது கரைக்கின்றனர்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 5

இவை போதாதென்று, தம்பதிக்கு இடையில் கோபத்தை விதைத்து வாழ்க்கையைப் புண்ணாக்கும் நோக்கத்தில் நிறைய பேர் உலாவுகிறார்கள். அவசரப்பட்டு, நான்  நாத்தனாரையும் மாமியாரையும் மட்டும் சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். அவர்களையும் தாண்டி நவீன நாத்தனார்கள், ஓர்ப்படிகள் உலவும் உலகம் இது. ஆமாம்... போனவாரம் பேசிய ‘FAANG’  எனப்படும் பஞ்சபூதங்கள்தாம் வேறு வேறு வேஷம் கட்டி ஆடி வெறுப்பை வளர்க்கும் புதிய உலகின் உறவுகள். ( FAANG  பற்றித் தெரிந்துகொள்ள போனவார விகடனைப் படியுங்கள்). இப்பஞ்சபூதங்களின் பேரன் பேத்திகளான வாட்ஸ் அப், டெலிகிராமில் தினம் காலை ஐந்து மணிக்கே ‘குட்மார்னிங்’ சொல்லி,  பாலூற்றும் நபர்கள் நம்மூரில் இருக்கிறார்கள்.

ஐந்து மணி நேரம் அலுவலகத்திலும் எட்டு மணி நேரம் வாட்ஸ் அப்பிலும் பணியாற்றும் இவர்களின் அராஜகம் பெரிதினும் பெரிது. முகம் பார்த்து முனங்கும் மாமியார், நாத்தனார் எடுக்கும் ஆயுதங்களைவிட இந்தத் தளத்தில் எசகுபிசகாகப் பயன்படுத்தும் எமோட்டிகான்கள், புளூ டிக்குகள் மிகப்பெரிய அணு ஆயுதங்கள். கொஞ்சம் கொஞ்சமாக குரூப்புக்கே சுகர், பிபி, ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தி, நின்று கொல்லும் கொடூர ஆயுதங்கள். இதில் நிகழும் மோசமான ஃபார்வேர்டுகளால், இன்னும் சரியாகப் பெயரிடப்படாத மன வியாதிகளில் சிக்கி நாற்பதுகள் தவித்து நிற்கிறார்கள். ‘சார்! இந்த அளவுக்கெல்லாம் வாட்ஸப் லோளாங்கியம் எல்லோர் வீட்டிலும் இல்லை சார்’ என்போருக்கு ஒரு செய்தி... இன்னும் வாட்ஸ் அப்புக்குள் மூழ்காத, கி.மு.க்களில் பிறந்த தலைமுறைக்கென்றே சீரியல் எனும் கில்லர்களைச் சிறப்பாகச் செய்து அத்தனை தொலைக்காட்சிகளும் நடுவீட்டில் தொங்க விடுகின்றன.

நம் அப்பா அம்மா தலைமுறையின் கோபமும் வெறுப்பும் எதில் இருந்தன, எந்த அளவில் இருந்தன என யோசிக்கையில், சுவாரஸ்யமாக இருக்கிறது ‘சட்னி ஏன் தாளிக்கலே?’, ‘ ஆன்டனாவைத் திருப்பியும் டிவியில சிலோன் ரூபவாகினி ஏன் வரலை?’, ‘எவ்வளவு தேடியும் மேட்சிங் பிளவுஸ் ஏன் கிடைக்கலை?’,  ‘சம்பந்தி பொங்கல் சீருக்குக் கரும்பு ஏன் வைக்கலை?’,  ‘மாசக்கடைசியில தோசைக்கு ஏன் மாவாட்டணும்?’,  ‘தள்ளி எடுத்த சீட்டுப்பணம் ஏன் இன்னும் கைக்கு வரலை?’ என்கிற மாதிரிதான் பெருவாரியான வீட்டுக் கோபங்கள். இந்தக் கோபத்தை எல்லாம் தீர்க்க அவர்கள் யாரும் யோகா கிளாஸுக்குப் போகவில்லை. ஜும்பா ஆடவில்லை. மாறாக, மோர்ச்சோற்றுக்குத் தொட்டுக்கொள்ள பஜ்ஜி போட்டுவிட்டாலோ, அரை முழம் மல்லிகைப்பூ வாங்கிவந்துவிட்டாலோ எல்லாக் கோபமும் மாறிப் போய்விடும். ‘இளைச்சுக்கிட்டே போறீங்க... ஒரு கரண்டி கூட போட்டுக்கிட்டாதான் என்ன?’ என்கிற குழைவிலும், பதிலுக்கு ‘ம்...ம் அதான் மூச்சுமுட்டுதோ?’ என்கிற எள்ளலிலும் மிச்சமுள்ள கோபமும் அடையாளமில்லாமல் கரைந்துபோகும்.  இப்படியான கரிசனத்தைக் கொட்டும் மெனக்கெடலாக,  பஜ்ஜி போட வேண்டாம்; ‘ஸொமேட்டோ’வில் சொல்லி ஒரு பணியாரம் அனுப்பிவைக்கக்கூட  இன்றைய நாற்பதுகளுக்கு நேரமில்லை. மனசை வருடிவிடும் வார்த்தை எள்ளல்களுக்கோ அவர்களுக்குத் துளியும் மனமே இல்லை. பயிற்சியும் இல்லை.

 எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வாட்ஸ் அப் உரையாடல்கள், ஏகத்துக்கு நாற்பதுகளின் மனதில் சந்தேகவியாதிகளை விதைத்துவிட்டன. மொட்டை மாடியிலும்  மாமரத்து மூட்டிலும் அமர்ந்து, இன்லான்ட் கவரின் ஒட்டக்கூடிய பகுதி தவிர்த்து அத்தனை இடங்களிலும் நுணுக்கி நுணுக்கி அன்பைத் தெளித்து, காதலைக் கசிந்துருகி ஊற்றி எழுதிய கடிதத்தை, அவளின் அப்பனோ அம்மாவோ பார்த்துவிடக் கூடாது என நம் குலதெய்வத்தை வேண்டி தபால் பெட்டியில் சேர்ப்போம். அதற்குப் பதில் வரும் என தபால்காரர் வரும்வழியில் நாள்கணக்கில் காத்திருந்த வரலாறு நம்மில் பலருக்கு கண்டிப்பாய் இருக்கும். அதேசமயம், பதில் கடிதம் வரக் காத்திருக்கும் பத்து நாளுக்குள், அந்தக்காலத்துக் காதல் அக்னி முறுக்குக் கம்பிகளாய் இறுகி உறுதியாயிருக்கும். இப்போது அப்படி இல்லை, காதலாயிருந்தாலும் சரி,  வெற்று கான்வர்சேஷனாக இருந்தாலும் சரி, நாம் வாட்ஸ் அப்பில் அனுப்பிய கிறுக்கல்களுக்கு 30 விநாடியில் புளூ டிக் வரும். புளூ டிக் வந்த அடுத்த 30 விநாடியில் பதில் வரவில்லை என்றால், அவனை மட்டுமன்றி, அவனின் ஒண்ணுவிட்ட அத்தை பரம்பரை வரை அத்தனை பேரையும் திட்டித் தீர்த்து,  ‘அவனுக்கு அன்பு இல்லை, ஃபீலிங் இல்லை’  என்று முடிவுக்கு வந்து, மூன்று நிமிடங்களில் சண்டைகட்டிப் பிரிந்து நிற்கும் வழக்கம் இன்று அதிகம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 5

இவையெல்லாம் இளசுகளுக்குத்தானே... நாற்பதுகளைப் பற்றிப் பேசும் இன்னா நாற்பதில்  இவையெல்லாம் எதற்கு எனக் கோபம் வேண்டாம். நானும் முதலில் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், இன்று வீட்டு நிர்வாகம் செய்யும் அத்தனை நாற்பதுகளுக்கும்  ‘புளூ டிக் நரம்பு பலகீன நடுக்குவாதநோய்’ வந்திருக்கிறது. வைரலாய்ப் பரவும் இந்த மன நோய், அதன் தொடர்ச்சியாக ‘கன்னாபின்னா கோப நோய்’, `எதற்கெடுத்தாலும் அழுகை நோய்’, `குதர்க்கமாகவே பதில் சொல்லும் நோய்’, பக்கத்துவீட்டைப் பற்றியே யோசிக்கும் நோய்’,  ‘எக்குத்தப்பான சந்தேக நோய்’ எனப் பல புதிய மனநோய்ப் பட்டியலை உருவாக்கியுள்ளது. இதே நோய்க்கூட்டம் நடுச்சாமம் வரை போனில் உலாவும் அத்தனை ஆண்களுக்கும் உண்டு. இந்த இருபாலர் நோய்களை, குதர்க்கக் கூட்டணி குரூப்புகள் பாலூற்றி வளர்க்க, கஞ்சா அடித்துவிட்டு ‘அஞ்சலை’ப் பாட்டுக்கு ஆடும் சூர்யா மாதிரி  நாற்பதுகளின் பலர் திரிகின்றனர். 
 
‘FAANG’ எனும் புதிய பஞ்சபூதங்களின் பிள்ளைகள் என்றாலும், வாட்ஸ் அப், முகநூல், இணையம், கைப்பேசி எல்லாமே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள். ‘உயிர் போயே போய்விடும்’ என்று மொத்த டாக்டர் கூட்டமும் கைகளைப் பிசைந்து நிற்கிறது. பெற்றோர் கண்ணீரோடு கதறி நிற்க, பார்த்துக்கொண்டிருந்த மருத்துவரின் அலைபேசியில், ‘டாக்டர்! நீங்க பார்த்துக்கொண்டிருக்கின்ற நோய், .... மாதிரி தெரியுதே... கொஞ்சம் செக் பண்ணுங்க’  என அமெரிக்க ஒக்லஹாமா பல்கலைக்கழகத்தின் ‘Rare Disesease Organisation’ -ல் இருந்து மருத்துவர் ஒருவர் அனுப்பிய  வாட்ஸ் அப் செய்தியும் அது சொன்ன வழிகாட்டுதலும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வை நான் அருகில் இருந்து பார்த்து வியந்திருக்கின்றேன். அறிவியலின் உச்சம் அது. ஆனால், அதே அறிவியலைத் தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துவதால்தான் நாற்பதுகள் நோய்க்கூட்டத்தில் சிக்கித்தவிக்கின்றன. 

நாற்பதுகளின் வாழ்வில், இவை நசுக்கும் நலம் பற்றித் தெளிவான அறிவு நமக்கு வேண்டும். நம்பகத்தன்மை குறைவு, ‘முணுக்கென வரும் கோபம், மெல்ல வளரும் வெறுப்பு...  இவை வெறும் மன வியாதிகளை மட்டும் தருவதில்லை. கோபமும் வெறுப்பும் மேலோங்கியுள்ள மனிதனின் ரத்தத்துக்குள் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் குவியும். அவை ரத்த சர்க்கரையை, ரத்தக் கொதிப்பை உயர்த்திக் கொஞ்ச கொஞ்சமாக ரத்த நாளங்களைச் சிதைத்து (Micro Vascular Damage) ஒவ்வொரு நோயாக வரிசையில் அனுப்பும்.

என்ன செய்யலாம்?

ஒரு சின்ன யோகா பயிற்சி. நாவைச் சுருட்டி, மூச்சை உள்ளிழுத்து, மூக்கின் வழி வெளியேற்றும் ஒரு அழகிய பிராணாயாமப் பயிற்சிக்குப் பெயர், சீதளிப் பிராணாயாமம். கோபத்தையும் ரத்தக் கொதிப்பையும் குறைக்கும் அற்புதமான பயிற்சி அது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பயிற்சி அது.  உங்கள் மனைவி,  இந்த மூச்சுப்பயிற்சியைச் செய்யும்போது, உற்றுப்பார்த்தீர்கள் என்றால், அவர் கன்னத்தில் குழி விழும். ‘ஹே! அழகா இருக்கியே’ என ஒரு பொய் சொன்னால், மதிய சாப்பாட்டுக்கு அழகாய் அடுக்கிய கிரீன் சாலட்டும் முருங்கைக்காய் சூப்பும் கிடைக்க வாய்ப்புண்டு. ஒரே ஒரு நாள், இந்த வாட்ஸ் அப்பையெல்லாம் வாரியலில் பெருக்கி வாசலுக்கு அந்தப்பக்கம் போட்டுவிடுங்கள்.   

வேலையோடு வேலையாக, தபால் ஆபீஸ் போய், இன்லான்ட் கவர் ஒன்று வாங்கி, காலையில் நீங்கள் போட்ட  சண்டைக்குச் சிறியதாக வருத்தம் தெரிவித்து, வெண்ணெய் உருகுவது மாதிரி வழவழவென உருகி உங்கள் வீட்டிலேயே இருக்கும் உங்கள் வீட்டுக்காரருக்கு சர்ப்ரைஸாகக் கடிதம் ஒன்று எழுதிப்போட்டீர்கள் என்றால், பத்து பதினைந்து வெள்ளை கவுன் போட்ட துணை நடிகைகளுடன், பழைய பாக்யராஜ் மாதிரி ‘தந்தன தந்தன...’வென உங்களவர் உங்களோடு நடனமாட வர சாத்தியங்கள் நிறைய உள்ளன.

கோபம், வெறுப்பு, சந்தேகம் மூன்றையும் முளையிலேயே கிள்ளி எறியுங்கள். அதற்கு முதலில்  ஈகோவை அழிக்க வேண்டும். இதுவே நாற்பதுகளில்  உங்கள் குடும்ப நலத்தையும் உடல் நலத்தையும் ஒருங்கே காக்கும் எளிய உத்தி.

 முதலில் உங்கள் துணைக்கு ஒரே ஒரு கடிதம் மட்டும் எழுதிப்பாருங்களேன்! 

-கு.சிவராமன், படம்: சந்தோஷ் நாராயணன்